நூல் : நாமார்க்கும் குடியல்லோம்!
நூல் ஆசிரியர் :  முதுமுனைவர் வெ. இறையன்பு, ...
நூல் அறிமுகம்:    கவிஞர் இரா. இரவி

முதுமுனைவர் வெ. இறையன்பு ... அவர்கள் கூடுதல் தலைமைச் செயலர் என்ற உயர்பதவியில் இருந்தபோதும் மிகவும் எளிமையானவர், இனிமையானவர், பண்பாளர், நேர்மையாளர். எழுத்து, பேச்சு என்ற இருவேறு துறையிலும் தனக்கென தனிப்பாதை அமைத்து வெற்றிநடையிட்டு வருபவர். 

நூலாசிரியர் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியபோதும் தலைக்கனம் ஏதுமில்லாதவர், அன்பாளர். அவரது புதிய நூல்நாமார்க்கும் குடியல்லோம். விஜயா பதிப்பகம் மிக நேர்த்தியாக பதிப்பித்து உள்ளனர். பாராட்டுகள். பல்வேறு இதழ்களில், பல்வேறு நேரங்களில் எழுதிய 20 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கட்டுரைகளை இதழ்களில் படித்து இருந்த போதும், ஒட்டுமொத்தமாக நூலாகப் படித்ததில் பரவசம். தகவல் சுரங்கமாக நூல் உள்ளது. வாழ்வில் நெறி கற்பிக்கும் விதமாக உள்ளது. தேசப்பிதா காந்தியடிகள் பற்றியும், மாமனிதர் அப்துல்கலாம் பற்றியும், இலக்கிய ஆளுமை எழுத்தாளர் ஜெயகாந்தன் பற்றியும் கட்டுரைகள் உள்ளன. அவற்றை மட்டும் திரும்பவும் படித்து மகிழ்ந்தேன். 

கோடை காலம் என்றாலே பலருக்கும் வெயில் கொடுமை தான் நினைவிற்கு வரும். கோடையிலும் எதிர்மறை எண்ணம் விடுத்து நேர்மறை எண்ணம் தோன்ற வேண்டும் என்று நூலில் எழுதியுள்ள கருத்து உங்கள் பார்வைக்கு. 

கோடை என்றால் கொளுத்தும் வெயில் மட்டுமே நினைவுக்கு வருவது எதிர்மறை எண்ணம். ஆனால் கூடவே வரும் குளிர்விக்கும் இளஞ்சிவப்பு தர்ப்பூசணிப் பழங்களும், இளநீரும், நுங்கும், வெள்ளரிப் பிஞ்சுகளும், கிளிமூக்கு மாங்காய்களும் ஆக்கப்பூர்வமான அதிர்வலைகளை மனத்தில் எழுப்பும். 

ஆம். கோடை கொடியது, தாங்க முடியாதது வெப்பம் என்றாலும் கோடையில் வரும் குளிர்தரும் பொருள்களைப் பட்டியலிட்டு வியப்பில் ஆழ்த்துகின்றார். 

இன்றிருக்கும் மிகப்பெரிய தடையாக மின்னணுச் சாதனங்கள் பலராலும் முன்மொழியப்படுகின்றன. அவை அமுதசுரபிகளாக கிடைத்திருக்கின்றன. அவற்றை நாம் சகதியை நிரப்பிக் கொள்ளப் பயன்படுத்தினால் அது சாதனத்தின் பிழையல்ல, பயன்படுத்துபவர் குற்றம் 

அறிவார்ந்த திறன்பேசியை நன்மைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். குப்பைகளை ரசிக்க பயன்படுத்தக் கூடாது என்பதை மிகத் தெளிவாக கட்டுரையில் விளக்கி உள்ளார். 

