நூல் :  "ஏர்வாடியம்"  
நூல் ஆசிரியர்கள்
:  முனைவர் இரா. மோகன், முனைவர் நிர்மலா மோகன்
நூல் ஆய்வு:   பேராசிரியர் இராம.குருநாதன்


"ஏர்வாடியம்"  முனைவர் இரா. மோகன், முனைவர் நிர்மலா மோகன் கைவண்ணம் பற்றிய கலைவண்ணம்

ருவரை முழுமையாகப் புரிந்து கொள்ளவும், அவரது திறனைப் பிறர் அறிந்துகொள்ளவுமான ஆவணத் தகவல் இன்றியமையாதது. வெறும் வாழ்க்கை வரலாறாக இருந்துவிடாமல் அவரது பணி எந்த அளவுக்கு மேம்பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்ளப் பயன்படும் வாழ்க்கை வரலாறு வரவேற்புப் பெறும் என்பது பொதுவிதி. ஆனால், வாழ்க்கை வரலாறு என்பதையும் கடந்து வாழ்க்கைக்கான வரலாறு என்பதைப் பதிவு செய்யும்போது அவரது செயலாக்கமும் சிந்தனைகளும் வெளிப்படும். அவற்றை நூலாக்கம் செய்வது என்பது வேண்டப்படும் ஒன்று. ஏர்வாடியாரின் பன்முகத் தன்மையை அறிவதற்கு ஓர் ஆவணமாக அவரது படைப்புகளிலிலிருந்து செய்திகளை நுணுகி நோக்கி அமைத்திருக்கும் ‘ஏர்வாடியம்’ என்ற நூல் வாழ்க்கைக்கான வரலாறாகவே அறியத்தக்கது.

முனைவர் இரா. மோகனும், அவருடைய துணைவியார் நிர்மலா மோகனும் ஏர்வாடியாரின் படைப்புகள் வழியே போற்றற்கு உரிய செய்திகள் பலவற்றை இந்நூலில் தந்துள்ளனர். பத்துத் தலைப்புகளில் பகுத்துள்ள தகவல்கள் முத்துக்களாக நூலை அணிசெய்துள்ளன. மோகனின் பார்வை எப்போதும் பரந்து விரிந்தது, அவரது மனம் போல. ஒரு நூலில் எப்படிப்பட்ட கருத்துகளை எந்தெந்த வகைகளில் இடம் பெறச் செய்யலாம் என்ற சிந்தனையை அவரது நூலாக்கங்கள் பலவற்றிலும் பார்க்கலாம். நறுக்குத் தெறித்தாற் போலக் கருத்துகளைச் சொல்லிச் செல்வதிலும், நச்சென்று ஒரு செய்தியைத் தம் நடையில் எடுத்துரைப்பதிலும், மேற்கோளின் தகுதிப்பாட்டை ஆங்காங்கே இடையிடை ஆளுமைப்பட எடுத்துக்காட்டுவதிலும் ஆர்வ மிகுதியும், செப்பமுறச் செய்யும் நாட்டமும் மோகனது கையிருப்பு. அதனைச் சீரிய முறையில் செதுக்கி வெளிப்படுத்தும் அருமை அவரது மெய்த்துடிப்பு. இத்தகைய போக்கினை இந்நூலிலும் காணமுடிகிறது.

ஏர்வாடியாரின் வாழ்க்கைச் சித்திரத்தைச் சுவைபடவும், எதனை எப்படிச் சொல்ல வேண்டும் என்ற நுட்பத்தையும் முதல் கட்டுரை காட்டுகிறது. இருபது பக்கங்களில் சுருக்கமாகவும். அதே சமயம் சொல்வனவற்றில் எவற்றையும் விடுபாடு இல்லாமல் சுவைபடச் சொல்ல முடியும் என்பதையும் மெய்ப்பித்திருக்கிறது இம்முதல் கட்டுரை. ஏர்வாடியாரின் மேற்கோள்களை ஆங்காங்கே பொருந்துமாறு இடம்பெறச் செய்திருப்பது இந்நூலுக்கு ஒரு தோரண வாயில் அமைத்துத் தந்துள்ளதாகவே எண்ணமுடிகிறது. ஏர்வாடியாரின் மனத்தின் பிரிதிபலிப்புகளை உள்வாங்கி எழுதப்பட்டதாகவே அக்கட்டுரை விளங்குகிறது. இதயத்திற்கு நெருக்கமானவரைப் பற்றி இதமான மொழியில் கட்டமைக்கப்பட்டிருக்கும் அக்கட்டுரை ஏர்வாடியாரின் இலக்கினைத் துல்லியமாகத் தெரியப்படுத்தும். ஏர்வாடியாரின் எத்தனையோ சிறப்புகளில் ''இமயமாய் எதுவென்றால்,நல்லவன் என்பதொன்றே நான் அறிந்த பெருமையாகும்'' என்ற ஏர்வாடியாரின் கவிதை அடிகள் கொண்டு கட்டுரையை நிறைவு செய்திருக்கும் பாங்கு பாராட்டுக்கு உரியது. சீர்வளர் செந்தமிழ் நடையில் அழகியதோர் அணிந்துரை அளித்திருக்கும் முனைவர் பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் சொல்லியுள்ளது போல, “‘கொங்குதேர்வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி போல்,' 'உயர்ந்த சந்தன மரத்தில் தொடுத்த தீந்தேன் அடை போல்' நூலாக்கியுள்ளனர்” என்று நூலாக்கம் செய்த இலக்கிய இணையரைப் பாராட்டி இருப்பது வெறும் புகழ்ச்சி இல்லை, உண்மையே!

