நூல் : 'மொழி நூறு'       
நூல் ஆசிரியர் : தாமரைத் தீவான்  
நூல் ஆய்வு:  முல்லை அமுதன்    


ஆளுமை மிக்க கவி ஆற்றல் கொண்டவராக மரபு சார்ந்தும் புதுமை வளத்துடன் கவிதை யாப்பதில் வெற்றி கொண்ட கவிஞராக இன்று வரை தொடர்கிறார். மொழி மீதான பற்றும் இதன் இனத்தின் மீதான வாஞ்சையும் எழுத்தில் அபரிமிதமாக வெளிப்படுத்தி நிற்கிறது.நேர்த்தியான அனுபவங்களுடன் நீர்த்துப் போகாத வார்த்தைகளுடன் தன் கவிதையை நகர்த்திச் செல்லுகிறார்.
1932இல் பிறந்த தாமரைத் தீவான் இன்று வரை எழுதி வருகிறார்.கவிதைகளை வாசிக்கையில் அவை நமக்குத் தருகின்ற புத்துணர்ச்சி நமக்குள்ளும் ஏற்படவே செய்கிறது. சரளமாக எழுதும் பாங்கு அவரை சமூக நேசிப்பாளனாக அடையாளம் காட்டி நிற்கிறது.இவரின் கவிதைகளை வாசிக்கையில் இலக்கணப் பிழையேதுமின்றி நறுக்குத் தெறித்தாற் போல ,கம்பீரமாக நடை பயிலும்.

'யாப்பிற்கு ஏற்ப செய்யப்படுவது செய்யுள். இசையோடு பாடக்கூடியது பாடல். உணர்ச்சி, கற்பனை, சொல்லாட்சியோடு உவமை,படிமம், குறியீடு, கருத்தாழம் கொண்டவையாகவும் மிளிர்வதால் மொழி நூறு சிறப்பாக அமையப் பெற்றுள்ளது.
192 பக்கங்களில் அழகிய பதிப்பாக 2009 இல் வெளி வந்த இந் நூல் பலரையும் சென்றடைவதன் மூலம் அவரின் கவிதைகளை யாவரும் சுவைக்க ஏதுவாகும். அட்டைப்படம் கண்ணைக் கவருகிறது.சமூகக் கட்டுப்பாடுகளை மீறாமலும், மூட நம்பிக்கைகளுக்கு சாட்டையடி கொடுக்கும் படியாகவும் இவரின் கவிதைகள் காணப்படுகின்றன.தான் பிறந்து வளர்ந்த மண்ணின் வளங்கள், அங்கு வாழ்ந்த மக்கள், மண்ணுக்கும் மக்களுக்கும் நடந்த அவலங்கள், இடப்பெயர்வுகள் கவிஞருக்கும் அவ்வப்போது நடந்து வருவது சோகம்.  தமிழன் என்பதாலா? போர்க்குணம் மிகுந்திருந்தாலும் எதுவும் செய்ய முடியாத கையறு நிலையையும் புரிந்தவராதலால் தான் நல்ல சமூகத் தொண்டனாகவும், கவிஞனாகவும் வலம் வர முடிகிறது. உலக யுத்தத்தின் போது சிறுவனாக இடம் பெயர நடந்தவர் வாழ்வு இன்னமும் வலிக்கின்ற வாழ்வாகிப்போனது உண்மை கலந்த வரலாறு.

"நோயினைத் தாங்கிப் பார்த்தார்!
நோன்பினில் இருந்தும் பார்த்தார்!
பேயினைத் துரத்திப் பார்த்தார்!
பெரியநூல் அணிந்தும் பார்த்தார்!
காயினை அறுத்தும் பார்த்தார்!
கனகுறிப்பெழுதிப் பார்த்தார்!
நாயிலும் கழிவாய்ப் போன
நடைப்பயண இனமே கண்டார்!..''


பொத்தென பழங்கள் விழுகிற மாதிரி சொற்கள் விழுகின்றன. பழங்களிலும் எத்தனை வகைகள்.சுடர், சுதந்திரன் தொடங்கி இன்று வரை அனைத்து அச்சூடகங்களில் எழுதி வரும் இவரிடமிருந்து புதிதாக நம் கைக்குக் கிடைத்துள்ள நூல் 'மொழி நூறு' ஆகும்.

பிறர்நாட்டைச் சுரண்டல் செய்யோம்!
பெரும்பொய்நூல் வரைந்தே வையோம்!
குறள் ஒன்றே- மறைகள் மூன்றே!
கொண்டால்நல் வழியே தோன்றும்!
அறம் இன்றேல் நெஞ்சம் மாசாம்!
ஆகாதோர் செயலைப் பேசேல்!
மறம்- செவம்- கலைகள் வேண்டும்!
வளரோமா நாங்கள் மீண்டும்?..'


