நூல் : பனைமரக்காடு
நூல் ஆசிரியர் :
கவிஞர் ஈழபாரதி
நூல் அறிமுகம்:
கவிஞர் இரா.இரவி


நூலாசிரியர் கவிஞர் ஈழபாரதி அவர்களின் இரண்டாவது நூல் இது. முதல் நூல் ‘சருகுகள்’. அந்த நூல் இவருக்கு ‘இளங்கவிஞர்’ விருதை பெற்றுத் தந்தது.  இயந்திர பொறியாளரான கவிஞர் ஈழபாரதி தனியார் தொழில் நுட்பக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வருகிறார்.  இவரது ஹைக்கூ கவிதைகளை மின்மினி, ஏழைதாசன், இனிய நந்தவனம் இதழ்களில் படித்து இருக்கிறேன். நூலாசிரியர் திருமண நாளன்று வெளியிட்ட ‘பனைமரக்காடு’ நூலை படித்தேன், மகிழ்ந்தேன், பாராட்டுக்கள்.

இனிய நண்பர் கவிஞர் தங்கம் மூர்த்தி மற்றும் திரைப்பட நடிப்பில் தேசிய விருது பெற்றவர், கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் இருவரது அணிந்துரையும் பனைமரக்காட்டிற்கு வளம் சேர்ப்பதாக உள்ளன.  இருவருமே எனது முகநூல் நண்பர்கள்.

பத்து பக்க கட்டுரையில் சொல்ல வேண்டிய செய்திகளை ஹைக்கூ கவிதை, மூன்றே வரிகளில் உணர்த்தி விடும்.  படிக்கும் வாசகர்கள் மனதில் அதிர்வுகளை உண்டாக்கும் ஆற்றல் மிக்க வடிவம் ஹைக்கூ.. ஈழபாரதிக்கு ஹைக்கூ வடிவம் கைவரப்பட்ட காரணத்தால் ஹைக்கூ நன்கு வடித்துள்ளார்.  ஈழபாரதி ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர் என்பதால் வலிகள் உணர்ந்து வடித்த ஹைக்கூ நன்று.

நூலாசிரியர் குழந்தையாக இருந்த போது ஈழத்தில் இருந்தவர்.  அங்கு நடந்த அவலம் உணர்ந்தவர். வெடிகுண்டுச் சத்தம் அங்கே வாடிக்கை.

வெடிகுண்டுச் சப்தம்
உறக்கத்தில்
ஈழக்குழந்தைகள்!

தமிழகத்தில் தடுக்கி விழுந்தால் மதுக்கடை என்ற அவல நிலை.  தினந்தோறும் செய்தித்தாள்களில் குடியால் நடந்த வன்முறைகள், கொலைகள், தற்கொலைகள் செய்தி இல்லாத நாளே இல்லை..மதுக்கடைகள் இருக்கும் .குடிக்கும் நீ இருப்பாயா என்று குடிமகன்கள் சிந்திப்பதே இல்லை.குடியால் குடிப்பவர்  மட்டுமன்றி குடும்பமே பாதிக்கும் .என்பதை உணர்த்தும் ஹைக்கூ நன்று .

சாராய் பாட்டிலோடு தந்தை
காலி பாட்டில் பொறுக்கும் 
பிள்ளை !

சாலைப் பணியாளர்கள் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி போட்ட சாலையால் தான் நாம் வசதியாக பயணித்து வருகிறோம் அவர்களின் உழைப்பை உணர்த்திடும் ஹைக்கூ நன்று.

தார் சாலையில் வெந்தோம்
கொதித்தது
உலை!

இலங்கையில் மக்களை பாதுகாப்பு வளையத்திற்கு வாருங்கள். அங்கு குண்டுமழை பொழிய மாட்டோம் என வரவழைத்து அங்கேயும் குண்டு மழை பொழிந்து தமிழினத்தை அழித்த வரலாற்றை யாராலும் மறக்கவோ, மன்னிக்கவோ முடியாது.  அதனை உணர்த்திடும் ஹைக்கூ..

எளிமையானது
எல்லோரையும் கொல்ல
பாதுகாப்பு வளையம்.!

ஆம் பாதுகாப்பு வளையம் என்று வரவழைத்து தமிழ் இனத்திற்கே ‘மலர் வளையம்; வைத்த கொடூரம் உலகில் வேறு எங்கும் நடந்ததில்லை. 

மனிதர்கள் இனவெறி கொண்டு மதவெறி கொண்டு உலகில் எங்கும் போராடி வருகிறார்கள்.  அமைதி நிலவவில்லை.  வன்முறை தலைவிரித்து ஆடுகின்றது.  தீவிரவாதிகள் ஈவு இரக்கமின்றி பலரை கொன்று குவித்து வருகின்றனர்.

யுத்தம் நிறுத்து
நித்தம் கலையுது
குருவிக்கூடு !

