கவிஞர் வதிரி .சி ரவீந்திரன் அவர்களுடன்  ஒரு நேர்காணல்

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

தங்களின் முதல் கவிதை எது? எந்த இதழில் வெளி வந்தது?     அப்பொழுது தங்களுக்கிருந்த மனநிலை எப்படியிருந்தது?

முதல் கவிதை என்பது எழுதி அச்சேற்றப்பட்டகவிதையையே முதல் கவிதை என்பர். ஒரேகாலத்தில் எனது கவிதைகள் இரண்டு வெளிவந்தன. நண்பர் நந்தினி சேவியர் பூம்பொழில் சஞ்சிகைக்கு அனுப்பிவைத்த 'எங்கள்  எதிர்காலம்' என்ற கவிதையும் ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்த 'பலதைச்செய்ய துணிகின்றான்' என்ற கவிதையும் 1970ல் வெளிவந்தது.

அப்போது எனது கவிதை வந்துள்ளது எனப்பலருக்கும் காட்டி மகிழ்ந்தேன். ஆசிரியர்கள், என் கல்லூரித் தோழர்கள் பாராட்டியபோது பெரு மகிழ்வு கொண்டேன்.

ஒரு நல்ல கவிதை எப்படி இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்..?

ஒருநல்ல கவிதை எப்படி இருக்கவேண்டுமென்பதை வாசகர்களாலே தீர்மானிக்க முடியும். நல்லகவிதை என்பது மரபோ, புதுக்கவிதையோ வாசிப்பவனுக்கு புரியும்படியாக இருக்கவேண்டும். இப்போ சில கவிதைகள் படிமங்கள் என ஏதோ சொல்கின்றன .ஒரு கவிதையில் அகதிப்பையன் ஒருவனுக்கு சைக்கிள் கிடைக்கிறது. அது எப்படி கிடைத்தது என்பதை எழுதியவரிடம் கேட்டுக்கொள்ள வேண்டிய நிலை இருந்தது. அதன் பின்னேதான் எழுதியவருக்கும் தெரிய வந்தது.

இப்படியாக நல்ல கவிதைகளை இப்போ குழுக்களாகவே தெரிவு செய்கிறார்கள். ஒரு நல்ல படைப்பானது சாதரணவாசகனுக்கும் புரியவேண்டும். இது அன்றைய நிலை. இன்று பல்கலைக்கழகமட்டத்திற்கு புரியவே எழுத்துகள் படைக்கப்படுகிறது. சிலவேளை பல்கலைகழகம் சார்ந்தோருக்கும் புரியவதில்லை. ஏதோ  வித்துவச்செருக்கு இன்றைய படைப்பாளிகளிடம் அதிகம் காணப்படுகிறது

உங்கள் படைப்புகளுக்காக ஒவ்வொரு நாளையும் எப்படித் திட்டமிடுகிறீர்கள்?

திட்டமிடுதல் என்பது பேனையும் பேப்பரும் எடுத்து வைத்து கவிதை எழுதப்போவது அல்ல;எந்த படைப்பையும் எழுத முதல் அதுபற்றிய வரைபடம் மனதில் தோன்றும். அதனை ஆர அமர சிந்தித்து எழுதவேண்டும். இன்று எழுதியதை சிலநாட்கழித்து எடுத்து பார்த்து திருத்தங்கங்கள் செய்யவேண்டும். அதாவது நன்றாக ஊறப்போட்டு பின்அதனை செப்பனிடுதலே சிறந்தவழியாகும். இன்று எதை எழுதினாலும் இணைத்தளங்களில் பிரசுரித்து கருத்து, விருப்பு கேட்பவர்கள் உடனே பிரசுரம் செய்து பிரசவிக்கின்றார்கள். அன்று நாம் எழுதியவை பிரசுர மாகுமா என ஏங்கிய நாட்கள் உண்டு.இப்போ இவை விதிவிலக்காகிறது

