நூல் :  மரத்தை வெட்டுங்க ...
நூல்ஆசிரியர்:
 
மனிதத் தேனீ இரா.சொக்கலிங்கம்
நூல் அறிமுகம்:  கவிஞர் இரா.இரவி



நூலின் பெயரைப் படித்தவுடன் ஒரு கணம் யோசிக்க வைக்கின்றது.  மரத்தை வெட்டாதீங்க என்று தானே எல்லோரும் சொல்வார்கள். மரத்தை வெட்டுங்க என்ன என்று யோசிக்கும் போது, சிறிய எழுத்தில் (முழுவதும் படித்த பின்னர் முடிவுக்கு வாங்க) என்று எழுதி இருப்பது சிந்திக்க வைத்தது.

நூலாசிரியர் மனிதத் தேனீ இரா.சொக்கலிங்கம் அவர்களுக்கு மனிதத்தேனீ என்ற பட்டம் முற்றிலும் பொருத்தமானது தான்.  கவியரசு கண்ணதாசன் புகழ் மட்டும் பாடாமல் வருடாவருடம் கல்விப்பணியும் செய்து பல்லாயிரம் கூட்டங்கள் நடத்தி வருபவர்.  மதுரையின் அடையாளமாகத் திகழ்பவர்.  கூட்டம் நடத்துவது மட்டுமன்றி கூட்டத்திற்கு வந்திருப்பவர்களின் அனைவரின் பெயரும் அவருக்கு அத்துப்படி.மதுரையில் எந்த ஒரு  விழாவையும் குறித்த நேரத்தில் தொடங்கி குறித்த நேரத்தில் முடிப்பவர்கள் இருவர் .ஒருவர் நூலாசிரியர் மனிதத்தேனீ இரா. சொக்கலிங்கம் .மற்றொருவர் புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி .வரதராசன்.

முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. சொல்வார்கள். இயங்கிக் கொண்டே இருக்க வேண்டுமென்று நூலாசிரியர் மனிதத்தேனீ இரா. சொக்கலிங்கம் அவர்களும் இயங்கிக் கொண்டே இருப்பவர்.  "மாற்றங்களை ஏற்போம் " என்ற முதல் நூலின் வெற்றியைத் தொடர்ந்து (மறுமதிப்பு வந்து விட்டது), இரண்டாவது நூலாக மரத்தை வெட்டுங்க வந்துள்ளது.  நூலின் தலைப்பை வாசித்தவுடனேயே நூலினை வாங்கி வாசிக்க வேண்டுமென்ற ஆவல் வந்து விடுகிறது.  விஜய் தொலைக்காட்சி புகழ் கோபிநாத், இந்த புத்தகத்தை வாங்காதீங்க என்று தலைப்பிட்டதும் நிறைய விற்று விட்டது.  அதுபோல நூலின் தலைப்பை வாசித்தவுடனேயே வித்தியாசமாக உள்ளதே, வாங்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விடுகிறது.

கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத்தில் பேசிப்பேசி நல்ல பயிற்சி பெற்று தமிழகம் முழுவதும் சிறந்த பேச்சாளராக வலம் வருகின்றார் நூல் ஆசிரியர்.  இலக்கிய இமயம் மு.வ. அவர்கள் குறிப்பிடுவார்கள், பேசிய பேச்சு, காற்றோடு கலந்து விடும்.  எழுதிய எழுத்தே நிலைத்து நிற்கும்.  நூலாசிரியர் பேசிய பேச்சை ஆவணப்படுத்தி நூலாக்கி உள்ளார்கள்.  பேசும் போது, கையில் சிறு குறிப்பு மட்டுமே வைத்திருப்பார்.  பேசி முடித்தபின் நினைவாற்றலுடன் குறிப்பை கட்டுரையாக வடித்து உள்ளார்.  25 கட்டுரைகள் உள்ளன.  படிக்க சுவையாகவும் தகவல் தரும் விதமாகவும் உள்ளது, பாராட்டுக்கள்.

இந்த நூல் உருவாவதற்கு உதவிய நண்பர்களான மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை, நல்லறிஞர் புலவர் கி. வேலாயுதன் இருவரையும் மறக்காமல் என்னுரையில் குறிப்பிட்டு நன்றி பதிவு செய்தது மட்டுமன்றி இந்த நூல் வெளியீட்டு விழாவிலும் நன்றி சொல்லி பாராட்டி மகிழ்ந்தார். நூலாசிரியரின் உயர்ந்த உள்ளத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

முயற்சி செய்து கொண்டிருப்பவன் சாதனையாளனாகிறான்.  முதல் கட்டுரையில் முயற்சியின் அவசியத்தை நன்கு உணர்த்தி விட்டு, இன்றைய அவலமான மது பற்றியும் குறிப்பிட்டது சிறப்பு.

“பள்ளி, கல்லூரி மாணவர்களை இன்று ஆக்கிரமித்திருக்கும் ஓர் அவலம் மதுப்பழக்கம்.  அந்தப் பழக்கத்தின் பக்கம் எக்காரணம் கொண்டும் நெருங்கி விடாதீர்கள்.  உங்கள் முயற்சி, ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர நிர்வாகம், பாராட்டும் பாங்கு உள்ளிட்ட உங்கள் ஆளுமைக்கே மதுப்பழக்கம் வேட்டு வைத்து விடும்.  எவ்வளவு திறமை, ஆற்றல் இருந்தாலும் குடிப்பழக்கம் வந்து விட்டால் அனைத்தையும் அழித்து விடும் என்பதை நன்கு குறிப்பிட்டுள்ளார்.  இன்றைய இளைய தலைமுறையினர் கவனத்தில் கொள்ள வேண்டிய வைர வரிகள்.

