பித்தளை அல்ல, பொன்னேதான்! 

 

"முத்து! முத்துசாமி! முத்து!"

"அப்பா! ஏம்பா அழறீங்க, அப்பா"

"முத்து! நான் பாவிடா! நான் பாதகன்டா!!"

"அப்பா!- அழாதீங்கப்பா. நான் இனி இப்படிப்பட்ட தப்பு வழி போகமாட்டேம்பா ... சத்யமாச் சொல்றோம்பா"

" என்னைக் கொல்லாதடா, முத்து! என்னைக் கொல்லாதே..."

"என்ன கஷ்டம் வந்தாலும், அப்பா! திருடக்கூடா தப்பா... திருட்டுத் தொழில், ஈனத் தொழில் அப்பா. அப்பா! கூலி வேலை செய்யலாம்.... நாலு இடம் பிச்சைகூட எடுக்க லாம். திருட மட்டும் கூடாதப்பா.... அப்பா!"

"ஐயையோ! முத்து! நான் என்னடா சொல்லுவேன்.... எப்படிடா இதைத் தாங்கிக் கொள்வேன். முத்து! உன்னை இந்த நிலைக்கு ...."

"அப்பா! நான் திருந்திவிடுவேம்பா!.... கவலைப்படாதீங்க..... தங்கச்சிக்குச் சொல்லுங்க...!"

இவ்வளவு பேசுவதற்கு, போலீஸ்காரர் அனுமதி கொடுத்ததே ஆச்சரியம் - அவர்களுக்கும் குடும்பம், பிள்ளை , பாசம், இருக்கிறதல்லவா. அதனாலே, ஆறுமாதம் ஜெயில் தண்டனை பெற்று 'வண்டியிலே' ஏறப்போகும் மகனிடம், தகப்பன், சிறிது நேரம் கதற அனுமதி கொடுத்திருந்தனர்.

கோர்ட்டிலே கொஞ்சம் கூட அச்சம் அடக்கம் காட்டாதவன் அப்பனைக் கண்டதும் இப்படி அழுகிறானே, சத்தியம் கூடச் செய்கிறானே, இனி திருடமாட்டேன் என்று. இது அல்லவா ஆச்சரியம் என்று போலீஸ்காரர்கள் எண்ணிக் கொண்டனர்.

திருட்டுக் குற்றத்துக்காகத் தன் மகன் தண்டிக்கப்படுவதைக் காணும் தகப்பன் தத்தளிக்காமலிருக்க முடியுமா? பாபம், இந்தப் பெரியவர் அதனால் தான் கதறுகிறார் இப்படி என்று பேசிக் கொண்டனர், அருகே நெருங்கி வந்திருந்தவர்கள்.

"அம்மா சொல்லும்னு சொன்னயேப்பா, கவனமிருக்குதா, எனக்குத் தங்கக் காப்பு செய்து போடணம்னுஇதோ பார்த்தாயா, மாட்டி விட்டாங்க, இரும்புக் காப்பு..... இதைப் பாரப்பா, இதைப்பாரு! திருடினா இதுதான் ..... இது மட்டுந்தானா? ஊரே காரித்துப்பும்... ஜெயிலுக்குப் போன வன் என்கிற கேவலம் உள்ளத்தில் நாளைக்கும் இருக்கும்."

 

'முத்து!' என்று கதறியபடி அந்த முதியவர் தன் மகன் எதிரே விழுந்து அழுதார்! அவருடைய கரங்கள் அவன் காலருகே சென்றன. போலீஸ்காரர் தடுத்து நிறுத்தி முதியவரை அப்புறப்படுத்திவிட்டு அவனைப் போலீஸ் வேனில் ஏறச் செய்தனர். ஏறுவதற்கு முன்பு அவன் சுற்று முற்றும் பார்த்தான். ஒரு புளிய மரத்தடியில், ஒரு பெண் நின்று கொண்டு, முந்தானையால் தன் கண்களைத் துடைத்துக்கொண்டிருக்கக் கண்டான். புன்னகை செய்தபடி, அந்தப் பக்கம் பார்த்தான். 'முத்து! முத்து!' என்று முதியவர் கதறினார். போலீஸ் வண்டி கிளம்பி விட்டது.

