நூல் : சாத்தான்கள் அபகரித்த பூமி
நூல் ஆசிரியர் : அருணா சுந்தரராசன்

நூல் அறிமுகம்:   கவிஞர் இரா. இரவி

ளிமையின் சிகரமாக வாழ்ந்து நிலைத்த தி.க.சி. அவர்களின் அணிந்துரை நூலிற்கு மகுடமாக உள்ளது. ஈழம் பற்றி, ஈழத்தமிழர் பற்றி கவிதைகள் எழுதி நூல்கள் வெளியிட்டுள்ள கவிஞர் சி. பன்னீர்செல்வம் அவர்களின் அணிந்துரையும் உள்ளது. "மானமும் அறிவும் மனிதருக்கு அழகு " என்று சொன்ன பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் வரியோடு நூல் ஆசிரியர் அருணா சுந்தரராசன் தன்னுரை எழுதி உள்ளார். நா.காமராசன், எனது கவிதை ஆசான் என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலைகள் பற்றிய கண்டனத்தை பதிய வேண்டியது ஒவ்வொரு படைப்பாளியின் கடமை ஆகும். நூலாசிரியர் உரத்த சிந்தனையுடன் நெஞ்சம் குமுறி கவிதைகள் வடித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால்

மனம் இறுகிக் கிடந்தோரை
திரும்பிப் பார்க்கச் செய்தது
மௌனம் காத்தோரின்
நா நரம்புகளை அசைய வைத்தது
அநீதிக்கு அரணாய் நின்ற மாபாதகர்கள்
கணக்கினைக் காலம் முடித்து வைக்கும்!

உண்மை தான்! சென்ற பாராளுமன்ற தேர்தலில் பேராயக்-கட்சியின் தோல்விக்கு காரணமாக இருந்தது என்ன தெரியுமா? ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு துணைநின்றது தான். அதற்கான தண்டனை கிடைத்தது. அடுத்து வந்த கட்சியும் ஈழத்தமிழர்களுக்கு இரக்கம் காட்டவில்லை. அவர்களுக்கும் தண்டனை உண்டு.

தாத்தா காலந்தொட்டு

உறவாடி நிலைத்திருந்த
பழைய நினைவுகளை
வீட்டின் எல்லா திசைகளிலும்
உலர்த்திப் போட்டிருந்தார் அம்மா!


பிறந்த வீடு, வாழ்ந்த வீடு அவ்வளவு எளிதாக யாராலும் மறந்துவிட முடியாது! தாத்தா பாட்டி பற்றிய நினைவுகள் வந்து போகும்! மலருன் நினைவுகளை மலர்விக்கும்! பசுமரத்து ஆணியாக மனதினில் பதிந்து இருக்கும். அவற்றை கவிதையாக வடித்துள்ளார். நான் எழுதிய ஹைக்கூ கவிதையும் என் நினைவிற்கு வந்தது.

வீடு மாறிய போது
உணர்ந்தேன்
புலம் பெயர்ந்தோர் வலி!


தலைமைக் கவிமகன்!

வணக்கம், பாவேந்தே! / எங்கள் வரலாறு
ஏதிலியாய் / தலையிட்டுக் கிடந்த போது
சிறுத்தையே / வெளியே வா / என / சீறிச்
சினந்தவர் / நீங்கள் ஒருவர் தான்.


பாவேந்தர் பாரதிதாசன் அன்று பாடிய வைர வரிகள் தான் புலிகள் உருவாவதற்கு காரணம் என்று உணர்த்தியமைக்கு நன்றி.!

மீண்டும் ஒரு நவகாளி!

இப்போது ஏன் / மதம் பிடித்துக் காட்டுகிறது மதத்தை
மனத்துக்குள் ஏன் / மின்சாரம் பாய்ச்சுகிறது மதம்!


மாட்டுக்கறிக்காக மனிதனைக் கொன்ற அவலம் இந்தியாவைத் தவிர உலகில் வேறு எங்கும் நிகழ்ந்து இருக்காது. மதப்பற்று இருக்கலாம். தவறில்லை ஆனால் மதவெறி என்பது மனிதனுக்கு அழகல்ல. அதனால் தான், நான் ஒரு ஹைக்கூ எழுதினேன்.

அன்று நெறி / இன்று வெறி / மதங்கள்.

