புகைப்பழக்கம் (உலக புகைப்பிடித்தல் எதிர்ப்புத் தினம்-31-05-2017)

கவிஞர் சபா.அருள்சுப்பிரமணியம்

புகையிலைமாந்தர் வாழ்வழியப்
    புரியும் கேடுகள் அறிந்திருந்தும்
பகையிலைஎன்றதைநாடுவதேன்?
    பாரியவிளைவைத் தேடுவதேன்?

தேடிச் சேர்க்கும் புகைப்பழக்கம்
    தீராநோய்தந் துனையழிக்கும்!
கூடி வந்துகுழிபறிக்கும்!
    கொடியபழக்கம் புகைப்பழக்கம்!!

மெல்லத் தொடங்கும் புகைப்பழக்கம்
    மீறிச் சென்றுமேலோங்கிக்
கொல்லும் கொடியபழக்கமிதைக்
    கூடியமட்டும் தவிர்த்திடுவோம்!

உன்னைமட்டும் அழிக்காது
    உன்னுடன் சேர்ந்தஉறவுகளைத்
தின்னும் கொடியபுகைப்பழக்கம்
    சேரவிடாதேஉன்னிடத்தில்!

உள்ளே இழுக்கும் புகைசென்று
    ஒவ்வொருஉறுப்பாய் அரித்தரித்து
மெள்ளக் கொல்வதைஅறிதிடுவாய்!
    வேண்டாம் அதைநீவிலக்கிடுவாய்!!

சுகத்தைக் கெடுத்துஉயிர்குடித்துச்
    சூழலைக் கெடுக்கும் புகைப்பழக்கம்!
இகத்தில் இருந்துமறைந்திடநாம்
    இணைந்துபோரிடமுன்வருவோம்!!

புகையொருஅறிகுறிநெருப்புக்குப்
    பகையொருஅறிகுறிஅழிவுக்குப்
புகையும் பகையும் உன்னிடத்திற்
    புகுந்தால் கேடதைப்போக்கிவிடு!

வேண்டாம் என்றுதடுத்திடுவோம்!
    வேதனைதருமதைவிட்டிடுவோம்!!
தீண்டாப் பழக்கம் புகைவிடுவோம்!
    தேகசுகத்தைப் பேணிடுவோம்!!

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்