நூல் : ஆயிரம் ஹைக்கூ
நூல்
ஆசிரியர் :
 கவிஞர் இரா .இரவி
நூல் ஆய்வு:
முனைவர் ச.சந்திரா!

'
கோபுர வாயில்:
ஆத்திச்சூடியும் கொன்றைவேந்தனும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தது அக்காலம்!ஹைக்கூவும்சென்ரியுவும் மூன்றே வரிகளில் முத்தாய்ப்பானக் கருத்தைக் கூறிச் செல்வது இக்காலம்! கூடுவிட்டுகூடு பாய்ந்து வருடத்திற்கு ஒரு பாடல் வீதம் மூவாயிரம் பாடல்களைப் படைத்தார் திருமூலர் அன்று!கவிதைக்கு மூன்று வரிகள் வீதம் மூவாயிரம் வரிகளில் ஆயிரம்ஹைக்கூக்களைப் படைத்துள்ளார் கவிஞர் இரா.இரவி இன்று!கதிரவனும் சாய்வதுண்டு மாலைவேளை!இக்கவிக்கோ ஓய்விலும் ஹைக்கூ எழுதுவதே வேலை!

அகத்தியர் மாணாக்கர் எண்ணிக்கை பன்னிரெண்டு!இயேசுவின் சீடர்கள் பன்னிரெண்டு!தமிழ் உயிரெழுத்துக்கள் பன்னிரெண்டு!திருமுறைகள் பன்னிரெண்டு!திருக்குறளின் வேறு பெயர்கள் பன்னிரெண்டு!இந்தப் பன்னிரெண்டு என்ற எண் கவி இரா.இரவி வாழ்விலும் சிறப்பைச் சேர்க்கப்போகின்றது எனலாம்!ஆம்!கவிதைச்சாரல் துவங்கி சுட்டும்விழி வரை கிட்டிய பேரும் புகழைக்காட்டிலும் இவரது இந்த பன்னிரெண்டாம் நூலாம் ஆயிரம் ஹைக்கூ நூல் கவிதை உலகில் பேசப்படும் என்பது மறுக்க முடியாத உண்மை!

அகமும் புறமும்:

சிவகாசி முதல் சிங்கப்பூர் வரை, எறும்பு முதல் ஏவுகணை வரை, பூனை முதல் யானை வரை, சிலந்தி முதல் சிறுத்தை வரை,விதை முதல் விருட்சம் வரை என வாசிக்கும் நாம் இதுவரை நினைத்துப்பார்க்காதவை எல்லாம் கவிதைக்கு கருவாகின்றது!சொல்லப்போனால் பஞ்சு மிட்டாயும் குச்சிமிட்டாயும்
கூடகருவாகிப் பாடம் கற்பிக்கின்றது!

வினாக்களும் விடையுமாக, எதிரும்புதிருமாக, ஆச்சரியமும் அதிசயமுமாக ஹைக்கூ நடை பயில்கின்றது!பழமொழிகள் கவிஞரின் கரத்தில்சிக்கிக் கொண்டு
பல்லாங்குழி ஆடுகின்றது!

கண்ணாடி முகம் காட்டுவதோடு அகமும் காட்டுகின்றது!இசைக்கருவிகளோ தன் தொழில் மறந்து தத்துவ மொழிகள் பகர்கின்றன.வண்ண ப்பூக்களோ வாத்தியாராக மாறி நம்மை வகுப்பறைக்குள் இட்டுச் செல்கின்றன!

கனியும் சாறும்:

ஆயிரம் ஹைக்கூ என்னும் இந்நூலில் தமிழுணர்வும் தமிழின உணர்வும் தலைகாட்டுகின்றன!காரசாரமாக விவாதிக்கப்படுகின்றது கடவுள் மறுப்புக்கொள்கை!

சடங்குகளும்,சாஸ்திரங்களும் சரமாரியாய் சாடப்படுகின்றன!சமூகத்தில் தலைவிரித்தாடும், லஞ்சம்-ஊழல் பட்டவர்த்தனமாக வெளிச்சமிட்டுக் காட்டப்படுகின்றன!

மூடப்பழக்க வழக்கங்களோ முகத்தில் அடித்தாற்போல் முறியடிக்கப்படுகின்றன!அறியாமை சுட்டிக்காட்டப்படுகின்றன! அதீத அன்போ ஆங்காங்கேவெளிப்படுகின்றன!

தாய்மை தவம் புரிகின்றது சில கவிதைகளில் என்றால், கோபம் கொப்பளிக்கின்றது பல கவிதைகளில் எனலாம்.