இலங்கையில் தமிழனத்தைக் கொன்று குவித்த சிங்களருக்கு இன்னும் பசி அடங்கவில்லை.  மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளுவது, சிறை பிடிப்பது, போதை கடத்தல், பொய் வழக்கு போடுவது, தூக்குத்தண்டனை தருவது, நாடகமாடி திரும்ப ஒப்படைப்பது. இப்படி ஒரு சுண்டைக்காய் நாடு ஆட்ட்டம் காட்டி வருவதற்கு பெரிய நாடு இந்தியா கைகட்டி வேடிக்கைப் பார்ப்பது வேதனை.  மத்தியில் ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்பதே வேதனை.

தூண்டிலுடன் மீனவன்
துப்பாக்கியுடன்
கடற்படை!

தந்தை பெரியார் போல பகுத்தறிவுடன் மனிதாபிமானத்துடன் தீண்டாமை என்ற கொடிய  நோயைச் சாடியும் ஹைக்கூ கவிதைகள் வடித்துள்ள நூலாசிரியர் கவிஞர் ஈழபாரதி அவர்களுக்கு பாராட்டுக்கள். வைக்கத்தில் பெரியார் இதற்காகவே அன்று போராடினார்.

தலித்துகளுக்குத் தடை
நடு வீடு வரை வரும்
நாய்கள் !

ஈழத்தில் நடந்த கொடுமைகள் கண்டு தமிழ் இன உணர்வுள்ளவர்கள் உரக்கக் குரல் தந்தனர்.  சிலரோ கண்களையும், காதுகளையும், வாயையும் மூடிக்கொண்டு மௌனம் காத்தனர்.  உலகில் எந்த மூலையில் அநீதி நடந்தாலும் தட்டிக் கேட்பதே மனிதாபிமானம்.

முள்வேலிக்குள் ஈழம்
முகமூடிக்குள்
தமிழகம் !

உள்ளத்தில் உள்ளது கவிதை, உண்மை உரைப்பது கவிதை, உணர்வின் வெளிப்பாடு கவிதை என்ற இலக்கணத்திற்கு ஏற்ப ஹைக்கூ கவிதைகள் வடித்துள்ளார்.

சிங்கள இராணுவம் இலங்கையில் கோவில், தேவாலயம், மசூதி, மருத்துவமனை என்று பாராமல் வானிலிருந்து குண்டு மழை பொழிந்தனர் .  தமிழர்கள் குண்டுகளுக்கு பயந்து பதுங்கு குழிகள் அமைத்தனர்.  அதன் மீது குண்டுகள் போட்டு முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என்று பாராமல் கொன்று குவித்த அவலம் உணர்த்தும் ஹைக்கூ..

பயந்து ஒழிந்தோம்
பாடையானது
பதுங்கு குழிகள் !

உலகமயம், தாராளமயம் என்ற பெயரால் நடந்த மாற்றங்கள் காரணமாக நாம் உண்ணும் உணவே நாசமாகி வருகின்றது.  பூச்சிக்கொல்லி மருந்துகள் பூச்சிக்குப் பதிலாக மனிதனையே கொஞ்சம் கொஞ்சமாக கொன்று வருகின்றன.  அதனை நுட்பமாக உணர்த்திடும் ஹைக்கூ.

தேன் எடுக்க மறுக்கும்
வண்ணத்துப்பூச்சி
பூவிலும் பூச்சிக்கொல்லி !

கருப்புப் பணத்தை நூறு நாளில் கொண்டு வருவோம் என்றனர் தேர்தலுக்கு முன்னர்.  வென்ற பின் நாங்கள் அப்படி ஏதும் சொல்லவில்லை என்கின்றனர்.  அதனை நாட்டு நடப்பை நினைவூட்டும் ஹைக்கூ.

ஆட்சிக்கு வந்ததும்
மறந்து போய் விடுகின்றது
தேர்தல் வாக்குறுதிகள் !

பெற்றோர்கள் குழந்தைகளின் விருப்பத்திற்கு  மதிப்பு அளிக்க முன் வர வேண்டும் சாதி வேறாக இருந்தாலும் பண்புள்ளவர்கள் என்றால் காதலை அங்கிகரிக்க  வேண்டும் . ஊர் தப்பாக பேசும் என்று எண்ணி பெற்ற மகளையே கொன்று விடும் காட்டுமிராண்டித்தனம்  ஒழிய வேண்டும் .மனித நேயம் மலர வேண்டும் .  எங்கு பார்த்தாலும் கௌரவக் கொலை நடைபெற்று வருவது தமிழகத்திற்கு இழுக்கு. 

பாசமாய் வளர்த்த மகள் 
சாதியைக் காப்பாற்ற
கௌரவக் கொலை!

நூலாசிரியர் ஈழபாரதி அவர்களுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள் .உங்கள் எழுத்தால் படைப்பால்  சமுதாய மறுமலர்ச்சி வரட்டும் வாழ்த்துக்கள்.

 

20/2, ஜக்கரியா காலனி முதல் தெரு, சூளைமேடு, சென்னை-94

 

                         www.tamilauthors.com