என் மரணத்தைப் பிய்த்துப் பாதி தின்றவள்....

வித்யாசாகர்

வாழ்வின் பாடங்களில்
கிழிந்த பக்கங்களின்
ஒவ்வொன்றையும் எடுத்து
தன் சிரிப்பில் ஒழுகும் எச்சிலால்
ஒட்டிவிடுகிறாய்

இதயம் தைக்கும் ஊசியென
என் அறுந்த மனதின் கிழிசல்களில்
உன் நிறைவுறாத வார்த்தை போட்டு
பிறந்த பயனை
நிரப்புகிறாய்

தத்தி தத்தி நடந்துவந்து
எனை எட்டியுதைக்கும் ஒற்றை உதையில்
என் மெத்த கர்வத்தையும்
இலகுவாக உடைத்து
வீசுகிறாய்

நீ தின்ற உணவில்
ஒரு பாதி எடுத்து எனக்கூட்டி
என் பாதி ஆயுளை
அந்த ஒரு பிடி உணவில்
நிறைக்கிறாய்

நான் வெளியில் போக வீடுபூட்டி
தெருவிறங்கி நடக்கையில்
நீ ஓடிவந்து அம்மா தோளேறி ஜன்னலில் எட்டிப் பார்த்து
அப்பா அப்பா என்று கத்தி கத்தி நீ உடனில்லாதபொழுதை
நினைக்க நினைக்க வலிக்கும்
ரணமாக்கிவிடுகிறாய்

நீ பார்க்காத
பேசாத பொழுது ஒவ்வொன்றையும்
சுமக்க இயலாதவன்போலே யெனை
ஓடி வீடு
வரவைக்கிறாய்

நீ பெரிதா நான் பெரிதா
என்று யாரோ கேட்கையில்
நீ பெரிதில்லை
நான் பெரிதில்லை
என் அப்பாதான் எனக்குப் பெரிதென்று நீ சொன்ன வார்த்தையில்
என் பூர்வ ஜென்ம பலன்களையெல்லாம் வாரி
உலகின் சிரிப்புசப்தத்திற்கு இடையே
இரைத்தாய்

நானந்த சிரிப்பின் சப்தத்திற்கு இடையே வந்து
உன்னையும்
அவர்களையும்
பார்த்தவாறே நிற்கிறேன்
இனி  மரணமொன்றும் அத்தனைப் பெரிதில்லை.. யெனக்கு!!



vidhyasagar1976@gmail.com