நெஞ்சிலே இட்ட நெருப்பு

புலவர் முருகேசு மயில்வாகனன்

நெஞ்சிலே இட்ட நெருப்பு நெடிதுயர
வஞ்சிக்கப் படட்எம் வாலிபர்கள் - நஞ்சைக்
கழுத்திலே கட்டிக் களிப்பாகப் போர்செய்
களத்திலே கால்பதித்தார் காண்.

விந்தை பலசெய்தே வித்தகராய் வாழ்ந்தவர்கள்
நிந்தைக்குள் ளாகியே நீதியற்று – குந்தகஞ்செய்
வஞ்சகரின் சூழ்ச்சியால் வாழ்விழந்த செந்தமிழர்
நெஞ்சிலே பெற்ற நெருப்பு.

செந்தமிழின் சீரினைச் செப்பமுறத் தானறிந்தே
விந்தைசெய் சிங்களத்தார் வீறாப்பாய் - நிந்தித்து
வஞ்சித்தார் எம்மவரின் வாய்ப்பான வாழ்வழிய
நெஞ்சிலே இட்டார் நெருப்பு.

ஈழத் திருநாடு ஈன்றெடுத்த புத்திரர்கள்
வாழ வழியற்றே வாய்ப்பாக – வாழ்வதற்காய்
அஞ்சி அகதிகளடாய் அங்குமிங்கும் போவென்று
நெஞ்சிலே இட்டார் நெருப்பு.

நாடற்ற மக்கள் நலமுடனே வாழ்கையிலே
ஊடறுத்து வந்த'ரம்' ஊக்குகிறார் – நாடகற்றும்
வஞ்சகத் தன்மையால் வாய்ப்பாக வாழ்ந்தோரின்
நெஞ்சிலே இட்டார் நெருப்பு.

(இன்றைய அமெரிக்க ஜனாதிபதியின் திட்டம்)

வந்த இடத்திலே வாய்ப்பாக வாழ்ந்தாலும்
சிந்தையெலாம் இங்கில்லை சொப்பனத்தில் - எந்நாளும்
வஞ்சனை செய்வோர் வருகையும் எம்மவர்க்கு
நெஞ்சிலே இட்ட நெருப்பு.
 




 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்