முகநூல் ஹைக்கூ

கவிஞர் இனியன், கரூர்

முகநக நட்பதே
நட்பு
முகநூலில்

அகநக நட்பு
வேண்டாம்
முகநூலில்

ஒரே சொடுக்கில்
ஓராயிரம் நட்பு
முகநூலில்

பெண்ணே உன்
படம் இடேல்
முகநூலில்

பாம்பின் படம் தொடலும்
முகநூலில் படம் இடலும்
ஒன்றே.

வாழ்ந்தவரும் உண்டு
மாய்ந்தவரும் உண்டு
முகநூலால்.

கல்யாணம் பண்ணியும்
சந்நியாசிகள் இருவரும்
முகநூலால்.

லைக் இல்லாவிட்டால்
லைஃப் இல்லை
முகநூலில்.

அப்பா அம்மா
குழந்தைகள்
தனித்தனித் தீவுகளாய்.

மேதையும்
பேதையும்
முகநூல் போதையில்.

காலை எழுந்ததும் முகநூல்
கருத்தாய் உள்ளாள்
பாப்பா.

மாலை முழுதும் முகநூல் என
வழக்கப்படுத்திக் கொண்டாள்
பாப்பா.

பொழுதுபோக்க
நுழைந்தாள் முகநூலில்;
விழுந்தாள் பழுதாகி.

அளவுக்கு மிஞ்சினால் விஷம்
அமுதம் மட்டுமல்ல
முகநூலும்.

உன்னால் நான் கெட்டேன்
என்னால் நீ கெட்டாய்
முகநூல் புதுமொழி.

செல்லெல்லாம்
செல்லாகா
முகநூலின்றி.

வழக்கொழிந்தன
பல நூல்கள்
ஒரு நூல் உலாவர.

முகநூல் பார்த்தவனின்
முகம் சிதைந்தது
கார் விபத்தில்.

முகநூலில் லைக் போட்டவள்
சாம்பாரில்
உப்பு போடவில்லை!

முகநூலில் லைக் போட்டவன்
மனைவியின் சமையலுக்கு
லைக் போடவில்லை!

ஒவ்வொருவர் கையிலும்
ஒரே நூல்தான்
முகநூல்.

முகநூல் இல்லாமல்
முனியம்மா இல்லை
முனிவரும் இல்லை!

முகநூல் என்பது
இருமுனைக் கத்தி
கையாள்க கவனமுடன்.

முகநூலும் இருக்கட்டும்
ஒரு மூலையில்
ஊறுகாய் அளவில்.
 

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்