அது வேறு காலம்.. (கவிதை)

வித்யாசாகர்



 
1
அப்போதெல்லாம்
குழாயடியில் அமர்ந்திருப்போம்

பகலெல்லாம்
பெண்களைப் பார்த்ததை
பெண்கள் சிரித்ததை
ரசித்துப் பேசிய காலமது,

பெண்களைக் காதலியாகவும்
காதலியை தெய்வமாகவும்
தெய்வத்தை அன்பால்மட்டுமே யறிந்த
நாட்களவை;

இப்போது
குழாயடி இல்லை
கூடி நண்பர்கள் தெருவில் அமர்ந்துப்
பேசுவதில்லை

இப்போதும் பெண்களின் பெயரில்
குறுந்தகவல் வருகிறது
ஆனாலும் பெண்தானா? தெரியாது

அது வேறு காலம்..
----------------------------

2
மழைவந்த மறுநாள்
இலைகளின்வழியே
மழைநீர் சொட்டிக்கொண்டிருக்கும்,

மரங்களெல்லாம்
கிளைஒடிந்து வீழ்ந்திருக்கும்

தலையில் எண்ணெய் தேய்த்துக்கொண்டு
வெயில்சுடச் சுட மரம் வெட்டுவோம்
முள்மரம் வெட்டி படல் படலாய்ச் செய்து
வேலியடைப்போம்

கூரைகள் பிய்ந்த ஓட்டைகளையும்
ஓடுகளுடைந்த விரிசல்களையும்
நட்பினால் மூடுவோம்,

நண்பர்கள் சேர்ந்து
நான்கு வீட்டிற்கும் வேலை செய்வோம்,
உன் வீடு என் வீடு என்றெல்லாமில்லை
காலையில் பல்துலக்கும் பற்பொடி
வேப்பங்குச்சி முதல்
எல்லோருக்குமே எல்லாமே பொது,

இப்போது
அதுபோன்ற வேலைகளெல்லாம் இல்லை
வாட்சப் இருக்கிறது
இமோ இருக்கிறது
முகநூல் இருக்கிறது

அது வேறு காலம்..
---------------------------------

3
திருவிழாக்கள் வரும்
ஊரெல்லாம் மின்விளக்குகள் கட்டுவோம்
வானவேடிக்கையில் வேறுஊர்களுக்கு
எங்களூர் சேதிசொல்லுவோம்,
இரவு வரும் சாமிஊர்வலம்
எங்களுக்கு தேவஊர்வமாய்த் தெரியும்
அன்றைக்கொருநாள் தான் வீட்டைவிட்டு வெளியேவந்து
ஊரெல்லாம் சாமி திரியும்,
நடுவீட்டில் உடைத்த தேங்காய்
தெருவிற்கு தெரு
வீட்டிற்கு வீடு வாசலில் உடையும்

இரவு பனி பொழியும்
நகர்வலம் முடியும்
கூத்து ஆரம்பமாகும்
போர்வை விரித்து
போர்வைப் போர்த்திக்கொண்டு
குடும்பம் குடும்பமாய் அமர்ந்திருப்போம்,
ஆளுக்கொரு இஞ்சி தேநீர்
இரவு குல்பி
பஞ்சுமிட்டாய்
சுடச் சுட பலகாரமெல்லாம்
நெஞ்சு கசக்காமல் நொறுக்குத் தீனியாகும்,
எதிர்வீடு பக்கதுவீடெல்லாம்
அத்தை மாமா
பெரியம்மா
தாத்தாப் பாட்டி உறவாகும்..,

காலையில் உரியடிப்போம்
குழந்தைகளுக்கு பந்தயைம் வைப்போம்
மைக் பிடித்து கதைகள் சொல்வோம்
சாமி பகலிலும் ஊர்வலம் வரும்
பொதுவாய் அடைந்திருக்கும் கதவுகளெல்லாம்கூட
அன்று திறந்திருக்கும்இ
சாமிக்கே சாமி தரிசனம் கிடைக்கும்,
சுண்டல் சர்க்கரைப்பொங்கல்
சிரிப்பெல்லாம்
போகும்வீடுதோறும் பாகுபாடின்றி கிடைக்கும்

மதியச்சோறு
அன்னதானத்தில் முடியும்
தானம் செய்தவர் பெயர்
பலகையில் வரும்
பேச்சுக்கு இடையிடையே
அன்னாரின் பெயரை காற்றிடை
கலந்துவிடுவோம்
பாட்டிடைப் புகழ்ந்துச் சொல்வோம்

வயிறார உண்ண மனசு
மனதார எல்லோரையும் வாழ்த்தும்

மாலையில் சோர்ந்துப் போயிருப்போம்
மறுநாள் விடியும் வரை
அசராமல் தூங்கிக்கிடப்போம்

கனவில் நிறைய சாமிகள்
வந்துபோகும்..

அது வேறு காலம்..
-----------------------------------

4
கூரைவீடு
மாடிவீடு
இரண்டிற்கும் நடுவே நிறைய
ஓட்டுவீடுகள் அன்று
வெயில் சுட்டிருக்கும்..

