மரபுக்கவிதையே மாத்தமிழைக் காக்கும்

பாவலர் கருமலைத்தமிழாழன்



முகநூலில் நட்புதனை வளர்த்தல் போல
       மூத்தமொழி முத்தமிழை வளர்க்க வேண்டும்
அகநூலில் அன்புதனை வளர்க்கும் போதே
       அகிலத்தார் மனிதரென்று மதிப்பர் ஏற்பர்
தகவுடைய இலக்கணத்தில் எழுதும் போதே
       தரமான கவிதையென உலகோர் சொல்வர்
நகமகுடம் விரற்களிக்கும் உறுதி போல
       நல்யாப்பே கவிதையினை நிலைக்க வைக்கும் !

சங்கத்துப் பாட்டெல்லாம் கட்ட மைப்பில்
       சருக்காமல் சாயாமல் அமைந்த தாலே
பொங்கிகடல் அழித்தபோதும் களப்பி ரர்கள்
       பொலிவிழக்க வைத்தபோதும் மாய்ந்தி டாமல்
செங்கதிராய் இன்றளவும் ஒளிர்ந்து நின்று
       செம்மொழியாய் உலகோரை ஏற்க வைத்தும்
மங்காத முதன்மையினம் தமிழ ரென்று
       மார்தட்டிச் சொல்வதற்கும் நிற்கு திங்கே !

கணினிக்கே ஏற்றமொழி என்று ஞால
       கல்வியாளர் போற்றுகின்ற செம்மைத் தமிழை
மணியான அறிவியலின் கருத்தொ லிக்கும்
       மணித்தமிழைக் காப்பதுநம் கடமை யன்றோ
திணித்தபோதும் வடமொழியைத் தூக்கெ றிந்து
       திதழ்கின்ற தனித்தமிழை நலிவு செய்து
பிணிசெய்யும் ஆங்கிலத்தைக் கலந்தி டாமல்
       பிற்காலம் போற்றுமாறு மரபைக் காப்போம் !



உலக கவிதை தினம் மார்ச் 21
 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்