நேரமே வாழ்வின் நேர்த்தியைத் தீர்மானிக்கிறது. பழத்தை முன்கூட்டியே பறித்தால் பிஞ்சாகிக் கசக்கும். தாமதமாகக் கொய்தால் அழுகிப்போய் வீணாகி விடும். மகத்தான மனிதர்கள் நேர்த்தை சிறப்பாகக் கையாண்டார்கள். உலகத்தில் உள்ளவர்களை இரண்டாகப் பிரிக்கலாம். “நேர மேலாண்மை தெரிந்தவர்கள், நேரத்தை விரயமாக்குபவர்கள்.  இதில் நூலாசிரியர் முதுமுனைவர் வெ. இறையன்பு ... அவர்கள் முதலாம் வகை மனிதர். நேரத்தை எப்போதும் வீணாக்காதவர். எழுதுகிறபடி வாழ்கின்ற உண்மையாளர். அவர் மதுரையில் பணிபுரிந்த போதும் மாறுதலாகி சென்னை சென்ற பின்னரும் எப்போதாவது மதுரைக்கு வருகின்ற போதும் நான் கண்ட உண்மை இது. 

மலேசியாவிற்குச் சென்றபோது, கால் முறிவு ஏற்பட்டு, சிகிச்சைக்காகச் சென்னையில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். அப்போது என்னைப் பார்க்க ஜெ.கே. (ஜெயகாந்தன்) வந்திருந்தார். உண்மையான கரிசனத்துடன் அவருடைய விசாரிப்பு இருந்தது. எப்படி விபத்து நடந்தது என்கின்ற கேள்வியை முன்வைக்காதவர் அவர் மட்டும் தான். “மறுபடியும் பழைய மாதிரி நடந்து விடுவீர்கள் அல்லவா என்று உடனே எழுந்து நடக்கச் சொல்வதைப் போல அவர் கேட்டார் 

இக்கட்டுரையில் நூலாசிரியருக்கும் ஜெயகாந்தன் அவர்களுக்குமான சந்திப்புகள் ஜெயகாந்தன் என்ற மிகப்பெரிய ஆளுமையின் நற்குணங்கள் விளக்கி உள்ளார்கள். விபத்து எப்படி நடந்தது என்ற கேள்வி எல்லோரும் முன் வைப்பார்கள். சொல்லிச் சொல்லியே சலித்து விடும். ஆனால் ஜெ.கே. அவர்கள் அந்தக் கேள்வியை முன்வைக்கவில்லை. இதிலிருந்தே ஜெ.கே. சராசரி மனிதர் அல்ல என்பதை உணர முடிந்தது. 

காணாமல் போனவை கட்டுரையில் பள்ளித் தோழன் கணேசன் கிராமத்து வீடு அன்று எப்படி இருந்தது? இன்று எப்படி மாறி விட்டது? என்பதை எழுதி உலக மயம் கிராமங்களையும் விட்டுவைக்கவில்லை என்பதை நன்கு உணர்த்தி உள்ளார். 

குறுந்தொகைப் பற்றி பலரும் கட்டுரை எழுதி இருக்கிறார்கள். ஆனால் வழக்கமான பேராசிரியர்கள், புலவர்களின் பார்வையிலிருந்து வேறுபட்டுசுற்றுச்சூழல் நுண்ணறிவு குறுந்தொகையில் எந்த எந்த இடத்தில் எல்லாம் வருகின்றன என்பதை பாடல் வரிகளுடன் விளக்கி உள்ளார். பாராட்டுக்கள். 

தமிழ்நாடு குறுந்தொகை எழுதும் காலத்தில் எவ்வளவு செழிப்பாக வளமாக இருந்தது என்பதை அறிந்து வியந்து விடுகிறோம். 

மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு கல்வி தொடர்பான அறிவுரை, நேரம் தொடர்பான திட்டமிடல் என பல கருத்துக்களை தெளிந்த நீரோடை போன்ற எழுத்து வடிவில் அள்ளித் தெளித்து உள்ளார். 

காந்தியடிகள் தண்டனைக்கு அஞ்சியதே இல்லை. தான் செய்த குற்றத்திற்கு மன்னிப்பு அளிப்பதை விட, சட்டம் தவறென்று தீர்ப்பளிக்கலாம் அல்லது அதிகபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என நீதிபதியின் முன்பு வாதிட்டவர் காந்தியடிகள் பற்றிய கட்டுரை படித்து நெகிழ்ந்து விட்டேன். நல்ல நூல், வாங்கிப் படியுங்கள்.



 

வெளியீடு : விஜயா பதிப்பகம்,
20,
ராஜ வீதி, கோயம்புத்தூர்.

பக்கங்கள் : 200,
விலை
: ரூ. 160
                                    

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்