நூல் : பார் போற்றும் பாரதி
தொகுப்பாசிரியர் : பாவரசு பாரதி சுகுமாரன்
நூல் அறிமுகம்:   கவிஞர் இரா.இரவி

'பா
ர் போற்றும் பாரதி' என்ற தலைப்பில் பார் போற்றும் நூலாக வெளிவந்துள்ளது. ஒரே நூலில் மகாகவி பாரதியார் பற்றி 186 கவிஞர்கள் கவிதை எழுதி உள்ளனர். இந்நூலை மிகச்சிறப்பாக தொகுத்துள்ளார். பாவரது பாரதி சுகுமாரன் இந்நூல் வெளியீட்டு விழாவை ஒரு மாநாடு போல நடத்தினார். சென்னை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் 28-07-2018 அன்று முழுநாள் விழாவாக நடந்தது. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் கவிஞர்கள் வந்து இருந்தார்கள். மதுரையிலிருந்து நானும் சென்று இருந்தேன். பலரையும் சந்திக்க வாய்ப்பாக இருந்தது. இந்நூலில் இடம்பெற்ற கவிதைகளை எழுதிய கவிஞர்களே பாடும் வண்ணம் சிறப்பான கவியரங்கம் நடந்தது.

பாரதி பற்றி இப்படி ஒரு கவிதை நூல் இதுவரை வந்தது இல்லை எனலாம். ஆகச்சிறந்த படைப்பாக வந்துள்ளது. பாராட்டுக்கள். கலைமாமணி டாக்டர் வி.ஜி.சந்தோசம், தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கே.விசயராகவன், பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் பொன்.குமார் ஆகியோரின் அணிந்துரையும் ஆவடிக்குமார் வாழ்த்துக் கவிதையும் இவர்கள் அனைவரும் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்தனர். தமிழ்வளர்ச்சித் துறை, கலை பண்பாட்டுத் துறை, தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் அவர்கள் சிறப்புரையாற்றினர். நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் மருது அழகுராஜ் நூலில் பாரதி பற்றி கவிதை எழுதி உள்ளார். விழாவில் உரையாற்றின்னார். அருவி திரைப்படத்தில் பனியாரக்கிழவி பாடல் இடம் பெற்றதற்காக வீடு தேடி வந்து 10 இலட்சம் தந்தார்கள் என்று சொல்லி நெகிழ்வுரையாற்றினார். ஒரு கவிதை 10 இலட்சம் தந்த உண்மை நிகழ்வை விளக்கி கவிஞர்களுக்கு புத்துணர்வு தந்தார்.

பதச்சோறாக சில வரிகள் மட்டும் மேற்கோளாக காட்டி உள்ளேன். மேற்கோள் காட்டிய கவிதைகள் சிறப்பு என்றால்இ மேற்கோள் காட்டாத கவிதைகள் மிகச் சிறப்பு. தொகுப்பில் பங்குபெற்ற கவிஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

பாரதி – பாட்டுத் தீ – மருது அழகுராஜ்

பாரதி ஃ எட்டயபுரத்தில் உதித்த / எட்டாவது அதிசயம்
பாரதி என்னும் பைந்தமிழ் பாட்டுக் குத்தீட்டி
நீர் சூழ்ந்த கர்ப்பப் பையில் / உதித்த நெருப்புக் குழந்தை!


மகாகவி பாரதியாரை எட்டாவது அதிசயம் என்கிறார் உண்மை தான். 39 ஆண்டு கால வாழ்வில் கவிதை, கதை, கட்டுரை என மலையளவு வடித்து மலைக்க வைத்தவன் பாரதி!

பார் போற்றும் பாரதி – முனைவர் ஸ்ரீ உமா


இவன் பார் போற்றும் பாரதி
இவன் வெற்றுக் கவிஞன் அல்ல
தமிழ் பற்றுக் கவிஞன்!


உண்மை தான். பன்மொழி அறிஞன் பாடினான், தமிழ்மொழியே இனிமை என்று, காரணம் தமிழ்ப்பற்று, தமிழ் நேசிப்பு, இனிமை என்பதும் உண்மை தான்.

பா விதி பாரதி – பாவலர் கருமலைத் தமிழாழன்

பெண்ணிற்கு விலங்கொடித்தே சடங்கு நூலைப்
பெயர்த் தெறிந்தே கீழ்மைக்குத் தீயை வைத்தே
விளங்குகின்ற தமிழ்மொழியை மண்ணில் நட்டு
விளங்குகின்ற புதுவிதியை மலர் வைத்தோன்.


மரபுக்கவிதையால் பாமாலை சூட்டி உள்ளார்.

புதுநெறி காட்டிய புலவன் பாரதி! – கவிஞர் கொ.சி.சேகர, பெங்களூரு

உதடுகள் உச்சரிக்க உள்ளம் சிலிர்க்கும் பெயர் பாரதி
பாட்டுத் தேரேறி பாரெல்லாம் பயணம் செய்த
பண்பாட்டுப் பாவலன்!
அச்சமென்பதே அணுவளவும் இல்லாத ஆற்றால் மறவன் – அருந்தவக் கவிஞன்!


பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் நடக்கும் ஏரிக்கரை கவியரங்கில் பொறுப்பேற்று மாதாமாதம் கவிஞர்களுக்குத் தகவல் தந்து வரவழைத்து கவிபாட வைத்து தானும் கவிபாடும் கவிஞர் கொ.சி.சேகர் பாரதி பற்றியும் சிறப்பாக கவிதை வடித்துள்ளார்.

உலக மகாகவி பாரதி விழா! – சித்தோடு க. நளினா


பாரதி சின்னப் பயலென்ற சிறுமதியோரை
பார் அதிசின்னப் பயலெனச் சிறு விலையாக்கினாயே!
பார் நோக்க வைத்த எட்டயபுரச் சூரியனே
பார்வையில் வீரம் தேக்கி வைத்த முண்டாசுப் பிரியனே!


மகாகவி பாரதியாரின் வாழ்வில் நடந்த நிகழ்வை உற்றுநோக்கி அவற்றை கவிதையாக்கியது சிறப்பு.

பார் போற்றும் பாரதி! – திருச்கெங்கோடு கவிதா

இச்செகமதில் என்றென்றும் நிறைவாய நின்றிருப்பவன் நீயே
இன்று கவியெழுதும் அனைவரது இதயத்துள்ளும்
உனக்கென்ன ஓர் சிம்மாசனம் உள்ளதென்பது உறுதியே
தமிழும் தமிழரும் உள்ளவரை நிலைத்திருக்கும் உன் புகழே!


கவிதை என்று சொன்னதும் அனைவரின் நினைவில் வந்து நிற்பவன் பாரதி. வாழ்ந்த காலம் கொஞ்சம் வடித்த கவிதைகள் ஏராளம். உடலால் உலகை விட்டு மறைந்திட்ட போதும் சாகாவரம் பெற்ற உன்னதப் பாடல்களால் என்றும் வாழ்பவன் பாரதி. பாரடிக்கு சூட்டிய மணிமகுடம் இந்நூல்.

பாரதியார் ! – கவிஞர் க. மணிவண்ணன், திருவரங்குன்றம்.


இலக்குமியவள் மடிசுமந்து சின்னசாமியின் தோள் வளர்ந்து
எட்டயபுரத்தில் தான்பிறந்து எட்டுத்திக்கிலும் புகழ் மறைந்து
ஏழுவயதினில் கவிபுனைந்து எழுச்சிக்கவியார் அவதரித்து
எட்டயபுரத்தானின் மனம் கவர்ந்து பாரதியார் நின்றவன்.


பாரதியின் பெற்றோர்கள் பெயருடன் வரலாறு கூறும் விதமாக வடித்த கவிதை நன்று.

ஒரு கவிஞன் புதுக்கவிதையில் சொன்னான், இலட்சுமி பெற்றெடுத்த சரசுவதி பாரதி என்றான். அது என் நினைவிற்கு வந்தது.

சொல் ஏர் பிடித்த கவிதைச் சூரியன் – கதிர்பாரதி, கிருஷ்ணகிரி


பாரதி ஒரு தீர்க்கதரிசி! / பின்னே வரும் சுதந்திரத்தை
முன்னரே கண்டுணர்ந்து / கொண்டாடிய கவிக்கோமகன்!


மகாகவி பாரதி தொலைநோக்கு சிந்தனையாளன். விடுதலை பெறும் முன்பே பெற்று விட்டோம் என்று நம்பிக்கை நாற்று விதைத்தவன். அதனை உணர்த்திய ஓதுவார் கவிஞர் அரசு இசைப்பள்ளி ஆசிரியர் கதிர்பாரதிக்கு பாராட்டுக்கள்.

இந்நூலின் தொகுப்பாசிரியர் பாவரசு பாரதி சுகுமாறன் எழுதிய கவிதைஇ நூலின் பின் அட்டையில் உள்ளது. அதிலிருந்து சில வரிகள்.

தமிழ்க்கவிதைகளின் பெருமிதம் என்றும்
எழுத வருவோருக்கு இன்னொரு பல்கலைக்கழகம்
பார் போற்றும் பாரதி!
நாளைய உலகிற்கு இன்றைய கவிஞர்களின் அடையாளத்தைக்
காட்டும் அற்புதப் படைப்பு – வாழ்க பாரதம் ! வளர்க தமிழ்!


தமிழ்க் கவிதை உலகில் மறக்க முடியாத, மறைக்க முடியாத மிகப்பெரிய ஆளுமை. கவிஞர்களின் கவிதையின் அட்சயப்பாத்திரம் சொல் செயல் வேறுபாடு இல்லாத எளியவன் பாரதியின் பன்முக ஆற்றலைப் படம்பிடித்துக் காட்டியுள்ள மிகச்சிறப்பான கவிதை நூல்.


வெளியீடு : தமிழர் கலை இலக்கிய மையம்,
2ஃ121, பெருமாள் கோவில் தெரு, மணம்பூண்டி,
திருக்கோவிலூர் – 605 759,
விழுப்புரம் மாவட்டம்.
பேச : 94443 93717


.

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்