நூல் :  காதல் தேனீ
நூல் ஆசிரியர்: தமிழ்மகன்
நூல் ஆய்வு:   முனைவர் செ.இராஜேஸ்வரி

ந்நூலில் மூன்று குறு நாவல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் கடைசியாக அமைந்த அழகிய சிறு நாவல் இது.

கதையின் தொடக்கத்தில் பிரிந்து சென்ற இளம் மனைவியை நினைத்து ஏங்கும் கணவனுக்கு கதை முடிவில் பிரிவை தீர்க்கும் இன்பத்தின் திறவுகோல் கிடைத்துவிடுகிறது. அது ஒரு தாரக மந்திரம். ''விட்டுக் கொடுத்து விட்டு பிடிக்கிற வினோதம்'' என்று அந்த இல்லற ரகசியத்தை சொல்லி முடிக்கிறார் நாவலாசிரியர். இப்போது கதை தொடக்கத்தில் வந்த பிரச்சனைக்கான தீர்வு கிடைத்துவிட்டது. அந்த தீர்வை எப்படி செயல்படுத்துவது? எப்படி விட்டுக் கொடுப்பது என்னென்னவெல்லாம் விட்டுக் கொடுப்பது, ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் விட்டு விட்டால் அதன் பின்பு பிடிப்பதற்கு என்ன இருக்கும் என்பதை இக்கதையில் ஒரு படிக்காத வெற்றியாளனும் ஒரு படித்த வெற்றியாளரும் எடுத்துக் காட்டுகின்றனர். அவர்களின் கூற்றில் இல்லறத்தின் வெற்றி என்ன என்பது ஆங்காங்கே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இருவரும் தன் மனைவியை கோபித்தாலும் அவர்களுடன் முரண்பட்டாலும் இறுதியில் அவர்களே சரண் என்று தான் முடிவெடுக்கின்றனர். இந்நூல் இன்றைய இளைஞர்கள் மற்றும் திருமணமான தம்பதிகளுக்குப் பரிசளிக்க வேண்டிய இந்த நன்னூல் ஒரு மணநூல்.

காதல் தேனீயைப் படித்தால் புது மணத்தம்பதிக்குள் தொடக்கத்தில் ஏற்படும் பிரிவினை பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சுமூகத் தீர்வு பிறக்கும். ஆனால் தற்கொலை என்பதை சாகசமாக நடத்திய சில இளம்பெண்கள் உயிர்ப்பலியானதை அறிவேன். எனவே விளையாட்டு வினையாகிவிடும் என்ற கருத்து மனதில் எப்போதும் அனைவருக்கும் இருக்க வேண்டும். எங்கள் பகுதியில் மூன்று இளம்பெண்கள் அவர்களில் இருவர் காதல் திருமணம் செய்தவர்கள். தம் கணவனை மிரட்டுவதாக நினைத்து தற்கொலை முயற்சி மேற்கொண்டனர். ஆனால் பிழைக்கவில்லை. என்ன தான் கவனமாக அதைச் செய்தாலும் சில நேரங்களில் நம் கை மீறிவிடும். எனவே அந்த முயற்சி மட்டும் கூடாது. கூடவே கூடாது.

காதல் தேனீயில் வரும் கணக்கு ஆசிரியர் ரத்னவேலு சிங்கத்தை உதாரணம் காட்டி விளக்கி குடும்பத்தின் இலக்கணத்தை எடுத்துக்கூறுவது நயமான பகுதி. அதைப் போல படிக்காத படியாள் ஆறுமுகம் தன் குடும்பத்தின் ஒற்றுமையை வலியுறுத்தி பேசி சுந்தரத்தை அவன் மனைவியுடன் சேர்த்து வைக்க எடுக்கும் முயற்சி உறுத்தானது. இந்தக் கதையில் இருவரின் பெற்றோரும் அதிகம் தலையிடாமல் சுந்தரத்தையும் கஸ்தூரியையும் மட்டும் தனியாகப் பேச வைத்து அவர்கள் விருப்பப்படி வாழட்டும் என்று சேர்த்து வைக்கின்றனர். இது ஒரு சமாதான யுக்தி. தைத்த இடத்தில் தானே முள்ளை எடுக்க வேண்டும்?

சுந்தரத்தின் அப்பா விவசாயம் செய்வதாக இருந்தால் மட்டுமே படிக்க வைப்பேன் என்று மகனிடம் சொல்லிவந்தது நல்ல முன்னுதாரணம். நம் நாட்டில் விவசாயம் பல இடங்களில் பொய்த்துப் போனதற்கு முக்கிய காரணம் விவசாயிகள் தங்கள் பிள்ளைகள் வெயிலில் காய்ந்து விவசாய வேலைகள் பார்க்கக் கூடாது என்று கருதியதே ஆகும். ஆனால் இந்த சுந்தரத்தின் தந்தை விவசாயத்துக்கு ஆதரவாக இருப்பது நமக்கு ஆறுதலாகவும் இன்றைய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறது. இந்தக் குடும்பத்தின் இரு மருமகள்களில் அந்த விவசாயக் குடும்பத்தின் தூணாக விளங்கும் மூத்த மருமகளும் தன் கணவனை மாத சமபளத்துக்கு வேலைக்கு போகச் சொல்லும் இளைய மருமகளும் இரு வேறு இலக்கில் பயணிக்கின்றனர்.

சுந்தரத்தின் அப்பா தன் மகனை மருமகளின் விருப்பத்துக்காக வேலைக்கு அனுப்புவாரா என்பது நம் முன் நிற்கும் வினா. கதையின் முடிவில் சுந்தரம் தன் மனைவி சொல்படி கேட்டு காபியும் அவள் தன் தொண்டைக்கு இதமாக கூல் டிரிங்சும் குடிப்பதைப் பார்த்தால் அவன் வேலைக்குப் போகத் தயாராகிவிட்டான் என்றே தோன்றுகிறது. ஆக ஒரு அப்பா தன் மகனை விவசாயம் செய்ய வேண்டும் என்று சொல்லி வளர்த்தால் மட்டும் அவன் விவசாயம் செய்துவிட முடியாது அவனுக்குப் பார்த்து கட்டி வைக்கும் பெண்ணும் மூத்த மருமகளைப் போல விவசாயக் குடும்பத்துக்கு ஏற்றவளாக விவசாயத்தை நேசிப்பவளாக இருக்க வேண்டும். அப்படிப் பெண் எடுக்காவிட்டால் அவரது விவசாயக் கனவு தவிடுபொடியாகிவிடும். கதையின் முடிவைப் பார்த்தால் அநேகமாக சுந்தரம் தன் மனைவியொடு பக்கத்து டவுனுக்குத் தனிக் குடித்தனம் வந்து ஏதாவது ஒரு வேலைக்குப் போய்க்கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால் ராணி தேனீ இருக்கும் இட்த்தில் தான் தேன் கூடு அதாவது வீடு குடும்பம் போன்றன அமையும். இது இயற்கை நியதி.
Man is a social animal என்ற தத்துவத்தை இக்கதை பல வகையிலும் நமக்கு உறுதி செய்கிறது. நல்ல கதை. கதைக்கேற்ற நல்ல பொருத்தமான தலைப்பு.

நூல் :  காதல் தேனீ
நூல் ஆசிரியர்: தமிழ்மகன்
உயிர்மை பதிப்பகம்,
சென்னை.
விலை ரூ. 250.

 


 



 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்