தமிழீழம் தழைக்கச் செய்வோம்!

 அகரம்.அமுதா

 தனக்கென்று நாடொன் றில்லாத்
தமிழனே! இன்னல் என்ப(து)
உனக்குற்றால் அன்றி நெஞ்ச
உணர்வுறா உயிர்ப்பி ணம்மே!
கணக்கற்றோர் ஈய நாட்டிற்
களங்கண்டுச் சாகும் போதும்
'எனக்கென்ன?' என்று நீயும்
இருப்பதே மாட்சி யாமோ? 

நம்மினம் உரிமை யற்று
நளிவெய்தித் தாழக் கண்டும்
நம்மினம் இடமொன் றின்றி
நானிலம் அலையக் கண்டும்
நம்மினம் வாழ்க்கை யற்று
நமனிடஞ் சேரக் கண்டும்
கம்மென இருப்ப தாநீ?
கண்ணில்தீ கனலச் செய்வாய்! 

தமிழரென் றினமொன் றுண்டேல்
தனியவர்க் கோர்நா டெங்கே?
தமிழரென் றினமொன் றுண்டேல்
தனித்தமிழ் ஆட்சி எங்கே?
தமிழரென் றொன்று பட்டுத்
தனியீழம் பேணு கின்றார்
தமிழரென் றுணர்வுண் டென்றால்
தகைந்தவர்க் குதவ வேண்டும்! 

துமியினம் ஒன்று பட்டால்
தோன்றிடும் வங்கம் என்றால்
இமிழினம் ஒன்று பாட்டால்
இயலும்பா கிசுத்தான் என்றால்
உமியினம் ஒன்று பட்டால்
உயிர்பெரும் இசுரேல் என்றால்
தமிழினம் ஒன்று பட்டால்
தரணியே கைவ ராதா? 

துயில்சேயுங் கிள்ளி விட்டுத்
தொட்டிலும் ஆட்டும் வஞ்சம்
பயில்நெஞ்சத் திந்தி யாதன்
படைவலி இலங்கைக் கீந்தும்
இயம்பிடும் 'பேசித் தீர்ப்பீர்!'
எந்தமிழ் இனத்தைக் கொல்ல
முயன்றெம்மின் வரிப்ப ணத்தில்
முடிக்கிறார் தடுத்தோ மாநாம்? 

இழுதைபோல் இன்னல் செய்தே
இன்புறும் கீழ்ம னத்தர்
கழுதைபோல் உதைத்த போதும்
கலங்கிடா உரனும் பெற்றோம்!
பழுதைபோல் கடித்த போதும்
பதுங்கிடோம்! தடைகள் இட்டுப்
பொழுதையார் நிறுத்தக் கூடும்?
புலிக்குமுன் பூசை ஒப்பா? 

பொடாச்சட்டம் பொருதும் போதும்
புத்தீழம் புலரக் காண்போம்!
தடாச்சட்டம் தாக்கும் போதும்
தனியீழம் தழைக்கச் செய்வோம்!
இடாச்சட்டம் எதிர்த்த போதும்
இனிதீழம் எழுக என்போம்!
எடா!சட்டம் என்ன செய்யும்?
இன்றமிழன் துணிந்தா னென்றால்!?

 

அருஞ்சொற்பொருள்:-
(துமி -நீரின் நுன்துளி; இழுதை -பேய்; பழுதை –பாம்பு)