நூல் : மனசெல்லாம் நீ
நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா
நூல் அறிமுகம்:   கவிஞர் இரா.இரவி.


நூல் ஆசிரியர் கவிதாயினி செல்வகீதா அவர்கள் ஹலோ எப்.எம். பண்பலை வானொலியில் முதுநிலை அறிவிப்பாளர். ‘டைரி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் மதுரை வானொலி நேயர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டு வருபவர். இனிமையான குரலுக்கு சொந்தக்காரர். எனது கவிதைகளையும் அவரது குரலில் வாசித்து பெருமை சேர்த்தவர். அவரது முந்தைய நூல், பொது அறிவு தொடர்பான நூல். இந்த நூல் முழுக்க முழுக்க காதல் கவிதை நூல்.

நூல் ஆசிரியர் கவிதாயினி செல்வகீதா அவர்கள், காதல் செய்து கரம் பிடித்த அவரது கணவர் M.காளீஸ்வரன் அவர்களுக்கு காணிக்கை ஆக்கி உள்ளார். காதல் திருமணங்கள் பெரும்பாலானவை தோல்வியில் முடிவதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. ஆனால் நூலாசிரியர் காதல் திருமண வெற்றிக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றார். திருமணமாகி பல வருடங்கள் ஆன போதும் இன்றும் அவரது கணவரை தொடர்ந்து காதலித்து வருகிறார். அக்கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். பாராட்டுகள்.

நான் நேசிக்கும் கவிஞர் கவிதாசன் அவர்களின் அணிந்துரையும், இனிய நண்பர் கவிஞர் ஆத்மார்த்தி அவர்களின் பதிப்புரையும் மிக நன்று. நூலிற்கு வரவேற்பு தோரணங்களாக அமைந்துள்ளன.

அட்டைப்பட வடிவமைப்பு, உள் அட்டை யாவும் மிக நேர்த்தியாக உள்ளன. பாராட்டுகள். மதுரை புத்தகத் திருவிழாவில், உயிர்மை பதிப்பக அரங்கில் இந்நூல் வெளியிடப்பட்டது. நூலாசிரியரின் அன்புக் கணவர், சகோதரர், அண்ணி என குடும்பத்தினர் பலரும் வந்து வாழ்த்திப் பாராட்டினார்கள். நானும் சென்று கலந்து கொண்டு நூல் வாங்கி வந்தேன்.

சங்க காலத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண் கவிஞர்கள் இருந்து உள்ளனர். இன்றைய காலத்தில் பெண் கவிஞர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். திருமணத்திற்கு பின் கவிதை எழுதி நூல் வெளியிடும் பெண் கவிஞர்கள் மிகவும் குறைவு. குடத்து விளக்காக உள்ள திறமைகளை குன்றத்து விளக்காக ஒளிர்த்திட வைப்பது நூல்களே. எனவே பல பெண் கவிஞர்கள் நூல் வெளியிட முன் வர வேண்டும்.

நூலின் முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது.

சண்டையிட்ட பொழுதுகளில் கூட
உன்னை வெறுக்க மனம் வரவில்லை
இருக்கமாகிக் கிடக்கிறாய் எப்போதும் நீ!


காதலில் ஊடல் வரலாம் ஆனால் அது வெகுவிரைவில் கூடலாகி விட வேண்டும். வெறுக்கும் அளவிற்கு செல்லுதல் கூடாது என்பதை நன்கு உணர்த்தி உள்ளார். காதல் திருமண வெற்றிக்கு மந்திரமாகக் கொள்ளும் வைர வரிகள். பாராட்டுகள்.

என் இதயத்தை திருடிய
குற்றத்திற்கு தண்டனையாக
ஆயிரம் முத்தங்கள் உனக்கு
அப்போதுதான் அந்தத் தவறை
மீண்டும் மீண்டும் செய்வாய் நீ !


காதலனுக்கு காதலி தரும் முத்தம், தண்டனை அல்ல பரிசு என்றே ஏற்றுக் கொள்வான். இந்த நூல் படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் காதல் நினைவுகளை மலர்விக்கும் விதமாக கவிதைகள் உள்ளன. சங்க காலத்து அகப்பாடல்கள் போல தலைவி கூற்றாக கவிதைகள் உள்ளன. எல்லோருக்கும் புரியும் விதமாக எளிமையான சொற்கள் மட்டுமே பயன்படுத்தி இருப்பதற்கு பாராட்டுகள்.

இரவு நேரங்களில் !
உன் நினைவுகள் சுகம் தான்
இது இரவென்பதால் அல்ல
நினைவுகளில் நீ என்பதால் !


சொல் விளையாட்டு விளையாடி கவிதை படித்து வாசகர்களின் உள்ளம் தொட்டு உள்ளார். அவரவர் துணை பற்றிய நினைவுகளை வரவழைத்து வெற்றி பெற்றுள்ளார்.