கவிதையின் வடிவம் உள்ளடக்கம் எல்லாம் மாறிக் கொண்டேயிருக்கிறது. எதிர்காலக் கவிதை எப்படி இருக்கும், இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

மரபு படித்தோ, அல்லது அறிந்தோ வைத்திருந்த நான் ஓசையுடன் கவிபாட புறப்பட்டேன்.கவியரங்குகள் என்னை கவிபாடவைத்தது  என்றால் கவிஞர் காரை சுந்தரம்பிள்ளையின் கவியரங்குகளைபார்த்து கவிதை என்ற மரபை ஆராதனை செய்தேன். இவரோடு கவிஞர்கள் வி.கந்தவனம்,.நாகராஜன்

அரியாலையூர்வே.ஐயாத்துரை,கல்வயல்வே.குமாரசாமி,ஆகியகவிஞர்களினதும் மஹாகவி உருத்திரமூர்த்தி, சொக்கன்,இரசிகமணி கனக செந்திநாதன் ஆகியோர் தலைமை வகித்தமையும் நான்ரசித்தவன். இதனால் மரபை காதலித்தேன். இதற்குள் 'வானம்பாடிகள்' புதுக்கவிதை எழுதிய போது அவர்களை பின்பற்றிய திக்குவல்லை கமால், அன்புஜவகர்ஷா, ஜவாத்மரைக்கார் சம்ஸ் போன்றோர்    மல்லிகையில்

கவிதைகளை படைத்தனர்.அவர்களை பின்பற்றி நானும் புதுக்கவிதையுள் நுழைந்து எழுத ஆரம்பித்தேன். இப்படி தொடரும் கவியுலகம் நவீனம், பின்நவீனத்துவம், என்று இன்னும்புதிதாய் வரலாம். ஆனாலும் எதிலும் புரிதல் ஓசை என்பது புலப்படவேண்டும்.

தங்களின் குடும்பம் குறித்து கொஞ்சம் சொல்லலாமே ...?

நான் சாவகச்சேரியை பிறப்பிடமாகக்கொண்டவன். நான் வளர்ந்தது  வதிரி என்றகிராமத்தில்தான் கல்வி கற்று தொழில்பெற்று பின் சிவராணி அவர்களை துணைவியாக கரம்பிடித்து நான்கு பிள்ளைகள்.

மகன்  இவர் ஒருவர் முகாமைத்துவ பட்டதாரி.சார்ட்டட் எக்கவுண்டன், C.I.M.A எக்கவுண்டன் இரண்டையும் பல்கலைக்கழகத்தில் கற்கும் போதே கற்று சித்தியடைந்தவர். திருமணமாகி கனடாவில் வாழ்கிறார்.

இரண்டாவது ஒரேமகள் எக்கவுண்ஸ் கற்று தனியார்துறையில் வேலை பார்த்தவர். திருமணமாகிவிட்டார் மூன்றாமவர் Quantity surveying M.S.C  . சிங்கப்பூரில் வேலை புரிகிறார்.

இளையவர் தனியார் வங்கியில் வேலை புரிகிறார். பெரும் போராட்டத்தின் மத்தியில் கொழும்பு வாழ்க்கையில் பிள்ளைகளை வளர்த்தெடுத்ததே உண்மை.

வினா இலக்கிய உலகுக்கு உங்களது பங்களிப்பு குறித்து கூறுங்கள்?

