நூல் : கட்டுப்பொல்
நூல் ஆசிரியர் :   பிரமிளா பிரதீபன்
நூல் அறிமுகம்:    நாச்சியாதீவு பர்வீன்


பிரமிளா பிரதீபனின் "கட்டுப்பொல்" நாவல் மலையக சமூகத்தின் இன்னொரு வெட்டு முகம்.

மிகநீண்ட ஓய்வும் விடுமுறையும் தீவிரமான வாசிப்பிற்கான சாளரத்தை திறந்துவிட்டுள்ளது. முகநூல் பரபரப்பிலிருந்து கொஞ்சம் விடுபட்டு நீண்ட வரிசையில் வாசிக்கப்படாமலே தேங்கிக்கிகிடக்கும் புத்தக குவியலில் இருந்து எழுந்தகமாக ஒரு புத்தகத்தை தெரிந்தெடுத்து வாசிக்க மனது நினைத்தாலும் மலையகத்தின் நம்பிக்கையூட்டும் இளம் படைப்பாளியான பிரமிளாவின்  "கட்டுப்பொல்" நாவலை வாசித்துவிட வேண்டுமென்ற நீண்ட நாள் அவாவினை இந்த விடுமுறையில் தீர்த்துக்கொண்டேன். 

பிரமிளா பீலிக்கரை என்ற சிறுகதை மூலம் ஞானம் சஞ்சிகையின் ஊடாக இலக்கிய உலகிற்கு பரிச்சயமானவர். தொடராக மல்லிகை மற்றும் ஞானம் ஆகிய சஞ்சிகைகளின் வழியே தன்னை வளப்படுத்திக்கொண்டு இன்று மலையக எழுத்தாளர் பட்டியலில் தனக்கான ஒரு இடத்தையும் ஈழத்து தமிழ் இலக்கிய பரப்பில் தவிர்க்க முடியாத பெண் ஆளுமையாகவும் உருவாகியுள்ளார். 

பிரமிளாவின் வளர்ச்சியின் ஊக்கிகளாக பலர் இருந்தாலும் குறிப்பாக ஞானம் சஞ்சிகையின் ஆசிரியர் டொக்டர் தி.ஞானசேகரன் மற்றும் அவரது துணைவர் பிரதீபன் ஆகியோரின் பங்களிப்பு மறுதலிக்க முடியாத ஒன்றாகும். அதிலும் தனது துணைவின் திறமைகளை தட்டிக்கொடுத்து அவரது ஆக்கத்துக்கு ஊக்கமாகவும், உந்து சக்தியாகவும் இருக்கும் பிரதீபன் பாராட்டுக்குறியவர். (Hat's of you பிரதீபன்) 

பிரமிளா பிரதீபன் ஏலவே பீலிக்கரை, பாக்குப்பட்டை ஆகிய இரண்டு சிறுகதை தொகுதிகளை தமிழ் இலக்கியப் பரப்புக்கு தந்தவர். சிறுகதைகளுக்கூடாக தான் பெற்ற ஆழமான அனுபவத்தையும், ஆற்றலையும் மூலதனமாக்கி தான் கண்ணுற்ற, கேள்விப்பட்ட, அனுபவித்த ஒரு சமூகத்தின் அன்றாடங்களை இலாவகமாக பதிந்துள்ளார். 

நாவல் இலக்கியம் என்பது அத்தனை இலகுவில் படைத்துவிடக்கூடியதொன்றல்ல. அது கூரிய கத்தியில் நடப்பதைப் போன்றதாகும்.அனேகமானவர்கள் இதில் ஜொலிப்பதில்லை. உப்புச்சப்பற்ற அவர்களின் எழுத்துக்கள் அடிமட்ட வாசகனை சென்றடைவதுமில்லை, கவருவதுமில்லை.   வாசகனின் மனோநிலையில் தாக்கத்தை அல்லது வாசிப்பில் மாற்றத்தை உண்டுபண்ண முடியாத நாவல்கள், நெடுங்கதைகள் அலுப்புத்தட்டக்கூடியவை. அந்த வகையில் முற்றிலும் மாறுபட்ட சூழலில் பிரவாகித்து பயணம் செய்யும் பிரமிளாவின் "கட்டுப்பொல்"  தனித்துவமான படைப்பாக விளங்குகிறது என்பதனை வாசித்து உணர்ந்து கொள்ள முடிகிறது. 

