புற்று நோய் !
(உலக புற்று நோய் தினம் - பிப்ரவரி 04)

கவிஞர் எம்.ஜெயராமசர்மா, மெல்பேண்



காசமெனும் நோய்தானும்
       கதிகலங்க வைத்ததுவே
கவலையுடன் பலபேரும்
       காசமதில் உழன்றனரே
மேதினியில் வியாதிபல
       வந்துகொண்டே இருக்கிறது
விருப்புடனே வியாதிதனை
       வரவேற்பார் யாருமுண்டோ !

என்றாலும் சிலபேர்கள்
       இதைமனதில் கொள்ளாமல்
எவர்கருத்தும் கேட்காமல்
       இறுமாந்தே நடக்கின்றார்
ஆரம்பம் நடக்குமுள்ளே
       அவர்க்கு அதுதெரியாது
ஆபத்து மெள்ளவந்து
       அங்கேயே அமர்ந்துவிடும் !

ஆபத்தாய் வந்ததுவே
       அகிலமதை உலுக்கிநிற்கும்
ஆலகால விஷமான
       புற்றுநோயின் வருகையதே
தப்பிதமாய் நடந்திடுவார்
       புற்றுநோயைக் கண்டவுடன்
முப்பொழுதும் கவலையிலே
       மூழ்கிடுவார் வாழ்வினிலே !

புற்றுநோய் வருவதற்குப்
       பொதுவான காரணங்கள்
செப்பமாய் சொன்னாலும்
       சிலவுமிப்போ சேர்ந்துளது
மொத்தமாய் பெருகிவரும்
       விஞ்ஞானக் கருவிகளும்
புற்றுநோய் பெற்றுத்தர
       சற்றேனும் தவறவில்லை !

புகைப்பழக்கம் குடிப்பழக்கம்
       புற்றுநோயை வரவழைக்கும்
என்றெங்கும் பரப்புரைகள்
       ஏராளம் நடக்கிறது
வருகின்ற சினிமாக்கள்
       புகைகுடியைக் காட்டிநின்றால்
வளர்ந்துவரும் தலைமுறைகள்
       புற்றுநோய்க்கு என்னசொல்லும் !

ஊடகங்கள் அத்தனையும்
       உழைப்பதற்கு இருந்தாலும்
கேடுதரும் விஷயங்களை
       கிழித்தெறிந்து விடவேண்டும்
குடிபற்றி புகைபற்றி
      விளம்பரங்கள் போடுவதை
அடியோடு அகற்றிவிட
      அவையாவும் வரவேண்டும் !

புற்றுநோய் என்றதுமே
       புலனெல்லாம் ஒடுங்கிறது
உற்றவரும் மற்றவரும்
       ஒருவாறு நோக்குகிறார்
பெற்றெடுத்த பிள்ளைகூட
       சற்றுத்தள்ளி நிற்கின்றார்
மற்றநோயைப் புறந்தள்ளி
       புற்றுநோயே நிற்கிறது !

நாகரிகம் எனக்கருதி
       நாளும்பல செய்கின்றோம்
நமக்குநன்மை செய்தவற்றை
       நாமொதுக்கி விட்டுவிட்டோம்
வாழ்வெல்லாம் பலநோய்கள்
       வருவதற்கும் காத்திருக்கு
மனமதனை மாற்றுவதே
        வாழ்வுக்கு வழிவகுக்கும் !
 



 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்