பாயாசமும் பாதாம் பருப்பும்:

கவிஞன் தொடுக்கும் கேள்விக்கணைகள் ஒவ்வொன்றும் சமூகத்தினரின் நெஞ்சுக்குள் நேரடியாகப்பாய்ந்து இரணத்தை உண்டுபண்ணுகின்றன!உதாரணத்திற்கு ஒன்று!

வருடா வருடம் மீனாட்சிக்கு
திருக்கல்யாணம்!
எந்த வருடம் முதிர்கன்னிக்கு?
(ப.90)

வறுமையின் உச்சத்தை உணர்த்தும் ஒரு ஹைக்கூ:

ஆடை அணிந்திருக்கின்றது
சோளக்கொல்லை பொம்மை!
அம்மணத்துடன் சிறுவன்!
(ப.147)

போகிறப் போக்கில் நாம் காணும் காட்சியெல்லாம்
கவியின் கண்ணில்படும்பொழுதுமட்டும்ஹைக்கூவாக
உருமாறிவிடுகின்றது!இதோ!

காவல்துறை அனுமதியின்றி
ஊர்வலம் நடந்தது!
எறும்புகளின் அணிவகுப்பு!


மனதில் உருக்கும் ஹைக்கூ!

எரிந்தும் எரியாத
துருவநட்சத்திரம்
கல்பனா சாவ்லா!


முரண் நயம் மிக்க ஹைக்கூ ஒன்று!

யாரும் வாங்காமல்
மலர்ந்தன பூக்கள்!
வாடினாள் பூக்காரி!
(ப.68)

ஹைக்கூவிற்குள் ஹைக்கூ:

ஹைக்கூ கவிதையின்
விளம்பரத் தூதுவர்கள்
அணில்கள்!
(141)

மனதார..

நூலில் இடம்பெற்றுள்ள முதல் ஹைக்கூ சமுகத்திற்கு சாட்டையடியடியாக இருக்க, இறுதி ஹைக்கூவோ இரக்க உணர்வை வரவழைக்க, இடைப்பட்ட ஹைக்கூ அனைத்தும், நகை, அழுகை, இழிவு, மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்னும் தொல்காப்பியர் சுட்டும்எண்வகை சுவைகளை வெளிப்படுத்துகின்றன
எனலாம்!

காப்பியத்திற்கு கூறப்பட்ட இலக்கணம் ஹைக்கூ நூலுக்கும் பொருந்தி வருகின்றது எனில் இவ்விலக்கியமும் மிகச் சிறந்த இலக்கியந்தானே!

ஆயிரம் ஹைக்கூ நூலாசிரியர் கவிஞர் இரா.இரவி அவர்கள் ஆயிரம் பிறை கண்டுகளித்து அற்புதமாகவாழ என்போன்ற இலக்கிய வாசகியரின் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்! சமூகம் சார்ந்த அவரது இலக்கியப்பணி மேன்மேலும் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்!


ஆயிரம் ஹைக்கூ நூல் சிறப்பு அம்சங்கள் !

வானதி பதிப்பகத்தின் பெருமை மிகு வெளியீடு !

பட்டிமன்ற நடுவர் ,100 நூல்களின் ஆசிரியர் ,பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா.மோகன் அவர்களின் அணிந்துரை.

சிறந்த சிந்தனையாளர், சிறந்த எழுத்தாளர், சிறந்த பேச்சாளர், நேர்மையான செயலர் முனைவர், வெ .இறையன்பு இ .ஆ .ப . அவர்களின் அணிந்துரை.

கவிஞர் இரா.இரவி எழுதிய சிந்தனை விதைக்கும் 1000 ஹைக்கூ கவிதைகள் .

ஆய்வு மாணவர் திரு பூ .இராஜேஷ்குமார் ஹைக்கூ கவிதைகளை ஆய்வு செய்து 20 தலைப்புகளில் தொகுத்து உள்ளார் .

கவிஞர் ஓவியர் திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் தலைப்புகளுக்கு ஓவியங்கள் வரைந்துள்ளார்

மின்மினி இதழ் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா வடிவமைத்துள்ளார் .

அட்டைப்படத்தை மதுரை அரிமா முத்து வடிவமைத்துள்ளார்.



வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு இதியாயராயர் நகர் .
சென்னை .17 தொலைபேசி 044-24342810 , 044- 24310769.
மின் அஞ்சல்
vanathipathippakam@gmail.com

184 பக்கங்கள் விலை ரூபாய் 100.