மலையகத்தின் மூத்த எழுத்தாளர்களான தி.ஞானசேகரன், மு.சிவலிங்கம் ஆகியோரின் குறிப்புக்கள் ஓரளவு வாசகனுக்கு இந்த நாவலை வாசிப்பதற்கான திறவுகோலாக அமைந்துள்ளது என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.  

பேசப்படாத அல்லது கண்டுகொள்ளப்படாத ஒரு சமூகத்தின் அழிந்து கொண்டிருக்கும் பூர்வீகத்தையும், அடையாளத்தையும் மீட்டெடுக்கின்ற அறப்பணியை "கட்டுப்பொல்" மூலம் பிரமிளா செய்ய முற்பட்டுள்ளார்.அத்தோடு தமது சுய கலாச்சார பாராம்பரியங்களிலிருந்து விடுபட்டு மெல்லமெல்ல இன்னொரு கலாச்சார கட்டமைப்புக்குள் தம்மை இழந்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்தை இனங்காட்டியுள்ளார். 

நீண்ட நெடிய வரலாற்றை கொண்ட மலையக சமூகத்தின் வடுக்களையும், வாழ்வியலையும், கலாச்சாரத்தையும் நேர்த்தியாக ஏற்கெனவே தனது சிறுகதைகள் மூலம் பதிந்துள்ளதை போலவே மலையக மக்களின் இன்னொரு கூறான கட்டுப்பொல் தோட்டங்களில் பணி செய்து ஜீவிதம் நடத்தும் பாவப்பட்ட ஜீவன்களின் வாழ்வியலை இந்த நாவலின் மூலம் ஆவணப்படுத்தியுள்ளார் எனலாம். 

(இகல் கந்தை) எகல்கந்த கட்டுப்பொல் தோட்டம் அங்கு வாழ்கின்ற இந்திய வம்சாவழி மக்களின் வாழ்வியல் கோலங்கள் காதலாய்,வீரமாய், ஏமாற்றமாய், காலம் வலிந்தே திணித்த வாழ்க்கையை போராட்டத்துடன் கொண்டு நடத்தும் வீரியம் கலந்த அவலமாய் எல்லாக்கோணங்களிலும் தொட்டுச்செல்கிறது கட்டுப்பொல் நாவல். 

எப்போதும் ஏமாற்றப்பட்ட சமூகமாக மலையக கூலித்தொழிலாளர்கள் இருப்பதைப்போன்றே இந்த எகல்கந்த தோட்டத்தில் வாழ்கின்ற ஏழை மக்களும் காலாதிகாலமாக ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றார்களோ என்ற சந்தேகம் எழுந்தாலும் அதுபற்றிய விரிவான விளக்கத்தை இதில் தரிசிக்க முடியவில்லை. 

மாரியப்பன்-அமுதா காதல் விவகாரம், வசந்தன் ஆசிரியரின் முற்போக்கு சிந்தனை நஸ்ரினா ஆசிரியையின் கல்வி தொடர்பான ஈடுபாடு என்பன பிரதான கதைத்தளத்திலிருந்து கிளைக்கதைகளாக பிரிந்து சென்றாலும் அவைகள் எல்லாமே அந்த தோட்டத்து மக்களின் வாழ்வியல் நடத்தைகளுக்கான ஆதாரங்களாகும். 

எகல்கந்த தோட்டம் மற்றும் அதில் அமைந்துள்ள பாடசாலை இவை இரண்டையும் சுற்றியே கதை நகருகின்றது. மிகக்குறைந்த பாத்திரப்படைப்புக்கள் மூலம் கதையை நகர்த்திச்செல்லும் விதம், வாசகனை வளைத்துப்போடும் கதையோட்டம் என்பன கட்டுப்பொல் நாவலின் சிறப்பம்சமாகும். 

மாரியப்பன், ஆறுமுகம், அமுதா, சாரதா, கண்டாங்கு புஞ்சி பண்டா,தலைவர் முத்துசாமி, கங்காணி இராமநாதன், வசந்தன், நஸ்ரினா ஆசிரியை, செல்லம்மா கிளவி என்று இந்த நாவலில் வருகின்ற ஒவ்வொரு பாத்திரங்களும் வாசகனுக்குள் நிலைத்து நிற்கின்றன. வெள்ளம் வடிந்த பின்னர் எஞ்சியிருக்கும் எச்சங்களாக நாவலை வாசித்த பின்னும் இதன் தாக்கமானது நெஞ்சக்கூட்டில் இருந்து அழிந்து போவதற்கு நெடுநேரம் எடுக்கின்றன.  

