மரணத்தின் மரணம் !

எஸ்.எம்.எம்.பஷீர், இலண்டன்

அந்த
உறைந்துபோன
அதி காலைப் பொழுதில்
காற்று திண்மமாய்
கனத்ததுஇ
பனித்துளி சிந்தி
சிலிர்த்தது உடம்பு
யாரையோ குறிவைத்து
மரணம் வாசலில் நின்றது
அமைதியாக !

வீட்டுக் கதவைத் தாண்டி
வாசலில்
மூஞ்சியில் அறைந்தது
முன் பனி
மூக்கு துளைகள்
தடிக்க துடிக்க
மரணம் மனத்தது!
மயக்கம் வந்தது !

படலைக்கு வெளியே
தபாற்காரன்
தலையை உயர்த்தி
தந்தி என்றான்.
மரணத்தின் மனம்
நாசியை துளைத்தது!
இழவுச் செய்தியை
இழுத்து வந்தானோ!

வாசல் கதவைத்
திறந்த பொழுது
வில்லங்கம் ஏதுமில்லை
வந்தவர் சென்ற பின்னும்
வாசலில் யாருமில்லை
தெருவில் வருபவர்
தெரியவில்லை
மரணத்தின் மனம்
நாசியை துளைத்தது !

யாருக்கும் வீட்டில்
நொம்பலம் இல்லை
நொந்து வீழும்
நோயுமில்லை
சூரியக் கீற்றொளி
சுகமாய் சுட்டது
வாயுவைக் கலைத்து
வாசனை பரப்பியது
மரணத்தின் மனம்
நாசியை துளைத்தது !


கழிந்த சாமத்தில்
அம்மா சொல்லும்
ஆந்தை கூட
காது கிழிக்க
அலறவில்லை!
கண்ணை விழிக்கப்
பண்ணவில்லை
அல்லசல்லில்
ஆரவாரமில்லை
ஆனாலும் மரணம்
பக்கத்தில் மனத்தது.!


பள்ளிக்கு செல்லும்
பிள்ளை
சோம்பலில்
விரல் சொடுக்க
பத்தினி பரபரக்க
பாட்டி சாய்மனையில்
பேத்தியைப்
பார்த்துச் சிரிக்கிறாள்,
பாதையில் இறங்கி
நான் நடக்கிறேன்

வேலைத் தளத்தில்
வெயிலின் தீண்டலில்
மரணத்தின் மனம்
மறுகிப்போனது
நிமிர்கையில்
எனைச் சிதைக்கும்
சேதி வந்தது!
மரணம் வாசலைக்
கடந்து போயிற்று

வீட்டு வாசலை
மூடிய மனிதரை
விலக்கிச் சென்று
விம்மிய பொழுதில்
எனக்கும்
குழந்தைக்கும்
பேதம் புரியவில்லை
சாய்மனை சாய்ந்தவள்
சரிந்து கிடந்ததை
சலிக்காமல்
சொல்லும் மனைவி
சற்றேனும்
களைக்கவில்லை

தொப்புள் உறவு
துண்டித்த துயரம்
தொண்டைக் குழிக்குள்
முகாரி இசைக்க
முந்திய பொழுதுகள்
மூண்டு திரண்டன
முன்னே நின்றன
மூச்சை முடக்கி
கண்ணீர் உருக்கின
என்று காண்பேன் என
என்னிடம் கேட்டன !

மரணமே !
உன் மர்ம முடிச்சுக்கள்
ஒரு நாள்அவிழ
நிர்வாணமாய் நீ
மண்டியிடுவாய்
நச்சுக் கொடியை
பிடுங்கி எறிய
பூவின் மொட்டை
கிள்ளியெறிய
பழுத்த இலையை
பறித்து கசக்க
பலமிழந்து
பாவமாய் நீ சாவாய் !

அந்தப் பொழுதில்
அருமைத் தாயுடன்
மரணத்தை வெல்வேன்
உயிர்கள் யாவும்
சுவாசம் மீட்கும்
இறவா உலகில்
உன் சாவைக் காண்பேன்!
உன் இறுதி மூச்சை
உன் இரப்பை சத்தத்தை
இரக்கமின்றி கேட்பேன்
அதுவரை நான் பொறுத்திருப்பேன் !



குறிப்பு: என் தாயின் மரணம் நினைத்து ...!

sbazeer@yahoo.co.uk


         

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்