பூக்காடே வாபக்கம் பூத்து

பாவலர் கருமலைத்தமிழாழன்

பாக்காடு போல்பேசிப் பாவங்கள் கண்காட்டி
சாக்காடு கொண்டிடவே சார்ந்திட்டாய் – தூக்கமின்றி
வேக்காடு நெஞ்சேற வேதனையில் வாடுகின்றேன்
பூக்காடே வாபக்கம் பூத்து !

கெண்டை பிறழ்கின்ற செவ்வரிக் கண்களிலே
வண்டை அனுப்பி வளைத்திட்டாய் – தண்மதியே
ஏக்கத்தில் வெந்துழலும் என்நிலையைப் போக்குதற்குப்
பூக்காடே வாபக்கம் பூத்து !

முத்துச் சரத்தில் முறுவலினைக் காட்டியென்
சித்தங் கலங்கிடவே செய்திட்டாய் – புத்தமுதே
தேக்குச் சிலையேயுன் தேனிதழில் முத்தமிடப்
பூக்காடே வாபக்கம் பூத்து !

சேலத்து மாம்பழமாய்ச் சேர்ந்தினிக்கும் கன்னத்தின்
கோலத்தில் என்னுயிரைக் கொள்ளையிட்டாய் – தாளமாய்
வாக்கெல்லாம் உன்பெயரே வாழத் துணையாகப்
பூக்காடே வாபக்கம் பூத்து !

குத்திட்டு நிற்கின்ற கூர்முனைக் கொங்கையிலே
கொத்திட்டாய் நெஞ்சைக் குறிவைத்து – பித்தனாய்
ஆக்கிட்டாய் உன்நினைவில் அல்லும் பிதற்றுகின்றேன்
பூக்காடே வாபக்கம் பூத்து !

டும் அரவத்தின் அல்குலைப் பெற்றவளே
பாடும் குயில்குரல் பாவையே – நாடுகிறேன்
போக்கிடுவாய் என்காமம் பேரின்பம் நாம்பெறுவோம்
பூக்காடே வாபக்கம் பூத்து !

 


 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்