எழுத்தாளர் சா.கந்தசாமி அவர்களுடன் நேர்காணல்:

அகில்
 

(தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்தவர் எழுத்தாளர் சா. கந்தசாமி. நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக எழுத்துப்பணியில் ஈடுபட்டு வருகிறார். சுடுமண் சிலைகள் பற்றிய இவரது டாக்குமண்டரி சர்வதேச விருது பெற்றது. சாயாவனம், விசாரணைக் கமிசன் ஆகிய நாவல்கள் சாகித்திய அகாதெமி விருது பெற்றவை. 150 க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 11 நாவல்கள் எழுதியிருக்கிறார். நுண்கலைகள், ஆவணப்படங்களில் ஆர்வம் கொண்டவர். இவரது முதல் நாவல் சாயாவனம் சுற்றுச்சூழல் பற்றி அதிகம் பேசப்படாத காலத்தில், இயற்கையுடனான மனிதனின் போராட்டத்தை மையமாக வைத்து எழுதப்பட்டது. வீடியோ படமாகவும் வெளிவந்தது. இவரது பல படைப்புக்கள் ஆங்கிலத்திலும், பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவை தவிர தொலைந்து போனவர்கள், சூர்யவம்சம், அவன் ஆனது, சர்வதேசக்கதைகள், சாந்தகுமாரி, தக்கையின் மீது நான்கு கண்கள், வேலையற்றவன் முதலிய நாவல்களையும், சா. கந்தசாமி சிறுகதைகள், இரவின் குரல், கோணல்கள், பின்னுக்கு முன்னாக, முடிவின் தொடக்கம் முதலான சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். )


1. உங்கள் எழுத்துலகப் பிரவேசத்தின் பின்புலம் என்ன?

மிகவும் சிறுவயதில் எழுத ஆரம்பித்தேன். என் காலத்தில் எழுதப்படுகின்ற நூல்கள் எல்லாவற்றையும் நான் படித்திருக்கிறேன். படித்தபின் என்னுள் எழுத வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. அந்த ஆர்வத்திற்கு தூண்டுகோலாக இருந்தவை நான் படித்த தமிழறிவியல் சரித்திர நூல்கள். இவற்றிலிருந்து மக்களின் வாழ்வை எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதன் அடிப்படையில் 1965 ஆம் ஆண்டு சென்னையில் இருந்துகொண்டு சாயாவனம் என்ற எனது முதல் நாவலை எழுதினேன். தஞ்சை மாவட்டத்தை பின்புலமாகக் கொண்ட நாவல் அது. ஆயினும் அது எல்லோருக்குமான நாவல்.

2. உங்கள் எழுத்துக்களுக்கு உந்துகோலாக இருந்தவர்கள் என்று யார்யாரைக் குறிப்பிடுகிறீர்கள்?

எனது எழுத்துக்களுக்கு உந்துகோலாக இருந்தவர்களை நான் எழுதுகின்றபோது எனக்குத் தெரியவில்லை. எழுதி பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு படித்துப் பார்த்த பொழுது எனக்கு யாரெல்லாம் உந்துகோலாக இருந்தார்கள் என்று பார்க்கமுடிந்தது. அந்தவகையில் முதலில் ஜவஹர்லால்நேருவைக் குறிப்பிடலாம். உ.வே.சாமிநாதையர், சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் என்பன ஒரு உந்துகோலாக அமைந்தன என்பதை என் படைப்பின் வழியாக எனக்குத் தெரிகிறது. நான் இவையெல்லாம் தெரிந்துகொண்டு எழுதவில்லை. எழுதி முடித்தபிறகு என் எழுத்துக்களைப் பார்க்கிறபொழுது இவர்கள் எல்லாம் எனக்கு உந்துகோலாக இருந்து இருக்கிறார்கள் என்பதை நானே தெரிந்துகொள்கிறேன்.

3. எழுத்து என்பது தவம் என்கிறார்கள். அது உண்மைதானா?

இல்லை. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. எழுத்தாளர்கள் தாங்கள் செய்கின்ற காரியத்தை மேன்மைப்படுத்துவதற்காக அப்படிச் சொல்கிறார்கள். மற்றவர்கள் செய்யமுடியாது என்பதை சொல்வதற்காக, தாங்கள் செய்கிற காரியத்தை மேலானது என்று நிரூபிப்பதற்காக இப்படிச் சொல்கிறார்கள். எழுத்து என்பது எல்லாப் பணிகளையும் போல ஒரு பணிதான். எந்த வேலையையும் மனம் ஒருமித்துச் செய்யவேண்டும். இந்த எழுத்தில் என்ன நேர்கிறது என்று சொன்னால், நாம் திட்டமிடுவதற்கு அப்பால் எழுத்து தன்னைத் தானே எழுதிக்கொள்கிறது. அதனால்தான் இவ்வாறு சொல்கிறார்கள் போலும்.

4.அன்று நிறைய எழுத்தாளர்கள் இல்லை. ஆனால் தரமான பல எழுத்தாளர்கள் இருந்தார்கள். இன்று நிறைய எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஒருசில எழுத்தாளர்களே தரமாக எழுதுகிறார்கள். தமிழ் இலக்கிய உலகில் இந்தச் சூழலை எப்படி உணர்கிறீர்கள்?

மிகச் சிறந்த கேள்வி இது.
எல்லாக் காலத்திலும் தரமாக எழுதக்கூடியவர்கள், தரமற்ற எழுத்துக்கள் என்று இருக்கத்தான் செய்கிறது. சங்க காலத்தில் கூட தரமற்ற எழுத்துக்கள் இருந்தன. தேர்வு நீக்கிவிட்டது. தரமான எழுத்துக்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு அகநாநூறு, புறநாநூறு, கலித்தொகை, குறுந்தொகை என்று இருப்பதால் தரமற்ற எழுத்துக்கள் அழிந்துவிட்டன - இல்லாவிட்டால் மக்கள் பார்வைக்கு வராமல் போய்விட்டன.

18ஆம், 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் அச்சு வாகனங்களும், பத்திரிகைகளும் கிடைத்தபிறகு எல்லாவிதமான எழுத்துக்களும் வெளிவருகின்றன. இந்த நிலையில் தரமற்ற எழுத்துக்களை நீக்குவதற்கு சாத்தியமே இல்லாமல் போய்விட்டது. தரமற்ற எழுத்துக்கள் மக்களுக்கு பிடிக்கிறது, மக்களால் அதிகமாக ரசிக்கப்படுகிறது என்று ஒரு காரணத்தை சொல்லி அதிகமாக வணிக நோக்கத்துடன் எழுதப்பட்டும் இயக்கப்பட்டும் வருகின்றது. இதில் எல்லாக் காலத்திலும், எல்லா தேசத்திலும் தரமற்ற எழுத்துக்களும், தரமான எழுத்துக்களும் இருக்கவே செய்கின்றன. தரமான எழுத்துக்களை குறைவான எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள் என்று சொல்வதும் குறைவான மக்கள் படிக்கிறார்கள் என்று சொல்வதும் ஒரு மாயை தான். எல்லாக் காலத்திலும் நல்ல எழுத்தை மக்கள் படித்துக்கொண்டுதான் வருகிறார்கள்.