இலக்கியபங்களிப்பு என்பதை எழுத்து ஊழியம் என்றே கூறலாம். இலக்கிய பங்களிப்பு என்பதை கவிதை எழுதுவதில் ஆரம்பித்த யான் தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகள்,என எழுத ஆரம்பித்த நான்71ல் இலங்கை வானொலியில் ஒலி மஞ்சரிக்கும் கவிதை எழுதினேன்.மல்லிகையில் எனதுகவிதை72ல் வெளிவந்தபோது என்னை பலரும் அறிந்தனர். கவியரங்கு நிகழ்வுகளில் நிறையப்பங்கேற்ற எனக்கு இலங்கைவானொலியில் வாலிபவட்டம் நிகழ்வில் தொடர்ந்து பங்கேற்க வாய்ப்புகள் கிடைத்தது.விமல் சொக்கநாதன்,ராஜேஸ்வரி சண்முகம் ஆகியோர் என்னை கவியரங்கிற்கு தலைமைதாங்கவைத்தனர். ஒரு மணித்தியால நிகழ்வில் கவியரங்கு இருபது நிமிடம்நடைபெறும். இதனூடாக பாலமுனை பாறூக், நோ.இராசம்மா, மாணிக்கவாசகன் போன்ற கவிஞர்களை தெரிந்து வைத்திருந்தேன்

இதனூடாக பாலமுனை பாறூக் அவர்களின் நட்பு கிடைத்தது.கொழும்பில் வாழ்ந்த காரணத்தால் பல அறிமுகங்கள் கிடைத்தன.கொழும்பு வலம்புரி கவிதாவட்டம் போன்றவற்றிலும் ஈடுபாடு கொண்டிருந்தேன்.இலங்கை வானொலிக்காய் பல மெல்லிசைபாடல்களை எழுதிவருகிறேன்.'சம்யுக்த ஜெயந்தி'க்கான பாடலும் அடங்கும். இறுதியாக 2011ல் 'மீண்டுவந்த நாட்கள்' என்ற கவிதை தொகுப்பை வெளியீடு செய்தேன்.

வினா எழுத்துத்துறைக்குள் நீங்கள் வந்தது பற்றிக் கூறுங்கள்?

எனது கிராமம் கலை இலக்கியத்தில் மிக ஆர்வமான கிராமம்.கிராமத்து பாடசாலையான கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரியும்

என்னை வளர்த்துவிட்டன எனச்சொல்வதில் மகிழ்வடைகிறேன்.வாசிப்பை  ஊக்குவித்த அதிபர் எம்.எஸ்.சீனித்தம்பி அவர்களும், பாடசாலை இலக்கியமன்றமும்

ஹாட்லி கல்லூரி சஞ்சிகை படித்தபோது .சித்திரவேலாயுதம் எழுதிய 'நித்திரையில் வந்தவள் இனிச்சித்திரையில்' என்றகவிதையும் நண்பர் .நவம் எழுதிய சிறுகதை 'தாயுள்ளம்(1965)இவையிரண்டையும் வாசித்ததும் நானும் எழுதவேண்டும் என ஆசைகொண்டேன்.ஆனால் அப்போநான் பன்னிரண்டுவயதுப்பையன். 1967ல் கவிஞர் காரைசெ. சுந்தரம்பிள்ளை ஆசிரியராகவந்த போது எமது பாடசாலையில்

இலக்கிய தாகம் பிறந்தது. அதனூடாகவந்தவன் நான். அதே காலத்தில் வதிரி தமிழ்மன்றம் எனது இலக்கிய ஆர்வத்திற்கு களம் தந்தது. இதுகூட செயலாளர் சி..இராஜேந்திராவின் ஊக்குவிப்பூனூடாக அமைந்தது எனலாம்.

கவிதை பற்றி யாது கருதுகிறீர்கள்?

ஒரு கவிஞனின் மனதில் தோன்றுவதை கவிதையாக படைப்பதாகும். கற்பனையாகவும் வரலாம்.உண்மையாகவும் உதயமாகலாம். இன்றைய கவிதை வடிவங்கள் பல வடிவங்கள் பெறுகின்றன. அவையெல்லாம் கவிதை என்ற அந்தஸ்தை பெறுகின்றன.

படிமங்களையும் குறியீடுகளையும் உங்களால் எவ்வாறு மிக இலாவகமாக கையாள முடிகிறது?