ஏர்வாடியாரைக் கவிஞராக, கட்டுரையாளராக, வங்கிப் பணியாளராக, நகைச்சுவை நாயகராக, நாடக ஆசிரியராக, இதழாளராக, கதாசிரியராக, சொற்பொழிவாளராக -- இப்படி அவர் பன்முக ஆற்றலுக்கு உரியவராக இருப்பினும், அவரிடம் ஓங்கி இருப்பது மனித நேயமே என்பதைப் பல படைப்புகளின் அடிநாதமாக விளங்கியிருப்பதைப் பக்கங்கள் தோறும் இந்நூல் பதிவு செய்திருக்கிறது. ஏர்வாடியாரின் வாக்கு மூலமான 'வங்கி எனக்கு,ஜீவனம் தந்தது என்றால், வளர்தமிழ் எனக்கு ஜீவனை வளர்த்தது' என்பதை வருமிடந்தோறும் மெய்ப்பிக்கும் வகையில் அவரது படைப்புகள் எதிரொலிக்கின்றன. ‘கவிதை தினம் தேனாய் இனிப்பதாயிருந்தால் அது தானாய் உள்ளத்தில் இருந்து கனியவேண்டும்’ என்ற கருத்தின் ஆழத்தைப் புரியவைக்கும் இலக்கிய இணையரின் பார்வைகள் பரந்துபட்ட கோணத்தில் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. மரபுக் கவிதையிலும், குறுங்கவிதையிலும், சுருக்கமான ஹைகூ போன்றவற்றிலும் தம் கருத்துகளைச் செறிவோடு வடித்துத் தந்திருக்கிறார் ஏர்வாடியார். 'கவிதையில் கவிஞன் இருக்க வேண்டும்; கவிஞனில் கவிதை இருக்கவேண்டும்' என்ற அவரது கருத்துரைப்பதற்கு ஏற்ப, அவருக்குக் கைவந்த கலை கவிதை என்பதைக் கவிதை பற்றிய இரு கட்டுரைகள் பலவாறு எடுத்துக்காட்டுகின்றன. காந்தியை ‘மீண்டும் பிறந்தால், அவரது கைகள் ராட்டை சுற்றாது. சாட்டைதான் சுழற்றும்’ என்ற சொல் விளையாட்டில் ஒரு நுட்பம் தெரிகிறது. சாட்டைக்குப் பதிலாகக் காந்தியின் கைகளில் துப்பாக்கி என்றில்லாமல் சாட்டை என்று சொல்லியிருப்பதன் பின்னணியை நோக்க, சாட்டைதான் சரிப்பட்டு வரும் காலம் இது என்று கருத்துப் பெய்யப்பட்டிருப்பது எண்ணிப்பார்த்ததற்கு உரியது. ஏர்வாடியாரின் கருத்தினையொட்டித் 'இருத்தல் என்பது வேறு; வாழ்தல் என்பது வேறு' என்பதற்கான விளக்கம் சரியானதொரு பார்வை. கவிதையின் இலக்கணத்தை ஏர்வாடியார். நறுக்குத் தெறித்தாற்போல் நச்சென்று சொல்லி யிருக்கும் நயம் பாரட்டும்படி எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அங்கதச் சுவைக்கும், மெல்லிய நகை யுணர்விற்கும், அழகிய முரண் உத்திக்கும் பெயர்போன கவிஞர் ஏர்வாடியார். அவற்றை எடுத்துக்காட்டித் திறனாய்ந்திருப்பது பாராட்டும்படி உள்ளது. கக்கனையும், காமராசரையும் தம் நோக்கில் கண்டுரைத்திருக்கும் ஏர்வாடியாரின் பார்வை ஆழமானது. அதனை இலக்கிய இணையர் வெளிப்படுத்தியிருப்பதும் போற்றக்கூடியதாக உள்ளது. மனைவியைத் ‘தலையணை மந்திரம்’ என்று சொல்வது தவறு என்று சொல்லி, மாறுபட்ட கோணத்தில் கவிஞர், 'தலை முதல் என்னைத் தினம் இயக்கும் இயந்திரமாகச்' சொல்லியிருப்பதில் காணப்பெறும் பொருட்செறிவு கவிஞரை உயர்த்துகிறது.