"குடும்பத்துக்குக் கேவலத்தைத் தேடி வைக்கத்தானேடா, நீ பிறந்தே? உப்புப் போட்டுத்தானே சாப்பிடறே. உணர்ச்சி, மானாபிமானம் இருக்கவேண்டாமா ... இந்தக் குடும்பத்தைக் காப்பாத்த நான் மாடா உழைக்கிறேன். உனக்கு ஆகுது வயது இருவது. ஒரு வேலைக்கு இலாயக்கா. நீ உடம்பு வணங்கி ஒரு வேலை செய்தது உண்டா? உன் தங்கச்சி வயசுக்கு வந்து வருஷம் மூணு ஆகுது. அதுக்கு ஒரு கல்யாணத்தைச் செய்து வைக்கணுமே, எவன் கிடைப்பான் என்று நான் தவியாத் தவிக்கிறேன். உன்னுடைய யோக்யதை ஊர் சிரிக்கறதாலே ஒருபயலும் வரமாட்டேன் என்கிறானே, அவளைக் கட்டிக்க. ஏண்டா என் வயத்தெரிச்சலைக் கொட்டிக் கொள்றே."

மளமளவென்று வளர்ந்துவிட்டான். முத்துச்சாமி. ஆனால் ஒரு இடத்திலும் நிலைத்து வேலைக்கு இருப்பதில்லை. படிப்பு இல்லை; கூலி வேலை செய்வதுதான் என்று நிலை என்றாலும், யாராவது நாலு வார்த்தை ஏசிவிட்டால், அவனால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. கோபம் கோபமாக வரும். கண்மண் தெரியாமல் நடந்து கொள்வான்.

"வீட்டுக்கு அடங்காததை ஊர்தான் அடக்க வேண்டும்..." என்று பலர், அவன் காதில் விழுகிறபடி சொல்லுவார்கள். அவர்கள் இருந்த குப்பத்தில், மற்ற வீடுகளில், தங்கள் பிள்ளைகளை முத்துசாமியுடன் மட்டும் பேசக்கூடாது என்று கண்டிப்பான உத்திரவு போட்டு இருந்தார்கள் . அவனிடம் பேசவே, அவனை ஒத்த வாலிபர்கள் கூச்சப் படுவார்கள். அவனிடம் அந்த நிலையிலும், அன்பு காட்டி, சிரித்து விளையாடி பேசி வந்தது. அவனுடைய தங்கச்சிதான் - கூடப் பிறந்தது அல்ல - கூடப் பிறந்தது தனக்குக் கலியாணம் ஆகாமலிருப்பதற்குக் காரணமே, தன் அண்ணன்தான் என்று எண்ணிக் கொண்டு, முத்துவைக் கண்டவுடன் சீறும் சுபாவம் கொண்டுவிட்டிருந்தது. முத்துவிடம் பாசம் காட்டிப் பழகியது. எட்டு வயதுத் தங்கை - அப்பாவின் இரண்டாந் தாரத்துக்குப் பிறந்த பெண் .

"அவ புண்ணியவதி, இந்தக் கண்றாவியைப் பார்க்காமல் பூவோடும் மஞ்சளோடும் நல்ல கதிக்குப் போய் விட்டாள்," என்று சில நேரத்திலும், "அடிப் பாவி! என் தலையிலே இந்தச் சனியனைக் கட்டி விட்டு, பாடுபடுடாப் பாவின்னு சொல்லிவிட்டு நீ கண்ணை மூடிட்டே." என்று சில வேளைகளிலும் முத்துவின் தகப்பனார் அப்பாசாமி கதறுவார்.

 

அப்பாசாமி, முப்பது வருஷங்களாக ஒரே இடத்தில் ஒழுங்காக, நாணயமாக வேலை செய்து அடக்கமானவர் என்று பெயரெடுத்தவர். எட்டு ரூபாய் சம்பளத்தில் துவங்கி, அறுபது ரூபா வாங்கும் நிலைக்கு வந்திருக்கிறார், எளிதாக எவரையும் நம்பாத எம்பெருமாள் செட்டியாரிடத்தில்.

முதல் மனைவி, முத்து, மாணிக்கம் என்ற இரண்டு செல்வங்களை தந்துவிட்டு, மறைந்துவிடவே, அப்பர்சாமி வள்ளியை இரண்டாந்தாரமாகக் கொள்ள வேண்டி நேரிட் டது. எத்தனையோ நல்ல நல்ல இடமெல்லாம் வந்தது. எங்க அப்பன் வக்குவகை இல்லாம, என்னை இரண்டாந்தாரமாகக் கொடுத்து விட்டாரு என்று வள்ளி, கோபமாக இருக்கும்போதெல்லாம் குறைகூறிப் பேசுவதுண்டு. அப்பாசாமி, அவள் சொல்வதிலே உண்மை இருக்கிறது என்று மனதுக்குள் எண்ணிக் கொள்வார். வள்ளியின் பெண் தான் எட்டு வயது பட்டு. அந்தப் பட்டுவுக்குத்தான் முத்துவிடம் அவ்வளவு பாசம்.

"அண்ணாத்தை! வா! அப்பா, இல்லை; வா, சும்மா!" என்று வரவேற்கும் குரலே பட்டுவுடையதுதான்.