5. சுடுமண் சிலைகள் என்ற பாரம்பரிய கலைகள் பற்றிய உங்களது குறும்படம் சர்வதேச விருது பெற்றது. சிற்பி தனபால், அசோகமித்திரன், ஜெயக்காந்தன் போன்ற எழுத்தாளர்களது வாழ்க்கை வரலாற்றையும் குறும்படங்களாக எடுத்துள்ளீர்கள். தனியே எழுத்தாளர் என்ற தளத்திற்கு அப்பால் இப்படியான தளங்களில் உங்களுக்கு ஆர்வம் ஏற்படக் காரணம் என்ன?

இது ஒரு அறிதல்தான். நான் ஒரு படைப்பு எழுத்தாளன். நான் செய்கின்ற இந்த டாக்குமண்டரிப் படங்கள் ஒரு அவசியம் என்றே கருதுகிறேன். இதில் மற்றவர்களுடைய பங்களிப்பை விட என் பங்களிப்புத்தான் எனக்கு அதிகம்.

சுடுமண் சிலைகளை சிற்பிகள் செய்கிறார்கள். அது ஒரு கலை. ஆனந்தகுமாரசுவாமி 'கலைகளில் எல்லாம் உயர்வானது தான்' என்றார். அவற்றை மக்கள் பார்ப்பதற்கும், அறிவதற்கும் இடர்ப்பாடுகள் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தச் சுடுமண் சிற்பக்கலை நெடுங்காலமாக தமிழ்நாட்டில் இருந்துவருகிறது. இதை காவல் தெய்வம் என்று குறிப்பிடுகிறார்கள். மக்களைப் பாதுகாப்பதற்காக ஒரு கடவுளை அவர்கள் உருவாக்கி வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதுபற்றி சென்னை தொலைக்காட்சிக்காக நான் ஒரு படம் எடுத்தேன். அதற்கு ஒரு சர்வதேச விருது கிடைத்தது. பிறகு எனது நண்பர்களான அசோகமித்திரன், ஜெயகாந்தன், சிற்பி தனமால் ஆகியோர்களைப் பற்றி குறும்படங்கள் எடுத்தேன். எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்கின்ற ஆர்வம்தான் இவற்றுக்கெல்லாம் காரணம் என்று நினைக்கிறேன்.

இப்பொழுது நான் புதுச்சேரியில் துபாஷpயாக இருந்த ஆனந்தரங்கப்பிள்ளையின் கதையை குறும்படமாக எடுத்துக்கொண்டு இருக்கிறேன். அவருடைய காலம் 1709 – 1761. பிரெஞ்சுக்காரர்கள் ஆண்டகாலத்தில் வாழ்ந்தவர். அவர் தனது நாட்குறிப்பில் எழுதியவை 3500 க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட நூலாக வெளிவந்துள்ளது. 18 ஆம் நூற்றாண்டில் தமிழ்மொழி எவ்வாறு பேசப்பட்டது என்பதை தெரிந்துகொள்வதற்கு ஒரு ஆவணமாக அது உள்ளது. அத்தோடு தமிழ்மொழி எப்போது எழுத்துவடிவில் வந்தது என்பதைப் பற்றியும் அறியக்கூடியதாக உள்ளது.

அதுமட்டுமல்லாது தமிழ்மொழி எப்போது எழுத்துமொழியானது, தமிழ் என்பது எப்போது எழுதப்பட்டது, அந்த எழுத்திற்கு என்ன பெயர் வந்தது என்பது பற்றி ஒரு சிறிய அளவில் ஒரு படிப்பு ஆய்வு செய்து டாக்குமண்டரி படம் எடுத்தேன். பெரும்பாலும் கல்வி சம்மந்தப்பட்ட படங்களையே எடுக்கிறேன். மாணவர்களுக்கு கல்வியை போதிப்பதற்காக மத்திய அரசாங்கத்தினுடைய நிதியுதவியின் கீழ் இந்தப் படங்கள் எடுக்கப்படுகின்றன. படம் எடுக்கின்றபோது நானே நிறைய விடயங்களை கற்றுக்கொள்கிறேன். பலருக்கும் கற்றுக்கொடுக்கிறேன்.

6. பொதுவாக பலரிடம் இருக்கின்ற ஆதங்கம் 'ஜெயகாந்தனின் பேனா ஏன் ஓய்வெடுத்துவிட்டது அல்லது ஓய்வெடுத்துக்கொள்கிறது' என்பது. அது பற்றி?

எழுதுவதும், எழுதாமல் இருப்பதும் ஒரு எழுத்தாளன் சம்மந்தப்பட்டது. சிலர் இறக்கின்ற வரைக்கும் எழுதிக்கொண்டே இருப்பார்கள். சிலபேர் தனக்கு தான் எழுதியது போதும் என்ற நம்பிக்கையில் எழுதாமல் விட்டுவிடுகிறார்கள். சிலர் தங்களுக்கு அந்தக் காலம் இனி இல்லை என்று ஒதுங்கி இருக்கிறார்கள். உள்ளுணர்வு அவர்களுக்கு என்ன சொல்கிறதோ அதன் பொருட்டு அவர்கள் அதைச் செய்கிறார்கள். இந்தக் கேள்வியை நீங்கள் எழுத்தாளரிடம்தான் கேட்கவேண்டும். ஒரு எழுத்தாளன் என்ற முறையில் இந்தக் கேள்விக்கு நான் என்ன பதில் சொன்னாலும் சரியாக இருக்காது.

7. தமிழில் சமகால குறும்பட வளர்ச்சி எப்படி இருக்கிறது?

குறும்படம் எடுப்பது என்பதும் கதை எழுதுவது போன்றதுதான். ஒரு கதை, கவிதை எழுதுவதற்கு எவ்வளவு அக்கறை இருக்கிறதோ அதேபோலத்தான் குறும்படமும். ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய ஆசை, ஈடுபாடு, பணவசதி இவற்றைப் பொறுத்து குறும்படம் எடுக்கிறார்கள். இப்பொழுது நாங்கள் தமிழ் எழுத்துப்பற்றி படம் எடுத்தோம். தமிழ் எழுத்து என்பது குகைகளில் இருக்கிறது. கற்களில் பொறிக்கப்பட்டு இருக்கிறது. இந்த எழுத்துக்களைத் தேடிச்சென்று பயணம் செய்வதற்கு ஒரு மனோநிலை, அறிந்துகொள்வதற்கு ஒரு அக்கறை, அனுமதி பெறவேண்டிய அவசியம் இவற்றையெல்லாம் சார்ந்துதான் இந்தப் படங்கள் எடுக்கப்படுகிறது. பல நேரங்களில் அரசாங்கம் இவற்றிற்கு அனுமதி கொடுப்பதில்லை. ஒரு நிமிடம் அல்லது இருபது வினாடி விசயத்திற்காக முன்னூறு, முன்னூற்றைம்பது மைல்கள் பயணம் செய்து எடுக்கமுடியாமல் போவதுமுண்டு. ஒரு படத்தில் எல்லாவற்றையும் சொல்லிவிடவும் முடியாது. குறும்படங்கள் என்பது தொடர்ந்து எடுக்கப்பட வேண்டும். எடுக்கப்பட எடுக்கப்பட தொடர்ந்து சிறந்த படங்கள் வெளிவரலாம். குறும்படங்கள் என்பது எல்லோருக்குமான படங்கள் அல்ல. யாருக்கெல்லாம் இதில் ஆர்வம் இருக்கிறதோ அவர்களுக்கான படம். எல்லாப்படமும் எல்லோருக்கும் திருப்தி அளிக்காது.


