நூல் : சுட்ட பழமே சுவை அமுதே (தாலாட்டுப் பாடல் தொகுதி)
நூல் ஆசிரியர் : கலாபூஷணம் பி.ரி.அஸீஸ்
நூல் அறிமுகம்:
வெலிகம ரிம்ஸா முஹம்மத்

லாபூஷணம் பி.ரி. அஸீஸ் அவர்கள் 1972 இல் இலக்கிய உலகில் கால்பதித்தவர். நீண்டகாலம் மௌனித்திருந்துவிட்டு மீண்டும் எழுதத் தொடங்கியுள்ளார். தேசகீர்த்தி, காவிய பிரதீப, கவிச்சுடர் போன்ற பட்டங்களைத் தனதாக்கிக் கொண்டுள்ள இவர், கலை இலக்கியப் போட்டி நிகழ்ச்சிகள் பலவற்றில் பிரதேச, மாவட்ட, தேசிய ரீதியில் பரிசில்களும் விருதுகளும் வென்றுள்ளார்.

தனக்கென தனியிடம் பதித்து தனது இலக்கிய ஆளுமைகளை வெளிக்காட்டி நிற்கும் இவரது ஒன்பதாவது நூலாக சுட்ட பழமே சுவை அமுதே எனும் இத்தாலாட்டுப் பாடல்கள் நூல் வெளிவந்துள்ளது. சின்னச் சின்னச் சொற்களை வைத்து சிறந்த கவிதைகளை ஆக்குவதில் வல்லவரான இவரின் நல்ல கவித்துவத்திற்கு இந்த தாலாட்டுப் பாடல் தொகுதி சான்றாக அமைந்துள்ளது.

தாலாட்டு என்பது வாய்மொழி வழியாக ஆரம்ப காலம் தொட்டு பாடப்பட்டு வரும் ஒரு உன்னதமான பாடல்களாகும். அவற்றில் ஒரு சில தாலாட்டுப் பாடல்கள் சமூகத்திற்கு சமூகம் மாறுபட்ட - வேறுபட்ட மதம் சார்ந்த சொற்களைக் கொண்டு பாடப்பட்டு வந்தாலும் பெரும்பாலான தாலாட்டுப் பாடல்கள் அடிப்படையில் தாய்க்கும் சேய்க்குமான அன்புப் பரிபாஷையாகவே கொள்ளப்படுகிறது. அழும் குழந்தையை ஆசுவாசப்படுத்தி தூங்க வைப்பதில் தாலாட்டுப் பாடலுக்கு தனியிடம் இருக்கிறது.

தாலாட்டுப் பாடல்கள் மேற்கூறியது போன்று வாய்மொழிப் பாடல்களாக பாடப்பட்டு வந்ததால் எழுத்து வடிவமின்றி தற்காலத்தில் அருகிவிட்ட சூழ்நிலை காணப்படுகின்றது. எனவே அதை உயிரூட்டும் விதமாக பி.ரி. அஸீஸ் அவர்கள் தாலாட்டுப் பாடல்கள் அடங்கிய தொகுதி ஒன்றையே வெளியிட்டிருப்பது பாராட்;டத்தக்க விடயமாகும்.

இத்தொகுதிக்கு வாழ்த்துரை வழங்கியிருக்கும் ஹில்மி மஹரூப் அவர்கள்' இந்நூலில் அடங்கியிருக்கும் தாலாட்டுப் பாடல்கள் அனைத்தும் சிறப்பானதாகவும் மகிழ்ச்சியூட்டுவனவாகவும் அமைந்துள்ளன. நிச்சயமாக இது குழந்தைகளுக்கும் ஏனையவர்களுக்கும் சந்தோசத்தைக் கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தும் ஒரு ஏற்பாடாகும். கவிஞரின் இத்தகைய கிராமிய முயற்சியானது மிகவும் பாராட்டத்தக்கது| என வாழ்த்தியிருக்கின்றார்.

சுட்ட பழமே சுவை அமுதே என்ற இந்தத் தாலாட்டுப் பாடல் தொகுதியில் 19 தாலாட்டுப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

மல்லிகைப் பந்தல் (பக்கம் 12) என்ற தாலாட்டுப் பாடல் ஓசைநயம் மிக்க அழகியல் பொதிந்த பாடலாகும். குழந்தையின் சிரிப்பை சிதறிய முத்துக்களாக கவிஞரின் மனம் எண்ணுகின்றது. கவிஞனின் பார்வையில் எல்லாமே அற்புதமானவைதான். இதிலிருந்து சில வரிகள் இதோ..


