கடவுச்சொல்

தமிழ்மணவாளன்


பகங்கள் போர்த்திய வெற்றுடலமெனக் கிடக்கும்
காலத்தை உயிர்த்தெழச் செய்யும்
கடவுச்சொல் மட்டுமேனோ
மறந்து போகிறது.

தவறாக ப்ரயோகிக்கப்பட்ட
ஒற்றைக் கடவுச்சொல்
ஒட்டுமொத்த உறவின் இறுக்கத்தையும்
குலைத்துவிட்டுப் பரிகசிக்கிறது.

கடவுளைக் கண்டடைவதற்கான
கடவுச்சொல்
மந்திரமென்று யார் சொன்னது

கடவுச்சொல் மிகவும் அந்தரங்கமானது;
அணியும் உள்ளாடையைப் போல.

ஆயினும்
அவசரத்தில் எடுத்த பிள்ளைகளின்
அலைபேசி திறக்கவொண்ணாமல்
கடவுச்சொல் காவலில்
பெற்றோர்க்கு பெரும் பதற்றத்தை
உருவாக்கி விடுகிறது.

களவாடப்பட்ட கடவுச்சொல்
என்பதறியாமல்
‘கரன்ஸி’ நோட்டுகளை
வாரி வழங்குகின்றன
அப்பாவித் தானியங்கி எந்திரங்கள்.

கடவுச்சொல் அறியாப்
பொழுதின் வெறுமையில்
வாழ்வின் இயக்கமே ஸ்தம்பித்து விடினும்,
கடவுச்சொல் மட்டுமே வாழ்க்கையன்று.
காணாமல் போன கடவுச்சொல்லைக்
கண்டுபிடிக்க வழிநெடுக கிடைக்கின்றன
‘மென் பொருட்கள்’.

கடவுச்சொல் எப்போதுமே
மாறுதலுக்கு உட்பட்டதுதான்.
அவசியமெனில்,
கடவுச்சொல்லை மாற்றிக் கொள்ளலாம்...
புதிதாகவும், சரியாகவும்.

            

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்