8. நிறைய குறும்படங்கள் எடுத்து இருக்கிறீர்கள். சினிமாத்துறையில் உங்கள் ஆர்வம் எப்படியிருக்கிறது?

சினிமாவை நான் ஓரளவுக்குப் பார்ப்பவன்தான். சினிமாவில் இயக்குனராக, கதை எழுதுபவனாக போக வேண்டும் என்று எனக்கு ஆரம்பகாலத்திலிருந்து விருப்பமில்லை. 'நான் அதற்கு சரியான ஆள் இல்லை' என்பது நானே அறிந்துகொண்டதாக நினைக்கிறேன். ஆயினும் தமிழ் சினிமா வந்தபோது எழுத்தாளர்கள் பலர் சினிமா என்பது தங்களுக்கான ஒரு இடம் என்று அதைக் கருதினார்கள். தமிழ் சினிமாவிலே புதுமைப்பித்தன் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் சினிமாவுக்கு கதை, வசனம் எழுதச் சென்றார். அவரால் அது சாத்தியப்படாமலே போய்விட்டது. பாரதிதாசன் தனது 'குடும்பவிளக்கு' நாவலை திரைப்படமாக எடுக்க நினைத்தார். மனமுடைந்து காலமானார். ஆகையால் சினிமா என்பது சில எழுத்தாளர்களுக்கு மிகவும் சரியாக இருக்கும். என்னைப் போன்ற எழுத்தாளர்களுக்கு அது ஒரு சரியான இடம் இல்லை. ஆகையால் நான் அந்தப் பக்கம் செல்வதாக இல்லை. யாரேனும் என் கதைகளை படமெடுக்க கேட்கின்ற போது, நீங்களே இதை எழுதிக்கொள்ளுங்கள். ஏனென்றால் உங்களால் அதைச் சரியாகச் செய்யமுடியும் என்று சிலரிடம் சொல்கிறேன். சிலரிடம் நீங்கள் எடுக்கவேண்டாம் என்று அவர்களை மறுத்துவிடுகிறேன். நான் சினிமாவுக்குள் செல்வதாக இல்லை.

9. தங்களுடைய இலக்கிய நண்பர்கள் பற்றிச் சொல்லுங்களேன்?

ஜெயகாந்தன் என் மிக நெருங்கிய நண்பர். நானும் அவரும் முப்பது ஆண்டுகளாக இணைபிரியாமல் இருக்கிறோம். பழைய எழுத்தாளர்களில் க. சுப்பிரமணியம் எனது மிகச்சிறந்த நண்பர். அவரிடமிருந்து நான் ஏராளமான விடயங்களை கற்றுக்கொண்டேன். அசோகமித்திரன் என்னுடைய இன்னுமொரு நண்பர். அவர் இப்பொழுதும் எழுதிக்கொண்டிருக்கிறார். த.குமாரசுவாமி என்ற ஒரு மிகச் சிறந்த எழுத்தாளர். அவர் வங்கமொழியை நன்கு கற்றவர். தாகூருடைய கதைகளையும், சரத்சந்திரருடைய கதைகளையும் தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்தவர் அவர். அவர் எனது நண்பர். பிரபஞ்சன், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், பெண் எழுத்தாளர் அம்பை இவர்கள் எல்லோருமே என்னுடைய நண்பர்கள். எனக்கு அநேகமாக விரோதிகள் இல்லை. நண்பர்கள் இருக்கிறார்கள். பலருடைய கதைகளை எனக்குப் பிடிப்பதில்லை. சிலருடைய எழுத்துக்களை நான் முற்றாக நிராகரிக்கிறேன். ஆயினும் தனிப்பட்ட முறையில் நான் அவர்களுடன் பழகுவதற்கும், பேசுவதற்கும் எனக்கு எந்தவிதமான தடங்களும் இல்லை.

10. உங்களுடைய எழுத்துக்கு என்று கொள்கை ஏதாவது இருக்கிறதா?

எனக்கு ஒரே ஒரு கொள்கைதான் இருக்கிறது. அது சங்க இலக்கியத்தில் சொல்லப்படுகிற ஒரு கொள்கைதான். சிறந்த முறையில் எழுதவேண்டும் என்பதுதான் அந்தக் கொள்கை. இந்தக் கொள்கை எவ்வளவு தூரம் என் எழுத்துக்குள் வந்திருக்கிறது என்பதை முழுமையாக செல்வதற்கு முடிவதில்லை. இந்தக் கொள்கையில் எனது மக்களை என் எழுத்து மாற்றிவிடும் என்று நான் நம்பவில்லை. படிக்கிறவர்கள் தங்களைப்பற்றி யோசிப்பதற்கு தூண்டுதலாக என் எழுத்து அமையுமென்று கருதுகிறேன். அது சில நேரங்களில் சாத்தியப்படலாம். முதல் நாவலிலேயே சாத்தியப்படலாம். முதல் வாசகத்திலேயே கூட அது சாத்தியப்படலாம். சில பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அது சாத்தியப்படலாம். ஒருபொழுதும் சாத்தியம் இல்லாமலும் போகலாம். அது எழுத்தில் இருக்கலாம். இல்லாமலும் போகலாம். நான் சொல்வது நான் கதைகள் எழுதுவதில்லை. படிக்கிறவர்களுடைய கதையைத்தான் நான் எழுதுகிறேன். நான் எழுதும் கதை என்பது எல்லோருக்குமான கதை. காற்று பற்றி, ஆறுபற்றி, வறுமை பற்றி நான் எழுதக்கூடியவன் அல்ல. வாழ்க்கையை எவ்வாறு மக்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பற்றியே நான் எழுதுகிறேன். இதுவே என் இலக்கியக் கொள்கை என்று நான் கருதுகிறேன்.

11. தமிழில் மிக உன்னதமான படைப்புக்கள் வெளிவந்தும் அவை சர்வதேச அங்கீகாரத்தை அடையாததற்கு காரணம் என்ன?