படிமங்களையும் குறியீடுகளையும் நான் அதிகமாக பாவித்ததில்லை. ஒன்றிரண்டு கவிதைகளிலேயே காணலாம். இன்றைய இளம் கவிஞர்கள் இவற்றை நல்ல முறையாக கையாளுகிறார்கள். இந்தகையாளுகையானது வாசகனை திருப்திபடுத்த வேண்டுமென்பதே எனது அவா!

புலம்பெயர் கவிஞர்களில் 2000 ற்குப் பின்னர் யார் யாரைக் குறிப்பிட்டுக் கூறுவீர்கள்?

எனக்கு வரிசைப்படுத்தி பட்டியல் தயாரிக்க விருப்பமில்லை. புலம் பெயர்ந்த கவிஞர்கள் நன்றாக எழுதுகின்றார்கள். இவர்களில் பலர் புலம்பெயர்ந்த பின்பே எழுதவந்தார்கள். பலருடைய எழுத்து மக்களது பாராட்டைபெறுகிறது. எழுத்து ஒருவனோடு சேர்ந்து வரவேண்டும். அப்போதே அவன் பேசப்படுவான். புலம் பெயர்ந்த பலர் அங்கிருந்துகொண்டு இங்குள்ள களத்தை எழுத்தாய் சொல்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை. களத்தில் நின்று படையுங்கள் அதுபேசப்படும். புலம் பெயர்ந்தவர்கள் அங்குள்ள நிலைமைய வைத்து எழுதும் போது அது பேசப்படும். ஆனந்த பிரசாத் என்பவர் எதை எழுதினாலும் அது ரசனையை தருகிறது. அவர் தான் வாழ்ந்தகாலத்தையும் இன்றைய நிலையையும் பேசுகிறார்.

எமது படைப்பாளிகள் மற்றும் படைப்புக்களின் நிலை எவ்வாறு உள்ளது

நானும் 70களிலிருந்து இலக்கியவாதிகளுடன் பழகும்வாய்ப்பை பெற்றிருக்கிறேன். அன்று பிரச்சனைகள் இருந்தாலும் ஒருவரை ஒருவர்சந்தித்து சுகம் விசாரிக்கும் பண்பு இருந்தது. அன்று வருடத்திற்கு குறைந்தது பத்து நூல்களே வெளிவந்தன. இன்றைய கணிணி யுகத்தில் பெருந்தொகையான நூல்கள் வெளிவருகின்றன. அப்போ நூல்

வெளியீடு செய்வதற்கு மிகவும் கடினமாக உழைக்கவேண்டியிருந்தது.கடன் பட்டு நூல் போட்டார்கள். இப்போ எல்லாம் மாறிவிட்டது. இலக்கியம் படைத்தால் நூல் போடவேண்டும் என்ற அவசரநிலை. இங்கு குழுநிலையில் இலக்கியவாதிகள்

வாழ்கிறார்கள். இளம் எழுத்தாளர்களின் எழுத்துகளில் பல முன்னேற்றகரமான சித்தரிப்புகள் தெரிகின்றன. ஆனாலும் சில மூத்தவர்கள் வழிகாட்டுகிறோமென்று அவர்களை பிழையாகவும் வழிநடத்துகின்றனர். இன்னும் தங்களுக்கு விருது கிடைக்காவிடில் தெரிவை தவறென்று கொள்கின்றனர். இது இளம் படைப்பாளிகள் முதிர்படைப்பாளிகளிடமும் காணப்படுகிறது. இது ஒரு ஆரோக்கியமான விடயமல்ல!