@அக்காவுக்குக் கூட உன் பேர்லே கோவம் அண்ணாத்தை. என்னைக்கூட, உன்கூடப் பேசக் கூடாதுன்னு சொல்லி இருக்குது" என்று 'சேதி சொல்லுவதும் பட்டு தான். பட்டுவை ஒரு நாள் பார்க்காவிட்டால் கூட, முத்துவுக்கு மனது சங்கடமாக இருக்கும். அவ்வளவு அன்பு வைத்து இருந்தான், அந்தச் சிறுமியிடம். வள்ளியால் ஆனமட்டும் மிரட்டிப் பார்த்தாகிவிட்டது; அடித்தும் பார்த்தாகிவிட்டது. பட்டு கட்டுப்படவே இல்லை. முத்துச்சாமியின் குரல் கேட்ட உடனே துள்ளிக் கொண்டு ஓடிப்போய், அவன் கழுத்தைப் பிடித்துக் கொண்டு வருவாள். முத்துவுக்கும், அந்தக் குடும் பத்திற்கும், தொடர்பு அடியோடு அறுபட்டுப் போகாம லிருந்ததே, பட்டு காட்டி வந்த பாசத்திலேதான்."

முத்துச்சாமி படிப்பிலே நாட்டம் காட்ட முடியாது போகவே, தச்சுத் தொழில், அச்சுத் தொழில், கட்டடத் தொழில் என்று பலவற்றிலே நுழைந்தான். எந்த இடத்திலும் தன்னிடம் அன்போ, அக்கரையோ எவரும் காட்ட முன் வராததையும், எதற்கெடுத்தாலும் ஏளனம் பேசவும் ஏசவும். அடிக்கவும் உதைக்கவுமே பலரும் துடித்தனர் என்பதையும் கண்டுகொண்ட பிறகு, முத்துவுக்கு ஒரு வெறுப்புணர்ச்சியே வளர்ந்துவிட்டது. இந்த உலகத்தில் தன்னை வாழவைக்க ஒரு வருக்கும் மனம் இல்லை என்று முடிவுக்கு வந்தான் . , எறும்பு இவைகளைக் கண்டவர்கள் அடிக்கவாவது செய்கிறார்கள்; இல்லை என்றால் எப்படியோ ஆகட்டும் என்று விட்டுவிடுகிறார்கள். அதுபோல, மனித உருவத்தில் தன்னைக் காண்கிறார்களே தவிர, எறும்புக்குச் சமம் என்றுதான் ஒதுக்கித் தள்ளுகிறார்கள் என்று எண்ணிக் கொண்டான். முதலில் கோபம், வருத்தம் ஏற்பட்டது. பிறகு அந்த உணர்ச்சிகள் மறைந்துவிட்டன. ஒரே வெறுப்பு, உலகத்திடம் ஒருவித மான துணிவு! எவரும் தன்னை எதுவும் செய்ய முடியாது! என்ற துணிவு.

 

மூங்கிலை, பயன்படும்படியாக வளைத்து வைக்க, அது இளசாக இருக்கும்போது முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பார்கள் அல்லவா! சிறுவனாக இருக்கும் போதே, முத்துச்சாமியைப் பக்குவப்படுத்தி இருக்க வேண்டும். அதற்காக அப்பாசாமிக்கு நேரம் இருந்தது. எலும்பு முறிய, விடியற் காலையிலிருந்து விளக்கு வைக்கும் வரையில் பாடுபட்டாலும், ’சோம்பேறி ! தடிக்கழுதை!’ என்று ஏசுகிறார். நேரம் ஏது, மகனுக்கு நல்வழி இது; தீது இது என்று எடுத்துக்காட்ட முறையாக எடுத்துச் சொல்ல, திறமை உண்டா அப்பாசாமிக்கு என்பதேகூடச் சந்தேகம். உருட்டி மிரட்டி, தட்டித் தடவி, மகனை வளர்க்கவே நேரம் கிடைப்பதில்லை .

'உன் மகன் செய்த அக்ரமத்தைக் கேட்டயா...’ என்று வள்ளி சொல்ல வருவாள்; 'உன் பிரசங்கத்தைக் கேட்க எனக்கு நேரமில்லை! எஜமானர் எலுமிச்சம் பழம் வாங்கி வரச் சொல்லிவிட்டார். இலுப்பூர் சந்தைக்குப் போயாகணும்!' என்று கூறிக்கொண்டே , அப்பாசாமி ஓடுவார்; இரண்டொரு தடவை 'நல்லபடி சொல்லியும் பார்த்தார்; அடித் தும் பார்த்தார்; முத்துச்சாமி திருந்துவதாகக் காணோம்.

