'நாம் இந்தியர்'!

கே. பி. பத்மநாபன்

எல்லோரும் இந்தியர்தாம் என்னும் எண்ணம்

          எல்லோர்தம் இதயத்துள் உதிப்ப தெந்நாள்?

எல்லோரும் சோதரராய் வாழும் வாழ்வை

          என்றிந்த மண்மீதில் காணக் கூடும்?

பல்வேறு மதசாதி மொழியி னங்கள்

           பாரதத்து மாந்தரிடை மறைவ தெந்நாள்?

எல்லோரும் ஓர்குலமே எனும்மெய் வாக்கும்

           ஏனிங்கே அனுதினமும் பொய்க்கு தய்யோ?

 

பல்வேறு மாநிலங்கள் இருப்ப தெல்லாம்

           பாராட்சி எளிதாக நடப்ப தற்கே;

சொல்செயலில் காண்கின்ற வேறு பாடும்

           சூழலினை ஒட்டியதாய் இருத்த லாலே;

எல்லோர்தம் உடல்குருதி ஆவி தன்னில்

           ஏதேனும் வேற்றுமையைக் கண்ட துண்டோ?

எல்லோரும் உருவத்தில் ஒத்தி ருக்க

           எதற்கிந்த உள்ளத்துள் பகைநோய் மட்டும்?

 

கல்லாரைக் கற்றோர்கள் எத்து கின்றார்;

            காசுடையோர் ஏழையரை வாட்டு கின்றார்;

இல்லாத வர்நெஞ்சுள் பகைமை ஏற்றி

           ஏவுகின்றார் எரிப்பந்தத் தீயை யாண்டும்;

பொல்லாத பகைதன்னை வளர்ப்ப தொன்றே

           பொதுவாழ்வோ? அரசியலோ? ஆட்சி யாமோ?

எல்லோரும் இன்புற்றிங் கிருத்தல் வேண்டும்;

            இந்தியர்நாம் எனுமுணர்வே ஓங்க வேண்டும்!

 

கன்னடமும் களிதெலுங்கும் துளுவும் அந்தக்

            கவின்மலையா ளம்நான்கும் செந்த மிழ்தன்

பொன்னுதரத் துதித்ததெனும் புகழின் றெங்கே?

            போற்றுமொழி வங்காளம் ஒரியா அஸ்ஸாம்

இன்னுமந்த குஜராத்தி மராத்தி யோடும்

            இராஜஸ்தான் பஞ்சாபி இந்தி யோடும்

தென்கிழக்கு வடமேற்குத் திசைக ளோடும்

            தேசத்தில் நல்லுறவாய் ஆதல் எந்நாள்?

 

பாரதமே எங்களது தேச மென்ற

            பாரதியின் தோள்துவளச் செய்தல் நன்றோ?

வீரவிவே கானந்தர் வெற்றி காண

            விரிந்தவழி காட்டியநல் மனமின் றெங்கே?

ஈரமுடை 'இந்தியாவே எங்கள் நாடு ,

            இந்தியர்கள் எல்லோரும் சோத ரர்கள்';

சாரமுடை இவ்வாக்குப் பள்ளி யோடு

            சரிந்திங்கே வீழ்வதுவோ? சிந்திப் போம்நாம்!



('இலக்கியவெளி சஞ்சிகை' மற்றும் 'தமிழ்ஆதர்ஸ்.கொம்' இணைந்து நடத்திய - இணைய வழிப் பன்னாட்டு மரபுக்கவிதை அரங்கில், படிக்கப்பட்ட கவிதை - காலம் 22-08-2020)

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்