அதை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை. இது எழுத்தாளன் சம்மந்தப்பட்ட விடயம் அல்ல. ஒரு எழுத்து எல்லோரும் அறிந்துகொள்ளவில்லை என்றால் அதற்கு எழுத்தாளன் ஒன்றும் செய்யமுடியாது. அதைக் கொண்டு செல்கின்ற காரியம் வேறு வேறு தளத்தில் இருக்கிறது. அதற்கு மொழிபெயர்ப்பாளர்கள் செயல்ப்படுகிறார்கள். அதை எடுத்துச் சொல்வதற்கு கற்று அறிந்தவர்கள் தேவைப்படுகிறார்கள். அது இல்லாதவரையில் அது வெறும் புத்தகமாகவே இருக்கும். சங்க இலக்கியம் 2000 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுதுதான் உலக இலக்கியம் என்று வெகு சிலர் அறிந்துகொண்டு இருக்கிறார்கள். ஏ.கே.ராமானுஜர் என்கின்ற ஒரு தமிழர் ஆங்கிலத்தில் அதை மொழிபெயர்க்கின்ற வரையில் அந்த சங்க இலக்கியம் அதாவது மதம் சாராத சங்க இலக்கியம் என்பது தெரியாமல் இருந்தது. திருக்குறள், நாலடியாரைத் தெரிந்து வைத்திருந்தார்கள். ஏனென்றால் தமிழ் நாட்டிற்கு மதத்தைப் பரப்புவதற்கு வந்த கிறிஸ்தவர்களுக்கு அவை தேவைப்பட்டன. 17 ஆம் நூற்றாண்டில் மதம் பரப்ப வந்த ரோபட் நோபில்
(Robert D Nobel) 'தமிழ்' என்று ஒரு மொழியிருப்பதாக ஐரோப்பியர்களுக்குச் சொன்னார். பிறகு புரட்டஸ்தாந்து மதத்தைப் பரப்ப ஒல்லாந்து நாட்டின் சார்பாக ஜி.எல்.பாப் என்ற ஜேர்மனியர் வந்தார். அவர் ஒளவையாருடைய கொன்றைவேந்தன், மூதுரை, ஆத்திசூடி ஆகியவற்றைப் படித்துவிட்டு முதன்முதலில் ஒளவையாரை மொழிபெயர்த்தார். அது 'ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம்' என்பது. அதுபற்றி செக்கொஸ்லாவாக்கிய தமிழறிஞர் டாக்டர் கமில்சுலபில் 'இந்திய மொழியில் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்ட மொழி தமிழ்' என்று குறிப்பிட்டுள்ளார். ஆக, ஒரு மொழிபெயர்ப்பாளன் வருகின்றவரை எந்தவொரு படைப்பும் காத்துக்கொண்டிருக்கும். அது எழுத்தாளனுடைய பிரச்சினையே கிடையாது. எழுத்தளன் எப்பொழுதும் எழுதிச் செல்கிறான். அவனுடைய மொழியைப் படிக்கத் தெரிந்தவர்கள் குறைந்த பட்சமாக படிக்கிறார்கள்.

தமிழகத்திலே படைப்பிலக்கியம் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் கற்றுக்கொடுப்பதில்லை. ஆகவே ஆசிரியர்களுக்கு தமிழ் இலக்கியம் தெரிவதில்லை. மாணவர்களுக்கு அதுபற்றியும் போவதில்லை. ஆகையால் முதலில் ஐரோப்பியர்களுக்கு, வெளிநாட்டவர்களுக்கு, அமெரிக்கர்களுக்கு, கனேடியர்களுக்கு தமிழ் இலக்கியத்தைச் சொல்லிக்கொடுப்பதைப் போல தமிழர்களுக்கு தமிழ் இலக்கியத்தை சொல்லிக்கொடுக்க வேண்டும். ஏனென்றால் படிப்பிலே படைப்பிலக்கியம் இல்லை. இவர்கள் பாரதியாருடன் நிறுத்திவிடுகிறார்கள். அதுகூட ரசனையடிப்படையில் அல்ல. சரித்திரபூர்வமாகப் படிக்கிறார்கள். பாரதியார் இங்கே பிறந்தார். இதையிதை எல்லாம் எழுதினார் என்று அவருடைய சரித்திரத்தைப் படிக்கிறார்கள். அது இலக்கியத்தை தெரிந்துகொள்வதற்கான முறையல்ல.

12. விருதுகள் பற்றிய உங்கள் அபிப்பிராயம்.........?

விருதுகள் எழுத்தாளன் சம்மந்தப்பட்ட விடயமல்ல. அது கொடுக்கிறவர்கள் சம்மந்தப்பட்ட விடயம். சில நேரங்களில் சிறந்த நூல்கள் மதிக்கப்படுகின்றன. பல நேரங்களில் அது கிடைக்காமல் போய்விடுகிறது. விருதுகள் பலரால் வாங்கப்படுகிறது. சிலருக்கு கொடுக்கப்படுகிறது.

பாரதியார் ஒரு சமயம் ஒரு போட்டியில் கலந்துகொண்டார். தமிழ் நாட்டைப் பற்றி சிறப்பாகப் பாடவேண்டும் என்று ஒரு பத்திரிகை போட்டி வைத்தது. அதற்கு பாரதியார் ஒரு கவிதை அனுப்பினார். அது 'செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே....' என்ற பாடல். ஆ.மாதவியார் என்பவரும் அந்தப் போட்டிக்கு ஒரு கவிதை அனுப்பினார். பாரதியாருடைய கவிதை தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆயினும் ஆ.மாதவியினுடைய கவிதை தேர்ந்தெடுக்கப்பட்டது. பாரதியார் மிகச்சிறந்த கவி. ஆனால் அவருக்கு பரிசு கிடைக்கவில்லை. ஆகையால் விருது கிடைக்காதது பற்றி எழுத்தாளர்கள் நொந்துகொள்ளத் தேவையில்லை. கிடைத்தால் மகிழ்ச்சியடைய வேண்டும்.

13. தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம் பற்றிய உங்கள் நம்பிக்கை எப்படி இருக்கிறது?

நிறைய நம்பிக்கை இருக்கிறது. எனக்கு தமிழ் நாட்டில் ஒரே பிரச்சினைதான். தமிழ்நாட்டில் தமிழ் படிப்பதற்கு வசதியே இல்லை. ஏனென்றால் ஒரு மாணவன் தமிழ்மொழியைப் படிக்காமலேயே அவனுடைய கல்லூரிப் படிப்பைப் பூர்த்திசெய்துவிட முடியும் என்கிற நிலமை தமிழகத்தில் இருக்கிறது. இதன் காரணமாக அடுத்த தலைமுறையில் தமிழ் படிப்பவர்கள் தமிழ்நாட்டில் குறைந்துவிடுவார்கள்.

படிப்பவர்களைப்பற்றி எழுத்தாளர்கள் கவலைப்படுவதே இல்லை. தனக்குத் தெரிந்த மொழியில் தன்னால் எழுத முடியும் என்று நம்புகிற மொழியில் எழுதிக்கொண்டே இருக்கிறான். யூத எழுத்தாளன் 'ஐசக் மெசீபாவோ சிங்கர்' இத்தீஸ் மொழியில் எழுதுபவர். அந்த மொழியைப் பேசுபவர்கள் ஒரு லட்சம் பேர் கூட இருக்கமாட்டார்கள். கனடாவில் பிறந்த எழுத்தாளர் 'கிராக்பெல்லோ' என்கின்ற இன்னொரு யூத எழுத்தாளன் ஆங்கிலத்தில் அதை மொழிபெயர்க்க, அவர் நோபல் பரிசு பெற்றார். ஆகையால் எந்த மொழியில் எழுதுகிறோம் என்பது முக்கியமல்ல. அந்த மொழியில் எத்தனைபேர் படிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். சிறந்த எழுத்தாக இருந்தால் அதற்கு சிறந்த ஒரு மொழிபெயர்ப்பாளன் வருவான். வராமலும் போகலாம். எவ்வளவோ காலங்களுக்கு பல புத்தகங்கள் படிக்கப்படுகிறது. சங்க இலக்கியத்தில் ஒரேயொரு பாடலுக்காக பலரைக் கொண்டாடுகிறோம். அவர்களுடைய முகம் எமக்கு தெரியாது. அவர்கள் ஆணா, பெண்ணா என்று கூடத் தெரியாது. சங்கப் புலவர் வெள்ளிவீதியார் பத்து, பன்னிரண்டு பாடல்கள் மட்டுமே பாடியிருக்கிறார். அவருடைய கவிதைகளைப் படித்தால் நிகழ்காலக் கவிதையாக இருக்கிறது. ஆகவே தரம் என்பதைப் பேணுகிற எழுத்தாளன் என்றைக்குமே தரமாகவே இருப்பான்.