ஏர்வாடியாரின் நகைச்சுவை உரையாடல்களும், சுறுக்கென்று தைக்கும்படியான நறுக்குத் துணுக்குக் கவிதைகளும் இந்நூலில் நன்கு வெளிக்காட்டப்பட்டுள்ளன. சொல்ல வரும் செய்தியைப் பிறர் ரசிக்கும்படி தருவது ஏர்வாடியாருக்குக் கைவந்த கலை. அதனைத் திறம்பட எடுத்துரைக்கின்றனர் இலக்கிய இணையர். ஏர்வாடியாரின் நகைத்திறனைச் சுருக்க வரையறையாக, ‘இயல்பு + இதம் + இங்கிதம் = ஏர்வாடியாரின் நகைச்சுவை’ என்று உணர்த்தி யிருக்கும் நுட்பம் போற்றுதலுக்கு உரியது. ஏர்வாடியாரின் துணைவியார் பெயரை வைத்துச் சொற்சிலம்பம் காட்டும் நகைவுணர்வு சித்தத்தில் சிரிப்பலைகளைத் தோற்றுவிக்கும். ஏர்வாடியாரின் துணுக்குக் கவிதைகள் பிரபலமானவை. அவை மேடையில் பலரும் எடுத்தாளும் திறத்தன என்பது நூலினுள் சரியாக விளக்கம் பெற்றிருக்கிறது. 'விற்கப்போனபோதுதான் விவரமே தெரிந்தது, வாங்கியது தங்கம் இல்லையென்று' என்ற குறுங்கவிதை எண்ணிப்பார்க்க எண்ணிப் பார்க்கச் சிந்தனையைக் கிளரும். அரசியல் பற்றிய குறுங்கவிதைகளைச் சுவைபட அமைக்கும் திறத்தவர் ஏர்வாடியார். அன்றாடம் வாழ்க்கையில் அனுபவிக்கும் சில நினைவின் சிலிர்ப்புகள் ஏர்வாடியாரின் கவிதையில் வண்ணவண்ணக் கோலமாய் விரிகின்றன. 'குடை இருக்கும்போது மழை பொழிய வேண்டும்' என்ற கவிதை ஒரு பதச்சோறாக அமைந்திருப்பது நெஞ்சை ஈர்க்கிறது. ‘நல்ல நேரம் எது?’ என்ற துணைத்தலைப்பில் நேர மேலாண்மை பற்றிய கருத்துகளைத் தந்திருப்பதும், அதற்குரிய விளக்கமாக ‘எல்லோருக்கும் பொதுவான 24’ என்ற கவிதையை எடுத்துக்காட்டியிருக்கும் நுட்பமும் ஆழமானவை. ‘இறந்த பின்னும் வாழ்வதற்கு’ என்ற கவிதை சிறப்பான சிந்தனை விருந்து. அதனை மில்லியன் டாலர் வாய்ந்த வினாக்களாகச் சுட்டிக்காட்டும் கட்டுரையாளர்களைப் பாராட்ட வேண்டும். ‘கவிதை உறவு’ வழியே கவி எழுதிக் கனவிக்கும் ஏர்வாடியாரின் கைகளுக்குக் கோகினூர் வைரத்தில் மோதிரம் போட வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில், இலக்கிய இணையரின் கவிதைப் பார்வைகள் அருமையாய் அமைந்துள்ளன.