மல்லிகைப் பந்தலில்
மணக்கும் தொட்டிலில்
அல்லிப் பூவே - நீ
ஆராரோ ஆரிவரோ..
ஆராரோ ஆரிவரோ..

நீ சிந்தும் சிரிப்பினிலே
சிதறும் முத்துக்கள் - என்
சிந்தையைக் கிளறும்
ஆராரோ ஆரிவரோ..
ஆராரோ ஆரிவரோ..

கண்ணில் நிறைந்து - என்
கல்பினில் பதிந்த
வண்ணப் பட்டே - நீ
ஆராரோ ஆரிவரோ..
ஆராரோ ஆரிவரோ..


குழந்தைகளின் உலகம் அழகானது. அவர்கள் அதில் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். பசித்தால் அழத்தெரிந்த அவர்களின் அழுகையை நிறுத்தும் வல்லமை தாலாட்டுக்கு உண்டு. அந்தத் தாலாட்டின் இதம் சுட்ட பழமே சுவை அமுதே (பக்கம்
14) என்ற இந்தப் பாடலில் இவ்வாறு கலந்திருக்கிறது.

கண்கள் மலர்ந்த கனியமுதே
களங்கம் இல்லா ஒளிச் சுடரே
மன்னவர் சூடும் மணி முடியே
மங்கை எந்தன் உயிர் மூச்சே
ஆராரோ.. ஆராரோ.. ஆராரோ..

தென்றலின் சுகமே தேனமுதே
தெளிந்த ஓடை நீரழகே
புன்னகை சிந்தும் புது மலரே
பூவை எந்தன் பூ முகமே
ஆராரோ.. ஆராரோ.. ஆராரோ..

பட்டுத் தளிரே பசுங்கொடியே
மொட்டு விரிந்த பூவிதழே
சுட்ட பழமே சுவை அமுதே
சுகந்தமான புது மலரே
ஆராரோ.. ஆராரோ.. ஆராரோ..


பெறுமதிமிக்க பொருள்களை உவமானமாகக்கொண்டே தாலாட்டுப் பாடல்கள் அமைந்திருக்கின்றன. ஆனாலும் அவற்றை விடவும் குழந்தைகள்தான் ஒரு தாய்க்கு முதல்நிலை. கொடியில் மலர்ந்த பூங்கொத்து (பக்கம் 18) என்ற தாலாட்டுப் பாடலிலும் அத்தகைய உவமானங்கள் லாவகமாக கையாளப்பட்டுள்ள விதம் ரசிக்கத்தக்கதாக இருக்கிறது. அதன் சில வரிகள் இவ்வாறு அமைந்துள்ளன.

செம்புக் குடமே சித்திரமே
செம்பவள வாய் அழகே
கொம்புத் தேனே குலக் கொழுந்தே
கொடியில் மலர்ந்த பூங்கொத்தே
ஆராரோ ஆரிவரோ.. ஆராரோ ஆரிவரோ..

மாணிக்க மாலை நீ தானே
மணக்கும் மல்லிகை அதில் தானே
தேனின் சுவையில் கலந்தவனே
தெவிட்டாய் இன்பம் தருபவனே
ஆராரோ ஆரிவரோ.. ஆராரோ ஆரிவரோ..


நூலாசிரியர் பி.ரி. அஸீஸ் அவர்களின் இலக்கிய முன்னேற்றம் மனதுக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கின்றது. கவிதை, சிறுகதை, கிராமியக் கவி, சிறுவர் பாடல்கள், கட்டுரை என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் பிரகாசித்து நிற்கும் கலாபூஷணம் பி.ரி. அஸீஸ் அவர்களின் இலக்கிய முயற்சிகள் மேலும் வெற்றிபெற மனப்பூர்வமாக வாழ்த்துகின்றேன்!!!


நூல் - சுட்ட பழமே சுவை அமுதே
நூல் வகை - தாலாட்டுப் பாடல்
நூலாசிரியர் - கலாபூஷணம் பி.ரி. அஸீஸ்
வெளியீடு - பாத்திமா ருஸ்தா பதிப்பகம்
விலை -
150 ரூபாய்
 

                         www.tamilauthors.com