நூல் :  கலாமின் கனவுகள்
நூல் ஆசிரியர் :
கவிஞர் வே.கல்யாண்குமார்
நூல் அறிமுகம்:  
கவிஞர் இரா. இரவி


பெங்களூரு பெருமைகளின் ஒன்றாக விளங்கி வருபவர் நூல் ஆசிரியர் தேசிய விருதாளர் வே. கல்யாண்குமார். பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் கவியரங்கில் மாதந்தோறும் கவிதை பாடி வருபவர். நானும் கவிதை பாட பெங்களூர் தமிழ்ச் சங்கம் சென்றிருந்த போது இந்த நூலை வழங்கினார். மாமனிதர் கலாம் கரங்களால் விருது பெற்ற அன்று அவர் சொன்ன சொல்லை வாழ்வில் கடைபிடித்து வருபவர். கலாமின் மீது பற்று மிக்கவர்.

‘மறுபடியும் பிறப்பீரோ’ என்ற கவிதை மிக நன்று. முதல் நான்கு வரிகளே அற்புதமான தொடக்கம். முத்தாய்ப்பான முடிப்பு.

மறுபடியும் பிறப்பீரோ’

ஏழைக் குடிசையிலே எரிய வந்த அகல்விளக்கே
இந்நாட்டை வல்லரசாய் மாற்ற வந்த குடியரசே
ஆழ்கடலுள் அலையில்லா அமைதிப் பெருங்கடலே
ஆழ்ந்துரங்கப் போனீரோ... அப்துல் கலாமே!


உதவும் இதயம் அறக்கட்டளை தலைவர் திரு. ரவிச்சந்திரன், பெருமாள் வித்யா நிகேதன், முதல்வர் மதுசூதன பிரபு ஆகியோரின் அணிந்துரையும், மலேசியக் கவிவாணர் ஐ. உலகநாதன் வாழ்த்துரையும் மிக நன்று. மொழி பெயர்ப்பாளர் திரு. ஸ்ரீநாத்-ன் ஆங்கில முன்னுரை, திரு. இரா. அன்பழகன் ஆய்வுரை யாவும் நம்மை மகிழ்வித்து வரவேற்கின்றன.

வித்தியாசமான கவிதை நூல் இது. மாமனிதர் அப்துல் கலாமின் பொன்மொழிகள் மேலே பிரசுரம் செய்து, கீழே அது தொடர்பாக கவிதை எழுதி நூலாக்கி பாமாலை தொடுத்து உள்ளார். பாராட்டுகள், வாழ்த்துகள்.

நீங்கள் உறங்கும் போது வருவதல்ல கனவு
உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு.


மாமனிதர் அப்துல்கலாமின் இந்தப் பொன்மொழிகள் பலரும் அறிந்த ஒன்று. அதற்கு நூல் ஆசிரியர் எழுதிய கவிதை நன்று.

தூங்கவிடாமல் துரத்துகின்றன
இந்தக் கனவுகள்
வலைக்குள் அகப்பட்ட
மீன்களென.


நல்ல உவமை. வலையில் அகப்பட்ட மீன் துள்ளித் துடித்துக் கொண்டே இருக்கும். அதுபோல கனவுகளும் இயக்கத்திற்கு வழிவகுக்கும்.

எந்த மதமும் வன்முறை போதிக்கவில்லை. வன்முறை போதித்தால் அது மதமே இல்லை என்பது என் கருத்து. நாட்டில் மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகளைப் பார்க்கும் போது மனிதன் விலங்காக மாறுகின்றானோ என்ற அச்சம் வருகின்றது. மதம் தொடர்பாக மாமனிதர் கலாம் சொன்ன வைர வரிகள் இதோ.

சிறந்த மனிதர்களுக்கு மதம் என்பது
நண்பர்களை உருவாக்கும் வழி
சிறிய மனிதர்களுக்கு அது
சண்டையிடுவதற்கான கருவி!


இந்த வைர வரிகளைத் தலைப்பிட்டு நூலாசிரியர் கவிஞர் வே. கல்யாண்குமார் எழுதிய கவிதை இதோ!

அவன் பெயரில் இவன் நடத்தும் வசூல் வேட்டை
அவன் சொன்னதாய் இவனே எழுதிய கற்பனைகள் !


இன்றைக்கு செய்தித்தாளில் தினந்தோறும் செய்தி வருகின்றது சாமியார்களின் மோசடி பற்றி. ஆனாலும் மக்கள் திருந்துவதாக இல்லை. சாமியார்களை நம்பி மோசம் போகும் அவலம். பணத்தை இழக்கும் சோகம் தொடர்கதையாகத் தொடர்ந்து வருகின்றது. கவிதையின் மூலம் பகுத்தறிவு விதைத்து சிறப்பு.

