நூல் : 'தாய் மடி தேடி...'
நூல் ஆசிரியர் : கார்த்திகாயினி சுபேஸ்
நூல் ஆய்வு:
அகில்

சிறுகதை எழுத்தாளரும், ஊடகவியலாளருமான திருமதி கார்த்திகாயினி சுபேஸ் அவர்களுடைய 'தாய் மடி தேடி...' சிறுகதைத் தொகுப்பு அண்மையில் கொழும்பு தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. இளந்தலைமுறைப் படைப்பாளி கார்த்திகாயினியின் நூலுருப்பெற்ற முதல் படைப்பு முயற்சி இது. ஞானத்தில் அவருடைய 'தாய்மடி தேடி' என்ற சிறுகதை வந்த போது, படித்தேன். அப்பொழுது இவர் நிச்சியம் சிறந்த ஒரு சிறுகதை எழுத்தாளராக வருவார் என்று நினைத்துக்கொண்டேன். எனது அந்த நினைப்பை நிஜமாக்குவதைப் போல வந்திருக்கின்றது அவரின் இந்த 'தாய் மடி தேடி...' என்ற இந்தச் சிறுகதைத் தொகுப்பு.

இத்தொகுப்பில் மொத்தம் பத்துச் சிறுகதைகள் இடம்பெறுகின்றன. இந்தத் தொகுப்பிற்கு நூலாசிரியர் கொடுத்திருக்கும் தலைப்பு 'தாய் மடி தேடி....' தலைப்பை உச்சரிக்கும் போதே ஒருவித உணர்வையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது. வாசகர்களைக் கவரக்கூடிய, வாசிக்கத் தூண்டுகின்ற நல்ல தலைப்பு ஒரு ஆக்கத்திற்கு மிகவும் அவசியம். அதன் தேவையை உணர்ந்து கார்த்திகாயினி இந்தத் தலைப்பைக் கொடுத்திருக்கிறார் போலும்.

பொதுவாக எழுத்தாளன் என்பவன் தன்னைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு சின்னச் சின்ன விடயத்தையும் உன்னிப்பாக அவதானித்து, அதை மனதில் பொக்கிசமாக்கிக் கொள்ளும் இயல்பு கொண்டவனாக இருக்க வேண்டும். அவனே சிறந்த எழுத்தாளனாக உருவாக முடியும்.

பிரபல இந்திய எழுத்தாளர் தி.ஐ.ரங்கநாதன், சிறுகதைகள் பற்றி குறிப்பிடும்போது இவ்வாறு கூறியிருக்கிறார். அதாவது 'சிறுகதை எழுதுவதற்கு நல்ல கரு வேண்டும். நல்ல கரு வேண்டும் என்றால் நீங்கள் வீதியில் இறங்கி நடவுங்கள். உங்களுக்கு நிறைய கதைக்கருக்கள் கிடைக்கும்' என்று கூறியிருக்கிறார். மக்களோடு மக்களாகக் கலந்து, அவர்களுடன் உறவாடும் போதும், அவர்களை உன்னிப்பாக அவதானிக்கும்போதும் நிறைய விடயங்களை நாம் உள்வாங்கி கற்பனையும் கலந்து அழகான பல கதைகளை உருவாக்க முடியும். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இவருடைய சிறுகதைகள் அமைந்துள்ளன. தான் வாழும் சமூகத்தை எவ்வளவு தூரம் உன்னிப்பாக அவதானிக்கின்றார் என்பதையும், அந்த அவதானிப்புகள் ஏற்படுத்தும் பாதிப்புக்களையும் தனது கதைகளில் பதிவுசெய்திருக்கிறார் கார்த்திகாயினி. இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி என்பர். அந்த வகையில் ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பாக, காலத்தின் பதிவுகளாக இவரது கதைகள் அமைந்துள்ளன.

