நெஞ்சிலே இட்ட நெருப்பு!

அருட்கவி தம்பிஐயா ஞானகணேசன்



சிங்களமும் செந்தமிழும் சேர்ந்த இலங்கையிலே
மங்கலமாய் வாழ்ந்தோம் மகிழ்வுடனே – அங்கொருகால்
வஞ்சகமாய்ச் சிங்களம் மட்டுமென்ற சட்டமேற்றி
நெஞ்சிலே இட்டார் நெருப்பு!

புத்தமும் சைவமும் பூரித்து வாழ்ந்தமண்ணில்
எத்திசையும் கண்டோம் எமவெறிகள் - பித்தரவர்
கொஞ்சலொடு வாழ்ந்தஎம் கோடித் தமிழினத்தின்
நெஞ்சிலே இட்டார் நெருப்பு!

எத்தனை வேற்றுமொழி எம்மவர் பேசுகின்றார்
அத்தனையும் கற்றனரே ஆசையொடு – சித்தமின்றி
அஞ்சவைத் தாளவெண்ணி யன்னைத் தமிழனின்
நெஞ்சிலே இட்டீர் நெருப்பு!

குட்டி இலங்கை! குரோதம் எதற்கப்பா?
கட்டி யணைத்துக் காமுறாது! – கெட்டவனாய்
அஞ்சவைத்(து) ஓட்டி யகதியாக்கி எம்மினத்தின்
நெஞ்சிலே இட்டீர் நெருப்பு!

கல்வியே கண்ணாகக் கற்றுமே யெம்மினம்
வல்லவரா யோங்குகையில் வற்குணத்தால் - மல்லரே
வஞ்சமொடு எம்சிறாரை வாட்டி வதைத்துமே
நெஞ்சிலே இட்டீர் நெருப்பு!

வைத்திய சாலையென்றோ வாழுமிட மென்றோஉன்
பைத்தியப் பட்டாளம் பார்த்தனரா? – சைத்தானே
கொஞ்சு தமிழர் குடியெலாம் குண்டுபோட்டு
நெஞ்சிலே இட்டாய் நெருப்பு!

ஒன்றா யிணைந்திருந்தோம் உன்னினமும் நாம்மணந்தோம்
நன்றாய் வாழ்ந்தோமே நம்மண்ணில் - அன்றோர்
வஞ்சகன் சூழ்ச்சியால் வண்தமிழை வேறாக்கி
நெஞ்சிலே இட்டான் நெருப்பு!

பாசமொடு பற்றுவைத்துப் பைந்தமிழர் கைகோர்த்து
நேசமொடு ஆளநினை நீதியாய் - வாசமண்ணில்
கொஞ்சு தமிழினத்தைக் கூட்டி மறக்கவை
நெஞ்சிலேநீ யிட்ட நெருப்பு!

புத்தபிரான் கற்பித்த கொள்கையெலா(ம்) எண்ணிப்பார்!
யுத்தவெறி ஏனப்பா? நிம்மதியாய் - சித்தமதாய்
கொஞ்சலொடு ஆண்டிடவே கோமக்கள் தாம்மறப்பர்
நெஞ்சிலேநீ யிட்ட நெருப்பு!
 




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்