நடைச் சித்திரம் பற்றிய கட்டுரையில் அதற்கான வரையறையையும், விளக்கத்தையும் எடுத்துக்காட்டி ஏர்வாடியாரின் நடைச் சித்திரக் கட்டுரைகள் எப்படிப்பட்டவை என்பதைப் படிப்போர்க்கு உணர்த்துகின்றனர் இணையர். ‘கவிதை உற’வில் தொடர்ந்து வெளிவரும் ‘மனத்தில் பதிந்தவர்கள்’ என்ற பகுதி ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களின் ஆளுமைகளைப் பற்றியது. ஏர்வாடியார் ஒன்பது தொகுதிகளால் அவற்றை நூலாக வெளிக்கொணர்ந்து சாதனை படைத்துள்ளார். அவற்றை வகுத்தும் பகுத்தும் இலக்கிய இணையர் விளக்கமாகrச் சாதனையாளர்கள் ஒவ்வொருவரையும் ஏர்வாடியார் எந்தக் கோணத்தில் பார்த்திருக்கிறார் என்பதை வெளிப்படுத்தி யிருக்கும் நுட்பம் அறிந்து மகிழக்கூடியது. ஏர்வாடியாரின் நடைச் சித்திரத்திரத்தில் காணப்பெறும் செய்திகளைச் சுவைபடக் கட்டமைத்திருக்கும் தெளிவும் செறிவும் கலைநயம் மிக்கனவாகும். ஏர்வாடியாரின் மொழி ஆளுமையைத் திறம்பட எழுதியிருக்கும் இணையர், 'அருமையும் எளிமையும் அழகும் ஆற்றலும் கொலுவீற்றிருக்கும் தனித்தன்மை' என்று அவரைப் புகழ்ந்துரைத்திருப்பது வெறும் பாராட்டன்று. உண்மையின் அலசல் பார்வை.

ஏர்வாடியாரின் கட்டுரை வளம் குறித்த அணுகுமுறை இலக்கிய இணையரின் ஆய்வுத் திறத்திற்குச் சான்றாகும். நாற்பதுக்கு மேற்பட்ட கட்டுரைகளின் மீதான ஆய்வு பாராட்டும்படி அமைதற்கு அவற்றை இருவரும் எடுத்துரைக்கும் திறனே காரணம். ஏர்வாடியார் 'கட்டுரைக்கான அடிப்படைத் தகவல்களைத் தேடித்-தொகுப்பதிலும், தொகுத்தவற்றைச் சிறுசிறு உட்பிரிவுகளாக வகைப் படுத்துவதிலும், அத்துடன் நின்றுவிடாமல் கட்டுரையின் செய்தியை இரத்தினச் சுருக்கமாக எடுத்துரைப்பதிலும் ஏர்வாடியாருக்கு நிகர் ஏர்வாடியார்தான்' என்று சுட்டியிருப்பது புனைந்துரையன்று; பொய்யுரையுமன்று; போற்றுவதற்கான நல்லுரை என்பதைப் படிப்போர் உணர்வர். 'அழுதால் கொஞ்சம் நிம்மதி' என்ற கட்டுரையை இந்நூலாசிரியர்கள் விளக்கியிருக்கும் விதம் அருமை. இந்த ஒரு கட்டுரை போதும் ஏர்வாடியாரின் கட்டுரைத் திறத்தை அறிய!

'வித்தியாசமான முறையில் எடுப்பாகத் தொடங்குவது ,வழிகாட்டும் வைர வரிகளையும், நெகிழ்வான வாழ்க்கை நிகழ்ச்சிக் குறிப்புகளையும்,படிப்பவரை ஈர்க்கும் குறுங்கதைகளையும் கையாண்டு சுவையாக வளர்த்துச் செல்வது - முத்தாய்ப்பான வரிகளோடு முடிப்பது-இதுவே ஏர்வாடியாரின் கட்டுரைகளில் சிறந்து விளங்கும் வெற்றிக்கூட்டணி' என்றும், அவரது எழுத்து நடையில் தூக்கலாகக் காணப்பெறுவது எள்ளலோடு கூடிய மென்மையான நகைச்சுவை உணர்வு; குறும்பும், கிண்டலும் சரிவிகிதத்தில் கலந்த அங்கதச் சுவை என்றும் அவரது கட்டுரை வன்மையைப் பாராட்டியிருப்பது மிகையான கூற்றன்று; மெய்யான கூற்றே!

‘என் பக்கம்’ என்று ‘கவிதை உற’வில் இடம்பெறும் கட்டுரைகள் குறித்தும் சில சிந்தனைகளை முன்வைக்கிறது இந்நூல். ‘கட்டுரைக் கலையின் அனைத்துக் கூறுகளிலும் அவரது கைவண்ணம் பளிச்சிடுகிறது’ என்று முடிவு கூறும் ஆய்வாளர்களின் கருத்து ஏற்கக்கூடியதாக உள்ளது. அவரது அனுபவ மொழிகளில் அமைந்திருக்கும் நுட்பமும் செறிவும் சுருங்க உரைக்கும் உத்தியும் பலரது நெஞ்சை ஈர்க்கும் என்பதோடு அவை வாழ்க்கைக்கான திசைகாட்டி என்பதையும் உணர்ந்து கொள்கிறோம்.

