நூல் : கண்ணின் மணி நீயெனக்கு
நூல் ஆசிரியர் : அகில்
நூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி

நாவலின் தலைப்பே கவித்துவமான நாவலைப் படிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் உள்ளது. நூலாசிரியர் கவிஞர் அகில் ஈழத்தமிழர், தற்போது கனடாவில் வசித்து வருபவர். இவர் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என எழுதி முத்திரை பதிக்கும் எழுத்தாளர். உலக அளவில் நடந்த சிறுகதைப் போட்டிகள் பலவற்றில் பரிசுகள் வென்றவர். உலகில் உள்ள எழுத்தாளர்கள், கவிஞர்களை ஆவணப்படுத்தும் ஒப்பற்ற பணியினை றறற.வயஅடையரவாழசள.உழஅ என்ற இணையத்தின் மூலம் செய்து வரும் கடின உழைப்பாளி.

கதையினைப் படிக்கும்போது ஈழத்தமிழர்கள் நம்முடன் பேசுவது போன்ற உணர்வினை ஏற்படுத்துகின்றது. நாவல் ஆசிரியர் ஈழத்தமிழர் என்பதால் ஈழத்தமிழர்கள் கதைக்கும் மொழியிலேயே நாவலைப் பதிவு செய்து இருப்பது கூடுதல் சிறப்பு. படைப்பாளியின் வெற்றியினைப் பறைசாற்றும் விதமாக உள்ளது. நல்ல நடை நாவலின் மனித உணர்வுகளை, தாய் - மகன் பாசம், தந்தை – மகன் பாசம் படம் பிடித்துக் காட்டுகின்றார்.

கதை என்ற பெயரில் கண்டதைக் கதைக்கும் காலத்தில், கதைக்கு எது தேவையோ அதைமட்டும் எழுதி வெற்றி பெற்றுள்ளார். நூலாசிரியர் கவிஞர் என்பதால் கவித்துவமான சில வசனங்கள் உள்ளது. வாசகனையும் ஷவரில் குளிக்க வைத்துவிடுகிறார்.

'ஷவரைத் திறந்த போது நீர் சில்லென்று இருந்தது. ஒரு பூக்கூடை நிறைய பூக்கள் நிரப்பிக் கொட்டியது போல இதமாக நீர்த்துளிகள் வந்து விழுந்தன' என்று நீரை பூக்களோடு ஒப்பிட்டு ரசிக்க வைக்கின்றார்.

அன்று ஈழத்தில் தமிழ் இளைஞர்கள் அங்கு வாழ வழி இல்லை என்ற சூழ்நிலையை, வலியை தானே உணர்ந்த காரணத்தால் நாவலில் பல இடங்களில் அந்தக் கருத்தை வலியுறுத்தி உள்ளார். ஆனால் இன்று ஈழத்தில் இளைஞர்கள் மட்டுமல்ல எல்லா வயதினரும் தமிழர்கள் வாழ முடியாத நிலை வந்ததை எண்ணும்போது மனசு வலிக்கிறது. ஈழப்படுகொலைகள் நினைவிற்கு வருகின்றது.

புலம்பெயர்ந்து சென்ற மகன் நோய்வாய்ப்பட்ட தந்தையைப் பார்க்க வந்ததும், தந்தையின் நோய் தீர்ந்தது. நோய் தீர்க்கும் மருந்தாக மகன் உள்ளான் என்ற பாசப்பதிவு மிக நன்று. நூலின் அட்டைப்படத்தில் தாய், சேய் மற்றும் சுனாமி அலை, ஆதவன் என ஓவியம் நன்றாக உள்ளது. அட்டைப் படத்தைப் பார்த்த உடனேயே நூலை வாங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகின்றது. நல்ல வடிவான வடிவமைப்பிற்குப் பாராட்டுக்கள்.

