நூல் : இப்படியுமா...?
நூல் ஆசிரியர் வி.ரி.இளங்கோவன்
நூல் ஆய்வு:
-.பீர் முகம்மது (இலங்கை)
 

வி.ரி.இளங்கோவன் எழுதிய இப்படியுமா...? என்ற சிறுகதைத் தொகுதிமீதான நோக்குகை.

ஆறாந்திணைக்கு அனுமதி கேட்கும் புலம்பெயர் வாழ்க்கை                 

புலம்பெயர் தமிழர்கள் பெற்றுள்ள வசதிகளும் வாய்ப்புகளும் வருமானங்களும் அதுதொடர்பிலான வாழ்வியலும் அதன் வெளிப்படுத்தல்களும்பற்றி; இலக்கியப் பிரதிகள் குறிப்பிடத்தக்க அளவில் நமக்கு வாசிக்கக் கிடைத்துள்ளன. ஆனால் உந்நதங்கள் மட்டுமே புலம்பெயர் வாழ்வு என்றும் அதுபற்றியதே  இலக்கியத்தின் புனைவு என்றும் பயிலப்படும் கோட்பாட்டுக்கும் அப்பால் பெற்றோர் புறக்கணிப்பும் இயந்திர உழைப்பும் வீணாண போதையும் போலி வேடமும் பனியின் நடுக்கமும் தாலிகட்டாத குடித்தனமும் என்று அந்த வாழ்வின் கறுப்புப் பக்கம்பற்றியதான சிறுகதைகளும் தொகுதிகளும்; சிறிய அளவில் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. அவ்வாhறான சொற்பங்களுள் ஒன்றாக யதார்த்தத்தைச் சொல்லும் கதைகளைத் தாங்கி இப்படியுமா...? என்ற தொகுதி வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியர் வி.ரி.இளங்கோவன் ஆவார்.

(2)

வி.ரி.இளஙகோவன் அவர்கள் பிறந்த மண் துறந்து பிரான்ஸ் நாட்டில் இரு தசாப்தஙகளுக்கும் மேலாக வாழ்ந்து வருபவர். எழுபதுகளின் நடுப்பகுதியில் எழுதத் தொடங்கியவர். கவிதை, சிறுகதை, கட்டுரை, குறுநாவல் என எழுத்தியலில் ஈடுபட்ட இவர் இதுவரை பதினாறுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். மேடை, வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கவியரங்கத் தலைமை ஏற்றதுமுண்டு. முற்போக்குச் சிந்தனையிலும் சித்தாந்தத்திலும் நம்பிக்கை கொண்டவர். பிரபல நாவலாசிரியர் கே.டானியலுடன் மிக்க நெருக்கத்தில் இருந்தவர். அவருடன் இணைந்து மக்கள் கலை, இலக்கியப் பெருமன்றத்தின் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்.

இளங்கோவின் கதைகள் என்ற இவரது சிறுகதைத் தொகுப்பு இலங்கை இலக்கியப் பேரவையின் விருது பெற்றது. பின்னர் பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள என்ற பெயரில் இந்தியில் அது மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டது.;

இப்படியுமா...? என்ற இச்சிறுகதைக் கோவையில் மொத்தம் பதினாறு கதைகள் உள்ளடக்கம்.. ஈழ மண்ணையும் பிரான்ஸ் மண்ணையும் களமாகக் கொண்ட இச்சிறுகதைத் தொகுதியை சென்னை யூஎம். நிறுவனம் அக்டோபர் 2012 இல் வெளியிட்டுள்ளது. இலங்கையின் தேசிய மற்றும்; வெளிநாட்டுப் பத்திரிகைகள் சஞ்சிகைகள் என்பவற்றில் ஏற்கனவே வெளியான கதைகள் இவை. 132 பக்கங்களைக் கொண்ட இத்தொகுப்புக்கு இந்தியாவின் பிரபல நாவலாசிரியர் நாமக்கல் கு.சின்னப் பாரதி அணிந்துரை வழங்கியுளளார்.

'கடை வாசலில்' என்ற கதையைத் தவிர ஏனையவை புலம்பெயர் வாழ்வியல்பற்றியதாகவும் போர்க்கால அவலங்கள்பற்றியதாகவும் அமைந்துள்ளன. நெஞ்சார நேசிக்க முடியாத துன்பியலே இந்த வாழ்க்கையில் தேட்டம் என்றும் வர்ணம் பூசப்பட்ட ஒரு வாழ்க்கை என்றும் புலம்பெயர்வாழ்வின் கஸ்ட நஸ்டங்களை பல கதைகளில் சொல்லி வருகிறார். யுத்த அழிச்சாட்டியகளின் வெளிப்படுத்தல்களாக மற்றுஞ் சில கதைகள் உள்ளன.

