'ராஜாங்கம்'   ஹைக்கூ கவிதைகள்

கொகுப்பு: கன்னிக்கோவில் இராஜா

ஆ.ராஜா

தூர்வாரப்பட்டு விட்டது
வரைபடத்திலும்
ஆறுகள்

கன்னிக்கோவில் இராஜா

பெண் கல்வி அவசியம்
சுவரின் மீது
சாணி தட்டும் சிறுமி

பூபதி ராஜா

வல்லரசு கனவு
தகர்ந்து போனது
பிச்சைக் கேட்கும் சிறுவர்கள்

பா.ராஜா

இழவு வீடு
அழுவதற்கு
கூலியாட்கள்

கஸ்தூரி ராஜா

உளி பட்ட இதயம்
தெளிவான முடிவு
களிப்பான வாழ்வு

வசந்தராஜா

மின்வெட்டு இரவு
நல்லதொரு வாய்ப்பு
நட்சத்திரம்; பார்க்க

மு.ராஜா

பிணங்களிடம்
சிரிக்கின்றன
மலர்கள்

கவி.மா.ஷண்முகராஜா

அமைச்சர் தலைமையில்
அமைதி ஊர்வலம்
கலவரமாய் ஊர்

இதய ஏசராஜ்

எழுத்துக்கள் ஈட்டியாக
ஸ்கூட்டர் கேட்கும்
மருமகன் கடிதம்

அ.இலக்கிய ராஜா

வயிறு நிறைந்தது
கூடி விவாதித்தார்கள்
வறுமை ஒழிப்பு

செல்வராஜா

அள்ளிப்பருகினேன்
அடங்கவில்லை தாகம்
அறிவு அருவி

கொள்ளிடம் காமராஜ்

பல்லியிடம் சிக்கிய பூச்சியாய்
மார்வாடியிடம்
தமிழன்

க.இளையராஜா

தேசிய உணர்வு
கள்ள நோட்டிலும்
காந்தி

தோழன் ராஜா

காத்திருந்து கிடைத்தது
வேலை நியமனக் கடிதம்
அய்ம்பது வயதில்

சரவணராஜ்

மணமேடையில்
முதிர்க்கன்னி
மணமகள் தோழி

கண்டியூர் ராஜா

படிப்பும் பட்டமும்
உயர உயர
உயர்கிறது வரதட்சணை

வீ.பாரதிராஜா

மது ஒழிப்பு மாநாடு
கூட்ட முடிவில்
இலவச மது பாட்டில்

பொ.செல்வராஜ்

கல்லறை தான்
விழித்திருக்கிறது காதல்
தாஜ்மகால்

ராசை.கண்மணி ராசா

எல்லையைப் பற்றி
எள்ளளவும் பயமில்லை
கடல் மீன்கள்

ஆர்.நாகராஜ்

வெறும்புள்ளி
பெரும்புள்ளியாக்கியது
தேர்தல்

ஜெ.செண்பகராஜன்

கழி;ப்பறை இல்லாத கிராமம்
வீடு தோறும்
தொலைக்காட்சிப் பெட்டிகள்

வீ.தங்கராஜ்

விதையின் வாழ்க்கை
மரணத்தில் தொடக்கம்
உயிர்த்திடும் அற்புதம்

ஜனனி அந்தோணிராஜ்

உயிர் கொடுத்த தெய்வம்
ஊருக்கு வெளியே ஆலயம்
அனாதை இல்லம்

பொள்ளாச்சி குமரராஜன்

சாவு வீடு
தவறாமல் வந்து விடுகிறது
சாதி சண்டை

பவல் ராஜ்

வெயிலில் காயும்
நிழல் தரும்
மரங்கள்

ஜா.ஜெயராஜ்

கூட்டாஞ் சோறு
சுவையில்லை
அகதி மண்

சு.இராமராஜன்

அத்து மீறும் ஆசை
கையில் இனிப்பு
சர்க்கரை நோய்

இ.பாக்கியராஜ்

உழுவதற்கு
நிலமில்லை
சிறப்பு பொருளாதார மண்டலம்

துரை கோவிந்தராசன்

பிழை தான்
ரசிக்க முடிகிறது
மழலை மொழி

இரா.நாகராசன்

சாதிக் கலவரம்
பலன் கிட்டியது
அரசியல்வாதிக்கு

வெ.யுவராஜ்

நூறு விழுக்காடு
இட ஒதுக்கீடு
அடுப்படியில் பெண்ணுரிமை

இரா.சுந்தரராஜன்

இடுகாட்டுப் பள்ளி
இடைவேளை ஒய்வு
கல்லறை மேல்

ஒ.ஆர்.நாகராசன்

சுடப்பட்ட காந்தி
சிரித்தார்
ரூபாய் நோட்டில்

ஆ.சு.ராஜா

நம்பிக்கை வாக்கெடுப்பு
வெற்றி பெற்றது
கருப்புப் பணம்

பெ.கு.தங்கராஜ்

அவசர அவசரமாய்
நலம் விசாரிக்கும் உறவுகள்
விளம்பர இடைவேளை

சோ.ம.செயராசன்

மானாட
மயிலாட
ஆட்டுகிறது பணம்