முன்பு மதுக்கடை வைத்து இருந்தவர்கள் பலரின் கையில் பள்ளிக்கூடம் கல்லூரி இருக்கின்ற காரணத்தால் மனிதாபிமானமின்றி வசூல் வேட்டை நடத்துகின்றனர். கல்வியின் இன்றைய அவல நிலை உணர்த்தும் கவிதை நன்று.

மாமனிதர் கலாம் பொன்மொழி.

மதிப்பீடுகளுடன் கூடிய கல்வி முறையே
புதிய கல்வி!

இந்த வைர வரிகளைத் தலைப்பிட்டு நூலாசிரியர் கவிஞர் வே. கல்யாண்குமார் எழுதிய கவிதை

காசுக்கு விற்கின்ற நிலை வந்ததென்று
கலைமகளின் கைவீணை விறகானதென்று
யோசித்துப் பார்க்கையில் தலைகுனிந்து நிற்போம்
யாசித்தும் பெற வேண்டும் கல்வி என்றார் ! ஆனால்
பூசிக்க வேண்டிய பொன் போன்ற கல்வி
பொருளாகி நம்மூரில் சந்தைக்கு வந்ததே!


தோல்விக்கு துவளாத உள்ளம் வேண்டும். இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்கு தோல்வியைத் தாங்கும் பக்குவம் இல்லை. அதனால் தான் 10 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியுற்றதும் தற்கொலை செய்கின்றனர். ஆனால் பல சாதனையாளர்கள், வெற்றியாளர்கள் 10ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்கள் தான் என்பதை உணர வேண்டும். எதையும் தாங்கும் உள்ளம் வேண்டும்.

மாமனிதர் அப்துல் கலாம் பொன்மொழி !

தோல்விகளை எதிர்கொள்ள
கற்றுக்கொள்ளுங்கள் – அது தான்
வெற்றிக்கான மிக முக்கியமான திறமை.


மாமனிதர் கலாம் அவர்களும் வாழ்க்கையில் பல தோல்விகளைச் சந்தித்தவர்.

நூலாசிரியர் கவிஞர் கல்யாண் குமார் கவிதை.

தடைகள் நமக்குப் படிகள்!
ஒருமுறை தோற்றால் நொந்து விடாதே!
மறுமுறை முயன்றிட மறந்து விடாதே!
தடைக்கற்களைப் படிக்கல்லாக்கு
தனிமையில் யோசி! இலக்கினை வெல்ல
உனக்குள் இருக்கும் உறங்கா நெருப்பை
ஊதிப் பெருக்கு! உயிர் உண்டாக்கு!


மாமனிதர் கலாம் இறந்த போது கட்சி, சாதி, மதம், மொழி அனைத்தும் கடந்து பலரும் பதாகைகள் வைத்து மரியாதை செலுத்தினர். அதில் அதிகம் இடம்பெற்ற வாசகம் இது தான்.

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால்
நமது இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.


நூலாசிரியர் கவிஞர் வே. கல்யாண்குமார் எழுதிய கவிதை நன்று.

புகழ், பொன், பொருள் எல்லாம் போக
புல்வெளியில் புதைத்த போது
புத்துலகம் உன் பிறப்பை
சரித்திரமாய பார்க்குமா?
சம்பவமா? சரித்திரமா?
உன் பிறப்பு மனிதா? சொல்?


இந்த நூல் கவிதைகள் எழுதுவதற்காக மாமனிதர் கலாமின் பொன்மொழிகளைத் திரட்டி அவற்றிற்கு பொருத்தமாக கவிதைகள் எழுதி திறம்பட நூலாக்கி உள்ளார் நூல் ஆசிர்யர் கவிஞர் கல்யாண் குமார் அவர்களின் கடின உழைப்பை உணர முடிகின்றது.

இதுபோன்று கவிதை எழுதிட எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை. தேசிய விருதுக் கவிஞர், பொற்கிழிக் கவிஞர் என்ற வெற்றி வாகைகள் சூடி இருப்பதால் கவிதைகள் சாத்தியமாகி உள்ளன.

நூலின் பின் அட்டையில் பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு. கோ. தாமோதரன் அவர்களின் வாழ்த்துரையும் அச்சிட்டு இருப்பது சிறப்பு. அதிலிருந்து சிறு துளி.

இன்னும் இன்னும் கேட்கத் தூண்டும் விதத்தில் செப்பும்
வல்லமை பெற்ற வரகவி!

நூலாசிரியர் கவிஞர் வே. கல்யாண்குமார் அவர்களுக்கு வாழ்த்துகள், பாராட்டுகள்.
 



 

பிரமிளா பதிப்பகம், 800, 2-ஆவது குறுக்குத் தெரு, என்.ஜி.ஓ. காலனி, சன்னக்கிபயலு, விருஷ்பாவதி நகர், பெங்களூர்-560 079.
பேச
:98809 34087 விலை : ரூ. 60