அப்பாசாமியை எஜமானர் எம்பெருமாள், கேவலமாகப் பேசுவதும், கொடுமைப் படுத்துவதும், சிறுவன் முத்துச் சாமிக்கு அடக்கமுடியாத ஆத்திரத்தைக் கொடுத்து வந்தது.

பெரியவர்களிடம் மரியாதையாகப் பேசவேண்டும் என்று தனக்கு அப்பாசாமி புத்தி கூறிவருகிறார். எம்பெருமாளுக்கு முப்பது வயதுதான் இருக்கும்; அப்பாசாமிக்கு ஐம்பதுக்கு மேல் ஆகிறது. ஆனால் அப்பாசாமியை எம்பெருமாள், எவ்வளவு கேவலமாகப் பேசுகிறான்; பேசலாமா? -- மரியாதை காட்ட வேண்டாமா, வயதில் பெரியவர் என்பதற்காக காட்டக்காணோமே! அடிக்கக்கூடச் செய்கிறானே! இது அக்ரமம் அல்லவா! இதை யாரும் கேட்கமாட்டேன் என்கிறார்களே!' என்று முத்துச்சாமியின் பிஞ்சு உள்ளம் எண்ணிக் குமுறும். பணம் படைத்தவர்களானால், அவர்கள் பொது நீதிகளுக்குச் கட்டுப்பட்டு நடக்கவேண்டியதில்லை என்ற தெளிவு முத்துச்சாமிக்கு பதினெட்டு வயதுக்குத்தான் பிறந்தது.

"சோம்பேறி! தடிக்கழுதை!" என்று ஒருநாள் எம்பெருமாள் அப்பாசாமியைத் திட்டியதைக் கேட்டுக் கொண்டி ருந்த முத்துச்சாமியால் கோபத்தை அடக்கவே முடியவில்லை. 'நீதான் கழுதே! நீதான் சோம்பேறி!' என்று எம்பெருமாளைப் பார்த்துக் கூச்சலிட்டுவிட்டான். 'என்ன சொன்னே!' என்று எம்பெருமாள் கூச்சலிட்டார். பாய்ந்து சென்று முதுகு பிய்ந்து விடும்படி அடித்துவிட்டான், அப்பாசாமி. எட்டு வயது முத்துச்சாமியை ; 'போதும்! விட்டுத்தொலை! சிறுவன்!' என்று ஒப்புக்குக்கூடச் சொல்லவில்லை எம்பெருமாள், 'பிள்ளையை வளர்க்கற இலட்சணம் இதுதானா! இது உதை பட்டு, அடிபட்டு, ஊர்ப்பொறுக்கி, ஆகப்போகுதுப்பார்!’ என்று சாபமே கொடுத்தார் எம்பெருமாள்.

 

அடங்கி ஒடுங்கி அப்பாசாமி, எம்பெருமாள் எதிரே நிற்பதைப் பார்க்கும்போது எல்லாம், முத்துச்சாமிக்கு, அடக்க முடியாத கோபம் வரும். ஒருநாள் பக்கத்துச் சாவடியில் சில பேர் சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான் முத்து என்று கேள்விப்பட்டு அப்பாசாமி அன்று சிறுவனை அடி அடி என்று அடித்தார். முத்து பார்க்கிறான், எம்பெருமாள் சீட்டாடுகிறார் நண்பர்களுடன். அவருடைய மகன், எட்டு வயதுச் சிறுவன், 'இதைப் போடு! அதைப் போடாதே!' என்று சொல்கிறான். மகனுடைய அறிவை மெச்சி எம்பெருமாள் முத்தம் கொடுக்கிறார். என்ன உலகமடா இது! எனக்கு எதெது கூடாது என்று அப்பா சொல்லுகிறாரோ, அவைகளெல்லாம் எம்பெருமாளின் உலகத்திலே நடக்கின்றன. கண்டிப்பார் இல்லை. தண்டனை தருவார் இல்லை! நீதி நியாயம் என் றால் எல்லோருக்கும் பொதுவாக அல்லவா இருக்க வேண்டும் என்று முத்துச்சாமி நினைத்துக் கொண்டு கோபம் அடைவான். வெகுநாளைக்குப் பிறகுதான், நீதி நியாயம் இப்படி இருக்க வேண்டும் என்று எடுத்துச் சொல்ல எம்பெருமாளின் உலகமும், கேட்டு நடந்திட அப்பாசாமியின் உலகமும் இருக்கிறது என்ற உண்மையைத் தெரிந்து கொண்டான். இந்த இரண்டு உலகங்களிலும் தனக்கு இடம் இல்லை என்று கண்டு கொண்டான் முத்து! மூன்றாவது உலகத்திலே இடம் பெற்றான்; போக்கிரிகளின் உலகத்தில்.

