நூல் : எரிதழல்
நூல் ஆசிரியர் :  கவிஞர் நாகை ஆசைத்தம்பி
நூல் அறிமுகம்:  
கவிஞர் இரா.இரவி


நூலாசிரியர் கவிஞர் நாகை ஆசைத்தம்பி அவர்கள் பிறந்த ஊரான நாகப்பட்டினம் நாகையை பெயருடன் இணைத்துக் கொண்டு நாகைக்கு பெருமை சேர்த்து வருபவர். இந்நூலை அவரது காதல் மனைவி திருமதி சரினா பேகம் அவர்களுக்கு காணிக்கையாக்கி உள்ளார். பாராட்டுக்கள்.

சிந்தையில் சிறு மின்னலை உருவாக்கி சிந்திக்க வைக்கும் சிறப்புமிக்கது ஹைக்கூ கவிதை. நூல் முழுவதும் சிந்திக்க வைத்துள்ளார். எல்லா ஹைக்கூ கவிதைகளும் பிடித்து இருந்தாலும் பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு.

பழுத்தாலும்
இனிப்பதில்லை
மிளகாய் !


எந்த ஒரு காயும் பழுத்து பழமானால் இனிக்கும். ஆனால் விதிவிலக்காக மிளகாய் பழுத்தாலும் இனிப்பதில்லை. காரமாகவே இருக்கும் என்பதை உணர்த்தியது சிறப்பு.

இரண்டு லாரிகள் மோதல்
முகப்பில்
அம்மன் துணை.


ஹைக்கூ கவிதைகளில் பகுத்தறிவு சிந்தனை விதைத்து உள்ளார். ஓட்டுநர் கவனமாக இல்லாவிட்டால் விபத்து நேரும். ‘அம்மன் துணை’ என்று எழுதி இருந்தால் மட்டும் விபத்து நடக்காமல் இருக்காது என்பதை உணர்த்தி உள்ளார்.

இந்தியாவுக்கு முதலிடம்
உலக வங்கியில்
கடன்!

எதிர்பாராத திருப்பம் என்பது ஹைக்கூ யுத்தி. தங்கப்பதக்கம் பெற்றதில் முதலிடமோ என ஆர்வமாக படிக்கும் போது உலக வங்கியில் கடன் பெற்றதில் முதலிடம் என்று முடித்தது முத்தாய்ப்பு. எள்ளல் சுவை!

வெளுப்பது வெள்ளை
உடுத்தியிருப்பது கந்தல்
சலவைத் தொழிலாளி!


வாழ்வியல் எதார்த்தத்தை நன்கு பதிவு செய்துள்ளார். பலருக்கு ஆடைகள் வெளுத்து தந்திட்ட போதிலும் அவன் வெள்ளை ஆடை உடுத்துவதில்லை, கந்தலாடையே அணிந்துள்ளான் என்று ஏழ்மையை படம்பிடித்து உள்ளார்.

வெடித்தாலும்
சிரிக்கிறதே
பருத்தி!

வெடித்திட்ட பருத்தியைப் பார்த்தவர்களுக்குப் புரியும், அது சிரிப்பது போலவே இருக்கும். காட்சிப்படுத்திய ஹைக்கூ நன்று.

நோய் விட்டுப் போக
வாய் விட்டு சிரிக்க முடியல
வாடகை வீடு!


வாடகை வீட்டில் குடியிருப்போரின் மனநிலை சித்தரிப்பு சிறப்பு. எப்போது வீட்டுக்காரர் காலி செய்திடச் சொல்வாரோ, வாடகையை உயர்த்துவாரோ என்ற பயத்தில் குடியிருப்பவர்களுக்கு கவலையில் சிரிக்க மனம் வருவதில்லை.

என்ன இது!
பறவைகள் மாநாடா?
வேடந்தாங்கல்!


ஆம் பன்னாட்டு பறவைகளின் மாநாடு தான். பல நாடுகளிலிருந்து பறந்து வந்து கூடி மகிழ்ந்து இருந்து களித்து இன்புற்று பின் தாயகம் பறக்கின்றன.

என்னுடைய ஹைக்கூ போலவே ஒரு ஹைக்கூ உள்ளது. ஒத்த சிந்தனை என்று எடுத்துக் கொள்ளலாம்.

என் ஹைக்கூ.

யானைக்கு மட்டுமல்ல
மனிதனுக்குப் பிடித்தாலும் ஆபத்து
மதம்!

கவிஞர் நாகை ஆசைத்தம்பி ஹைக்கூ.

யானைக்கு மட்டுமல்ல
மனிதனுக்கும் பிடிக்கிறது
மதம்!


