நூல் : இலக்கியமும் சூழலியலும்
நூல் ஆசிரியர் :  முனைவர் யாழ் சு.சந்திரா
நூல் அறிமுகம்:  கவிஞர் இரா.இரவி


‘இலக்கியமும் சூழலியலும்’ நூலின் தலைப்பே மிக நுட்பமாக உள்ளது. நூல் ஆசிரியர் இனியதோழி முனைவர் யாழ் சு.சந்திரா அவர்கள், என்னுடைய நூல் தந்தவுடன் மதிப்புரை தந்து சிறப்பிக்கும் நல்ல உள்ளத்திற்குச் சொந்தக்காரர். மதுரையின் புகழ்மிக்க ஸ்ரீ மீனாட்சி அரசினர் கல்லூரியில் இணைப் பேராசிரியராகப் பணிபுரிந்து கொண்டே இலக்கியப்பணி செய்து வருபவர். பேச்சு, எழுத்து இரண்டு துறையிலும் முத்திரை பதித்து வருபவர். சைவ சமய சிறப்புப் பேச்சாளர் . செம்மொழி இளம் ஆயவாளர், குடியரசுத் தலைவர் விருது பெற்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்குப் புகழ் சேர்த்தவர்.

இந்த நூலில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் ம. திருமலை, ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளில் கலைக் கல்லூரி முதல்வர், முனைவர் கி. ஜானகி, விலங்கியல் துறை இணைப் பேராசிரியர், நூலாசிரியரின் உற்ற தோழி முனைவர் பெ.கபிலா ஆகியோரின் அணிந்துரைகளும் நூலாசிரியரின் மிக இயல்பான என்னுரையும் நூலின் மகுடத்தில் பதித்த வைரக்கற்களாக ஒளிர்கின்றன.

இந்த நூலிற்கான அட்டைப்படத்தை நூலாசிரியரின் புதல்வி வடிவமைத்து கொடுத்துள்ளார். நூலின் தலைப்பிற்கு மிகப் பொருத்தமாக உள்ளது பாராட்டுக்கள். மலேசியாவில் படித்துக் கொண்டே அம்மாவின் இலக்கியப் பணிக்கு உதவிய நல்ல உள்ளத்திற்கு பாராட்டுக்கள். நூலாசிரியர், தமிழ்ப்பேராசிரியர் என்ற காரணத்தால் தமிழ் இலக்கிய நூல்களை ஆழ்ந்து படித்தவர் மட்டுமல்ல, கல்லூரியில் தினமும் பாடம் நடத்தி வரும் அனுபவம் மிக்கவர் என்ற காரணத்தால் தமிழ் இலக்கியங்களில் உள்ள இயற்கைக் காட்சிகளை வாசகர் கண்முன் காட்சிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார். சங்க காலத்திற்கே நம்மை அழைத்து செல்கிறார்.

நூலாசிரியர் என்னுரையில் மதுரை பற்றி எழுதும் போது, தற்போது கழுகுகள் காணவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். நேற்று, இனிய நண்பர் திருமலை அவர்களின் நூல் வெளியீட்டு விழாவில் முனைவர் ரவிச்சந்திரன் பேசியது நினைவிற்கு வந்தது. பார்சி இனத்தவர் வட இந்தியாவில், இறந்தவர்களை எரிப்பதோ, புதைப்பதோ இல்லை. மலையுச்சியில் வைத்து விடுவார்கள். வைத்தவுடன் கருவிகள் வந்து தின்று விடும். தற்போது 3 நாட்கள் ஆனாலும் கழுகுகள் வரவில்லை. கழுகு இனம் அழிந்து விட்டது என்று குறிப்பிட்டார்.

இந்த நூல் படித்தால், சுற்றுச்சூழல் ஆர்வம் பிறக்கும், இயற்கை நேசம் விதைக்கும் நல்ல நூல். அப்படி வாழ்ந்த நாம் ஏன் இப்படி ஆனோம்? என்று வருந்த வைத்து நூலாசிரியர் வெற்றி பெறுகின்றார்.
9 தலைப்புகளில் கட்டுரைகள் வடித்துள்ளார்.

தொல்காப்பியம் காட்டும் ஐந்திணையை பாடலோடு குறிப்பிட்டுள்ளார். முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் – ஐய்வகை நிலம் குறிந்து அன்றே பாடி உள்ளனர். அவ்வளவு இயற்கை வளங்களையும் இன்று இழந்து நிற்கின்றோம்.

கல், மண் கொள்ளை அடித்து அண்டை மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து பணம் சுருட்டி இயற்கையை சூறையாடி வருகின்றனர். இயற்கை தொடர்ந்து சிதைக்கும் காரணத்தால் தான் இயற்கை சினம் கொண்டு சுனாமி, பூகம்பம், எரிமலை என்று திருப்பித் தாக்கி வருகின்றது. பண்டைய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் இயற்கை மீது அன்பு கொண்டு நேசம் காட்டி வாழ்ந்து வந்ததை நூல் நன்கு உணர்த்துகின்றது.

