நூல் : வெளிச்சத்தின் வாக்குமூலம்!
நூல் ஆசிரியர் :   கவிஞர் வெ.அஜீத்குமார்
நூல் அறிமுகம்:    கவிஞர் இரா. இரவி



கல்லூரி நூலகத்திலிருந்து ஹைக்கூ நூல்களைப் படித்துவிட்டு படைப்பாளியாக மாறி உள்ள கல்லூரி மாணவர் கவிஞர் வெ. அஜீத்குமார் அவர்கள் இளம் வயதிலேயே ஹைக்கூ நுட்பம் உணர்ந்து சமுதாயத்தை உற்றுநோக்கி நல்ல பல ஹைக்கூ கவிதைகள் எழுதி நூலாக்கி உள்ளார். பாராட்டுக்கள்.

ஹைக்கூ உலகில் தொடர்ந்து தடம் பதித்து வரும் இனிய நண்பர்கள் கவிஞர்கள் மு.முருகேஷ், கன்னிக்கோவில் இராஜா இருவரும் அணிந்துரை நல்கி உள்ளனர்.

உழைப்பாளர் சிலை நிழலில்
தூங்குகிறார்கள்
சோம்பேறிகள்.


முரண்சுவையுடன் வடித்த ஹைக்கூ நன்று. உழைப்பாளி-சோம்பேறி முரண். உழைப்பாளிகள் சிலையைப் பார்த்தால் உழைப்பு அல்லவா நினைவிற்கு வரவேண்டும். அந்த நிழலில் தூங்குபவர்கள் சோம்பேறிகள் என்பதை அழகாக உணர்த்தி உள்ளார்.

மென்மைக்கும்
வலிமை உண்டு
பாறையின் மீது எறும்பின் தடம்!


எறும்பு ஊற கல்லும் தேயும் என்ற பழமொழியை நினைவூட்டி எறும்பு ஊறியதால் உருவான தடத்தை காட்சிப்படுத்தி ஹைக்கூ வடித்த உத்தி சிறப்பு. யாரையும் மட்டமாக எண்ணாதீர்கள் என்பதையும் வலியுறுத்தும் விதமாக உள்ளது. பாராட்டுக்கள்.

கத்தியைக் காட்டினாலும்
பயமில்லாமல் சிரிக்கின்றன
பூக்கள்!


பூக்களை கத்தியால் அறுத்து எடுத்தாலும் கலங்குவதில்லை பூக்கள். பூக்களின் சிறப்பு பூத்துக் குலுங்கும், புன்னகை புரியும்.

பேசாமலே
பேசி விடுகின்றன
ஒளிப்படங்கள்!


முகநூல்களில் ஒளிப்படங்களுக்கு ஹைக்கூ எழுதி வருகிறேன். போட்டிகளும் தினமும் நடத்தி வருகின்றனர். ஒளிப்படங்கள் உணர்த்துவதை ஹைக்கூ ஆக்கி விடுகிறோம். தம்பி நூலாசிரியர் கவிஞர் அஜீத்குமார் ஒளிப்படத்தையே ஹைக்கூ ஆக்கிவிட்டார்.

புகை பிடித்தவனுக்கு
மாலை போட்டார்கள்
புகைப்படத்தில்!


புகை பிடிக்காதே, கேடு என்று திரைப்படம் போடும் முன்னே விளம்பரம் போட்டாலும், புகைப்பது உயிருக்குப் பகை என்று சிகரெட் பெட்டியில் எழுதி வைத்தாலும் பார்த்து விட்டு படித்து விட்டு புகை பிடிக்க்கும் மூடர்களுக்கு உணர்த்தும் வண்ணம்இ புகை பிடித்தால் விரைவில் மரணம் அடைவாய். உன் படத்திற்கு மாலை போடும் நிலை விரைவில் வரும் என்பதை சொற்ச்சிக்கனத்துடன் ஹைக்கூவாக வடித்துள்ளார்.

