தொண்டிற்கேற்றவர்கள்

பாவலர்  கருமலைத்தமிழாழன்

மதுபோதை  போலவரும்  புகழுக்  காக

               மலிவான  செயல்களினைச்  சிலபேர்  செய்வர்

புதுமையினைச்   செய்துபுகழ்  பெறுவ  தற்குப்

               புரிந்திடுவர்  நற்செயல்கள்  சிலபே  ரிங்கே

புதுப்பணத்துப்  பணக்காரர்  புகழுக்  காகப்

               புரவலராய்  வந்துசில  செயல்கள்  செய்வர்

பொதுத்தொண்டா  இவையெல்லாம்  இல்லை  யில்லை

               போலியாகப்  புகழுக்காய்  செயும்செ  யல்கள் !

 

எதுதொண்டு ;  பலன்களினை  எதிர்பார்க்  காமல்

               எப்பொழுதும்  பெய்கின்ற  மழையைப்  போன்றும்

வதுவையினைப்  புரிவதற்குப்  பெண்கள்  வீட்டில்

               வரதட்ச  ணைகேளா  ஆண்கள்  போன்றும்

செதுக்குகின்ற  உளிகொடுக்கும்  வலிகள்  தம்மைச்

               செஞ்சிலையாய்  மாறக்கல்  பொறுத்தல்  போன்றும்

பொதுத்தொண்டு   செயவருவோர்   ஏச்சைப்  பேச்சைப்

                பொறுக்கின்ற  பக்குவத்தில்  திகழ  வேண்டும் !

 

தடைகளினைத்  தகர்க்கின்ற  தன்னம்  பிக்கை

               தன்னலமே  இல்லாத  குமுகப்  பற்றும்

குடைவிரிந்து   மழைவெயிலைத்  தடுத்தல் போன்று

               குமுறுமக்கள்   துயர்களையும்   கருணை  நெஞ்சும்

உடைமையெனப்  பொறுமையினைக்  கொண்டி  ருக்கும்

               உத்தமர்தாம்   பொதுத்தொண்டிற்  கேற்ற  நல்லோர்

கடையனுக்கும்   கைகொடுத்தே  ஏற்று  விக்கக்

               காலமெல்லாம்  உழைப்பவரும்  அவரே  யன்றோ !









       

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்