"நான் எத்தனை அன்பு காட்டினாலும் இந்த உலகம் நம்பவாப் போகுது. மூத்தாளோட பிள்ளைகளை இளையா கொடுமை செய்கிறார் என்றுதான் சொல்லப்போகுது. தப்பு செய்யும் போது அடிக்க வேணும். தொட்டா போதும்; தெருக்கோடி கேட்கிறபடி கூச்சலிட்டுக் கொண்டு ஓடுவான். ஊர் என்னைச் சபிக்கும்; நமக்கு வேண்டாம் அந்தக் கெட்ட பேரு. அவங்க அப்பாரே பார்க்கட்டும், கேட்கட்டும், வெட்டிப் போடட்டும். நான் தொட்டு அடிக்கவே மாட்டேன். ஒரு நாள் அடிச்சதுக்கு, பக்கத்து வீட்டுப் பொக்கைக் கிழவி வந்து விட்டாளே, எனக்கு புத்தி சொல்ல. 'வள்ளி! முத்து தாயில் லாத பையன்! கொடுமை செய்யாதேம்மா' என்று. நமக்கு எதுக்கு வீண் வம்பு. அது என் வயத்திலே பொறந்ததா இருந்தா, உடம்புத் தோலை உறிச்சி உப்புத் தடவுவேன். அடங்காதது ; இருந்தா என்ன, செத்தா என்ன?"

சலிப்பு, கோபம், எரிச்சல், ஏழ்மை இத்தனை நோய் களுக்கு ஆளான வள்ளியால் இப்படித்தான் பேச முடிந்தது.

 

ஆகவே முத்துச்சாமி கெட்டுப் போவதைத் தடுக்க தக்க சூழ்நிலை ஏற்படவில்லை. பட்டுவுக்காக மட்டுமே முத்து வீட்டுக்கு வருவான். ஏதாகிலும் விளையாட்டுச் சாமான், தின்பண்டம் கொடுத்துவிட்டுப் போய்விடுவான். இதைத் தடுக்கப் பார்த்து, முடியாதுஎன்பதால், விட்டுவிட்டாள் வள்ளி. மேலும், - முத்து கொண்டு வந்து கொடுத்த விளை யாட்டுச் சாமான்கள் நன்றாகவும் இருந்தன ! போக்கிரி! ஊர் சுற்றி! வீட்டுக்கு அடங்காதது என்று பெயரெடுத்தானே தவிர முத்து திருடன் என்ற பெயர் மட்டும் எடுத்ததில்லை. வள்ளி மட்டும் கோபம் அதிகமாகும்போது கூச்சலிடுவாள். ’அது திருடிவிட்டு ஜெயிலுக்குப் போகாவிட்டா என் பேரை மாத்தி வைச்சிக்கறேன், பாரு, நீ வேணும்னா என்று.

வேலை வெட்டி ஒழுங்காகச் செய்யாமல், வீட்டுக்கு அடங் காமல் இருந்து வந்த முத்து, எம்பெருமாள் செட்டியார் வீட்டில் நாலு தங்க வளையல்கள் திருடிவிட்டு, பிடிபட்டு ஜெயிலுக்குப் போனது பற்றி, அந்த ஊரில் யாரும் ஆச்சரியப் படவில்லை. அப்படித்தான் நேரிடும் என்று ஊர் பேசிற்று. முத்துவும் குற்றத்தை மறுக்கவில்லை.

"திருடினதை ஒப்புக் கொள்கிறாயா?"

"ஆமாம்; திருடினேன்"

"ஏண்டா , திருடினே?"

என்ன கேள்வியய்யா இது? எப்படித் திருடினேன்னு கேட்டாலும் அர்த்தம் இருக்கும். ஏன் திருடினேன்னு ஒரு கேள்வியா! இல்லை. திருடினேன். அங்கே, இருந்தது திருடி னேன் . வேணும்; திருடினேன். கேட்டா, கொடுக்கமாட்டாரு; திருடினேன்."

கோர்ட்டிலே பலர் சிரித்தே விட்டார்கள். முத்துச்சாமியே இதைக் கேலிக் குரலிலே சொன்னானே தவிர கோபக்குரலில் அல்ல. அப்பாசாமி தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஒரு மூலையில் நின்று கொண்டு இருந்தார்.

இது முதல் குற்றம் என்பதால் ஆறு மாதம் கடுங்காவல் என்று மாஜிஸ்ட்ரேட் தீர்ப்பளித்தார். முத்து கண்ணீர் சிந்தியபடி நின்று கொண்டிருந்த அப்பாசாமியைப் பார்த்து 'அழாதே! அழாதே!' என்று கூறுவது போலத் தலையை அசைத்தான்.

