சமைக்கிறவன் சொல்லாத கதை

வித்யாசாகர்

நாளுச் சுவத்துக்குள்ள வாழ்க்கைதாங்க - எங்க
கட்டில்சுகமும் கனவுலதாங்க
சம்பளமெல்லாம் பெருசுதாங்கஅதைச்
சம்பாதிச்சும் வாழ்க்கை
நெருப்பிலதாங்க

சுட்ட பணம் பளபளக்கும் - மிளகாய்ச்
சிவப்பாய் நாட்கள்கூடக் கடக்கும்
அனல்ல வெந்து சாகும்வரைநாங்க
சமைக்கும் சோறு
மணமணக்கும்

நொந்த மனசு நெடுநாள் வலிக்கும்கரண்டி
துழாவி தெரியும் முகங்களைப் பார்க்கும்
வடிச்ச சோறு ஆவி போலவயசு பறந்து
வாழ்க்கை உப்புச்சப்பில்லாம
முடியும்

முப்பது கடந்து - மனசு பொண்ணு தேடும்
தேடல் நீளும், எங்கோ ஒரு பொண்ணு கிடைத்தாலும்
அது தொப்பியைக் கழற்றிப் பார்க்கும்தொந்தியைத்
தடவிநிக்கும் வேறவழியில்லாம மனசு வேறுவீட்டைப்
பார்க்கும்

எப்படியோ திருமணமும் முடியும்போகும்வரும் சொச்சநாளில்
பேருசொல்ல பிள்ளைகளும் பிறக்கும், பிறகு
பிள்ளைகளைப் பார்க்காமமனைவியிடம் சேராம
போறநாளு ஒவ்வொன்னும்ஏன்டா கட்டிக்குனன்னு கேள்வி கேட்கும்

சரி தலைஎழுத்தேன்னு சாம்பார் வைப்போம்
குழம்பு வைப்போம் சுட சுட இறக்கி வைக்கையில்
கைசுட்டாலும் கருமம்னு விடுவோம்கரிப்பிடித்த
அடுப்போட மனசையும்
போட்டெரிப்போம்

உடம்பு முடியலையோவெகுநாளாத்
தூங்கலையோநாள்கடந்து நாங்க
திங்கலையோகேட்க யாரிருக்கா - ஒருநாளு
சமைக்கலைன்னா கூலி குறைக்க
ஆளிருக்கும்

காதல்ல தோற்றாலும்கட்டின மனைவி
கல்லெறிந்தாலும், வீட்டில் யாரோ செத்தாலும்
எங்கள் கண்ணீரும் சுவையாகும்வெளிய
தெரியாத
சாபமாகும்

கருவேப்பிலை பிச்சிப் போட்டாமனசும் கூட
பிய்ந்துவிழும், கடுகள்ளிப் போட்டாலும்
கனவெல்லாம் கூடவிழும், எரியும் நெருப்பைப் போல
மனசெரிந்து விறகாக்
கருகும்

பண்டிகைன்னாலே பயம் வரும்அன்று
அரைப்பொழுதில்ஒரு நாள் வேலை கணக்கும்
கொண்டாடத் துடிக்கும் மனதில்பிள்ளைங்க
அப்பான்னு ஏங்குமோன்னு
கவலைவரும்

பொண்டாட்டி பேசிடுவா என்ன தொழிலுய்யான்னு
சொல்லாமல் முனுமுனுப்பா வெடிக்கும் பட்டாசு சப்தம்
அவ பேசும் தொலைபேசியில் கேட்கும், மனசு
சிட்டா பறந்து அம்மா அப்பாவையெல்லாம்
நினைக்கும்

படிச்சவங்களுக்கு மின்னஞ்சல் வரும்நாங்க
படிச்சாலும் மீன்குழம்புதானே மிச்சம்? குழம்பு கொதிக்கும்
நேரத்துக்குள்ள பழைய கடிதம் நினைப்பு வரும்எடுத்துப்
படித்தா லழுகை வரும்; அவ பட்டினி ஆங்காங்கே ஈரமா
எழுதியிருக்கும்

என் குறைய நான் சொல்ல எனக்குன்னு - யாரிருக்கா
இன்னொரு சமையல் காரன் என்னைப் போல
எதிரிருப்பான்எங்களுக்கு புரிஞ்ச வாழ்வை எதுக்கு சொல்லி
வெளியவைக்க, உள்ளே புகையிலை வெச்சி பீடியா புகைச்சித்
தீர்ப்போம்

ஒரு கிளாசு சாராயம் விளக்கு வெச்சா
குடிச்சித் தீர்ப்போம், விடிஞ்சா தெரியும் கறுத்த முகத்தில்
யாரும் துப்பாத எச்சில் துடைப்போம்
குடிகாரன் பேரழிக்க நல்ல சமயல்காரன்னு பேரெடுப்போம்!




vidhyasagar1976@gmail.com