உனது தொலைதூரப் பயணங்களில்
உன்னோடு பயணிக்கிறது
என் உள் மனசு !

பணி காரணமாக, சுழ்நிலை காரணமாக, தலைவி தலைவனை பிரிய நேர்ந்தால், பிரிய மனமின்றி பிரிந்தாலும் தலைவியின் மனம் தலைவனுடனே பயணிக்கும் என்ற சங்ககாலக் காட்சியை நினைவுபடுத்தி விடுகின்றது கவிதை.
காதல் கவிதை ஆண் எழுதினாலும் சரி பெண் எழுதினாலும் சரி ,அதில் நிலவு என்ற கருப்பொருள் வந்தே தீரும். நூலாசிரியர் கவிதாயினி செல்வகீதாவும் விதி விலக்கின்றி நிலவையும் குறிப்பிட்டுள்ளார்
.
உனதன்பில் நான் மயங்கிய நேரங்களிலும்
எனதன்பில் நீ மயங்கிய நேரங்களிலும்
வேடிக்கை பார்த்த நிலா
தன்னை மறந்து மயங்கியே நின்றது !


மனைவி கவலையோடு இருந்தால் கண்டு கொள்ளாமல் இருக்கும் கணவன்தான் சமுதாயத்தில் பெருகி உள்ளனர். ஆனால் நூலாசிரியரின் அன்புக் கணவர், மனைவி கவலையுறும் நேரங்களில் மிக அன்பாக, ஆதரவாக, இருந்து ஆறுதல் தந்த நிகழ்வை ஆண்மை, தாய்மை என்று ,இறுதி எழுத்து ஒன்றிவரும் இயைபுச் சுவையுடன் மிக இயல்பாக எழுதி உள்ளார். பாராட்டுகள்.

நான் கவலையுறும் போதெல்லாம்
என் கரம் கோர்த்து !
என் சிரம் கோதும்
உன்னில் நான் காண்பது!
ஆண்மை மட்டுமல்ல
அதையும் தாண்டிய தாய்மை!


வீட்டுக்கு வீடு வாசப்படி என்பதைப் போல மிகப்பிரபலமானவர்களும், திறமையானவர்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களும் வெளி உலகில் எவ்வளவோ நல்ல பெயர் எடுத்தாலும் கட்டிய மனைவியிடம் நல்ல பெயர் எடுப்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது. நூல் ஆசிரியர் கவிதாயினியிடம் நல்லபெயர் எடுத்துள்ள அவரது கணவர் திரு. M.காளீஸ்வரனுக்கு பாராட்டுகள்.

காதலித்து கரம் பிடித்து ஆண்டுகள் கடந்த பின்னும் இன்னும் இன்றும் என்றும் காதலிக்கும் இணையராக உள்ளனர் என்பதற்கு சான்று இந்தக் கவிதை.

காதல் செய்து! காதல் செய்து!
கோடிமுறை களித்திருந்தாலும்
தேடித்தேடி அலைந்து
இன்னும் விழித்தே
இருக்கிறது மனசு!
மீண்டும் உன்னைக் காதல் செய்யவே!


புத்தகத்திருவிழாவில் வெளியிட்ட புத்தகம் இது. அதில் புத்தகம் பற்றி மிக உயர்வாக பதிவு செய்துள்ள கவிதை. இதோ!

வாங்கிப்படித்து! படித்து ரசித்து!
ரசித்துச் சுவைத்த விலை மதிப்பற்ற
புத்தகம் நீ! பொக்கிஷம் நீ!


நூலாசிரியர் கவிதாயினி செல்வ கீதா அவர்களுக்கு சிரித்தால் கன்னத்தில் குழி விழும் அதனை உணர்ந்து எழுதிய கவிதை நன்று.

எனது கன்னக்குழியில் !
எல்லாம் நிறைந்து கிடைக்கும்
உன் நினைவு முத்தங்களை!
வைத்து பல்லாங்குழி ஆடுகிறேன்.
எல்லாமுமாய் நீ இருக்கும்
நிறைவோடு !


மனைவி கவிதை நூல் வெளியிட உள்ளார். அதுவும் காதல் கவிதை நூல் என்றால், எதற்கு உனக்கு இந்த வேண்டாத வெட்டி வேலை என்று திட்டும் சராசரி கணவனாக இல்லாமல், வெளியீட்டு விழாவில் நூலாசிரியரை விட கூடுதலாக மகிழ்வோடு நின்று வரவேற்ற திரு. M. காளீஸ்வரன் அவர்களுக்கு பாராட்டுகள். காதல் திருமண வெற்றிக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் இணையருக்கு வாழ்த்துகள்.
 





மனசெல்லாம் நீ
நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா !
வானம் வெளியீடு, A49 லட்சுமி சுந்தரம் என்கிளேவ்,
சம்மட்டிபுரம் மெயின் ரோடு, மதுரை 625016.
64 பக்கங்கள் விலை ரூ.90.