அமெரிக்க கவிஞர் ஜோன் ஆஸ்பெரி தன் கதைகளைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார். அதாவது, ஒருமுறை அவரிடம் ஒருவர் கேட்டார், நீங்கள் எப்படி தங்குதடையின்றி கவிதைகள் எழுதுகின்றீர்கள்? என்று. அதற்கு அவர், 'எனது மனத்தின் அடி ஆழத்தில் ஓர் ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. கவிதை ஆறு. எனக்கு ஒரு கவிதை எழுத வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் நான் ஒரு வாளியைக் கட்டி அந்த ஆற்றுக்குள் இறக்குவேன். ஒரு கவிதை எனக்குக் கிடைக்கிறது' என்றார்.

அவரின் அடிமனத்தில் ஓடிக்கொண்டிருந்த ஆறு கவிதை ஆறு. கார்திகாயினியின் அடி மனத்திலும் அப்படியொரு சிறுகதை ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். காலத்தின் பதிவுகள் பல அடுக்குகளாய் அவர் இதயத்தின் இடுக்குகளில் ஒளிந்திருக்கின்றன. அவையே அவ்வப்போது கதைகளாகப் பிறக்கின்றன.

இவருடைய பல கதைகள் அக்கதைகள் எழுதப்பட்ட சமகாலத்தில் பெண்கள் எதிர்நோக்கிய பல்வேறு சிக்கல்களையும் எடுத்துப்பேசுகின்றன. காணாமல் போதல்களும், தேடுதல்களுமே அதிகரித்திருந்த காலப்பகுதி அது. இளம் பெண்பிள்ளைகளையும், இளந்தாரிப் பையன்களையும் வைத்திருக்கும் பெற்றோர் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்ந்த சூழ்நிலை. இவற்றை கதையின் போக்கில் அருமையாகப் புலப்படுத்தியிருக்கிறார் எழுத்தாளர். போரும், அதன் தாக்கங்களும் பெண்கள் மீது ஏற்படுத்திய வடுக்கள், சமூக அழுத்தங்கள் என்பவற்றை 'நான் சீதையல்ல', 'துள்ள முடியாத புள்ளிமான்' முதலான கதைகளில் காணலாம். இத்தொகுப்பின் முத்திரைக்கதையான 'தாய்மடி தேடி....' என்ற சிறுகதையும் போரின் அவலங்களால் பாதிப்புக்கு உள்ளான சிறுவன் ஒருவனின் மனவலிகளைப் பேசுகின்ற கதையாகவே அமைந்துள்ளது.

'தனிமரம்' சுனாமியின் அழிவை சுட்டும் கதை. யுத்தத்தை போல தமிழ் மக்களின் மனங்களில் அழியாத இன்னுமொரு வடு சுனாமி. பொங்கியெழுந்த பேரலைகள் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் வாழ்ந்த பல ஆயிரம் குடும்பங்களைக் காவு கொண்டது. அந்த இழப்பைப் பற்றிப் பேசுகிறது இந்த தனிமரம். சுனாமியில் அடித்துச் செல்லப்பட்ட தனது மனைவி, பிள்ளைகள் திரும்பவும் வருவார்கள் என்ற நினைவில்; தவிக்கும் ஒரு தந்தையின் கதையை அழகாகச் சொல்லியிருக்கின்றார் கார்த்திகாயினி.

தமிழர் சமூகத்தில் புரையோடிக்கிடக்கும் சாதிப்பிரச்சினையைப் பற்றி எழுதாத எழுத்தாளர்களே இல்லை எனலாம். அந்தவகையில் கே.டானியலின் பஞ்சமர், என்.கே. ரகுநாதனின் நிலவிலே பேசுவேம், ஆனந்தனின் தண்ணீர்த் தாகம் என நீண்டு செல்லும் பட்டியிலில் இத்தொகுப்பில் இடம்பெறும் ஊனம், எச்சில் ஆகிய இரண்டு கதைகளும் இடம் பிடிக்கின்றது.

