நூல் : கருநாவு  
நூல்
ஆசிரியர் :
 ஆழியாள்
நூல் அறிமுகம்:
வெலிகம ரிம்ஸா முஹம்மத்

திருகோணமலையில் பிறந்து, தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் மதுபாஷினி (1968) என்ற இயற்பெயரைக் கொண்ட ஆழியாளின் மூன்றாவது கவிதைத் தொகுதியே கருநாவு ஆகும். இவர் ஏற்கனவே 2000இல், உரத்துப் பேச... என்ற கவிதைத் தொகுதியையும், 2006இல் துவிதம் என்ற கவிதைத் தொகுதியையும் இலக்கிய உலகுக்குத் தந்தவர்

மூதூர் புனித அந்தோனியார் மகா வித்தியாலயத்தில் பாடசாலைக் கல்வியைக் கற்ற ஆழியாள், மதுரை மீனாட்சிக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் கலைமானிப் பட்டப் படிப்பையும், நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் ஆங்கில முதுமாணிப் பட்டப் படிப்பையும், தகவல் தொழினுட்பத்தில் பட்ட மேற்படிப்பு டிப்ளோமாவையும் பெற்றவர். ஆனாலும் நவீன தமிழ் இலக்கியம், மொழிபெயர்ப்பு, படைப்பிலக்கியம், விமர்சனம் சார்ந்த விடயங்களில் அதி தீவிர  வாசிப்பும், தேடலும் மிக்கவராகவே காணப்படுகிறார். இவர் ஆங்கில விரிவுரையாளராக யாழ். பல்கலைக் கழக வவுனியா வளாகத்தில் 1992 - 1997 காலப் பகுதிகளில் சுமார் 05 வருடங்கள் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய விடயமாகும்.

உரத்துப் பேச..., துவிதம் ஆகிய கவிதைத் தொகுதிகளை விட மாறுபட்ட வகையிலேயே தனது மூன்றாவது கவிதைத் தொகுதியியை முன்வைத்துள்ளார். மாற்று பதிப்பகத்தினூடாக 77 பக்கங்களில் கைக்கு அடக்கமான அளவில் வெளிவந்துள்ள இந்தத் தொகுதியில் 25 கவிதைகளும், 07 மொழிபெயர்ப்புக் கவிதைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன

கருநாவு என்ற பதம், சொன்னது பலிக்கும் என்ற கருத்தைக் கொண்டது. நம்மில் யாராவது ஏதாவது சொல்லி அது பலித்துவிட்டால் கருநாக்கால் சொன்னது நடந்துவிட்டது என்று கூறும் வழக்கம் இருக்கின்றது. பலருக்கும் இது உண்மையாக நடந்திருப்பதால் கருநாக்கு என்ற சொல் இன்னும் பாவனையில் இருந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. இந்தத் தொகுதியில் உள்ள  சில கவிதைகளை இனி நோக்கலாம்.

மௌனம் சம்மதத்துக்கான அறிகுறி என்பது காலங்காலமாக இன்று வரை சொல்லப்பட்டு வரும் ஒரு கூற்றாகும். மௌனத்தை சாதகமாக எடுத்துக்கொள்ளும் போக்கே நவீன காலத்திலும் நாகரிகம் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் இன்றைய சூழலில் மௌனத்தின் மொழிபெயர்ப்பு வலியாகவும், வேதனையாகவும், சகிக்க முடியாத அல்லது வெளிக்காட்ட முடியாத துக்கித்தலின் வெளிப்பாடு என்பதும் உணரப்பட வேண்டிய விடயமாகும்

கோபத்திலும், எதிர்ப்பிலும் ஏன் இயலாமையிலும் கூட மௌனமே மொழியாக பரிவர்த்தனை செய்யப்படுகின்றது. கண்ணீருக்கும் மௌனத்துக்கும் ஒற்றுமை இருக்கிறது. அதுதான் உதடு பிரிக்காமல் மனதில் உள்ளதை வெளிப்படுத்துதல் என்பதை மௌனம் (பக்கம் 17) என்ற கவிதை விளக்குகின்றது.

மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி
சம்மதம்
இன்மைக்கும் அறிகுறி
அது
எதிர்ப்புணர்வின்
அறிகுறி
எதற்கான
அறிகுறியுமே அல்ல.

மௌனம் 
சினத்தின்
இறுக்கம்
இயலாமையின்
துயரம்

மௌனம் ஒரு பாவனை
கூர்ந்து
கவனித்தலின் குணாம்சம்
அல்லது
ஒட்டாமல்
இருத்தலின் வெளிப்பாடு

கொப்பித் தாளில் கிடந்த (பான் கீ மூனுக்கு விளங்காத) குறிப்பு யாருடையது? (பக்கம் 35) என்ற கவிதை போரின் வடுக்களை வலிமையாக மனதில் பதியச் செய்கின்றது. ஒன்றாக கூடிக்குலாவியிருந்த  குடும்பம் சின்னாபின்னமாக்கப்பட்ட வரலாற்றை ஒரு சிறிய கவிதையில் கூறியிருப்பது ஆழியாள் என்ற ஆளுமைப் பெண்ணின் திறமையை பறைசாற்றுகின்றது. காணாமல் போன பட்டியலில் இருப்பவர்கள் பற்றிய தகவல்களோ அல்லது அவர்களுக்கு உண்மையில் நேர்ந்த கதிகளோ இன்று வரை அறிவிக்கப்படாமல் அக்குடும்பத்தினரை வதைக்கிறது. இந்த விடயம் மனசாட்சி கொண்ட எல்லோரையும் வேதனை விளிம்புக்கு இட்டுச் செல்லும். அந்த தாக்கத்தினை கீழுள்ள வரிகள் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.