புதுமழை – கண்ணதாசனுக்கு

காவியங்கள் / இலக்கியங்கள் / கற்றுத் தேர்ந்தான்
அதை / எளிய தமிழ்ப் பாடலாக / வடித்துத் தந்தான்
கற்றவருக்கும் / கருத்துரைகள்/ சொல்லில்
வைத்தான் / இவன் உற்றவருக்கும் / உறுதுணையாய்
இருந்து வந்தான்.


இலக்கணத்தின் / சிறை தகர்த்த பாரதியாய்
இவன் / திரைப்பாடல் / மொழி தடையில்
பாமரத்தமிழ் / செழிக்கச் செய்தான்.


திரைப்படத் துறையில் கொடிக்கட்டிப் பறந்த கோமான் கவியரசு கண்ணதாசன் பற்றிய கவிதை நன்று. கவிதை வரிகளால் கவியரசருக்கு பாமாலை சூட்டியது சிறப்பு. எட்டாம் வகுப்பு வரை மட்டும் படித்து விட்டு, எட்டாத உயரங்களை எட்டிப்பிடித்தார் பாட்டால் கவியரசர்.

இளைய முகங்கள்!

உலகக் கோப்பையில் / தோற்றுப் போனால்
உயிரையும் விடத்துணியும் / இளைய இந்தியா
வறுமையில் உயிர் விடும் / விவசாயிகளுக்காய்
வருந்துவது கூட இல்லை.


உண்மை தான். மட்டை விளையாட்டைக் காண வரிசையில் நின்று போட்டிப் போட்டு உள்ளே சென்று கண்டுகளிக்கும் இளைய சமுதாயம் உலகிற்கு உணவு தரும் ஒப்பற்ற உழவர்கள் தலைநகராம் டில்லியிலே பலவிதங்களில் போராடிய போது இளைய சமுதாயம் கண்டுகொள்ளவில்லை. பிரதமரும் கண்டுகொள்ளவில்லை. அதற்கான தண்டனையை வரும் தேர்தலில் மக்கள் தருவார்கள் அன்று உழவனைப்பற்றி உணர்வார்கள்.

அதிரட்டும் பறையொலி!

கடற்கரையெங்கும் / காளையர் எழுச்சி
செவிப்பறை கலைத்தது / செந்தமிழர் அயற்சி
முடக்கிட நினைத்தவர் / முழந்தாள் பணிந்தார்
முகிழ்த்தது முகிழ்த்தது / முன்னோர் பெருமை
ஏறு தழுவுதல் / தமிழரின் மரபு
தடுத்திட நினைத்தார் / தகர்ந்தது மாண்பு!
திமிலில் கைவைத்தார் / திமிறியே எழுந்தோம்
எரிதழல் ஏந்தினோம் / எவர் வந்தார்
எம் எதிரில்!

உலகமே வியந்தது உலகத்தமிழர்களின் ஒற்றுமையைக் கண்டு. சல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் திரண்டனர், மிரண்டனர். டில்லியில் அடிபணிந்தனர். தமிழரின் வீரம் உலகம் அறிந்தது. சல்லிக்கட்டு வெற்றியைப் பற்றிய கவிதை நன்று.

உயிரலைந்த கதை!

குலை குலையாய்க் / கொத்து கொத்தாய்க்
கொன்று குவிக்கப்பட்டோரின் / மரண ஓலங்களை
நீங்கள் கேட்டதுண்டா / இனவெறி மூட்டிய
தீயின் கனல்களும் புகைமூட்டமும்
இன்றைக்கும் / எரிந்து கொண்டே தான்
இருக்கின்றன / முள்ளிவாய்க்காலின்
மூலைமுடுக்கெல்லாம்.


இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது நடந்த சாலியன் வாலபாக் படுகொலையை மிஞ்சியது. ஈழத்தில் நடந்த தமிழினப் படுகொலை. அறச் சீற்றத்துடன் வடித்த கவிதை. மனிதநேயத்தை கற்பித்தன பாராட்டுகள். நீறு பூத்த நெருப்பு தான் இலங்கைத் தமிழர் விடுதலை.
 


நூல்: சாத்தான்கள் அபகரித்த பூமி
நூல் ஆசிரியர் : அருணா சுந்தரராசன்
வளரி எழுத்துக்கூடம்,
32, கீழ ரத வீதி,
மானாமதுரை - 630 606.
பக்கம் : 150. விலை : ரூ. 125


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்