நூல் : பாகன் திரும்பும் வரை
நூல் ஆசிரியர் :  வலங்கைமான் நூர்தீன்
நூல் அறிமுகம்:  
கவிஞர் இரா.இரவி

நூலாசிரியர் கவிஞர் வலங்கைமான் நூர்தீன் அவர்களின் இரண்டாவது நூல் இது. முகநூலில் எழுதிய கவிதைகளை மொத்தமாக நூலாகப் கொண்டுவந்துள்ளார்.

இன்நூலுக்கு பதிப்பாளர் வதிலை பிரபா பதிப்புரையும், பாடலாசிரியர் பழனிபாரதி அணைந்துரையும் வழங்கியுள்ளார்கள்.

நூலை காணிக்கையாக்கியதில் வித்தியாசப்படுகிறார் கவிஞர். பேரன்புகளின் அக்கா, பிரியங்களின் மச்சான், மகிழ்வின் ரோஸ்லின் சமிக்ஷா இவர்களுக்கு” பாசமிக்க குடும்பத்திற்கு காணிக்கையாக்கியிருக்கிறார்.

முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது.

அவளின் ஞாயிற்றுக்கிழமை!
ஒரு ஞாயிற்றுக்கிழமை / என்ன தந்துவிடப் போகிறது?
உங்களுக்கு விடுமுறை என்கிற ஆனந்தமும்
அவனுக்கு முழு குடிதினம் என்பதையும் தவிர!


பொதுவாக வீட்டில் உள்ள பெண்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஓய்வு இல்லை. ஆனால் சில ஆண்களோ ஓய்வெடுப்பது மட்டுமன்றி குடித்து உடல்நலம் கெடுத்துக்கொள்ளும் அவலத்தைச் சுட்டி உள்ளார்.

இலவசமாய் மரணங்கள்!
ஓட்டு கேட்க வரும் போது
இலவச வாக்குறுதிகளில் உறுதி செய்துவிடுங்கள்
விவசாயிகளின் துர்மரணங்களையும்.

காந்தியடிகள் விவசாயம் இந்த நாட்டின் முதுகெலும்பு என்றார். ஆனால் இன்று முதுகெலும்பை முறிக்கும் வேலையை செய்து வருகின்றனர்.

நடிகைகளை சந்திக்கும் நாடோள்வோருக்கு
உழவனை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை.


உழவர்களின் தற்கொலை தொடர்கதையாகத் தொடர்வதை வேதனையோடு குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது பெற்றோருடன் செல்ல / விருப்பம் தெரிவித்தவளை ஆச்சரியமாகப் பார்த்தவனை

கண்களால் கொன்று விட்டு சென்றாள்
தண்டவாளத்தில் செத்துக் கிடக்கிறாள்.

கணினி யுகத்திலும் காட்டுமிராண்டிகள் போல சிந்திக்கும் பெற்றோர் குழந்தைகளின் காதலை வெறுத்து ஆணவக் கொலைகள் நிகழ்த்தும் நாட்டு நடப்பை கவிதையில் பதிவு செய்துள்ளார். சிறப்பு.

கெயில் எரிவாயுக் குழாய்களை
எங்கள் விவசாயிகளின் வயிற்றில்
புதைத்துச் செல்லுங்கள்
எங்கெங்கெல்லாமோ சென்று
பற்றி எரியட்டும் / அவர்களின் உயிர்மூச்சு!


திட்டமிட்டு தமிழகத்தை பாலைவனமாக்கும் எண்ணத்துடன் தமிழகத்தைப் பாதிக்கும் பல திட்டங்களை நிறைவேற்றிட துடித்து வருகின்றனர். விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்கார நண்பர்களின் பண ஆசைக்காக தமிழகத்தையும் தமிழக மக்களையும் அல்லல்படுத்தி வருவதை அழகாக கவிதையில் பதிவு செய்துள்ளார்.

நாளைய சிம்மாசனங்கள்!
நதிகள் இணைப்புத் திட்டம்
முழுமனதோடு ஆர்வம் காட்டிய நடிகர் தான்
பன்னாட்டு குளிர்பான நிறுவனத்தின்
இந்திய பங்குதாரர்!
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
மதுக்கடைகளை இழுத்து மூடுவோம்
மேடைக்கு மேடை கொக்கரிக்கும்
மாநில கட்சித் தலைவர் / கள்ளசாராய அதிபதி!