எம்பெருமாள் செட்டியார் வீட்டுத்தோட்டத்தில் மரம் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றியும் மாடு கன்றுகளை மேய்த் துக் கொண்டும் இருந்த மொட்டையன் பெண் குட்டி அம்மாள், முத்துச்சாமியிடம் மனதைப் பறி கொடுத்துவிட்டிருந்தாள். அவளைக் காண ஒருவரும் அறியாமல் முத்து, தோட்டத்துக் குப் போவான். அவள் போடும் பழைய சோற்றை, பால் பாயாசம் போலச் சுவைத்துச் சாப்பிடுவான்; அவள் சொல் லும் புத்திமதிகளைக் கோபப்படாமல் கேட்டுக் கொள்வான்.

"இத்தனை பெரிய உலகத்திலே, உனக்கு மட்டும்தானா கிடைக்கல்லே ஒரு வேலை. கட்டிக்க, கட்டிக்கன்னு சொல் றியே, உன் புருஷன் என்ன வேலை செய்யறாருன்னு யாராச் சும் கேட்டா என்ன சொல்ல?"

"எம்பெருமாளு போலத்தான், எம் புருஷனும் ஒரு இடத் திலே, கைகட்டி வேலை செய்யறதில்லைன்னு சொல்லு."

 

'நல்லா இருக்குது உன் பேச்சு. அவருக்கு இருக்குது இலட்ச இலட்சமாப் பணம்; உட்கார்ந்துகிட்டு ஒரு வேலை யும் செய்யாம சாப்பிடம் முடியும். நீ அப்படியா....?"

"அப்ப, இருக்கறவங்களுக்கு ஒரு நியாயம், இல்லாத வங்களுக்கு வேறே ஒரு நியாயம்னு சொல்லு."

"இதெல்லாம் பேச எனக்குத் தெரியாது - என்னை கட்டிக் கிட்டா, நல்லபடி வாழவைக்க உனக்கு வகை இருக்குதா - இல்லையா, அதைச் சொல்லு."

இவ்விதமான பேச்சு நடக்கும் முத்துச்சாமிக்கும் குட்டி யம்மாளுக்கும்; கோபம் துளியும் வராது முத்துவுக்கு - அந்தப் பெண்ணின் பேச்சிலே அவ்வளவு பாகு கலந்து இருக்கும்.