எமது படைப்பாளிகள் மற்றும் படைப்புக்களின் நிலை எவ்வாறு உள்ளது

விருதும் பரிசும் ஊக்குவிக்கும் பொருள்களேயாகும். ஒரு விருது எடுத்த்துவிட்டால் தொடர்ந்து தனக்கே விருதும் விழாவும் என எண்ணுகின்றனர். அடுத்தவனுக்கு கிடைத்தால் பொறாமைகொண்டு அல்லது சோபையிழந்து விழாவுக்கு வராமலே விட்டுவிடுகின்றனர். இன்று பலர் தம்மை விட யாரும் எழுதமாட்டார்கள் என எண்ணுகின்றனர். படைப்புகள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக காணப்படும்.

இன்றைய இளம்படைப்பாளிகள் பலர் சிறப்பாக எழுதுகின்றனர். எழுத்து ஒருகொடை. பெண்படைப்பாளிகள் பலர் ஆரவாரமின்றி படைக்கின்றனர். ராஜ் சுகா , அனுஜா, பிரமிளா பிரதீபன் போன்றபலரை குறிப்பிடலாம். இன்னும் சிலர் ஏதாவது எழுதி புகழ்பெற வேண்டுமென எண்ணுகின்றனர். அண்மையில் ஒருமொழிபெயர்ப்பு நூல்வந்தது. அதைமொழிபெயர்த்த படைப்பாளி  சிங்களத்திலும் தமிழிலும் நன்கு புலமை பெற்றவர் என பேசிக்கொண்டனர். ஆனால் அவரது மொழியாக்கத்தின் தவறினையும்; இதே மொழிபெயர்ப்பை வேறொருவர் சரியாக படைத்ததையும் விபரமாக சஞ்சிகை ஒன்றில் எழுதியிருந்தார். எனக்குத்தான் முடியுமென நாம் ஒருபோதும் எண்ணக்கூடாது. எழுத்தாளர் முத்துமீரானின் கவிதைஒன்று நினைவில் வருகிறது. "முதுகு சொறிந்தேனும்முதுமானி பட்டம்பெறு" என்பது. இன்று கட்டுரைகள் படிப்போர் தங்களுக்கு வாய்ப்பாக ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடு படுகின்றனர். அதில் தமக்கு பிடித்தமான பேராசிரியர்களையும் சேர்த்து தங்கள் பட்டப்டிப்பு ஆய்வுகளில் தொங்குகின்றனர்.

தாடாகம் கலை இலக்கிய வட்டம் பற்றி உங்கள் கருத்து

வளரும் படைப்பாளிகளை ஊக்குவிக்கின்றனர். தகுதிகண்டு கெளரவிக்கின்றனர். தனித்து நின்று ஒருபெண்மணியால் இயக்க்கப்படும் தடாகம்; பலபேரின் ஆதரவைப் பெறுகின்றது.ஒத்தாசையுடன் வளர்கிறது. தனது விருப்பிற்கு குழு அமைத்து தனக்கு விரும்பியவர்களுக்கு விருது வழங்காமல்; நல்லமுறையில் தேர்வு நடாத்தி கலைமகள் ஒரு நிறைமகளாக திகழ்கிறார். ஆனாலும் ஒருகுறை உண்டு. ஒவ்வொரு துறை  சார்ந்தவர்கட்கும் அத்துறை சார்ந்தவர்களின் பெயரில் கெளரவம் கொடுங்கள் எனபதே எனது மேலெழுந்த கருத்தாகும். தடாகம் வற்றாது சிறக்கவேண்டும்.

தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் ஈழத்துபத்திரிகைகளின் பங்களிப்புக் குறித்து ஏதாவது கூற முடியுமா

ஈழத்துப்பத்திரிகைகளும் படைப்பாளிகளை  அறிமுகம் செய்து வைக்கிறன. பத்திரிகைகள் சஞ்சிகைகளின் பங்களிப்பை மறக்கமுடியாது. இன்றும் பத்திரிகைகள் தங்கள் கவிதை, சிறுகதை, கட்டுரைகள்

என்று பரவலாக பிரசுரிக்கின்றன. சிலவற்றை பிரசுரிக்கிறார்கள் சிலவேளைகளில் மெளனிக்கிறார்கள். அவர்களும் எம்மைபோல மனிதர்களே!