என்னைக் கவர்ந்த மற்றொரு கதை 'இப்படியும்....'. மனதை உருகவைக்கும் கதை. வீட்டில் வளர்கும் நாய், பூனை, மாடுகளை கருவாக கொண்டு பலர் கதைகளை எழுதியிருக்கின்றார்கள். ரஷ்சிய எழுத்தாளர் ஆண்டன் செகாவ் தொடங்கி இன்றுவரை பலர் எழுதியிருக்கிறார்கள் அல்லது எழுதிக்கொண்டிருக்கிறார்கள். எழுத்தாளர் ஞானசேகரும்; 'அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்' என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். சமீபத்தில் நானும்; 'கிறுக்கன்' என்று ஒரு சிறுகதை எழுதியிருந்தேன். வெள்ளையன், கண்மணி என்கின்ற ஒரு நாயினதும் பூனையினதும் கதை அது. கார்த்தியாயினியின் 'இப்படியும்...' என்ற கதையும் அந்த வகையில் குறிப்பிடத்தக்கது. அருமையான கதை. கார்த்திகாயினியுடைய ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமாய் மனிதநேயத்தைப் பிரதிபலிக்கின்றன. அதற்கு இந்தக் கதையும் விதிவிலக்கல்ல. இப்படி ஒவ்வொரு கதையைப் பற்றியும் சொல்லிக்கொண்டே போகலாம்.

கார்த்திகாயினி யாழ்ப்பாணத்தில் மிருசுவில் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். அந்த கிராமத்து மண்வாசனை, சொல்லாடல்களை கதைகளில் ஆங்காங்கே காணமுடிகிறது. எனினும், கதை சொல்லும்போது மிக நீண்ட வசனங்களாக எழுதாமல் சிறிய சிறிய வாக்கியங்களாக எழுதினால் இன்னும் கதை அழகாக இருக்கும்.

இவருடைய சில பாத்திரப் படைப்புக்கள் மிகவும் அற்புதமானவை. 'ஊனம்' என்ற கதையில் வரும் மகாலிங்கத்தார்;, 'தாய் மடி தேடி..' கதையில் வரும் காருண்யன் என்ற சிறுவன், 'எச்சில்' கதையில் வரும் வேலாயுதத்தார், 'இப்படியும்' கதையில் வரும் சந்திரசேகரர் ஆகிய பாத்திரங்கள் தத்ரூபமாக வார்க்கப்பட்டுள்ளன. கதையை வாசித்து முடித்த பின்னரும் சில மணித்துளிகளுக்கு சந்திரசேகரர் மனதை விட்டு அகலாமல் நிற்கிறார். ஆசிரியர் அந்தக் கதையைக் கொண்டு சென்று இறுதியாக முடித்த விதம் தேர்ந்த ஒரு எழுத்தாளனுக்கே உரிய பாணி. கதை அப்படியே நெஞ்சைப் பிசைகிறது.

கண்கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம் என்பதைப் போல சாகப்போகும் தறுவாயில் மகாலிங்கத்தாருக்கு ஏற்படும் ஞானோதயம் இயல்பாகவும், அதே நேரம் மனதை நெருடுவதாகவும் இருக்கிறது.

மொத்தத்தில் பத்துக் கதைகளும் பத்து முத்துக்கள். கரு, கதைசொல்லும் பாங்கு, பாத்திரப்படைப்பு என்பவற்றில் போதுமானளவு வெற்றி பெற்றுள்ளார் கார்த்திகாயினி. கதைகளில் சமகாலமும், மனிதநேயமும் ஆழமாக பேசப்படுகின்றது. சமூகத்தின் மீதான அக்கறையையும், அதன் தேவையைப் பற்றிய தேடலையும் கொண்டதாக இவருடைய கதைகள் அமைந்துள்ளன. இவருடைய கன்னிமுயற்சி இது. இவ்வாறான முயற்சிகளில் தொடர்ந்தும் கார்த்திகாயினி ஈடுபட அவரது கணவரும், இறைவனும் என்றும் துணை நிற்பார்கள் என்பதில் ஐயமில்லை.