பழங்கதையே தொடர்கதையாய் நீளக் கண்டோம்

கவிஞ்ர். வா.கோ.இளங்கோவன்

       ஏடெடுத்தேன் எழுதிவைத்தேன் இந்நாள் போக்கை

           ஏழைக்கும் வாழ்வுண்டென் பார்தம் வாக்கை

       கூடெடுத்த ஆமைபோல் நம்பிக் கெட்டோம்

           நம்பிக்கை முனையறுந்து துன்பப் பட்டோம்

       வீடெடுத்து வாழ்கின்ற வசதி யின்றி

           வீதியேதான் விதியென்று வாழ்வார் இன்றும்

       நாடெடுத்த யோசனையால் நாதி இல்லை

           பணமுதலைக் கொட்டமோதான் மாற வில்லை

 

       பாழ்வயிறு காணார்தம் பசியால் வாடும்

          பரமபத வாழ்க்கையை பாரில் இன்றும்

      கூழ்குடிக்கும் காரணங்கள் தேடி நித்தம்

         கூண்டுக்குள் கிளியாக வாழு கின்றார்

     வாழ்கின்ற நாளெல்லாம் “ வறுமை” வாட்டம்

         பதவியிலே அமர்ந்தவரால் இல்லை லாபம்

    சூழ்கின்ற நோய்க்கிருமி கள்ஓர் பக்கம்

         சுழல்கின்ற பூமியிலே வறுமைத் தேக்கம்   

         

                                      :   2   :

 

    கொத்தாகக் கொடுநோய்கள் உயிர்கள் கொய்ய

        கொலை’கள்’பிஞ்சு வன்கொடுமை’கள்’ கொலுவி ருக்கும்

    மொத்தமுமே முடிவதற்குள் முயற்சி  காண

        முயல்கின்றார் முயல்களாய்நல் “முடிவு” இல்லை

   எத்தர்கள் இந்நிலையில் பணத்தைத் தேட

        ஏழையர்க் கெந்நாளும் “விடிவு” இல்லை

    புத்தர்கள் போல்வந்தார் “போதனை” மட்டும்

       புரட்டுகளும் திருட்டுகளும் “சாதனை” எட்டும்

 

   சனநாயகம் வந்ததென்று மகிழ்ச்சி கொண்டோம்

      சனங்களிலே மதம்சாதிச் சண்டை கண்டோம்

  பணநாயகம் மட்டும்நம்மை ஆளக் கண்டோம்

     “பழங்கதையே தொடர்கதையாய்” ஆளக் கண்டோம்

 குணமிங்குத் தேவையில்லை கூடும் வாழ்வில்

     பணமொன்றே “பாதாளம்” வரைக்கும் பாயும்

  நிணமெரிக்கும் சுடுகாட்டில் “பிரிவோ” இல்லை

     நாமிருக்கும் சமூகத்தில்  பேதமோ  எல்லை    

 

                                      :   3   :

 

  எப்பொழுதும் “முப்போகம்” விளைக்க எண்ணி

     வயல்வெளியில் உழவர்தம் வாழ்வோ சோரம்

  தப்பான வாழ்க்கையே கொள்கை என்று

     பெண்மீதான வன்”போகம்” செய்த  சோகம்

  செப்படியாய் வித்தைகள் செய்து ஆட்டம்

     சேவை”யின் நற்பொருளை சிதைக்கும் கூட்டம்

  எப்படியும் வாழலாமென் றெண்ணி வாழ்வார்

     கொடுமைகள்” கொய்வதினி எந்தக் காலம்?

 



உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்