முதியோர் இல்லத்தில்
குஞ்சுகளோடு இருக்கின்றது
குருவிக்கூடு!


பறவைகள் கூட சேர்ந்து வாழ்கின்றனர். ஆனால் பகுத்தறிவுப் பெற்ற மனிதன் தாய்-தந்தையைப் பிரிந்து வாழ்கின்றான். அன்பு செலுத்த மறுக்கின்றான். முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்கள் அங்குள்ள குருவிக்கூட்டைப் பார்த்து ஏங்குவது போன்று காட்சிப்படுத்தி ஹைக்கூ வடித்தது சிறப்பு.

மரத்தைச் சுற்றினால் குழந்தைபேறு
தவறாமல் பிறக்கின்றன
மூடநம்பிக்கைகள்!


கணினியுகம் அறிவியல் யுகம், குழந்தைபேறுக்கு எத்தனையோ வழிவகைகள் வந்து விட்டன. குழந்தைபேறு மருத்துவமனைகளும் பெருகிவிட்டன. அறிவு யுகத்தில் குழந்தைக்காக மரத்தைச் சுற்றுவது மூடநம்பிக்கை என்பதை அழகாகச் சாடி உள்ளார். பகுத்தறிவு விதை விதைத்துள்ளார்.

உணவு கொடுத்ததற்கு
அரிவாள் வெட்டா?
நெற்கதிர்!


ஹைக்கூ யுத்தியை நன்கு பயன்படுத்தி உள்ளார். முதல் இரண்டு வரிகள் படித்தவுடன் என்னவென்று சிந்திக்க வைத்து விட்டு வாசகர் எதிர்பார்க்காத ஒன்றை மின்னல் மின்வெட்டுவது போல சொல்வது. இந்தக் கோணத்தில் நெற்கதிர்களை இதுவரை யாரும் பார்த்ததில்லை என்பது உண்மை.

யார் வைத்தது
வான தேவதைக்கு மஞ்சள் பொட்டு
சூரியன்!


நூலாசிரியர் வெ. அஜீத்குமார் இயற்கை ரசிகராகவும் உள்ளார். தேவதை வானிலிருந்து இறங்கி வந்ததாக கற்பனையாக சொல்வார்கள். இவரோ வானத்தையே தேவதை என்கிறார். சூரியனை பொட்டு என்கிறார். நல்ல கற்பனை வளம்.

குழந்தையின் சுவர் ஓவியத்தைப்
பாராட்ட முடியாத அப்பா
வாடகை வீடு!


வாடகை வீட்டில் வாழ்வோரின் மன உணர்வை படம்பிடித்துக் காட்டி உள்ளார். குழந்தை ஓவியம் வரையட்டும் என்று விட்டுவிட முடியாது. வீட்டுக்காரர் பார்த்தால் திட்டு கிடைக்கும். அந்த பயத்தில் குழந்தைகள் சுவற்றில் ஓவியம் தீட்டுவதை தடை செய்து வைத்துள்ளனர் பலர்.

சிலந்தி இல்லாமலே
வலை பின்னியது
கண்ணாடியில் விழுந்த கல்!


உடைந்த கண்ணாடியை நம் கண்முன் காட்சிப்படுத்தி விடுகிறார். அதனை சிலந்தி வலையாகக் கற்பனை செய்து வடித்த ஹைக்கூ ரசனைக்குரியது. இதுவரை இக்கோணத்தில் யாரும் பார்க்காதது. புதுமைஇ பாராட்டு.

வளர்ந்து வரும் கல்லூரி மாணவர் கவிஞர் வெ.அஜீத்குமார் அவர்களுக்கு ஹைக்கூ உலகில் சிறப்பிடம் உண்டு.







வெளியீடு : அறம் பதிப்பகம்,
7-யு, வீரபத்ரா 2வது வீதி,
சத்தி ரோடு,
ஈரோடு - 3.
பக்கங்கள் : 88
விலை : ரூ. 100
பேச : 77088 21464

                                        


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்