இணையத்தள சஞ்சிகைகளின் வரவும், அதில் பங்களிப்புச் செய்யும் வாசகப் பரப்பும் தற்போது அதிகரித்துள்ளது. இது குறித்து தாங்கள் கருதுவது யாது ?

நான் ஒரு சொந்த வீட்டில் வாழ்ந்தால் எதனையும் அலங்கரிக்கலாம். என் வீரப் பிரதாபங்கள் பேசலாம். அதுபோன்றே சொந்த இணையத்தளங்கள். இணையதளங்கள் பொதுவாகவும் செயல்படுகிறது.அவற்றில் பல நல்ல ஆக்கங்கள் வருகின்றன.

பத்திரிகைகள் சஞ்சிகைகளில் எழுதாத பலர் இவற்றில் எழுதுகின்றார்கள். இவற்றை வாசிப்பவர்கள் நல்ல ஆக்க இலக்கிய வாதிகளை இனங்காணுகின்றனர்.

பின்நவீனத்துவம் எங்கள் சூழலில் எங்கள் பிரச்சனைகளை எடுத்துக் கூற ஏற்றதொரு கோட்பாடாக உள்ளது என்று கருதுகிறீர்கள்?

இன்றைய சூழலில் பின்நவீனத்துவம் என்பது பலரை பிரச்சனையின்றி பயணிக்க வைக்கிறது. ஆதனால் அந்த எழுத்தானது புரிபவர்களுக்கு புரிந்தும் சில புரியப்பட வேண்டியவர்களுக்கு புரியாமலும் செல்கிறது. அதனால் அதன் படைப்பாளிகள் கண்டும் காணாமலும் இருக்கிறார்கள்.

இன்றைய சூழல் ஏதாவது எழுதத்துண்டியிருக்கிறதா?

இன்றைய சூழலில் மனிதர்களின் வலி பற்றியே எழுதச்சொல்கிறது. இந்த  எழுத்தினூடாக எமது அனுதாபங்களை மட்டும் வெளிக்கொணரலாம். இதனால் யாரும் தம்மை திருத்திக்கொள்வார்கள் என்று சொல்வதற்கில்லை.

உங்கள் எழுத்தை செம்மைப்படுத்த அல்லது எழுத்துப்பரப்பை விரிக்க என்ன செய்கிறீர்கள்?

ஆரம்பகாலத்தில் செம்மைப்படுத்த மூத்த படைப்பாளி தெணியானிடம் உதவியை நாடியிருக்கிறேன். அவரது செம்மைப்படுத்தல் எனது நூலிலும் இருந்தது. எழுத்து பரப்பை விரிவாக்க இன்னும் படிக்கிறேன்.எப்பொழுதும் என்னை ஒரு பெரியவனாக்கி மாஜா ஜாலம் காட்டுபவனல்ல. ஒவ்வொரு படைப்பாளியின் போக்கிலும் வித்தியாசங்கள் உள்ளன. சில கருத்துகள் ஒன்றிப் போகின்றன.  

சூழல் பற்றியும் எழுதி வருகிற சூழல் பற்றியும் சொல்லுங்கள்

தொடங்கியகாலம் கல்விகற்கும் காலம். அக்காலத்தில் மக்களின் பிரச்சனையோடு பேசினேன். யாழ்ப்பாணத்து சாதிய அடக்குமுறை,பின் நாடு கடத்தப்பட்ட மலையக மக்கள் நிலை. பஞ்சத்தால்வாடி பாணுக்கும் அரிசிக்கும் வரிசையில் நின்ற நிலை. பின் இப்பொ மக்களின் துயரநிலை. எல்லாவற்றையும் எழுதலாம்;ஆனால் எம் எழுத்துகளை எம்மை விட ஆழமாக நோக்குவோர் உள்ளார். எனவே அடக்கி வாசித்தல் சுகமானது என எண்ணுகிறேன்.

