நூல் : ஆகாய தாமரை
நூல் ஆசிரியர் : டாக்டர் எம்.சீனிவாசன்.எம்.டி.
நூல் ஆய்வு: முனைவர்..சந்திரா

கோபுர நுழைவாயில்:

                          விஞ்ஞானத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் ஒப்புநோக்கி,அஞ்ஞானமுடையோரையும் அறிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதே ஆகாய தாமரை-எனும் நூல்.'இந்து'மகா சமுத்திரத்தை ஒரு கமண்டலத்தில் அடக்கி, அதனை அம்மனின் அருள் பாலிக்கும் தீர்த்தமாய்  உருமாற்றி ,வாசிப்போரின் அறிவுத் தாகம் தணித்திருக்கும் நூலாசிரியர்  மருத்துவர்  சீனிவாசன்.எம்.டி. அவர்களுக்கு முதலில் மனமார்ந்த நன்றி.தன்னடக்கமே ஆசிரியரின் என்னுரையாய்,புன்னகையே நூலின் அணிந்துரையாய்,கேள்விக்கணையே முன்னுரையாய்,இறையியல் நூலா?உடலியல் நூலா?கலையியல் நூலா?என்று உய்த்துணர இயலாத அளவிற்கு இவ்வனைத்தும் விரவி, சீராகச் செதுக்கப்பட்ட செம்மையான நூல் என இந்நூலைக் கூறலாம்

வண்ணக்களஞ்சியம்:

கணபதியில் துவங்கி மகாகவி வரை, ஓரறிவு முதல் ஏழறிவு வரை, புராண காலம் தொடங்கி பகுத்தறிவு காலம் வரை, ஆதிசங்கரர் முதல் அப்துல்கலாம் வரை, திருவிளையாடற்புராணம் முதல் திருக்குறள் வரை, கௌதமபுத்திர் துவங்கி காஞ்சிப்பெரியவர் வரை – என இருவேறு பெரு எல்லைகளை ஆகாயதாரை நூல் தொட்டுச் செல்கின்றது. மானிடவியல், சோதிடவியல், வானியல், அளவியல், எண்ணியல், புள்ளிவிவர இயல், உருவவியல், கட்டிடவியல், சிற்பவியல், உடலியல், உளவியல், வரைபடவியல் - என பல்வேறு இயல்களை உள்ளடக்கிய கவின்மிகு களஞ்சியம் என்று இந்நூலைக் கூறலாம்.

 
அகமும் புறமும்:

ஸ்தூல சரீரம்,சூட்சும சரீரம் இவ்விரண்டிற்குமிடையே உள்ள 'அவித்யா'-எனும் திரை விலக்கி,'நானே பிரம்மம்;அந்த பிரம்மமே நீ!'-என்ற அரிய செய்தியைக் கூற வந்த நூலே ஆகாய தாமரை.மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலின் உள்கட்ட அமைப்பினையும்,மானிடனின் அகப்புற உடலமைப்பினையும் ஒப்புமைப்படுத்தி உருவாக்கப்பட்டதே இந்நூல். உடற்பிணி நீக்கி மேனி பொலிவுறச் செய்யும் வல்லமை ஆகாயதாமரை எனும் மூலிகைக்கு உண்டு என்பது மருத்துவ உலகம் கண்ட உண்மை.மனிதனின் உள்ளப்பிணி நீக்கி ஆத்மசுத்தி புரியும் தன்மை இந்த ஆகாயதாமரை நூலுக்கு உண்டு என்பது புத்தகத்தை வாசித்தோர் உணர்ந்த உண்மை.

 ஆன்மீகமும் அறிவியலும்:

அம்மன் குடிகொண்டிருக்கும் ஆலயமே மனித மூளையாயிருக்க,மீனைப்போல் இமையாது விழித்திருந்து பக்தகோடிகளைக் காத்து நிற்கும் மீனாட்சியம்மனே மானிட இருதயமாக இருக்க,சூரிய சந்திரர் இருவிழியாய் ஒளிர,லிங்கோத்பவரோ விழிகளுக்கிடையே பேரொளியாய்த் திகழ,சரஸ்வதியானவள் நெற்றிப் பொட்டாய்த் துலங்க,அறுபடைவீடே நுரையீரலாய் அமைந்திருக்க ,ஓம் எனும் பிரணவ வடிவே காற்றறையாயிருக்க,தேவர்களும் அசுரர்களும் முறையே சிறுகுடல் பெருங்குடலாய் செயல்பட,கந்தன் கர வேல் மனிதனின் நெஞ்செலும்பாய் நிற்க, சண்டிகேஸ்வரரும் மகாலஷ்மியும் கேட்கும் மற்றும் பேசும் சக்தியாக விளங்க,-என மானிடனின் உள்ளுறுப்புக்கள் அனைத்தும்   மதுரை மீனாட்சி  திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும்  கடவுளர்களோடு ஆகாயதாமரை நூலில் அழகுற ஒப்புமைப்படுத்தப்பட்டிருக்கின்றது.இதுபோலவே மனிதனின் புற உறுப்புக்களும் கோவிலின் ஒவ்வொரு மண்டபத்துடன் இணைத்து ஒப்பிடப்பட்டிருப்பதில் நூலாசிரியரின் அறிவியலோடு கூடிய ஆன்மீக அறிவு நன்கு புலப்படுகிறது.

இளைப்பார...

கலசம் உருவாகிய கதை,கல்யானை கரும்பு தின்ற கதை,பொற்றாமரை குளம் பொலிவாய்த் தோன்றிய கதை,பராசக்தி உருவாகிய பழம்பெருங்கதை,மாபாதகம் தீர்த்த மதுரை வரலாறு-என ரசனையான புராணக் கதைகள் கலையியல் மற்றும் உடலியல் சார்ந்த கருத்துக்களுக்கிடையே இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது. இதனால் நூலை வாசிப்போர் மனம் தொய்வு அடையாமல் தொடர்ந்து வாசிப்பதற்கு ஏதுவாகின்றது.

வியப்பில் ஆழ்த்தும் செய்திகள்:

         *மனித உடலின் 96 அகப்புற உறுப்புக்கள் 96 வகை சாஸ்திரங்களுடன் ஒப்பிடப்பட்டிருப்பது

         *மனக்கண்ணால் வணங்கிய ஆங்கிலேய அதிகாரி ரோஸ்பீட்டருக்கு மீனாட்சியம்மன் அருளியது.

         *மனிதக் கருவின் பயணம் தொடங்கி முடியும்விதமும் அது 27 நட்சத்திரங்களோடு இணைந்து கைகோர்த்து  
     நடக்கும்
விதமும்.

         *பாற்கடலில் தோன்றிய 14 பொருட்களும் மனித உடலில் உள்ள தாதுக்களோடு ஒப்பிட்டுச்  
    சொல்லப்பட்டிருப்பது
.

         *இயங்கு சக்தி ,நிலை சக்தி-என மாறி மாறி செயல்படும் சிவன் -பார்வதி நடனத்தை குரோமோசோமுடன்        இணைத்து விளக்கியிருப்பது.

       -என்று நூலை வாசிக்கும்போது அதிசயித்த செய்திகளை இன்னும் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

மனதார...

அறிவியல் புரிந்தோர்க்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு இருக்காது;ஆன்மீகத்தில் தெளிந்தோர்க்கோ அறிவியல் புரிபடாது.இக்கூற்றை பொய்மையாக்கி இவ்விரு அரும்பெருந்துறைகளிலும் வல்லமை பெற்றுத் திகழும் டாக்டர் திரு.எம்.சீனிவாசன் அவர்களின் எழுத்தாற்றல் ஆச்சரியப்படத்தக்கது.மனித உள்ளுறுப்புக்களின் செயல்பாட்டு விளக்கத்தை நான் அறிந்தவரை இத்துணை எளிமையாக,சுவையாக எவரும் விவரித்ததில்லை.புரியாதவர்க்கும் புரியும்வண்ணம் வரைபடம் மற்றும் புகைப்படத்துடன் நூலாசிரியர் விளக்கியிருக்கும் விதம் போற்றத்தகுந்தது.    கல்லினால் கோயில் செய்தவர் கயிலை விட்டகலாதாரே'-எனும் முதுமொழிக்கேற்ப மீனாட்சிஅம்மன் திருக்கோவிலைக் கட்டியோர் சிவகணங்களாய்த் திகழட்டும்!ஆகாய தாமரை எனும் இந்நூல் நம் பாரத  நூலகம் மட்டுமல்லாது பன்னாட்டு நூலகங்களிலும் இடம்பெறும் தகுதி பெற்று தமிழர் அறிவை தரணி முழுதும் பரவச் செய்யட்டும்!.