14. கசடதபற இதழ் வெளியிட்ட அனுபவம் பற்றி?

1970 வாக்கில் நானும் எஸ். ராமகிருஷ;ணன், நா.கிருஷ்ணமூர்த்தி, ஞானக்கூத்தன், முத்துசாமி, ஆதிமூலம்(ஓவியர்) எல்லோரும் சேர்ந்து அந்த இதழை நடத்தினோம். ஆயினும் நாங்கள் எப்பொழுதும் தனித்தனி ஆட்கள். கூட்டாக இருந்த தனி மனிதர்கள். இந்தப் பத்திரிகையில் என்பது அசட்டுத்தனங்கள் ஏதுமில்லாமல் எது உண்மை என்று நம்பினோமோ அதையே வெளியிட்டோம். அது சாத்தியமில்லாதபோது அந்தப் பத்திரிகையை நாங்கள் நிறுத்திவிட்டோம். அது எங்களுக்கு கற்றுக்கொடுத்தது ஒரே விசயம்தான். 'உங்களுக்கு விசுவாசமாக இருங்கள். நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதைச் சொல்லுங்கள்' என்று அந்தப் பத்திரிகை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுத்தது. ஏனென்றால் நாங்கள் அதையே பின்பற்றி வருகிறோம். அதிலிருந்து பலர் இப்பொழுது வேறு எங்கெங்கோ சென்றுவிட்டார்கள். நானும் ஞானக்கூத்தனும் எழுதிக்கொண்டிருக்கிறோம்.

15. கசடதபற இதழ் போன்ற நல்ல தரமான இதழ்கள் ஏதாவது தற்போது வெளிவருகிறதா?

வெளிவருகிறது. அமெரிக்கப் பத்திரிகை
“Little Review” இருபது ஆண்டுகளுக்கு முன் படித்தேன். தரமான பத்திரிகை. பல சமயங்களில் அதன் பல பக்கங்கள் வெறும் வெள்ளைத்தாளாகவே இருக்கும். ஏனென்றால் தரமான பத்திரிகை நடத்துவதற்கு தரமான படைப்புக்கள் தேவைப்படுகிறது. எல்லா நேரங்களிலும் ஒரு எழுத்தாளனிடமிருந்து தரமான படைப்புக்கள் வருவதில்லை. அந்த சமுதாயத்தில் தரமான படைப்பாக எது கிடைக்கிறதோ அதைத்தான் வெளியிடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. மனிதர்கள் எப்பொழுதும் மேதாவிகள் அல்ல. ஒரு மேதாவியான படைப்பாளியால் கூட எப்பொழுதும் சிறந்த படைப்புக்களை எழுதமுடியாது. நான் என்ன நினைக்கிறேன் என்றால் ஒரு பத்திரிகையில் எப்போதும் மிகத் தரமான படைப்புக்களையே எதிர்பார்க்கிறோம். அது சாத்தியமேபடாது. அறுபது வயதான ஒரு எழுத்தாளன் இருபது வயதிலிருந்து எழுதிக்கொண்டு வந்தாலும் ஒரேயொரு நாவலையோ, ஒரேயொரு சிறுகதையையோ, ஒரேயொரு கவிதையையோ நன்றாக எழுதிவிட்டால் போதுமானது.

16.சாயாவனம் நாவலில் உங்களுடைய எழுத்துக்கள் இயற்கையோடு பின்னிப்பிணைந்துள்ளதை காணக்கூடியதாக இருக்கிறது. எப்படி உங்களால் அப்படி எழுதமுடிந்தது?

இந்த சாயாவனம் நாவலை நான் எழுதுகின்றபோது எனக்கு 25 வயது முடிந்திருந்தது. சிறிதளவு சங்க இலக்கியம் படித்திருந்தேன். குறுந்தொகை, சிலப்பதிகாரம் பூம்புகாரக் காண்டம், திருக்குறளில் ஒரு நூறு திருக்குறள் இவைதவிர ஜவஹர்லால்நேருவுடைய உலக சரித்திரம், சுயசரித்திரம் படித்திருக்கிறேன். வே.சாமிநாதசர்மா என்கின்ற எழுத்தாளர் உலக அரசியல் பற்றி எழுதியிருந்த சில புத்தகங்கள் படித்திருந்தேன். வேதங்கள், உபநிடதங்கள், விவேகானந்தருடைய உரைகள் படித்திருந்தேன். இவற்றை வைத்துத்தான் நான் அந்த நாவலை எழுதினேன். வேறொன்றும் அதைப்பற்றி நான் அறியேன். நான் படித்த நூல்களுள் எவையெல்லாம் எனக்கு பயன்பட்டன. எவை எனக்குப் பயன்படவில்லை என்பது எனக்குத் தெரியவில்லை.

மூன்று ஆண்டுகள் கைவசம் வைத்திருந்தேன். மூன்று முறை திரும்பத் திரும்ப எழுதினேன். ஆயிரம் பக்கங்கள் எழுதலாம் என்று நினைத்தேன். 250 பக்கங்கள் எழுதியவுடன் அந்த நாவல் முடிந்துவிட்டது மாதிரி எனக்குத் தோன்றியது. இந்த நாவலை நான் எனது நண்பர்களுக்குக் கூட படிப்பதற்குக் கொடுத்ததில்லை. எந்த பத்திரிகைக்கும் அனுப்பியதும் இல்லை. ஆகையால் இந்தக்கதை திரும்பி வந்த கதை என்றோ, போடுவதற்கு பத்திரிகையாளர்கள் மறுத்துவிட்டார்கள் என்றோ கிடையாது. இந்த நாவல் பத்திரிகையில் வெளியிடுவதற்கு தகுதியற்றது என்று நானே தீர்மானித்துக் கொண்டேன். ஐந்து, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு என் நண்பர் ஒருவர் நாவல் கேட்கிறார்கள் என்று சொன்னார். நான் என்னுடைய நாவலை அந்த அலுவலகத்தில் கொடுத்தேன். அவர்கள் என் நாவலைப் புத்தகமாகக் கொண்டு வந்தார்கள். நாவல் வெளிவர முன்னர் எனக்கு ஒரு விருந்து வைத்து, காசோலை வழங்கி என்னை கௌரவப்படுத்தினார்கள். எனது நூலை சிறந்த முறையில் வெளியிட்டார்கள்.

17. பத்திரிகைகளுக்கு நீங்கள் எழுதுவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறதே. அதுபற்றி.....?