இலங்கையின் ஊர் பெயர்களைக் கூட மறக்காமல் பதிவு செய்துள்ளார். 'பம்பலப்பிட்டி' என்ற சொல்லைப் படித்தவுடன் இலங்கை வானொலி அறிவிப்பாளர், இனிய குரலுக்குச் சொந்தக்காரரான திரு. அப்துல் ஹமீது உச்சரிப்பில் அந்த ஊர்ப்பெயர் கேட்ட நினைவு நினைவிற்கு வந்தது. நாவல் மண்வாசனையோடு உள்ளது. இலங்கைக்கே வாசகனை அழைத்துச் செல்கின்றது நாவல்.

'அவன் கனடாவுக்குப் புறப்பட்ட சமயம் குட்டிக்குட்டி குடிசைகளாக இருந்த வீடுகள் எல்லாம் விண்ணை முட்டும் பிளாட்டுக்களாக மாறியிருந்தன' என்று அன்றைய இலங்கையை நாவலில் குறிப்பிடுகின்றார். இதனைப் படித்தவுடன் இன்றைய நிலையான 'விண்ணை முட்டும் பிளாட்டுக்கள் எல்லாம் தரைமட்டமாக்கப்பட்டு சிங்களமாகி வரும் வேதனை நினைவிற்கு வந்தது. ஏதோ சராசரி நாவல் போல இதனைப் படிக்க முடியவில்லை. கண்முன்னே பாத்திரங்களைக் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார் நாவல் ஆசிரியர். வாசிக்கும் போதே வாசகன் மனத்திற்குள் இன்றைய அவல நிலையின் ஒப்பீடு வருவதை தடுக்க முடியவில்லை.

தமிங்கலம் பேசுவதில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் அளவிற்கு இல்லாவிட்டாலும், மிகக் குறைந்த அளவில் ஆங்கிலச் சொற்கள் ஈழத்தமிழர்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பதை அறியும் வண்ணம் ஒருசில இடங்களில் ஆங்கிலச் சொற்கள் வருகின்றன. கதை மிக இயல்பாகச் செல்கின்றது. தேவையற்ற ஜோடனைகள் எதுவுமில்லை.

பொதுவாக காதலை திரைப்படத்தில், கதையில் ரசிப்பவர்கள் நிஜ வாழ்க்கையில் தனது பிள்ளைகள் காதலிப்பதை பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புவதே இல்லை. அதனை மிக அழகாகப் பதிவு செய்துள்ளார்.

'இந்தாப் பார் நீயும் இது மாதிரி காதல் கத்தரிக்காய் அது இது என்று ஏதாவது இழுத்துக்கொண்டு வந்தியோ அடுத்த நிமிஷம் நான் உயிரோட இருக்கமாட்டன்' என்று எச்சரிக்கிறார் தாய். இந்த வசனத்தைப் படித்தவுடன் என் தாய் என் நினைவிற்கு வந்தார்கள். இதுதான் படைப்பாளியின் வெற்றி.

கணவன் மனைவி உறவை, மனைவியின் உடல்நலத்தின் மீது கணவன் கொள்ளவேண்டிய அக்கறையை, அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். நாவல் முழுவதும் நல்ல பல செய்திகளை, வாழ்வியல் கருத்துக்களை போதனை என்ற முறையில் சொல்லாமல் பாத்திரங்களின் வழி போகிற போக்கில் பதிவு செய்துள்ளார். ஒரு நல்ல நாவல் படித்த திருப்தி வருகின்றது. இயந்திரமயமான உலகில் மனிதனும் இயந்திரமாக மாறி வருகிறான். கலாம் கனவு காணுங்கள் என்றார். இன்று இனிய கனவு காணக்கூட நேரம் வாய்ப்பதில்லை என்பதை கவிதையின் மூலம் உணர்த்துகின்றார். ஈழத்தை மட்டுமல்ல கனடாவையும் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார். பணங்களைவிட மனங்களை நேசியுங்கள் என்ற கருப்பொருளை நாவலாக்கி வாசகர்களுக்கு நல்விருந்து படைத்துள்ள கவிஞர் அகில் தொடர்ந்து எழுதி முத்திரை பதிக்க வாழ்;த்துகின்றேன்.