நூல் : மின்னல்
நூல் ஆசிரியர் :
கவிஞர் அரவிந்தன்
நூல் அறிமுகம்:
கவிஞர் இரா.இரவி



நூல் ஆசிரியர் கவிஞர் அரவிந்தன் அவர்கள் தன்னுரையில் எழுதி இருப்பது ரசிக்கும்படி உள்ளது .

'சில நேரங்களில் சில இடங்களில் நூறு ரூபாய் தாளைவிட ஒரு ரூபாய் நாணயத்துக்கே அவசியம் ஏற்படும் .அப்படித்தான் ஹைக்கூ கவிதைகள் .'

ஹைக்கூ கவிதைக்கு இது வரை யாரும் சொல்லாத விதமாக வித்தியாசமாக சொல்லி உள்ளார் .பாராட்டுக்கள் .

அன்று மனிதனை நெறிப்படுத்துவதற்காக மதங்கள் தோற்றுவிக்கப்பட்டதாக சொன்னார்கள் .ஆனால் இன்று மனிதனை வெறிப்படுத்தவே மதங்கள் பயன்படுகின்றன .என்பதை உணர்த்தும் ஹைக்கூ நன்று .

சில நேரங்களில்
மனிதனும் யானைபோல
மதம் பிடித்துவிடும் !

இதே கருத்தை ஒட்டி நான் வடித்த ஹைக்கூ என் நினைவிற்கு வந்தது .

யானைக்கு மட்டுமல்ல
மனிதனுக்குப் பிடித்தாலும் ஆபத்து
மதம் !

அடுக்குமாடி வீ டுகள் இஉயரமான வீடுகள் என்று கட்டடங்கள் விரிவடைந்தபோதும் மனித மனங்கள் மிகவும் சுருங்கி விட்டது என்ற உண்மை உணர்த்தும் ஹைக்கூ நன்று

நகரத்தில் அருகருகே
மனிதர்களின் வீடுகள்
தூரத்தில் மனிதநேயம் !

ஹைக்கூ கவிதை பற்றியே சில ஹைக்கூக் கவிதைகள் வடித்து உள்ளார் .அவற்றில் ஒன்று .

கஞ்சனாக எழுதினாலும்
வள்ளலாகச் சிந்திக்க வைக்கும்
ஹைக்கூக் கவிதை !

இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலை பற்றி மனிதநேயர்களால் கண்டனத்தை பதிவு செய்யாமல் இருக்க முடியாது . நூல் ஆசிரியர் கவிஞர் அரவிந்தன் அவர்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளார் .

இலங்கையில் முதல் பலி
புத்தர் அப்புறம்
தமிழர்கள் !

பெண் குழந்தை பிறந்தால் வருந்தும் மக்கள் இன்றும் இருக்கின்றனர். பெண் குழந்தைகளைக் கொல்லும் அவலம் கிராமங்களில் இன்றும் நடந்து வருகின்றது .மகனை விட மகளே இறுதி வரை பாசமாக, அன்பாக இருக்கிறாள் என்பதை உணராதவர்கள். அவர்களுக்குகான ஹைக்கூ .

ஆண்பாலுக்கு எதிரான பால்
பெண்பால் பெண்பாலுக்கே
எதிரான பால் கள்ளிப்பால் !

மூட நம்பிக்கையைச் சாடும் விதமாக ஹைக்கூ வடித்துள்ளார். பூனை குறுக்கே சென்றால் அஞ்சும் மனிதர்கள் இன்றும் இருக்கின்றனர் .எள்ளல் சுவையுடன் வடித்த ஹைக்கூ நன்று .

மனிதன் குறுக்கே வந்தான்
யோசிக்கிறது
பூனை !

பலர் வல்லரசு வல்லரசு என்று வீர வசனம் பேசி வருகின்றனர். ஆனால் ஒரு அரசு வல்லரசு ஆவதை விட வறுமை ஒழித்து தன் நிறைவு பெற்ற நல்லரசு ஆவதே நன்று என்பதை உணர்த்தும் ஹைக்கூ நன்று .

இரண்டாயிரத்து இருப்தில் வல்லரசு
எந்த ஆண்டிலிருந்து
நல்லரசு !

சிந்திக்க வைக்கும் விதமாக சமுதாய அவலங்களைச் சாடும் விதமாக ஹைக்கூ வடித்துள்ளார் .

குப்பைத்தொட்டியில் விளம்பரம்
குப்பைகளைப் போடுங்கள்
குழந்தைகளைப் போடாதீர்கள் !

இயற்கைப் பற்றி ஹைக்கூ வடிப்பதில் ஜப்பானிய ஹைக்கூக் கவிஞர்களையும் தமிழக ஹைக்கூக் கவிஞர்கள் மிஞ்சி விட்டார்கள் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக படைத்து வருகின்றனர் .இந்த ஹைக்கூ படிக்கும்போது வாசகர்க்கு மனக்கண் முன் ஆலமரம் வரும் என்று அறுதி இட்டுக் கூறலாம் .

எத்தனை ஜடை
இருந்தாலும் அழகுதான்
ஆலமர விழுதுகள் !

மரம் மழைக்கான வரம் .இது அறியாமல் பலர் மரங்களை கண்மூடித் தனமாக வெட்டி வீழ்த்தி வருகின்றனர் .அதனை கண்டிக்கும் ஹைக்கூ .

காடுகளை அழித்து
பெயர் வைத்தான்
பசுமை நகர் !

கோடை காலத்தில் இதம் தருபவை மரங்கள் .மரத்தின் மேன்மை உணர்த்தும் ஹைக்கூ .

கடும் வெயில்
குடை பிடிக்கிறது
மரம் !

மின்னல் என்ற பெயரில் ஹைக்கூ மின்னல்கள் வழங்கி உள்ள நூல் ஆசிரியர் கவிஞர் அரவிந்தன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .

 

கவிஞர் அரவிந்தன் ! அலைபேசி 9442663637.
 

 

                         www.tamilauthors.com