அவர்களுக்கு நான் தேவையில்லை. எனக்கு அவர்களைத்; தேவையில்லை. அவ்வளவுதான். எனது எழுத்து அவர்களுக்கு பயன்படாது. நான் ஒரு பொருள் விற்பவன். அந்தப் பொருள் சந்தையில் வாங்குவார்கள் இல்லை. ஆகையால் அவர்கள் என்னிடம் கேட்காதது ரொம்ப நியாயம் என்று கருதுகிறேன்.

பத்திரிகை அலுவலகங்களில் எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு. நான் செய்கிற காரியம், நான் எழுதுகிற எழுத்து அவர்கள் வெளியிடும் பத்திரிகைகளுடன் இணக்கமாவது இல்லை. எனது மொழி என்பது மிகவும் எளிய மொழி. அது பிரச்சினையல்ல. என் கதைகள் எழுதப்படுகின்ற முறை என்பது அவர்களுக்கு விருப்பம் தராமல் இருக்கிறது. நான் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் இணையத்தளத்தில் ஒரு கட்டுரை எழுதினேன். ஒரு காலத்தில் பத்திரிகைகள் இலக்கியத்தை வளர்ப்பதாக, நேசிப்பதாக ஒரு பிரமை இருந்தது. அது இப்பொழுது இல்லாமல் போய்விட்டது. எழுத்தாளனுக்கும், பத்திரிகைக்கும் எந்த உறவும் இல்லை. ஒரு காலத்தில் பாரதியார் உட்பட பத்திரிகைகளே தம்மை, தமது எழுத்துக்களை வெளியிடும் சாதனம் என்று கருதினார்கள். அவர்களே பத்திரிகைகளைத் தொடங்கினார்கள். பிறகு பெரும் முதலாளிகள் பத்திரிகைகளில் எழுத்தாளர்கள் எழுதினார்கள். பிரபலமானார்கள். இன்றைக்கு தமிழ் பத்திரிகைகளில் எழுத்தாளன்; என்பவன் படைப்பை எழுதத்தன்னும் தேவையில்லாமல் போய்விட்டான். இனிமேல் கல்கி, ஜெயகாந்தன், சுஜாதா போன்றவர்கள் கூட பத்திரிகைகளில் காணமுடியாமல் போய்விடும் என்று கருதுகிறேன்.


18. எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களுடனான உங்களது நட்புப் பற்றிக் கூறுங்களேன்?

நாங்கள் இருவரும் ஒரே ஊரில் பிறந்தவர்கள். ஒரே மாதிரியான மனநிலை கொண்டவர்கள். எனக்கும் அவருக்குமான நட்பு என்பது எதைப் பொறுத்து இடையறாது வருகிறது என்று யோசித்தபொழுது அவர் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டார் மயிலாடுதுறையில் தன் மூதாதையர்கள் இருந்தார்கள் என்று. நான் பிறந்த ஊரும் அதுதான். ஆனால் இதனால் நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்தோம் என்று கூறமுடியாது. நாங்கள் கிட்டத்தட்ட ஒரேமாதிரி இலட்சியங்களைக் கொண்டிருந்தோம். யாரிடமும் எந்த எதிர்பார்ப்பும் எங்களுக்கு இருக்கவில்லை.

எழுத்தாளர் ஜெயகாந்தனும் எனது நல்ல நண்பர்தான். அண்மையில் அவரைப்பற்றி அவர் முன்னிலையிலேயே பேசும் வாய்ப்புக் கிடைத்தது. தமிழ் பத்திரிக்கைகளில் பத்திரிக்கை சாராத ஒரு உரைநடையில் எழுதி தனக்கென்று ஒரு வழியை அமைத்துக் கொண்டவர் ஜெயகாந்தன் என்று அவரை நான் குறிப்பிட்டேன். அவர் அதைக்கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ஆகையால் சந்தர்ப்பம் கிடைக்கும்போது நான் மனம் திறந்து எனக்குப் பிடித்தது பிடிக்காதது பற்றி எப்பொழுதும் சொல்லிக்கொண்டு வருகிறேன்.

19.புலம்பெயர் எழுத்தாளர்களோடு நெருங்கிய தொடர்பு உள்ளவராக இருக்கிறீர்கள். புலம்பெயர் இலக்கியம், புலம்பெயர் எழுத்துக்கள் பற்றி என்ன கருதுகிறீர்கள்?

மனிதர்கள் எப்பொழுதுமே புலம்பெயர்கின்றவர்கள் தான். சிலப்பதிகாரம் புலம்பெயர்ந்த காவியம் என்பது என்னுடைய கருத்து. ஒரு பகுதியிலிருந்து மக்கள் புலம்பெயர்தல் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டு வருகிறது. லெட்சுமி கிருஷ;ணமூர்த்தி என்பவர் 1968, 69 இல் தமிழில் முதல்முதல் 'அக்கறை இலக்கியம்' என்ற புத்தகத்தை கொண்டுவந்தார். அப்பொழுது சிங்கப்பூர் கிடையாது. இலங்கை, மலேசிய கவிதைகள், கதைகளை முதன்முதல் தொகுத்து அந்த நூலை அவர் வெளியிட்டார். இதைப் பார்த்த பிறகு இந்திய அரசாங்கத்தின் சார்பாக, புலம்பெயர்ந்து தமிழ்மொழியில் எழுதக்கூடிய படைப்பாளர்களை வெளிக்கொண்டுவரக் கூடாது என்று தோன்றியது. அந்த ஆலோசனையை அவர்கள் முன் வைத்தேன். அவர்கள் அதை ஏற்றுக்கொண்டு 'நீங்களே அந்தக் காரியத்தை செய்துகொடுங்கள்' என்று கூறிவிட்டார்கள். எனவே 'தமிழ் அக்கறை இலக்கியம்' என்ற தொகுப்பு நூலை வெளியிட்டேன். அதன்போது சிங்கப்பூர், மலேசியா, இலங்கை எழுத்தாளர்களுடைய நிறைய படைப்புக்களை படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. குறிப்பாக ஜெயபாலன் கவிதைகள், எஸ்.பொன்னுத்துரை, மு.தளையசிங்கம், வ.அ.இராசரத்தினம் ஆகியோருடைய படைப்புக்கள், மஹாகவி, சேரன் ஆகியோருடைய கவிதைகள் இவற்றையெல்லாம் மறுபடியும் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. பரந்தளவில் இன்னொரு தொகுப்பைக் கொண்டுவரலாமா என்று முயற்சி செய்தபோது அது அவ்வளவு எளிதாகத் தோன்றவில்லை. ஏனென்றால் இம்மாதிரியான தொகுப்புக்களை ஒரு தனிமனிதனே செய்யவேண்டி இருக்கிறது. தனி மனிதன் செய்யும்போது அது சரியாக இருக்காது. கூட்டாக சேர்ந்து செய்கிறபோது அந்தக் காரியம் சிதைந்துவிடுகிறது.

