நூல் : தமிழ் அகத்திணை மரபுகளும் இந்தியக் காதற் பாடல்களும்
நூல் ஆசிரியர் :   பேரா.க.நெடுஞ்செழியன்
நூல் அறிமுகம்:    கவிஞர் இரா.இரவி


செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதி நல்கையுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் நூல் வடிவம் இது. நூலாசிரியர் பேராசிரியர் க. நெடுஞ்செழியன் அவர்களுக்கும், பதிப்பாசிரியர் முனைவர் இரா. சக்குபாய் அவர்களுக்கும், மிக நேர்த்தியாக வெளியிட்டுள்ள நெல் பதிப்பகத்திற்கும் சிறப்பாக அச்சிட்டுள்ள அகரம் அச்சகத்திற்கும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் 50க்கும் மேற்பட்ட நூல்களை விற்பனை செய்து உதவிய புரட்சிக்கவிஞர் மன்றத்தின் தலைவர் பி.வரதராசன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

திரைப்பட இயக்குநர் வெ. செந்தில்குமார் அவர்கள், கவிதை நடையில் கவித்துவமாக அணிந்துரை நல்கி உள்ளார். அவரது அணிந்துரையிலிருந்து சிறு துளிகள். “ஐயா, உங்கள் ஆய்வு தமிழர்களின் தலைகளை நிமிர வைத்திருக்கிறது, தமிழைத் தன் உச்சியில் அமர வைத்திருக்கிறது”. முனைவர் வே.இராமசாமி அவர்கள் ஆய்வுரை நல்கி உள்ளார். அவரது ஆய்விலிருந்து சிறு துளிகள்.

“இவ்வாய்வு தமிழரின் பண்பாட்டுத் தொன்மையை, அறிவியல் நோக்கை, மெய்யியல் பங்களிப்பை, இலக்கிய-இலக்கண வளத்தை, மானுடப் பொதுமையைப் பல்வேறு அறிவுத்துறை சான்றுகளுடன் வெளிப்படுத்தியுள்ளது. உண்மை. நூலாசிரியர் பேராசிரியர் க. நெடுஞ்செழியன் அவர்களின் கடின உழைப்பை நூல் பறைசாற்றுகிறது.

“சிந்துவெளி மக்களின் மொழியைக் குறித்து ஆராய்ந்த அறிஞர்கள் அதனைத் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது என்பதை உறுதி செய்துள்ளனர்”.

ஒரிசாவில் தலைமைச் செயலராகப் பணியாற்றி பணி ஓய்வுக்குப் பின்னர் முதல்வரின் ஆலோசகராக இருந்து வரும் மதுரை யாதவர் கல்லூரி முன்னாள் மாணவர் பாலகிருஷ்ணன் அவர்கள் இக்கருத்தை பல வருடங்களாக வலியுறுத்தி பேசியும், எழுதியும் வருகிறார். அவரது கருத்திற்கு உரம் சேர்க்கும் விதமாக இந்த ஆய்வு நூல் உள்ளது.

தொல்காப்பியம் தொடங்கி சங்க இலக்கியம் வரை மேற்கோள் காட்டி பாடல்களைக் குறிப்பிட்டு விளக்கவுரை எழுதி மிக நேர்மையான வெளிப்படையான உண்மையான ஆய்வை மேற்கொண்டு வடித்த நூல் அருமை. ஒரிசா பாலு அவர்களின் ஆய்வை மேற்கோள் காட்டி தமிழர்களின் கடல்வழி பயணத்தை, போரை, வெற்றியை, வாழ்வியல் முறையை நூலில் விளக்கி உள்ளார். விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் உள்ள பாடல்களை சங்க அகப் பாடல்களோடு ஒப்பீடு செய்து எழுதி உள்ளார்.

காதல் பாடல்கள் தலைப்பு என்பதனால் முத்தம் பற்றிய ஆய்வும் நூலில் உள்ளது.