அன்று இரவு கூட, அவளிடம் பேசிக் கொண்டு இருக் கத்தான் முத்து சென்றான்; யாரோ தோட்டத்துப் பக்கம் வருவது தெரிந்ததும், வேறு பக்கம் ஓடாமல் வீட்டின் மொட்டை மாடி மீது தாவினான் அங்கு ஒளிந்து கொள்ள இடம் வசதி யாக இல்லாததால், அங்கு இருந்த அறைக்குள் நுழைந்தான். அது எம்பெருமாளுடைய படுக்கை அறை . பதறிப் போனான் முத்து. காலடிச் சத்தம் கேட்டதும், மேலும் பயந்து, அங்கு போடப்பட்டிருந்த கட்டிலடியில் படுத்துக்கொண்டு கட்டை போலாகி விட்டான். உள்ளே ஒருவர் நுழையக் கண்டு, தீர்ந்தது : பிடிபட்டுவிடுவோம் என்று எண்ணிக் கொண் டான். பயத்தால், வியர்த்துவிட்டது. உள்ளே நுழைந்த உருவமோ, கதவை மெதுவாகச் சாத்திக் கொண்டு, பதுங் கிப் பதுங்கி , நடந்து அங்கு இருந்த இரும்புப் பெட்டியைத் திறக்கக் கண்டான். முத்துவுக்கும் சிரிக்கலாம் போலத் தோன்றிற்று. அந்த உருவம் இரும்புப் பெட்டியில் இருந்த நகைப் பெட்டியை எடுத்து, அதில் இருந்த நாலு தங்க வளை யல்களை எடுத்து, மடியில் பத்திரப்படுத்திக் கொள்ளக் கண்டான். உற்றுப்பார்த்தான் முகத்தை . பதறிப்போனான். இரும்புப் பெட்டியைப் பழையபடி பூட்டி விட்டு, அந்த ஆள் வெளியே சென்றுவிட்டான். சில விநாடிகள் முத்து எழுந் திருக்கக்கூட இல்லை ; திகைத்துப் போயிருந்தான். பிறகு, மெள்ள எழுந்திருந்து, இரும்புப் பெட்டியிலிருந்து வளையல் களைக் களவாடியவன், அவசரத்தில் அங்கு போட்டுவிட்ட மேல் துண்டை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான். ஒருவரும் தன்னைப் பார்க்கவில்லை என்பது முத்துவுக்குத் தெரிந்தது. என்றாலும், உடனே அந்த இடத்தைவிட்டுச் சென்றுவிடாமல், ஏதோ யோசித்தபடி இருந்தான். சில விநாடிகளில், ஏதோ ஓர் முடிவுக்கு வந்து, அங்கு கிடந்த ஒரு நாற்காலியைத் தூக்கிக் கீழே போட்டான். சத்தம் பல மாகக் கிளம்பவே, 'யார்? யார் அங்கே' என்ற குரல் கிளம் பிற்று. எம்பெருமாளின் குரல் என்பது முத்துவுக்கு விளங்கி விட்டது. அவன் முகத்திலே ஒரு தனியான ஒளி பிறந்தது. மாடி மீது இங்கும் அங்கும் ஓடலானான். 'திருடன் திருடன்! என்று எம்பெருமாள் கூவினார் - வேலையாட்கள் எங்கே? எங்கே?' என்று கேட்டபடி, மாடிப் பக்கம் ஓடி வந்தனர். முத்து, தோட்டத்துப் பக்கம் குதித்தான் - 'அதோ! அதோ! என்று கூவினர் வேலையாட்கள்; முத்து ஓடலானான் - வேலையாட்கள் துரத்தினர் அவர்கள் தன் ைன த் தொடர்ந்து வருவதைப் பார்த்தபடி, முத்து வேகமாக ஓடியபடி இருந்தான். இதற்குள், தெருவில் ஒரே பரபரப்பு ஆகிவிட்டது. இதற்குள் போலீசும் வந்துவிட்டது; முத்துவை போலீஸ் துரத்திற்று. முத்து குறுக்குச் சந்துகளிலே நுழைந்து ஏரிக்கரைப் பக்கம் சென்றுவிட்டால் தப்பித்துக் கொள்ளாலாம். ஆனால் அவன் நேரே நெடுஞ்சாலை வழியே ஓடிக் கொண்டே இருந்தான்; போலீஸின் பார்வை அவன் மீது பட்டபடி இருந்தது. முத்து நேரே தன் வீட்டுக்குள் நுழைந்தான். கதவைத் தாளிட்டுக் கொண் டான். அப்பாசாமி அவனைக் கண்டதும் அலறிக் கொண்டு எழுந்தார். அவருடைய கரத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டு, கூடத்து அறைக்குள்ளே போனான். ஒரு மேல் துண்டை அவர் முன் வீசி எறிந்துவிட்டு உடனே ! உடனே! போலீஸ் வந்து கொண்டே இருக்கிறது எடு! எடு!" என்றான். அப்பாசாமி திகைத்திடக் கண்டு அப்பா! போலீஸ் வந்து விட்டது; அதோ கேள் சத்தம், தெருக்கதவைத் தட்டுகிறார் கள்' என்று கூறினான். அப்பாசாமியின் கண்களில் நீர் தளும் பிற்று. ஒரு பழைய துணி மூட்டையைக் காட்டிவிட்டு தலை யின் மீது கைவைத்துக் கொண்டு ஒரு மூலையில் உட்கார்ந்து விட்டார். மூட்டையிலிருந்து வளையல்களை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்ட முத்துசாமி, தெருக்கதவைத் திறந்தான்; போலீஸ்காரர்கள், அவன் மீது பாய்ந்தனர். பதற் வுமில்லை, பயப்படவுமில்லை முத்து. நிதானமாக, அவர் களைப் பார்த்து, "ஏன்! என்னைத்தானே தேடிக்கிட்டு வந் தீங்க? சரி வாங்க என்று கூறினான். போலீஸ் கொட்டடி சென்றதும், வளையல்களை அதிகாரியிடம் கொடுத்துவிட்டு, களவாடியது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டு வாக்கு

மூலம் கொடுத்தான்.

"ஏன்யா! அப்பாசாமி! நான் சொன்னனே கேட்டயா. அந்தப் பயலை, வீட்டிலே சேர்க்காதே! உனக்கு அவமானத்தைத் தேடிவைத்து விடுவான்னு சொன்னனே, கேட்டயா! இங்கேயே காட்டிவிட்டானே , அவனுடைய கைவரிசையை! பார்த்தாயா.... எவ்வளவு கேவலம் உனக்கு? எவ்வளவு தலை இறக்கம்... இப்படிப்பட்டதுகளை வெட்டிப்போடணுமய்யா, இந்த மாதிரியா ஒரு பிள்ளை இருக்கறதைவிட சாகட் டுமே...' என்று எம்பெருமாள் ஆத்திரத்துடன் பேசினார். அப்பாசாமி. அவர் காலில் விழுந்து,

"ஐயோ! வேண்டாமுங்க. உங்க வாயினாலே பையனை ஒண்ணும் சொல்லிவிடாதிங்க" என்று கெஞ்சி னார். எம்பெருமாள், பிள்ளைப் பாசம் இருக்க வேண்டியது தான். ஆனா இது போல இருக்கிற திருட்டுப் பயல்களை, பிள்ளைன்னு சொல்லிக் கொள்வது கூட உன்னைப்போல நாணயஸ்தனாக வாழ்ந்து வருகிறவனுக்குக் கேவலமய்யா" என்று கூறினார். அப்பாசாமி தலை தலை என்று அடித்துக் கொண்டு அழுதார்.