(3)

தனது மகனின் குடும்பத்தோடு பிரான்சில் வாழும் ஒரு தாயின் பார்வையில் இந்தப் புலம்பெயர் வாழ்க்கை எப்படிப்பட்டது.? அது ஒரு சிறை வாழ்க்கை என்ற மனப்புழுக்கம் அந்தத் தாய்க்கு. அதுபற்றி 'வெயிலும் பனியும்' என்ற கதை விஸ்தாரமாக விவரிக்கின்றது. தங்கம்மா என்ற தாயின் பாத்திரம் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது.;  பழைய நினைவுகள் தொட்டம் தொட்டமாக மீட்கப்படுகின்றன.. சின்னச் சின்ன வசனங்களும் இரசிக்கத்தக்க எழுத்துகளும்; கதையை மெருகூட்டுகின்றன. 'வெயிலும் பனியும்' நல்ல கதை.

'கிழக்கு நோக்கிய மேற்கு மனிதன்' என்பது மற்றுமொரு நல்ல கதை. பிரான்சு நாட்டுத் தேசியப் பிரசை  ஒருவருக்குக் கதையில் வழங்கப்பட்ட முக்கியத்துவம் புலம்பெயர் சிறுகதைப் பரப்புக்குப் புதிய வெட்டுமுகம் எனலாம். 'பெண்களுக்கு அதிக சுதந்திரம் கொடுத்துக் கெடுத்து வருகிறார்கள்' என்று பெண்ணியவாதிகளினது முகத்தில் ஓங்கிக் குத்துவதோடு குடும்ப யதார்த்தத்தின் மேதமையை பிரான்சுவாசியான 'பிறத்தியான்' ஒருவன்மூலம் சொல்லும்பாங்கு மனதைத் தொடுகின்றது.

இப்படியுமா...? என்பது இன்னுமொரு நல்ல கதை. வெளிநாட்டில் வாழும் குலரத்ன என்ற சிங்களப் பாத்திரத்தின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சிந்தனை வெளிதான் இந்தக் கதை. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் தலைநகரங்களில் இன்று தமிழர்களும் சி;ங்களவர்களும் ஒருவரை ஒருவர் எதிர்த்து குழுக்களாகச் சேர்ந்து கோசம் போட்டுப் பேரணி செல்லும்நிலையில் தமிழர், சிங்களவர்களுக்கிடையே இறுக்கமான நட்புறவு இன்னமும் உள்ளமையை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றது. சிங்களம்,  ஆங்கிலம் போன்ற மொழிகளில் பெயர்ப்புச் செய்யும் தேவையை இப்படியுமா...? என்ற இக்கதை மறைமுகமாகப் பிரேரிக்கின்றது.

பாரம்பரியமான குடும்ப ஒழுக்க விழுமியங்களை ஒருபுறம் தள்ளி வைத்துவிட்டு 'பனிக் கலாசாரத்தோடு' படையெடுக்கும் சீர்கேடுகளைச் சில கதைகள் சொல்லுகின்றன. . பிள்ளைகளின் தனித்துவமான வாழ்வுச் சுதந்திரமும் அதனை அனுமதிக்காத பெற்றோரின் அனுபவமும் ஒரு புள்ளியில் சந்திப்பதனால் ஏற்படும் முரண்பாடுகளை 'தண்ணீரும் எண்ணெயும'; என்ற கதை விளக்குகின்றது. 'வேட்கை'  'திறப்புவிழா'  'பிறழ்வு' 'காத்திருந்த புன்னகை' என்பன ஆண் பெண் குடும்ப உறவுக் கோலத்தில் விழுந்துள்ள கீறலை விளக்குவன. தாலி கட்டாத தனிக்குடித்தனம்,  அக்கரையில் ஒரு வைப்பும் இக்கரையில் இன்னொரு வைப்பும் என்று கதைகள் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றன.

தாய் மண்ணைக் களமாகக் கொண்டு போhச்சூழலைச் சில கதைகள் இரைமீட்டுகின்றன. 'கடிதம் சொன்ன கதை' 'தீயை வளர்க்கிறார்'  'ஒப்பரேசன்'  'அப்பா வருவார்'  'ஏன் இடம் மாறினான்' என்பன அத்தகையன போர்க் காலத்தின் எல்லையற்ற துன்பங்களையும் தொடர்ச்சியான துயரங்களையும் பல நூறு கதைகளில் சந்தித்; நமக்கு இவை புதிதாக எதைச் சொல்லப் போகின்றன? என்ற கேள்வி எழுவது நியாயம்தான். இளங்கோவனின் இந்தக் கதைகளில் 'ஏதோவொரு மாற்றம்' தெரிகின்றது.. பதச் சோறாக 'கடிதம் சொன்ன கதை'யைக் கூறலாம். போர்ச்சூழலால் ஏற்பட்ட வறுமை காரணமாக புலம் பெயர்ந்து வாழும் பழைய குடும்ப உறவினர் ஒருவரிடம் பண உதவி கேட்டுக் கடிதம் எழுதப்படுகின்றது. அங்கும் வருமானப் பற்றாக்குறையோடு சிலர் வாழுகின்றனர் என்ற சங்கதி இங்கு மிக நாசுக்காகச் சொல்லப்படுகின்றது.