பலருக்கு தெரியாது. 70களில் வேகமாகஎழுத ஆரம்பித்த நான் 79ல் மெதுவாக பயணித்தேன். 82லிருந்து 90வரைமெளனம் சாதித்து விட்டேன். காரணம் 75லிருந்து 85வரை காவல்துறையில் கடமையாற்றினேன். அதனால் நான் ஏனோதானோ வென்று இருந்துவிட்டேன். பின் வெளிநாடு சென்று 90ல்வந்தேன். எதையும் எழுத வரவில்லை. கட்டுப்பாடு என்றுவாழ்ந்தவன். அதனால் விசாலமாக எழுத முடியவில்லை. இப்போகூட கட்டுப்பாடு உண்டு.

யாருடைய கவிதைகளை (எழுத்துக்களை அதிகம் வாசிப்பீர்கள்

பாரதியை, பாரதிதாசனை பாடசாலை படிக்க ஆரம்பித்த நான் மு.மேத்தா, நா.காமராசன், பிச்சமூர்த்தி, திருச்சிற்றப்பலகவிராயர் ஆகியோரையும்

ஆரம்பங்களில் படித்தேன். நம்நாட்டுகவிஞர்களான மஹாகவி, சில்லையூரான் முருகையன், நீலாவணன் எனநீளும். ஆனால் என்னை கவிதை பாடுஎன உரம் தந்த கவிஞர் காரை செ.சுந்தரம்பிள்ளையின் தேனாறு கவிதை நூலும், சங்கிலியம் காவியம்,காரையின் கவியரங்கு நிகழ்வுமாகும். அதைஎப்போதும் மறக்கமுடியாது.

திக்குவல்லைகமால், அன்புஜவகர்ஷா,சம்ஸ் போன்றவர்களின் கவிதைகளும் என்னை கவர்ந்திருந்தன. அந்த தாக்கத்தில் புதுக் கவிதைகள் எழுதினேன். இன்றும் கவிதைகள் படிக்கிறேன். ஆனால் முன்பு போல ஒரு உஷார் இல்லை.உடலில் ஒரு தளர்ச்சி நிலை உண்டு.

உங்களது இலட்ச்சியம் எதிர்பார்ப்பு என்ன

இலட்சியத்தோடு எழுத தொடங்கிய நான் மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். ஏழை-பணக்காரன் என்ற நிலைவேண்டாம் என்றே நினைத்தேன். ஆனால் இங்கு ஏதும் அப்படியாக அமையவில்லை. கொள்கைகள் பேசலாம். செயல்பாடுகள் எங்கும் சுத்தமில்லை.

உங்களுக்கு கிடைத்த பாராட்டுக்கள் பரிசுகள் பற்றி ?

எனது கல்லூரியில் (70) மாணவரிடையே நடைபெற்ற கவிதைப்போட்டியில் முதலாமிடம்பெற்றேன். இதன்பின்போட்டிகளில் பங்கேற்கவில்லை.2012- கொடகே சாகித்ய விழாவில் எனது' மீண்டுவந்த நாட்கள்'கவிதைநூலுக்கு சிறந்த முதற்பதிப்புக்கான விருதுகிடைத்தது. அதேபோன்று அரச  சாஹித்ய விழா2012ல் சிறந்த கவிதை தொகுப்பாக சிபார்சு செய்யப்பட்டு சான்றிதழ் கிடைத்தது 70களில் கவியரங்குகளில் பங்கேற்று கெளரவிக்கப்பட்டேன். அது ஒருகாலம். சில்லையூரானோடு கவியரங்கு, வானொலி' பாவளம்' ஆகியவற்றில் பங்கேற்று அவரது பாராட்டை பெற்றதை பெரும் பேறாக எண்ணுகிறேன்.