வாசகனை கதைக்குள் உள்ளீர்த்து அவனையும் கதைக்குள் புதைய வைத்து கதைக்களத்தின் ஒரு பாத்திரமாக வாசகனே தன்னை உருவகித்து பயணம் செய்கின்ற பக்குவத்தை நிச்சியமாய் இந்த நாவலை வாசிக்கும் ஒவ்வொருவரும் உணர்வார்கள். இதனால் அலுப்பும், சலிப்பும் இல்லாமல் நாவலுக்கூடாக பயணிக்க முடிகிறது.  

இந்தப்பயணம் இன்பமான பயணம் கிடையாது மாறாக வலியும், வேதனையும், ஏமாற்றமும் கலந்த சோகமான பயணமாகும். இந்த வேதனைப்பயணத்தில் கசிந்தொழுகும் காதல் இருக்கிறது, கண்ணீர் மல்க வைக்கும் காருண்யம் இருக்கிறது, மாற்றத்தை விரும்புகின்ற மகோண்ணதம் இருக்கிறது, அந்த சமூகத்தின் எதிர்காலம் தொடர்பிலான கேள்வி இருக்கிறது இப்படி ஒருகிராமியத்தின் எல்லா தன்மைகளையும் புதைத்து வைத்து நமது புலன்களால் அதனை புசிக்க வைத்துள்ளது இந்த நாவல்.  

கிராமவாசிகளின் பிரதான உணவான உடும்புக்கறி - நாக்கில் எச்சிலை வரவழைக்கிறது (நான் உடும்பு சாப்பிடுவதில்லை என்பதனை மனங்கொள்க) 

மருத்துவ தாதியான பத்ரா மிஸ்ஸின் பாத்திரத்தை இன்னும் கணதியாக வடித்திருக்கலாம். இனமத பேதங்களுப்பால் பத்ரா மிஸ் போன்ற நல்லிதயங்களும் வாழ்வது மனிதநேயத்தின் மகத்தான பக்கங்களை கோடிட்டு காட்டுகின்றன.  

 நானறிந்த வரைக்கும் கட்டுப்பொல் -முள்ளுத்தேங்காய் தொடர்பிலும் அதில் வேலை செய்யும் வஞ்சிக்கப்பட்ட மாந்தர்கள் தொடர்பிலும் தமிழில் புனையப்பட்ட முதலாவது படைப்பு இதுவென்றே நினைக்கிறேன்.(முன்னர் யாராவதுஎழுதியிருந்தால் மன்னிக்க) 

எகல் கந்த தோட்டத்து மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து, அவர்களுக்கான சமூக அந்தஸ்த்தும் கௌரவமும் கிடைக்கப்பெற வேண்டுமாயின் அது கல்வி ஒன்றினால் மாத்திரமே முடியும் என்ற காத்திரமான செய்தியினை பூடகமாக இந்த நாவல் சொல்வதாகவே எனக்கு படுகிறது. 

இந்திய வம்சாவளி மலையக மக்கள் என்ற பதம் இன்னும் தொடேர்ச்சையாக பிரயோகிக்கப்படுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இலங்கையர்கள் என்ற பொது வரைபுக்குள் அவர்களும் கொண்டுவரப்பட்டு உயர் அந்தஸ்துள்ளவர்களாக அந்த சமூகம் மாறவேண்டும்.  

ஏழைகளாக, அன்றாடங்காய்ச்சிகளாக வறுமைப்பட்ட வாழ்க்கை வாழும் ஒரு சமூகத்தின் வாழ்வியலின் யதார்த்தமான  பக்கத்தை சொல்வதோடு கட்டுப்பொல் (முள்தேங்காய்) பற்றிய பட்டறிவையும் தந்துள்ளது இந்த நாவல்.  

இறுதியாக முடிந்தால் நீங்களும் இந்த நாவலை வாசித்து "யாம் பெற்ற இன்பம் நீரும்பெறுக" 

குறிப்பு-1:- மலேசியாவில் அதிகம் வருவாய் தரும் தொழில் பாம்ஒயில் உற்பத்தியாகும்.  








 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்