போர்வாள் எங்கள் பெண்கள்

புலவர் முருகேசு மயில்வாகனன்



டங்கி ஒடுங்கி அறையி லிருந்தோர்
திடகாத் திரராய்ச் செருவில் - தடம்பதித்த
நங்கையரின் தீரச் செயல்களை நாமுணர்வோம்
அங்கமவர் எங்களின் ஆப்பு.

வீட்டிலே செல்வச் செழிப்புடனே வாழ்ந்தவர்கள்
நாட்டிலே ஏற்பட்ட நாசகார – ஆட்சியினால்
வீட்டைவிட்டுக் காடேகி வீரர்கள் பாசறையில்
கூட்டுப் பயிற்சிபெற்றார் காண்.

அகப்பை பிடிகையில் ஆயுதங்கள் ஏந்தி
முகங்கொடுத்த மாதர் முறையாய்ப் - பகைவரைக்
கண்டஞ்சாப் பத்தினிகள் காவிய நாயகிகள்
பண்டைத் தமிழிச்சிப் பண்பு.

முறத்தால் புலியோட்டி முத்தாய்ப்பு வைத்தோர்
அறங்காத்த அன்னையர் அந்நாள் - சிறப்பாக
வாழ்ந்த பரம்பரையில் வந்தவர்கள் எம்மவர்கள்
தாழ்வின்றிப் போர்புரிந்தார் பார்.

வீரஞ் செறிந்தவர்கள் விற்போரில் மட்டுமல்ல
சீரொளிர் ஆயுதத்தைச் சிந்தித்து – பேரொளிர்
யுத்த முனைகளில் உக்கிரமாய்ப் போரிட
உத்தி வகுத்த உறுதி

போர்க்காலச் சூழல் பொறுப்பாய்ப் பதவியேற்று
ஊர்காத்த உத்தமிகள் தார்சூடி – போர்முனை
சென்றே பெருவெற்றி கண்டவர்கள் செப்புமொழி
இன்னலைப் போக்குமென் றெண்ணு.

போர்முனையில் மட்டுமல்ல பொய்பேசும் மக்களைச்
சீர்திருத்தும் செம்மலர்கள் செய்செயல்கள் - ஆர்வமுடன்
தன்னாலி யன்றவற்றைத் தக்கவாறு செய்துவந்தார்
இன்னலைத் தாங்கியே ஏற்று.

நாடாள வல்லவர்கள நற்பணி யாளர்கள்
வாட துளைக்கவே வல்;லவர்கள் - சூடா
மணிகளாய்த் தேசத்தின் மங்கையர் தேர்ந்த
அணிகலன்கள் தேசத் திரு.

வீட்டின் தலைவியாய் வீண்வார்த்தை பேசாதே
ஈட்டும் பணிகளை இங்கெடுக்க – நாட்டமில்லை
தாயாகச் சேவகியாய்த் தாரமாக மந்திரியாய்த்
தேயா துழைக்கின்றார் தேர்





 

சர்வதேச மகளிர் தினம் - மார்ச் 8
 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்