மாடிவீட்டிற்கு
முந்தையப் படியும்
கூரை வீட்டிற்கு அடுத்தப் படியும்
இந்த ஓட்டுவீடுகள் தான்,

காலையில் பனிபடர
ஓடுகளில் இருந்து வரும் குழம்பு வாசமும்
வெள்ளைப் புகையும்
தாழ்வாரத்தில் ஒழுகும் மழைத்தேங்கிய நீரும்
அதிகாலையின் வானொலிச் செய்தியும்
உடல்சுடாது கண்கூசும் மஞ்சைவெயிலும்
இன்று நினைத்துக்கொண்டால்கூட
தேநீர் கடையின் தகரப்பந்தலின் மேல்நின்றுக் கத்திய
காகத்தின் நினைவோடு
கலையாமலே இருக்கிறது..

முருங்கைமரம் பூ உதிர்த்தும்
வேப்பம்பழம் கொட்டைக் காய்ந்தும்
ஓட்டு வீட்டிற்குள் வாழ்ந்த
அந்த வாழ்கை வேறு..

மின்விசிறியின் சப்தம்
இசையானது
இந்த ஓட்டுவீடுகளில்தான்,

விண்முட்டும் கனவுகளுக்கு கைகோர்க்க
வானத்துநிலா வீட்டிற்குள் வந்ததுமிந்த
ஓட்டுவீட்டின் ஓட்டைவழிதான்..

செம்பருத்திப் பூத்ததும்
சில ஓட்டுவீடுகளின் மேல்
பூசணிக்காய் கொடிபடர்ந்ததும்
மைனா முட்டையிட்டதும்
எலி வேட்டை பூனை ஆட்சி
ரயில்பூச்சிகள் கூட வாழ்ந்ததுமென
அங்கே நிறைய வாழ்க்கை அன்று
ஒற்றைவீட்டிற்குள் இருந்தது..

இன்று நமக்கு ஓட்டுவீடுகள்
சிட்டுக்குருவியின்
சத்தத்தோடுச் சேர்ந்து குறைந்துக்கொண்டே
வந்தாலும் –

ஒற்றைவரியில் அதன் நினைவுகளையெல்லாம்
வாரி இரைத்துவிடலாம்
'அது வேறு காலம்..'
---------------------------

5

இலைகள் துளிர்ப்பதும்
செடிகள் மரமாவதும் வேறு,
மழைக்கு குடைபிடிப்பதும்
வெய்யிலுக்கு கூடாரம் அமைத்ததும்கூட வேறு,

குழந்தைகள் கண்ணாடியணிவதும்
இளைஞர்கள் மருந்தோடு வாழ்வதும்
முதியோர் தனித்துச் சாவதும் – எங்கோ நம்
வாழ்வின் பிசகென்று தெரியல்லையா ?

வளர்ச்சியில்
கண்கள் குத்தப்படுவதில்லை;
கண்குத்தி வளர்வதே நெஞ்சைக் கிழிக்கிறது..

மரங்களை வெட்டுவதும்
வாடாமலர்கள் வீட்டில் நுழைவதும்,
வீட்டை மனதால் மூடுவதும்
வெளியை குளுமைக்காய் எரிப்பதும்,

விதைப்பதை மறப்பதும்
ரசாயனத்தில் விளைவதும்,
குளிர்ந்ததை ஒழித்ததும்
குடித்து குடித்து அழிவதும்,

கோடாரி மண்வெட்டி கடப்பாரைகளை
வீசிவிட்டு'
அம்மி உரல்களை
கிணற்றோடு போட்டு மூடிவிட்டு'
கணினி கைப்பேசி
புகழுக்குப் புரட்சியென
கதிரலைக் கற்றைகளுக்கு நடுவே
வண்ணக்கனவுகளை விற்றுத்திரிவதும்,

மண்தோண்டி நட்ட மரத்தை
அறிவியலால் வெட்டிச் சாய்ப்பதும்,
கட்டடங்களால் நிமிர்ந்து நிமிர்ந்து
கையூட்டால் சரிவதும,
பிறரை நம்பி, புறம்பேசி, அறம் விட்டு விலகி
அளவோடு நில்லாமல் ஓடி ஓடி
எங்கோ எதையோ தேடி தேடி
நம் அடையாளங்களைத் தொலைத்து
தொலைத்து
பணத்துள் புதைவதும்
நரைக்குமுன் பழிக்குள் விழுவதும்
பதற்றத்தில் மூச்சு நின்றுஓய்வதும்
ஏதோ.. நாம் வாழ்வதன் தவறென்று தெரியவில்லையா?

தெரியும்
எல்லாம் தெரியும் நமக்கு
எல்லாம் மாறும்
ஏதோ இதெல்லாம் அதன்போக்கில் நடக்கிறது
அதன்போக்கில் மாறும்
அதனாலென்ன -
இது வேறு காலம்

வீட்டிற்குள் உறவுகள் கூடிச் சிரிக்க
சிட்டுக்குருவிகள்
சன்னலில் கத்தியதும்
உறவுகள் வீட்டிற்கு வருவதை
கூரைக்குமேல் நின்று காகம்
ரக்கை யடித்து அடித்துச் சொன்னதும்
கோழிக்கு கறுப்பி
நாயிக்கு செவளை
ஆட்டுக்கு டேய் ஆயிரம்னு பெயர்சூட்டி
மண்ணோடு வாழ்ந்ததெல்லாம் வேறு –
அது வேறு காலம்..