ஒளிக்கீற்று என்பது சற்று வித்தியாசமான கதை. தனது எல்லாப் பிள்ளைகளும் வெளிநாட்டில் உள்ளநிலையில் முதிர்ந்த வயதிலும் தன்னந்தனியாக பிறந்த மண்ணில் வாழும் கார்;த்திகேசு மாஸ்ரரின் எண்ணங்களின் ஓட்டமாக  கதை அமைந்துள்ளது. ஒளிக்கீற்று என்ற இந்தக் கதையில் கார்;த்திகேசு மாஸ்ரர்பற்றி கதைசொல்லியின் அறிமுகமும் அதைச் சொன்னபாங்கும் மிக அலாதியானது

கதை சொல்லும் உத்தி கதைக்குக் கதை வித்தியாசமானது அது தொகுதிக்குக் கனதி சேர்க்கின்றது. வாசகனைப் படைப்போடு ஒன்றிக்கச் செய்யும் புனைவுமொழி .p;ரி;.இளங்கோவனுக்குச் சித்தித்துள்ளது. அதனால் கதைகளைச் சுவைக்கவும் முடிகின்றது... பெரும்பாலான கதைகளில் ஏதோவொருவகையில் 'புள்ளி அளவிலாவது ஒரு புதுமெய்' இருந்து கதைசொல்லியைப் பாராட்டுகின்றது.

(4)

உருவம், உள்ளடக்கம் என்பன சிறுகதையின் முக்கிய கூறுகள் என்ற வகையில்; படைப்பு உபாய வெற்றி என்பது இரண்டு கூறுகளையும் சமமாகப் போசிப்பதிலேயே தங்கியுள்ளது. ஆனால் கதைசொல்லியின் முயற்சியினையும்மீறி இத்தொகுதிக் கதைகள் பலவற்றில் உள்ளடக்கத்திலும் பார்;க்க உருவம் கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது. 'வெயிலும் பனியும்'. 'ஒளிக்கீற்று' போன்றன உதாரணங்கள்தாம்.

'கிழக்கு நோக்கிய மேற்கு மனிதன'; 'தண்ணீரும் எண்ணெயும'; போன்ற கதைகளின் பேசுபொருளுக்கு மாதிரித் தீர்வு முன்வைக்கப்பட்டிருக்குமாயின் சர்வதேசத்தாரின் கவனத்தை இக்கதைகள் பெற்றிருக்க வாய்ப்புண்டு.

(கடை வாசலில் என்ற ஒன்றைத் தவிர) தொகுதியின் கதைதகள் எல்லாமே புலம்பெயர் வாழ்வியலைக் குறிவைத்துள்ளன. கலாசாரம,; பண்பாடு, விழுமியம் ஆகியவற்றின்மீதான அணுகுமுறை மாற்றங்கள் காரணமாக கதைசொல்லியின் மனதில் ஏற்படும் வெப்பிசாரத்தின் வெளிப்பாடுகளாகவே இக்கதைகளைக் கொள்ளவேண்டியுள்ளன...

ஐவகை நிலங்களையும் அதற்கெனத் தனியான ஒழுக்கங்களையும் கொண்டிருந்தவர்கள் நாம். இன்று புலம்பெயர்ந்து பனியும் பனிசார்ந்த இடங்களை ஆறாந்திணையாக்கி  வாழ்ந்து வருகின்றோம். இதனால் அனுபவிக்கத் துடிக்கும் இளசுகளுக்கும் அனுமதிக்க மறுக்கும் பழசுகளுக்கும் இடையில் ஒழுக்கச் சீர்கேடு ஒத்துவாரப்படுகின்றது. அதுதான் யதார்த்தமெனில் பனியும் பனி சார்ந்த இடத்தையும் ஆறாந்திணையாகப் பிரகடனப்படுத்தி  அதற்கென   தனி ஒழுக்கம் ஒன்றை வரன்முறைப்படுத்த முடியாதா

நூலாசிரியரின் ஆதங்கத்தையும் மீறி 'கலப்பொழுக்கம்' ஒன்றின் தவிர்க்க முடியாத தேவை இக்கதைகளினூடாக மேற்கிளம்பி வந்துள்ளது எனலாம.;. இதனை நமது வலி என்பதா ? புதுவழி என்பதா ? எதிர்காலமே தீர்மானிக்கும் என்று சொல்ல முனைகின்றது  இப்படியுமா...? என்ற இச்சிறுகதைத் தொகுதி.




apeermohamed@gmail.com