ஆகையால் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்பது எப்பொழுதும் அவசியமானது. தமிழர்கள் நெடுங்காலமாக புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் இப்பொழுது எழுதியிருப்பதை விட இன்னும் சிறப்பாக அவர்களால் எழுதமுடியும். எழுதத் தெரிந்தவர்கள் எழுத வரவேண்டும். எழுதுவது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல. தன்னால் எழுத முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மனம் திறந்தால் மிகச்சிறந்த முறையில் எழுதமுடியும்.

20.பின்னவீனத்துவம் இறக்குமதிசெய்யப்பட்ட ஒரு கோட்பாடு. அது எமக்கு தேவையற்றது என்ற ஒரு கருத்து நிலவுகிறது. இதுபற்றி?

ஐரோப்பிய நாடுகளில் கல்லூரிகளில் இலக்கியத்தை கற்பிக்கிறார்கள். இலக்கியத்தைக் கற்பிக்கும்போது அவற்றை பாகுபடுத்துவதற்காக அவர்கள் பலவிதமான சொற்களை கையாள்கிறார்கள். அவ்வாறு சொல்லப்படுகின்ற சொற்பதங்களில் ஒன்றுதான் இந்த பின்னவீனத்துவம் என்பதும். அவர்கள் வாழ்க்கை முறைகளில் இருந்து அவர்கள் கண்ட்றிந்தவற்றைச் சொல்கிறார்கள். அது  எல்லாத் தேசத்திற்கும்  பொருந்துமா என்று தெரியவில்லை. அந்த ஊரில் தான் அந்தந்த இலக்கியம் தோன்றுகிறது. அதற்கான விமர்சனமும் அந்த நாட்டில்தான் தோன்றவேண்டும். ஆங்கில வழியாக, பிரெஞ்சு வழியாக, ஜேர்மன் வழியாக அவர்கள் கற்றுக்கொண்டதை, அவர்கள் நாட்டிற்கு உவப்பானதை, அவர்களுடைய தத்துவமரபை, அவர்களுடைய சிந்தனை மரபை ஒரு மொழியின் மூலமாக இன்னொரு தேசத்திற்கு இறக்குமதி செய்யமுடியாது. இவை எழுத்தாளர்கள் சம்மந்தப்பட்டதல்ல. அது பேராசிரியர்கள் சம்மந்தப்பட்டது. அவை வகுப்பறைகளிலும், கருத்தரங்குகளிலும் நிகழப்பட வேண்டியது. இதற்கும் படைப்பு எழுத்தாளனுக்கும் ஒரு சம்மந்தமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

21. தமிழில் உரைநடை பற்றி ஆய்வு செய்திருக்கிறீர்கள். அதுபற்றி.....

தமிழ் ஆரம்பத்தில் கவிதை மொழியாக இருந்தது. 19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் வருகையைத் தொடர்ந்து உரைநடை ஆரம்பமானது. மதப்பிரச்சாரத்திற்கு இவர்களுக்கு இந்த உரைநடை பயன்பட்டது. இவர்கள் பயன்படுத்திய உரைநடையை விட அந்தக் கால உரைநடைக்கு ஆதாரமாக மக்கள் அறிந்திராத உரைநடை நூல் ஒன்று இருந்திருக்கிறது. அது புதுச்சேரியில் டுபாசியாக இருந்த ஆனந்தரட்ணம்பிள்ளை. அவர் தன்னுடைய நாட்குறிப்புகளை எழுதிக்கொண்டு வந்தார். அவை அச்சேறாமல் பல ஆண்டுகளுக்கு அப்படியே இருந்தது. மக்களைச் சென்றடையவில்லை. ஆயினும் ரோபட் டீ நோபல்
(Robert D Nobel) என்கின்ற கிறிஸ்தவ மதப்போதகர், வீரமாமுனிவர் போன்றவர்கள் உரைநடை நூல்களை மதப்பிரச்சாரத்திற்காக எழுதினார்கள். பிறகு வீரமாமுனிவர் 'பரமார்த்தகுரு கதை' என்கின்ற ஒரு நகைச்சுவைக் கதையை எழுதினார். அது நூறு ஆண்டுகளுக்கு வெளிவரவில்லை. பிறகு வெளியானது. இதுவே தமிழ் உரைநடையின் சரித்திரம் என்று சொல்கிறார்கள். இது இருபதாம் நூற்றாண்டில் பத்திரிகைத்துறையின் வருகையோடு வேகமாக வளர்ச்சி பெற்றது.

இதே நேரத்தில் இலங்கையிலும் தமிழில் உரைநடை புழங்கத்தொடங்கியது. ஆறுமுகநாவலர் பைபிளை மொழிபெயர்த்தார். பின்னர் அவர் தனியாக தமிழில் உரைநடை நூல்கள் எழுத ஆரம்பித்தார். பழைய புராண நூல்களை உரைநடையில் எழுதினார். அதுதவிர கட்டுரைகள் பலவும் எழுதியிருக்கிறார். தமிழில் அவர் ஒரு மிகச்சிறந்த உரைநடை எழுத்தாளர் என்று சொல்லவேண்டும். தமிழகத்திற்;கு வெளியில் இருந்துகொண்டு உரைநடையை மிகவும் செழுமைப்படுத்தியவர் என்று அவரைச் சொல்லலாம். அவர் சிறந்த சொற்களைக்கொண்டு தெளிவான முறையில் ஒரு இலக்கிய மரபுடன் எழுதினார். அவருடைய உரைநடை ஒருமுறை திரு வி.கவுக்கு முன்னுதாரணமாக இருந்தது. திரு.விக. எழுதிய உரைநடை என்பது ஆறுமுகநாவலரை பின்பற்றி எழுதப்பட்ட உரைநடைதான். இந்த உரைநடைக்குப் பிறகுதான் பாரதியார் அவருடைய இலக்கியத்தையும் கற்பனையையும் கலந்து ஒரு உரைநடையை எழுதிக்கொண்டு வந்தார். பிறகு மக்களுக்கு அதிகமாக புரியக்கூடிய விதத்தில் நாவல், சிறுகதைகளுக்கான உரைநடை வந்தது. இந்த உரைநடை என்பது ஒரு இலக்கியத் தகுதியைப் பெற வேண்டும் என்று படைப்பு எழுத்தாளர்கள் கருதினார்கள். இந்த படைப்பு எழுத்தாளர்களுடைய உரைநடை என்பது பத்திரிகையின் உரைநடை அல்ல. ஒவ்வொரு படைப்பாளனும் தத்தமக்கு என்று ஒரு உரைநடையை தமிழ்மொழியின் உள்ளாகவே உருவாக்கிக் கொண்டார்கள். இந்த உரைநடையில்தான் நான் எழுதுவதாகக் கருதுகிறேன். நான் எழுதுகிற தமிழ் என்பது வெளிப்படையாகத் தெரியும் தமிழுக்கு உள்ளே இன்னுமொரு மொழி இருக்கிறது. அது வாசிக்கிறவனுடைய மொழியாக தன்னைத்தானே மாற்றிக்கொள்கிறது. அதன் அடிப்படையிலேயே அது அறியப்படுகிறது. இதுதான் உரைநடை வளர்ச்சி என்று குறிப்பிடவேண்டும்.

