மனிதம் மாண்புற வேண்டும்   

கவிதாயினி பவானி தர்மகுலசிங்கம்

மனிதனின் வாழ்வில் மன்னும்

  மதிப்பினைக் காத்தல் மாண்பே

இனியநல் எண்ணம் ஏற்றம்

  ஈகையிற் றிளைத்தல் நன்றே

தனிமையிற் றன்னை நோக்கில்

  தாழ்வினை அடைவர் காண்பு

குனிவினைத் தருமே கூற்று

  குறுகிய மனத்தோர் பாங்கு!

 

பனிமலர் குளிர்தல் அன்ன

  பக்குவம் நிறைந்தோர் நெஞ்சைப்

பனித்திடும் விழிகள் காட்டும்

  பண்பினை எளிமை கூட்டும்

கனிவினைக் காட்டி வாழ்வு

  கரும்பென இனிக்கச் செய்வர்

தனித்துவ மனிதர் மாண்பைத்

  தரணியும் வியந்து போற்றும்!.

 

தன்னிமை தெரியாக் கண்தான்

  தாரகை காணல் போன்று

இன்புறு இனத்தின் மேன்மை

  ஏற்றியே போற்றா மாந்தர்

அந்நியன் பின்னால் நின்று

  அவனடி பணிந்து வீழ்தல்

சின்னவன் செயலே என்று

  சிந்தையிற் கொள்வோம் நாமே!

 

அடுத்தவன் அடுப்பு ஓய்ந்து

  அகப்பையில் உணவும் இன்றிப்

படுக்கையிற் புரண்டு வீழ்ந்து

  பசித்திடத் துடிக்கும் பிள்ளை

இடுக்கினைக் களையா உள்ளம்

  இருத்திய மனிதன் அந்தோ!

வடுவினைச் சுமந்து, வாழ

  வகையிலா இழிந்தோன் ஆவான்!

 

காய்ச்சிடும் போதிற் பால்தான்

  கனிந்திடும் சுவையிற் குன்றா

பாய்ந்திடும் நதிதான் மேடு

  பள்ளமாய்ப் பார்ப்ப தில்லை

வாய்த்திடும் தகமை பெற்றோர்

  வாழ்வினில் எளிமை பேணல்

ஓய்ந்திடும் காலை கூடும்

  உயரிய சுகமே ஆகும்.

 

பெற்றவள் தாய்க்கு மேலாம்

  பிறந்தநன் நாடு எண்ணார்

உற்றவர் சுற்றம் பேணார்

  உயிர்ப்பிலாச் சடமே யாவார்

கற்றவர் எனுஞ்சொல் கூறின்

  களங்கமே தவிர்ப்போம் கேள்மின்

நற்றமிழ் நிலைக்க ஈகை

  நண்ணியோர் இறவைர் அன்றோ!

 

ஆறுக சினமே என்னும்

  அவ்வையின் மொழியில் நின்று

பேறினை அடைந்தோம் பாரில்

  பெருமையின் பிறப்பாய் எண்ணி

மாறுதல் படைத்தோர் நோக்கி

  மருவியே இசைந்து மாவின்

சாறெனச் சொற்கள் சேர்த்துச்

  சாற்றியே ஈர்ப்போம் சார்ந்தே!




('இலக்கியவெளி சஞ்சிகை' மற்றும் 'தமிழ்ஆதர்ஸ்.கொம்' இணைந்து நடத்திய - இணைய வழிப் பன்னாட்டு மரபுக்கவிதை அரங்கில், படிக்கப்பட்ட கவிதை - காலம் 22-08-2020)





உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்