பதில் தெரிந்தும்
சொல்லத் தெரியவில்லை
குழந்தைகள் கேள்வி!


அறிவுப்பூர்வமாக குழந்தைகள் கேட்கும் சில கேள்விகளுக்கு மௌனத்தையே பதிலாகத் தருகிறோம். விடை சொல்ல முடியாத கேள்விகள் நிறைய உண்டு.

கசப்பை மறந்து
வெளிவேசம் போடுகிறது.
வேப்பம்பழம் !


கவலைகள் உள்ளே இருந்தாலும் வெளியில் சிரித்து வேடமிடும் மனிதர்களை குறியீடாக உணர்த்துவது போல உள்ளது.

பறிக்க ஆளில்லை
“கொய்யா”பழம்
முதிர்கன்னி.


வரதட்சணை கொடுமையின் காரணமாக பல பெண்களுக்கு திருமணமாகவில்லை, மணமகன் விலை அதிகம் என்ற காரணத்தால் பல ஆண்களுக்கும் மணமாகவில்லை. முதிர்கன்னிகள் போலவே முதிர்காளைகளும் பெருகி விட்டனர். காரணம் வரதட்சணை. கொய்யாத பழம், கொய்யா பழம் என சொல் விளையாட்டு விளையாடி உள்ளார். பாராட்டுக்கள்!

பிள்ளையில்லா வீடுகளை
காட்டிக் கொடுக்கின்றன
வெள்ளையடித் த . சுவர்கள்.!

வெள்ளையடித்து சுவர் கிறுக்கலின்றி அப்படியே சுத்தமாக இருந்தால் அந்த வீட்டில் பிள்ளை இல்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம் என்பதை உணர்த்திய விதம் சிறப்பு.

பழைய கிணறு
நிரம்பி வழிகிறது
குப்பைகள்.

உண்மை தான். தண்ணீர் இல்லாத பல்லாண்டுகள் ஆன கிணறுகள் குப்பைத் தொட்டியாகவே பயன்படுத்தப்பட்டு வரும் உண்மையை உணர்த்திய ஹைக்கூ நன்று.

கையெழுத்துப் போடவும்
கையூட்டும் எதிர்பார்க்கும்
பச்சை மை பேனா!

கையெழுத்து போட அரசு அலுவலக அதிகாரி (பச்சை மையில் கையொப்பமிடுபவர்) கையூட்டு எதிர்பார்ப்பதை எள்ளல் சுவையுடன் எடுத்து இயம்பியது சிறப்பு. சிந்திக்க வைத்தது.

உடைந்த பலூனுக்கு
இரங்கல் தீர்மானமோ
குழந்தைகள் கண்ணீர்!

கையில் வைத்திருந்த பலூன் உடைந்து விட்டால் குழந்தையின் மனமும் உடைந்து விடும். உடன் அழத் தொடங்கி விடும். அதனை இரங்கல் தீர்மானம் என்று கற்பனை செய்தது நன்று.

பணம் பத்தும் செய்யுமென்றார்கள்
ஒன்று கூட செய்யவில்லை!
பழைய ஐநூறு!


திடீரென ஒரே நாளிரவில் ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவித்து பொதுமக்கள் தலையில் இடியை இறக்கினார்கள். இடியை இறக்கியது மட்டுமல்ல. ஜிஎஸ்டி வரி என்று அடுத்த இடி இறக்கினார்கள். பெட்ரோல் விலையை தினமும் ஏற்றி வருகின்றனர். நடுவணரசின் கோமாளித்தனத்தை சுட்டிக்காட்டும் ஹைக்கூ நன்று.

கருப்புப் பணம் வரும் என்றார்கள். ஆனால் கோடிகளை கொள்ளையடித்து விட்டு வெளிநாட்டிற்கு ஓடிய நிகழ்வுகள் தான் நடந்தன.

ஒவ்வொரு ஹைக்கூ கவிதைக்கும் பொருத்தமான புகைப்படங்களும் அச்சிட்டு புதுமையாக அருமையாக வெளிவந்துள்ளது. நூலாசிரியர் கவிஞர் நாகை ஆசைத்தம்பி அவர்களுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
 




நூல் ஆசிரியர் : கவிஞர் நாகை ஆசைத்தம்பி, 87548 79990 .
நண்பர்கள் பதிப்பகம், 145-பி, கோபாலகிருஷ்ணா வளாகம்,
நேதாஜி சௌக், குடியாத்தம் – 632 602.
வேலூர் மாவட்டம்.
பக்கம் : 72, விலை : ரூ. 100



 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்