நல்லதோர் கவிதை நெய்தே.........!

எஸ்.பாயிஸா அலி, கிண்ணியா, இலங்கை.

செவிப்பறை யுரசும்!
குரலோசையில் மடல் திறக்கும்.
ஷவர்த்தேனும் நுரைப்பூவும் ஸ்பரசித்தே மெய்சிலிர்க்கும்.
அதிகாலைப் பிரார்த்தனைக்காய்
நிலமுரசும் நுதலினிலே
சுவனத்துத்தென்றல் சுழன்றடிக்கும்.
சமையலறைப் பரபரப்பில் நிமிசங்கள்
நெருப்பாகிப் புகைந்திருக்கும் .
அழுத்தலுக்காய் பிஞ்சுச்சீருடைகள்
தகித்திருக்கும்.
ஒப்பனைக்கு மட்டும் நாழியின்றியே அவசரம்
கதவடைக்கும்.
வகுப்பறைக் களமதிலும்
கரும்பலகையோடு போராடும்
விரல்களுக்கே வெண்தூசு குளியல்போடும்.
ஆய்வறை ரசாயனங்களுடன்
கண்ணாடி முகவைகள் கைகலக்கும்.
அடுத்ததாகவும்.....
உச்சிவெயில் பயணங்களுடன்
இரண்டாம்சுற்றுப் பரிமாறல்கள் தொடர்ந்திருக்கும்
இன்னமும்......
மாலைத்தேனீர், மகளின் 'ஹோர்ம் வேர்க்|
கோடைமழைத்துளியாய்
குடும்பத்தவர் வருகை
இடைக்கிடையே சொடுக்குப்போடும்
செல்பேசியதன் செல்லக்குரவை.
ஒப்படைக்கட்டுகளுக்குள் மூச்சுத்திணறும்
சிவப்புபேனாவின் ஒளிவளையங்கள்.
கூடவேவரும் என்துணையின் பனிப்பார்வையோ
சுவாலைச்சுமைகளையே
சுட்டுப் பொசுக்கிக்
கூதல் தெளிக்கும்.
சுவர்க்கூட்டுக்கணமுள்ளின்
சுழலொலி உயர்வு கொள்ளும்
அடர்மையூடேயும்
ஆர்ப்பரித்து அதிர்ந்திருக்கும்
நல்லதோர் கவிதை நெய்தலுக்கான
மென்சிலிர்ப்பு


sfmali@kinniyans.net