என்ர ஊர் சின்ன ஊர் பெரியம்மா, பெரியப்பாக்களாலும் மாமா அத்தை சித்தி சித்தப்பாக்களாலும், கிளி மாமி, விஜி மாமி, வடிவு அன்ரி, வனிதா அன்ரி, சொக்கா அங்கிள்களாலும் நிறைஞ்ச ஊர். அம்மம்மா, அம்மப்பாவும் அப்பப்பா, அப்பம்மாவும் தாத்தா பாட்டி ஆச்சிகளும் எனக்கு இருந்தார்கள். ஒரு நாள் விக்கிப் போன செல்லம்மா பாட்டியை மணிக் கூட்டுக் கோபுரத்துக்குக் கீழே கூறாக்கி வீசினார்கள்.. பெரிய மாமாவும், ராஜி அத்தையும் வெள்ளவத்தைப் பெற்றோல் நெருப்பில் கருகினர். பிறகு ரவிச் சித்தப்பா இயக்கத்துக்குப் போனார். வனிதா அன்ரி இன்னோர் இயக்கத்துக்குப் போனார். சேகர் சித்தப்பா காணாமல் போனார். சித்தி சின்னா பின்னமாகி செத்துப் போனா (என்ரை ஆசைச் சித்தி) ஆச்சியையும் போட்டுத் தள்ளினாங்கள்

நாட்கள் வரும் (பக்கம் 44) என்ற கவிதை சிறைச்சாலையில் நடக்கின்ற சித்திரவதைகளை ஞாபகமூட்டிப் போகிறது. அரசியல் காரணங்களுக்காக அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக சிறை சென்றவர்களை அங்குள்ள அதிகாரிகள் இப்படியெல்லாம் கொடுமைப்படுத்துவார்களா? என்ற கற்பனையில் மனது விரிகிறது.  

எல்லாக் கதவுகளையும்
எங்களின்
முகத்தில்
அடித்து மூடுங்கள்!

எங்களுக்கான ஜன்னல்களை
அறைந்து
சாத்துங்கள்!

காற்றுப் புகும் வழிகளையும்
வெளிச்சம்
கசியும் எல்லாத் துளைகளையும்
இறுக்கி
அடையுங்கள்!

உங்களில் எவர் தன்னும் 
எங்கள்
பாண் துண்டுகளுக்கு 
தித்திக்கும்
பழப்பாகையோ - ஒரு கரண்டி 
வெண்ணையையோ
பூசாதீர்கள்!

வழக்கறிஞராகவும், சண்டே லீடர் பத்திரிகையின் முதன்மை ஆசிரியராகவும் இருந்த லசந்த விக்கிரமதுங்க (1958 - 2009), தனது கட்டுரைகள் மூலம் இலங்கை அரசுக்கும், எல்டிடிஈ மீதும் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தார். இந்த நிலையில் 2009.01.08 ஆம் திகதி வேலைக்குச் செல்லும் போது கொழும்பில் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.  இந்த நிகழ்வுகளை மறக்காத கவிஞர், என் அண்ணன் லசந்தவுக்கு அவர்கள் கூறியதாவது... (பக்கம் 51) என்ற தலைப்பிலான கவிதை மூலம் தனது துயரைப் பகிர்ந்து கொள்கிறார். ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுவது இன்று நேற்று நடந்து வருவதல்ல. உண்மைகளை உரத்துச் சொல்கின்ற காரணங்களுக்காக அநியாயமாக சுட்டுக் கொல்லப்படுவதும், தங்குமிடங்களை அடித்து நொறுக்குவதும், தனிப்பட்ட ரீதியில் அவர்களை மிரட்டுவதும், அவர்களிடமிருந்து பணம் பறிப்பதும் ஆதிக்கத்தின் அடக்குமுறையாக காணப்படுகின்றது. இந்த தாற்பரியங்களை தத்துவார்த்தமாக தனது கவிதையில் பதியச் செய்திருக்கிறார் கவிஞர் ஆழியாள்.

வார்த்தைகளாலும் பாஷைகளாலும்
பேசித்
தீர்த்துக் கொள்ள முடியாத
எல்லாவற்றையும்
மிகச்
சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள முடிகிறது
துப்பாக்கிச்
சன்னங்களால்

எவ்வளவு சுலபமாக
ஒரு
பிஸ்கோத்தை
மொறு
மொறுவெனக் கொறிப்பது போல
எவ்வளவு
இலகுவாக

பகல் விமானம், பால்பெல்போரா - நடனம் முடிந்துவிட்டது, கொடுத்து வைத்த குட்டிப் பெண், காக்கைச் சிறகுகள், வெளி பற்றிய கனவில், கங்காரு, செந்தைல மரங்களும் நானும்... ஆகிய தலைப்புக்களில் 07 மொழிபெயர்ப்புக் கவிதைகளும், மூலக் கவிஞர்கள் பற்றிய குறிப்புக்களும் நூலின் கடைசிப் பகுதியில் காணப்படுகின்றன.

இளம் தலைமுறை கவிஞர்கள் ஆழியாளின் தொகுதிகளை வாசிப்பதினூடாக கவிதையின் நுணுக்கங்களை அறிந்து கொள்ளலாம். கவிதையின் ரசனை எப்படி இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். காத்திரமான தொகுதியாக காணப்படும் இத்தொகுதி அனைவராலும் வாசிக்கப்பட வேண்டியது மட்டுமல்ல, நேசிக்கப்படவும் வேண்டியதாகும்!!!

நூல் - கருநாவு
நூல்
வகை - கவிதை
நூலாசிரியர்
- ஆழியாள்
வெளியீடு
- மாற்று
விலை
- இந்திய ரூபாய் 60.