22. தனியே எழுத்துப்பணிகளோடு நின்றவிடாது சிற்பக் கலைகள் பற்றியும் ஆய்வு செய்தவர் நீங்கள். அந்தவகையில் சுடுமண் கலைகள் பற்றி எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

தமிழில் படைப்பு இலக்கியம் எவ்வாறு முக்கியமானதோ அவ்வாறே தமிழர்களுடைய கலைகளும்; முக்கியமானவை. அந்தக் காலத்துக் கவிதைகள் எவ்வாறு உலகக் கவிதைகளாக இருக்கிறதோ அவ்வாறே அந்தக்காலத்துச் சிற்பங்களும், ஐம்பொன் சிலைகளும் உள்ளன. இதனை முதன்முதலாக எல்லோருக்கும் எடுத்துச் சொன்னவர் இலங்கையைச் சேர்ந்த ஆனந்தக்குமாரசுவாமி என்பவர். அவர் ஆங்கிலமொழியில் எழுதிய தனது கட்டுரைகளில் திருவாலங்காட்டு நடராஜர் - ஆனந்தத் தாண்டவர் சிற்பம் ஒரு தமிழ் படைப்பிலிருந்து இந்திய படைப்பாக மாறி உலகப் படைப்பாக பரிமளித்திருக்கிறது என்று விபரித்திருக்கிறார்.
Dance Of Siva என்கின்ற அவருடைய நூல் உலகத்திற்கு தமிழர்களுடைய படைப்புத்திறனை எழுத்துக்காட்டியது. 1901 அல்லது 1902 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஐரோப்பிய நாடுகளுக்கு உலகத்தில் இருக்கின்ற ஒரு உன்னதமான கலைப்படைப்புகளில் ஒன்று திருவலங்காட்டு நடராஜர் சிற்பம் என்பது ஆனந்தக்குமாரசுவாமி மூலமாக தெரியவந்தது. பிரான்ஸின் மிக முக்கியமான சிற்பி என்று கருதப்படுகின்ற 'அகஸ்டின் ரொபேன்' தனது சிந்தனையாக அதை உருவாக்கினார். அதுபோன்று மாமல்லபுரத்து சிற்பங்கள்தான் ஹென்றி மூர் (Henry Moore) என்ற இங்கிலாந்துச் சிற்பிக்கு ஒரு உத்வேகமாக இருந்தது. தமிழக சிற்பங்களின் மேன்மையை மேலைத்தேசத்தவர்கள் அறியக்கூடிய விதமாக, நம்பிக்கை கொள்ளும் விதமாக ஆனந்தக்குமாரசுவாமி குறிப்பிட்டதன் அடிப்படையில் அவர்கள் தமிழகத்திற்கு வந்து இந்த மாமல்லபுரத்துச் சிற்பத்தையும், திருவாலங்காட்டு ஆடவல்லான் சிற்பத்தையும் பார்த்து தங்களுக்கு எட்டியவகையில் சிற்பங்களையும் செய்து மிகவும் புகழ் பெற்றார்கள்.

23.ஆறுமுகநாவலரை சிலர் 'சாதிப்பாகுபாட்டு அபிமானி' என்று குறிப்பிடுகிறார்கள். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

இதை ஒரு பெரிய விடயமாக நான் கருதவில்லை. பொதுவாக ஒரு மனிதனுக்கு பலவிதமான முகங்கள் இருக்கும். நம்முடைய தவறு என்னவென்றால் ஒரு மனிதன் என்பவன் எனக்குப் பிடித்த எல்லாக் காரியங்களையும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். சில நேரங்களில் சிலர் மிகவும் பிற்போக்காக நடந்துகொண்டே முற்போக்காக நடந்துகொள்வார்கள். சில முற்போக்காளர்கள் முற்போக்காக பேசிக்கொண்டே பிற்போக்கான காரியங்களைச் செய்வார்கள். இதுபற்றி மாசேவும் மிகத் தெரிவாகச் சொன்னார். அதாவது 'யாரிடமிருந்து எதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும்'. ஆறுமுகநாவலரிடமிருந்து நான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கருதுவது அவருடைய படைப்பாற்றல், மொழிக்கு அவர் ஆற்றியபணி - இவைதான் எனக்கு முக்கியமானதாகப் படுகிறது.

அவர் ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார் 'நல்ல சமயம் இது நழுவவிடாதீர்கள். சிங்களவர்களே நழுவவிடாதீர்கள். கிறிஸ்தவர்களே நழுவவிடாதீர்கள். தமிழர்களே நழுவவிடாதீர்கள். இஸ்லாமியர்களே நழுவவிடாதீர்கள்'. அதாவது ஆங்கிலப் படிப்பை மேலைநாட்டவர்கள் கொண்டுவந்தபோது அதைப் படித்துக்கொள்ளுங்கள் என்பதற்காகவே இவர் இப்படிச் சொல்கிறார்.

அவருடைய ஜாதிக்கொள்கைகளால் சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம். அவர்கள் அவரை ஒரு ஜாதி அபிமானியாகப் பார்ப்பது அவ்வளவு பெரிய குற்றமொன்றும் இல்லை. அவர்களுக்கு அவருடைய ஜாதி அபிமானம் என்பது தாளமுடியாத ஒரு விசயமாக இருந்தால் அதை அவர்கள் அவ்வாறே கருதலாம். எந்தவிதமான தவறும் இல்லை. என்னைப் போன்றவர்களுக்கு அவர் ஜாதியைப் பின்பற்றியது ஒரு பிரச்சனையாகத் தோன்றவில்லை. எல்லா நேரத்திலும் எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி சிந்திப்பதில்லை. அவருக்கு ஜாதி முக்கியமாகப்பட்டது. அந்த விடயத்தில் அவரை நிராகரிப்பதற்கு நமக்கு பரிபூரண உரிமை இருக்கிறது. அந்த உரிமையைச் சொல்லிக்கொண்டே காலத்தைக் கழிக்கமுடியாது.

24. தற்காலத்து ஈழத்து இலக்கியம் பற்றி....

தற்காலத்து ஈழத்து கவிதை நன்றாக இருக்கிறது. கடந்த பத்து, பன்னிரண்டு வருடங்களாக அங்கிருந்து வெளிவருகின்ற புதுக்கவிதைகள், நவீன கவிதைகள் நன்றாக இருக்கின்றன. ஜெயபாலன் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். சேரன் கவிதைகள் நம்பிக்கை அளிக்கிறன. போரும் வாழ்க்கையும் அவர்களுக்கு பெரிய சர்ச்சையைக் கொடுக்கிறது. நாவல்கள், சிறுகதைகள் எனக்கு அவ்வளவாக திருப்தி அளிக்கவில்லை. பழைய எழுத்தாளர்கள் எஸ்.பொன்னுத்துரை, மு. தளையசிங்கம் படைப்புக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஈழத்து ஆய்வாளர்களும், அறிஞர்களும் நம்பிக்கை தருகிறார்கள். பேராசிரியர் சிவத்தம்பி, கைலாசபதி ஆகியோரது ஆய்வுகள் குறிப்பிடத்தக்கன. 'சங்க இலக்கியம் வீர இலக்கியம் வாய்மொழி இலக்கியம்' என்று கூறி தமிழ் இலக்கியத்தை புறட்டிப் போட்டவர் கைலாசபதி அவர்கள்.

 


 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.