தமிழ்நாட்டில் நடிக்கும் நடிகர்கள் அனைவருக்குக்ம் தமிழகத்தின் முதல்வராக வேண்டுமேன்ற ஆசை வந்து விட்டது. அரசியல்வாதி-களோ கோடிகளைக் கொள்ளையடிப்பதிலேயே குறியாக இருக்கின்றனர். நாட்டு நடப்பை தமிழகத்தின் அவல நிலை பல கவிதைகளில் படம்பிடித்துக் காட்டி உள்ளார். பாராட்டுக்கள் .

மயிலிடமிருந்து / வலிக்க வலிக்க
பிடுங்கிய சிறகுகளால் / ஒதுக்கி விட்டு
நடக்கிறாள் / எறும்புகளை!

எறும்புகளை மிதித்து விடக்கூடாது என்று மயிலிறகால் ஒதுக்கிவிட்டு நடப்பவர்கள் மயிலிறகு மயிலுக்கு வலிக்க வலிக்க பறிக்கப்பட்டது என்பதை உணருவதில்லை.

ஈழத்தில் தமிழர்களைப் படுகொலை செய்ததை கண்டுகொள்ளாத, கண்டிக்காத புத்தப்பிட்சுகளைக் குறிப்பிடும் குறியீடாகவும் இக்கவிதையைக் கண்டேன்.

புல்லாங்குழல் விற்பவனின்
சவத்தைத் தாங்கிச் செல்லும்
அந்த மூங்கில் பாடையிலிருந்து
மௌனமாய கசியும்
மரணத்தின் இசை!


புல்லாங்குழல் விற்றவன் மரணத்திற்காக மூங்கிலும் அழகின்றது என்பது நல்ல கற்பனை. இக்கவிதையை முகநூலிலும் வாசித்து விட்டு விருப்பம் தெரிவித்து இருந்தேன்.

நீண்ட சவமாய் / இறந்து கிடக்க்கும் நதியொன்றில்
ஆங்காங்கே தென்படும் / மீன்களின் எலும்புக்கூடுகள்
கரையின் ஒருபுறம் தற்போது / எரிந்து கொண்டிருக்கும்
சடலம் / மணல் விற்பவனுடையது.

இன்றைய தமிழகத்தின் ஆறுகள் எல்லாம் வறண்டு, மணல் கொள்ளையர்களின் பாலைவனமாக மாறிவிட்ட அவல நிலையை படம்பிடித்துக் காட்டி உள்ளார்.

பளார்!
கல்வியின் தந்தையே வருக வருக!
கல்லூரி திறப்பு விழாவிற்க்கு
வருகை தரும் கல்வியமைச்சரை
வரவேற்கும் சுவரொட்டிகளை
பசைதடவி ஒட்டிக் கொண்டிருந்தான்
நள்ளிரவில் அந்தப் பட்டதாரி இளைஞன்
தனது கையொப்பம் கூட
இடத்தெரியாத கைநாட்டுக்காரர்
சிரித்துக் கொண்டிருந்தார் பசையொழுக

அரசுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மாட்டிக் கொண்ட மனிதர், புதுவையின் கல்வி அமைச்சராக இருந்த கதையெல்லாம் நினைவிற்கு வந்தது. குறிப்பாக இளைஞர்கள் படித்து முடித்து விட்டு படிப்பிற்கு ஏற்ற வேலையின்றி பரிதவித்து வருகின்றனர். வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிய கவலை ஏதுமின்றி ஆள்வோர் பழம் தின்று கொட்டைப் போட்ட அதிகார்களுக்கு ஓய்விற்குப் பின்னும் பதவி நீட்டிப்பு வழங்கி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி வருகின்றனர். சமுதாய சீர்கேடுகளை உணர்த்திடும் அற்புத நூல்.
 



நூல் ஆசிரியர் : வலங்கைமான் நூர்தீன்
ஓவியா பதிப்பகம், 17-13-11, சிறிராம் வளாகம்,
காந்தி நகர் முக்கியச் சாலை, வத்தலக்குண்டு – 624 202.
பக்கம் : 112, விலை : ரூ. 80

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்