"சிக்கலுக்குத் தீர்வு தீவிரவாதமன்று கட்டுரையில் மனித நேயம் விதைத்து, தீவிரவாதத்திற்கு இரையாக வேண்டாம் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார், பாராட்டுக்கள்.

செட்டிநாடும், சிக்கனமும் என்பதை நன்கு எழுதி உள்ளார்.  சிக்கனத்திற்கும், கஞ்சத்தனத்திற்கும் உள்ள வேறுபாட்டை விளக்கி உள்ளார்.

பேச்சில் முத்திரை பதித்து வருபவர் நூலாசிரியர் மனிதத்தேனீ இரா. சொக்கலிங்கம் அவர்கள்.  இணக்கமான பேச்சே தேவை என்ற கட்டுரையின் முடிப்பில் குறிப்பிட்டுள்ள வரிகள் இதோ :

“இனிமையான பேச்சு, வாழ்வில் மேன்மையைத் தரும், கனிவாகப் பேசினால் காரியம் கை கூடும்.  தெளிவான பேச்சு சிறப்பைத் தரும்.  அன்பான பேச்சு அழியாப் புகழைத் தரும்.  பயமின்றிப் பேசுங்கள் ; தெளிவான சிந்தனை பிறக்கும், பேச்சு வெறும் வார்த்தைகள் இல்லை ; பேச்சினால் மகிழ்ச்சி என்னும் வசந்தத்தையும் வர வைக்க முடியும்.  வறட்சி என்னும் சோகத்தையும் ஏற்படுத்திட முடியும்.  நல்ல பேச்சால் மனங்களை வசப்படுத்துங்கள்.  உங்கள் வாழ்விலும் அனைத்தும் வசப்படும்.

மேற்குறிப்பிட்டுள்ள வைர வரிகள், மேடைப் பேச்சிற்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்க்கும் உதவும், எந்த ஒரு பிரச்சினையையும் பேசி தீர்த்துக் கொள்ள் முடியும்.  எப்படி பேச வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக எழுதி உள்ளார், பாராட்டுக்கள்.  பேசிய பேச்சைக் கேட்க நடையில் அமைக்காமல் கட்டுரைய்ன் தரத்துடன் எழுதியது சிறப்பு.

சின்னச் சின்ன கட்டுரைகளாக இருப்பதால் நூலை ஒரே மூச்சில் அயற்சியின்றி சுவாரஸ்யமாக படிக்க முடிகின்றது.

ஒவ்வொரு கட்டுரையிலும் பயனுள்ள பல செய்திகள் உள்ளன.

நூலில் 6-வது கட்டுரை, “மரத்தை வெட்டுங்க இந்த கட்டுரை அடுத்த பதிப்பில் கடைசி கட்டுரையாக 25-வது கட்டுரையாக இருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பது என் கருத்து. 

நூலாசிரியர் வெட்டச் சொல்வது சீமைக்கருவேல மரத்தை.  ஏன்? என்ன? காரணம் என்பதை நன்கு விளக்கி உள்ளார். 

“மழை பெய்யாமல் போனாலும், 75 அடி (22.5 மீட்டர்) ஆழத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இது கவலைப்படாது,  பூமியில் எழுபத்தைந்து அடி ஆழம் வரை தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சித் தன் இலைகள் வாடாமல் பார்த்துக் கொள்கிறது.  இதனால் நிலத்தடி நீர் முழுவதுமாக வற்றி அந்த பூமி வறண்டு விடுகிறது.

இவ்வளவு மோசமான மரங்கள் சாலையெங்கும், விளைநிலங்கள் அருகிலேயும் வளர்ந்துள்ளது.  இவற்றை வெட்டுவதற்கு ஓர் இயக்கம் தொடங்கி முற்றிலுமாக வெட்டி வீழ்த்தி நீர்வளம் காப்போம்.

நாட்டுக்கோட்டை சமூகத்தினரின் நற்பண்புகளை படம் பிடித்துக் காட்டி உள்ளார்.  நல்லது என்றால் யாரிடமிருந்தும் எடுத்துக் கொள்ளலாம்.  நகைச்சுவையின் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டுள்ளார்.  ஒரு கட்டுரை முடிந்து, அடுத்த கட்டுரை தொடங்கும் போது உள்ள வெற்றிடத்தை வீணாக்காமல் பயன்மொழிகள், சமணம் பற்றி, இந்து சமயம் பற்றி பல்வேறு தகவல்கள் நூலில் உள்ளன.  நூலாசிரியரின் உழைப்பை உணர முடிகின்றது.

இந்த நூல் படித்து முடித்தால், தீங்கு தரும் சீமைக்கருவேல மரத்தை வெட்டி வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தை மட்டுமல்ல.  நம் மனதில் உள்ள தீய கருத்துக்களையும் வெட்டி வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்து வெற்றி பெற்றுள்ள நூலாசிரியர் மனிதத்தேனீ இரா.சொக்கலிங்கம் அவர்களுக்கு பாராட்டுக்கள்.       



 

மனிதத் தேனீ பதிப்பகம், விஜயா பிரிண்டர்ஸ்,
114/2, டி..பி கே. ரோடு,
மாலை முரசு அருகில், மதுரை–625 001.
பேச:0452 2343829 பக்கம்:144,
விலை:ரூ.60.

 


 

                         www.tamilauthors.com