எவ்வளவு பேசினாலும் வள்ளியை ஒரு நாளும் கை நீட்டி, அப்பாசாமி அடித்ததில்லை; கோர்ட்டிலிருந்து வீட் டிற்கு வந்த அன்று குடும்பத்துக்குத் தீங்கு தேடி விட்டானே

முத்து என்று வள்ளி ஏசிப் பேசியபோது ஆத்திரம் கொண்டு அப்பாசாமி அவளை அடித்துவிட்டார்.

 

ஒரு வார்த்தை பேசாதே அவனைக் குறித்து .... அவனை ஏச உனக்கு என்னடி யோக்யதை இருக்குது.... அவன் திருடி ஜெயிலுக்குப் போனான்னு . கேவலமாப் பேசாதே... முத்துவைப் பற்றி ஒரு வார்த்தைகூடக் கேவல மாப் பேச , நான் இடம் கொடுக்கமாட்டேன் ." என்று அப்பா சாமி ஆவேசம் வந்தவர் போலப் பேசக் கேட்ட வள்ளி, மகன் திருடிவிட்டு ஜெயிலுக்குப் போனதாலே மனது குழம்பிப் போய்விட்டது என்று எண்ணிக் கொண்டாள்.

ஒருவரிடமும் ஒன்றும் பேசாமல், அப்பாசாமி, கண்ணீர் சிந்தியபடி மூலையில் உட்கார்ந்து கொண்டார். வள்ளிக்கோ அவரிடம் சொல்லியே தீர வேண்டிய முக்கியமான விஷயம் இருந்தது. சமாதானமாகப் பேசிப் பார்ப்போம் என்று .......

"அழாதிங்க .... என்னமோ நம்மோட போறாத வேளை தான், முத்துவுக்கு கெட்ட புத்தியைக் கொடுத்தது. கலங் காதிங்க. நம்மோட கஷ்டம் இத்தோட போயிடும் பாருங்க . அவனும் திருந்தி நல்லவனாயிடுவான்" என்று கூறி அப்பா சாமிக்கு காப்பி கொடுத்தாள். அப்பாசாமி அதைச் சாப் பிடக்கூட இல்லை .

"ஒரு விஷயம் தெரியும்ங்களா... நம்ம வீட்டிலேயே பழைய சாமான்களிலே, சின்ன தாம்பாளத்தட்டு இல்லிங்க , அக்கா பூஜைக்கு உபயோகப்படுத்தும்னு சொல்விங்களே, பித்தளைத்தட்டு - அது பித்தளை இல்லிங்க , பொன்னுங்க பொன்னு ..."

அப்பாசாமி, வள்ளியை உற்றுப் பார்த்தான். வள்ளி உள்ளே இருந்து பளபளப்பான தாம்பாளத் தட்டைக் கொண்டு வந்து அவனிடம் காட்டி,

"பித்தளைத் தட்டுன்னு எண்ணிக் கொண்டமே, அது தானுங்க இது. எங்க அண்ணன் வந்தது; அது நகை கடை யிலேதானே வேலை பார்க்குது! அது பார்த்துவிட்டு வள்ளி, வள்ளி! இது பித்தளைன்னு யாரு சொன்னது உனக்கு? இது அசல் தங்கமாச்சே! மெருகு போடாததாலே இப்படி பித்த ளை போல இருக்குன்னு சொல்லி, எடுத்துக்கிட்டுப் போயி, மெருகு போட்டுகிட்டு வந்து கொடுத்தது. தங்கம்ங்க, இந்தத் தாம்பாளம்! இதைப்போயி, நாம் பித்தளைன்னு எண்ணிக் கொண்டு ஏமாந்துகிடந்தமே இத்தனை காலமா' என்று விவரம் கூறினாள்.

தாம்பாளத்தைத் தன் கரத்தில் வாங்காமலேயே அப்பா சாமி மெல்லிய குரலில், ஆனால் மிக உருக்கமாகச் சொன்னார்.

"ஆமாம் வள்ளி! அசல் தங்கம் தான் - எதை நாம் பித்தளை என்று எண்ணிக் கொண்டு இருந்தமோ, அது பித்தளை இல்லை ; அசல் தங்கம்."

வள்ளிக்கு ஒன்றும் புரியவில்லை.

 

-----------------------

'காஞ்சி' பொங்கல் மலர் 1965

 

 

 

 


Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamil Authors(தமிழ்ஆதர்ஸ்)