ஏர்வாடியாரின் பதினோரு நாடகங்கள் பற்றிய கட்டுரையில் ஏர்வாடியாரின் நாடகத் திறன் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை வெளிப்படுத்துகிறார்கள் இணையர். இவ்விருவரும் ஏர்வாடியாரின் ‘சின்னசாமி பெரியசாமி’ நாடகத்தை விளக்கியிருக்கும் பாணி அருமை. தேர்ந்த நாடகாசிரியர் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் பிற நாடக ஆக்கங்களை அலசியிருக்கும் கட்டுரை போற்றுதற்கு உரியது. 'அவரது நாடகங்கள் நகைச்சுவை நாடகங்களைப் போலத் தோன்றினாலும், சமுதாயத்திற்கு - இளைஞர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவனவாக உள்ளன' என்பதை நிறுவும் வகையில் அவரது நாடகத் திறன் இக்கட்டுரையில் நோக்கப் பட்டிருக்கிறது. 'நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்' என்ற நாடகத்தின் கரு வித்தியாசமானது என்பதோடு, 'கொஞ்சம் வச்சிருக்கிறவன் ஏழையில்லேடி; அதிகமா ஆசைப்-படுறவன்தான் ஏழை' என்ற வசனம் வேறுபட்டதொரு பார்வை. நாடகங்களின் சிறப்பு ஒவ்வொன்றையும் நுணுகி நோக்கியுள்ளமை பாராட்டுக்கு உரியது.

ஏர்வாடியாரை ஒரு சிறுகதையாசிரியர் என்ற பரிமாணத்தில் நோக்கியிருக்கும் கட்டுரை குறிப்பிடத்தகுந்தது. அவர் எழுதியுள்ள எட்டுப் படைப்புகளையும் ஆய்வு செய்கிறது இக்கட்டுரை. சிறுகதையின் தொடக்கம், முடிவு, சிறுகதையின் நீளம் இவை ஏர்வாடியாரின் கதைகளில் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதை ஆராய்ந்திருப்பதோடு, சிறுகதையின் பொருள் பற்றி ஆறு வகைகளில் வகைப்படுத்தி எழுதியிருப்பது ஓர் ஆய்வுத் திட்டத்திற்கான முன்னோட்டம் போல உள்ளது. சமூகச் சிறுகதைகள், ஆண்-பெண் உறவு, பெண் மன உணர்வு, மனிதப் பண்புகள், அரசியல் கதைகள், நகைச்சுவை கதைகள் என்ற சிறுதலைப்புகளில் ஏர்வாடியாரின் கதைகள் அலசப்பட்டுள்ளன. மேலும், பாத்திரப் படைப்பு, நடை நயம் போன்றவையும் எடுத்துக்காட்டப் பட்டுள்ளன. இவற்றை நோக்கும்போது இக்கட்டுரை, ஓர் ஆய்வுத் திடத்திற்கான முன்னோட்டமாக விரிகிறது எனலாம். ஆய்வாளர்கள் இருவருமே கைதேர்ந்த ஆய்வுச்செம்மல்கள். எனவே ஏர்வாடியாரின் கதைக்கலை பற்றித் தனியாக ஆய்வு நிகழ்த்தலாம் என்ற வெளிப்பாட்டை உணர்த்தும் வகையில் தம் கருத்துகளை இக்கட்டுரையில் முன்வைத்துள்ளனர்.

இப்படிப் பல இலக்கிய ஆளுமைகளையும், மனித நேயப் பண்பாட்டையும் பறைசாற்றிவரும் கலைமாமணி ஏர்வாடியார் பற்றிய கருத்தோட்டம் ஒரு தொடரோட்டமாக விரிவதற்கு இந்நூல் ஒரு முன்னோட்டமாக அமைந்திருக்கிறது. ஒரு நல்ல நூலைப் படிக்கிறோம் என்ற உணர்வோடு நல்லவர்களைப் படிக்கிறோம் என்ற உணர்வு மேலிடுகிறது. ‘நல்லவரைப் பற்றிய ஒரு நல்ல நூல்’ என்ற வகையில் சிறந்திருக்கிறது இந்நூல்! இலக்கிய இணையர் இருவரையும் உண்மையிலேயே பாராட்டவேண்டும். உழைப்பிற்கு உரிய முகவரி இவர்களுடையது. இவர்களைப் போற்றி மகிழலாம்; கொண்டாடலாம்.

 

 


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்