எட்டுத்தொகையில் உள்ள மலைவளத்தை நூலில் காட்சிப்படுத்தி உள்ளார்கள்.

அடுக்கம், அறை, கல், கவாஅன், குவடு, குன்றம், கோடு, சிலம்பு, துறுகல், பிறங்கல், பொருப்பு, மலை, வரை, வெற்பு.

மலை என்பதற்கு இத்தனை சொற்கள் தமிழில் உள்ளன. ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு பொருள் இருக்கும். தமிழின் வளத்தையும் பறைசாற்றுவதாக உள்ளது. அதன் விளக்கத்தையும் நூலில் மிக அருமையாக எழுதி உள்ள நூலாசிரியருக்கு பாராட்டுக்கள்.

நூலிலிருந்து சில துளிகள் :

"மலையும் பெய்யும் மழையால் அருவி தோன்றுகிறது. பெய்யும் மழையால் சுனையும் உள்ளது. இந்த நீர்நிலைகளால் மலை வளம் பெறுகின்றது.

குறிஞ்சி, காந்தள் முதலிய மணம் மிக்க மலர்களும், பலா, வாழை, மூங்கில் முதலிய மரங்களும், மிளகு, தினை, கிழங்கு போன்ற உணவுப் பொருள்களும் விளைந்து வளம் செழித்து மலைப்பகுதி விளங்குகின்றது. பன்றி, புலி, யானை, ஆடு, மான் முதலிய விலங்குகளும், மயில் முதலிய பறவைகளும் மலைவளத்தை மேம்படுத்துகின்றன.
குறிப்பிட்ட பெயர் கொண்ட மலைப்பகுதிகளும் வளம் மிக்கிருப்பதையும் எட்டுத்தொகையில் காண முடிகிறது."

ஆனால் இன்று மரங்களை அளவின்றி வெட்டி வீழ்த்தி வருகின்றோம். காடுகளை அழித்து வீடுகள் கட்டுகிறோம். இதனால் விலங்குகளும் அழிந்து விடுகின்றன. நான் முதுமலை காட்டில் பாதுகாப்பாக வாகனத்தில் பயணம் செய்து பார்த்த போது காட்டு மாடு தவிர வேறு எந்த விலங்கும் என் கண்ணில் படவில்லை. அந்த நிகழ்வும் என் நினைவிற்கு வந்தது.

தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயன் தரும் நூல். முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கும் உதவிடும் நூல்.

மலைபடுகடாம் பாடல்கள் எழுதி விளக்கமும் எழுதி வியப்பில் ஆழ்த்தி உள்ளார். பழந்தமிழில் ‘ஐயவி’. ‘ஐயவி’ என்றால் கழுகு என்று இந்த நூல் படித்த பின்பே அறிந்தேன். சங்க இலக்கியத்தில் மலர்ச்சூழலும் மங்கையர் மன உணர்வுகளும் கட்டுரையில்,

“பழந்தமிழர் வாழிடத்தை மலர்க்குறியீட்டால் பெயரிடுவது அவர்தம் இயற்கையோடு இயைந்த வாழ்விற்குச் சான்றாகிறது. மேலும் மலர்களின் வண்ணத்தையும், வடிவத்தையும், மணத்தையும், அழகையும் போற்றும் பாடல்களும் அவற்றை உவமைகளாக உருவகங்களாக, படிமங்களாக, குறியீடாகப் போற்றிப் பேசும் முறைமை சங்கப் படைப்பாளர்களின் மரபாக உள்ளமையும் கருதத்தக்கது ஆகும்.”

நூறு வகை மலர்கள் அன்று இருந்துள்ளது. இன்று அவற்றை காண்பது அரிது. காரணம் உலகமயம், புதிய பொருளாதாரம் என்ற பெயரில் இயற்கையை அளவிற்கு அதிகமாக அழித்து வருகிறோம். வெப்பமயமாகி விட்டது, மழை குறைந்து விட்டது என்று வருந்துகின்றோம். இயற்கை மீது நேசம் கொண்டு மரங்களை வெட்டாமல் ,மலைகளை வெட்டாமல்,மணல் கொள்ளை நடத்தாமல் ,காடுகளை அழிக்காமல்,நிலத்தடி நீரை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்காமல்,நெகிழியை பயன்படுத்தாமல் வாழ்ந்தால் ,நாடு வளம் பெறும்.நன்மைகள் விளையும் . பல விழிப்புணர்வுகளை விதைக்கும் விதமாக நூல் உள்ளது. நூலாசிரியர் முனைவர் யாழ் சு.சந்திரா அவர்களுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து
ழுதுங்கள்.  வாழ்த்துக்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மீனாட்சி புத்தக நிலையம், மயூரா வளாகம், 48, தானப்பமுதலி தெரு, மதுரை-1. பேச : 0452 2345971, பக்கங்கள் : 120. விலை : ரூ. 80.

  

             

 www.tamilauthors.com