“முத்தம் அற்புதமான உணர்வுகளைத் தரவல்லது. ஆசை, நெருக்கம் ஆகியவற்றைத் தெரிவிக்க முத்தத்தைப் போல் ஒரு சாதனம் இல்லை”.

காதலுக்கு முன்னுரையாக அமையும் முத்தம் பற்றிய விளக்கம் நன்று. முத்தம் பற்றி திருவள்ளுவர் எழுதிய திருக்குறளும் பொருத்தம் என்பதால் மேற்கோள் காட்டி உள்ளார்.

பாலோடு தேங்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர் 175.

பொய்யான தகவல்களை பரப்பி வரும் நாகசாமியைப் போலவே கே.எஸ். சீனிவாசன் என்பவரும் பொய்யுரை பரப்பி வருகிறார் என்பதை நூலில் சுட்டி உள்ளார்கள்.

தமிழர் வாழ்க்கையில் அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பால் எனப்படும் மூன்றும் தமிழர்களின் வாழ்வில் கலந்து உள்ளதை பாடல்களுடனும் விளக்கங்களுடனும் சான்றுகளுடனும் விளக்கி உள்ளார்.

உலகப் பொதுமறையான திருக்குறளில் இருந்து பெரும்பாலான திருக்குறள் மேற்கோள் காட்டி, சங்க இலக்கியப் பாடல்கள் மட்டுமன்றி தொல்காப்பியத்தில் உள்ள இலக்கணங்களையும் மேற்கோள் காட்டி, பிற ஆய்வாளர்கள், அறிஞர்களின் கருத்துக்களையும் மேற்கோள் காட்டி தமிழர்களின் அறத்தை மேன்மையான காதலை ஆய்வின் மூலம் மெய்ப்பித்துக் காட்டி உள்ளார். நாமக்கல் கவிஞரின் வைர வரிகளை நினைவூட்டியது இந்நூல். ‘தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’.

வருணாசிரம தருமம் என்ற பெயரில் சாதிக் கொடுமையை வழிமொழிந்து வலியுறுத்தி உள்ளனர். அதன் விளக்கமும் நூலில் உள்ளது. எல்லா உயிரும் சமம் என்று சொன்ன திருவள்ளுவர் உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறார்.

உடன்கட்டை ஏறும் பழைய வழக்கம் முன்பு இருந்தது. அது பற்றியும் நூலில் உள்ளது. அக்கொடுமைகளை முடிவுக்கு கொண்டு வந்தது மனிதனின் பகுத்தறிவே.

சங்க காலத்தில் நடந்த திருமணங்களில் ஆரியர்களின் சடங்கு முறைகள் எதுவும் இடம்பெறவில்லை என்பதை பாடல்களை மேற்கோள் காட்டி விளக்கி உள்ளார்.

உலகின் முதல்மொழி தமிழ் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே குடிமக்களும் எழுத்தறிவோடு வாழ்ந்தார்கள் என்பதை உலகிற்கு பறைசாற்றி வரும் கீழடி ஆய்விலும் எந்தஒரு மதக்கடவுளோ, மதம் சார்ந்த பொருட்களோ கிடைக்கவில்லை என்பது தமிழருக்கு அன்று மதம் இல்லை என்பதையே காட்டுகின்றது.

சங்க இலக்கியத்திலும் திருக்குறளிலும் உள்ள காதல் பாடல்களை மேற்கோள் காட்டி தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே செல்வ செழிப்புடனும் காதல் களிப்புடனும் கடல் கடந்து படைஎடுத்துச் சென்று வென்ற வீரத்துடனும் செம்மையான வாழ்வு வாழ்ந்து வந்தான் என்பதை மெய்ப்பிக்கும் நூல் இது. பாராட்டுக்கள்.

 


 

பதிப்பாசிரியர் : முனைவர் இரா. சக்குபாய்,
நெல் பதிப்பகம்,
சு.கல்பனா சித்தர், சின்ன உடப்பு, மதுரை – 96.
கைபேசி : 0 98421 15719
பக்கங்கள் : 484
விலை : ரூ. 650.




 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்