நவீன இலக்கியக் கொள்கைகளை நீங்கள் விரும்புகின்றீர்களா ?

விரும்புவது விரும்பாமல் விடுவதல்ல பிரச்சனை; மரபு, சந்தம் எனவிரும்பிய நாங்கள் புதுக்கவிதையில் பார்வையை செலுத்தவில்லையா? எழுதவில்லையா? எனவே நவீன இலக்கியங்களையும் கற்றால் அதையும்எமக்கானதாக்கலாம். நவீன இலக்கியங்களில் ஒரு புரியாதன்மையை காணுகிறேன். ஆனல் இன்றைய முகநூல் படைப்பாளிகள் நன்றாகவே எழுதுகின்றனர்.அவர்களில் பலரின் கவிதையின் பொருளை அவர்களிடமே கேட்க வேண்டும். இதை கூறினால் எழுதியவரின் மனம் சற்று வேதனைப்படும். ஒருபடைப்பானது சாதாரண வாசகனுக்கும் சென்றடைய வேண்டும்.இன்று ஒரு கவிதை முகநூலில் வந்துள்ளது. அது அரசியல் பேசுகிறது. உறைப்பவர்களுக்கு உறைக்கும். ஆனால் பொதுவிடயத்தை பேசுவதாக உள்ளது. நாச்சியாதீவு பர்வீனின் கவிதை. 'பழமில்லா மரம்' என்றகவிதையாகும்.

இப்படி எந்தப் பிரச்சனையும் சாடலாம். யாரும் குறைகூறமுடியாது. தப்பிக்கொள்ள நவீன இலக்கியசெல்நெறிகள் வழிகாட்டுகின்றன.

வளரத் துடிக்கும் இளையவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள் ?

எழுதுங்கள். உங்கள் எழுத்து சில சமயம் மூத்தவர்களையும் விஞ்சலாம். எல்லோரும் தட்டித்தரமாட்டார்கள். வெட்டிவிடத்தான் பார்ப்பார்கள். இன்று இலக்கிய உலகம் போட்டி பொறாமை மிக்கதாகவே உள்ளது. என்னைவிட யாருக்கு கவிதை எழுத வரும்? நான்தான்  சிறந்தகவிஞன். எனது நூலே சிறந்தது எனக்கு விருது தரவில்லை என்று வருத்தப்படுபவர்கள். தங்களுக்குள் குழு அமைத்து  தமக்கே விருது வளங்குவோர். இப்படி பலரகங்கள். எனவே வளரத்துடிப்பவர்கள் பல விண்ணர்களோடு போட்டிபோடவேண்டிய நிலை ஏற்டுகிறது. இப்போ எல்லாம் சாஹித்யவிருதுக்கு நூல்கள்களை போட்டிக்கு அனுப்பிய பின்பே நூல் வெளியீடு செய்கிறார்கள். இன்னும் சிலர் அவசரமாக பத்து புத்தகங்ளை அச்சிட்டு போட்டிக்கு கொடுத்துவிட்டு மிகுதியை ஆறுதலாக பதிக்கின்றனர்.இப்படி விருதுக்கும் பணத்திற்கும் சில ஜீவன்கள் அங்கலாய்த்து திரிகின்றனர். தங்களுக்கு விருது கிடைத்தால் தகுதிக்கு கிடைத்ததென்பார்கள். மற்றவருக்கு கிடைத்தால் தெரிவு பிழை எனக் கூறுபவர்களும் உள்ளார்கள். எனவே இன்றைய படைப்பாளிகள்; வளர்ந்து வரும் படைப்பாளிகள் பல இடர்களை தாண்டியே பயணம் செய்யவேண்டும்.ஆனால் உங்கள் வலிமை மிக்க பேனாவால் வெற்றிவாகை சூடுங்கள்.

 

sk.risvi@gmail.com

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved. (தமிழ் ஆதர்ஸ்)