கவிஞரின் மொழி ஆளுமையை அந் நாட்களில் என் தந்தையுடன் உட்கார்ந்து வாசித்த போது ஏற்பட்ட அனுபவம் தான் என்னை தாமரைத் தீவானின் கவிதைகள் மீதான அபிமான்த்தை தந்துள்ளது எனலாம். ஈழத்து கவிதை வரலாறு எழுதுகையில் தாமரைதீவானுக்கொரு முக்கிய இடம் இருக்கும். வளமான சொல் ஆட்சி கவிதை எங்கும் பரவி நிற்கிறது.

'திராவிட மரபார் நாங்கள்
செந்தமிழ் மொழியார் நாங்கள்
இராதற் கழுவோ மல்லோம்
இருப்பதைக் காத்தல் வல்லோம்
வராததை வரவும் வைப்போம்
வந்ததை மனதுள் வைப்போம்
தராதரம் கண்டோர் வாரீர்
தமிழுடன் சேர்வோர் வாரீர்...'


வலிமையுடன் இறங்கும் சொற்கள் கவிஞருடையது. இன்னொரு கவிதையில் நறுக்கென தைக்கும் வண்ணம் எழுதுகிறார்.

'எழுத்தாளர்த் தமிழர்களே, எழுதுங்கள் ஆனாலோ
எதையுமல்ல!
விழுத்துகிறார் இனவாத வெறியர்களும்,'அபினி'களும்
வெறும் பொய்யாலே!
அழுத்துங்கள் உண்மைகளைஇ அகச்சான்று புஅச் சான்று
அனைத்தும் தேடி!
புழுத்திட்ட குப்பையெலாம் புறமள்ளி வீசுங்கல்,
புனிதம் ஆக!..'


அன்று தொட்டு அன்னியர்களின் அடக்குமுறைகளினாலும், காட்டிக் கொடுப்புகளினாலும் தமிழும், தமிழரும் வீழ்ந்தது கண்டு துடிக்கின்ற மனதுடன் எழுதுகிறார். ஆனாலும் நம்பிக்கை தருகிறார். வரலாறு திரும்பும் என்கின்ற உண்மை உணர்ந்தவராக கவிதைகளை நமக்குத் தந்திருக்கிறார். நாடிழந்து நிற்கின்ர ஒரு அகதித் தமிழனின் கவிதைகள் இவை.குருதி படிந்த வரலாறு நம் முன் கிடப்பதை உணர்த்துகிறார். இவரின் நாட்டுப் பற்று கவிதைகளில் துடிப்புடன் தவழ்கிறது.

'எந்தன் உரிமை எனக்குளது-இதை
எடுப்பதில்லை..!கொடுப்பதில்லை!!
உந்தனைப் போலவே மற்றவனும்- இதை
உள்ளத்தில் வைத்திடின் சிக்கல் இல்லை!...'
..'ஆட்சி அமைக்கையிலே-எமை நாம்
ஆள நினைத்தோமா?
பேச்சில் விழுந்தோமே- அவரைப்
பின் பற்றி நின்றோமா?
ஒன்றின் மேல் ஒன்றாக- எமது
உரிமை போகையிலே
வென்று தடுத்தோமா?-நிலத்தில்
வேலியைப் போட்டோமா?
நம்பிக் கிடந்தோமே- அதனால்
நாட்டை இழந்தோமே!..'


வார்த்தைகளின் உறுதி கவிதையில் தெரிகிறது. மொழியில் தேர்ச்சி பெற்றவராக திகழ்கிறார். 'கடவுளுக்கு அடிமுடி கிடையாது. கவிதையும் அப்படியே' என 'வித்துவான்' வேலன் கூறியது நினைவு கூரத்தக்கது. வாக்கினில் தெளிவும், வாய்மை நிரம்பப் பெற்றிருந்ததால் தான் கவிதைகளும் உண்மையுடன் நிமிர்ந்து நிற்கிறது.காலம் வென்று நிற்கும்.

'விழித்திரு!நமதினத்தில்
விடுதலை விரும்பாதோரைக்
கழித்திரு!வீணாய்க் காலம்
கழிதிருப் போரைக் கண்டே
பழித்திரு! அழித் தொழிக்கப்
பார்த்திருப்போரை யெல்லாம்
அழித்திரு! உரிமையெல்லாம்
அடைந்திடல் திண்ணமாமே!..'


அவர் கவிதைகள் நம்பிக்கை தருகின்றன. ஆசிரியராய், அதிபராய் இருந்து ஓய்வு பெற்றும் ஓய்வில்லாமல் எழுதும் இவரிடமிருந்து எதிர்பார்த்து ஈழமும் எதிர்பார்த்து நிற்கிறது நிறையவே!.


 

mullaiamuthan_03@hotmail.co.uk