"பாபநாசம்" (திரை விமர்சனம்)
 

வித்யாசாகர்

 

வாழ்தலின் நேசமிந்த பாபநாசம்..


குடும்பமென்பது ஒரு ரசிக்க ரசிக்க உள்புகுந்து உலகமாய் விரியும் ஆழக்கடலுக்கும் மேலானது. அதன் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. ஒரு சிரிப்பிலிருந்து சின்ன கூப்பிலிருந்து கட்டி அணைத்தலில்கூட வேண்டாம் ஒரு சிறியப் பார்வையின் புன்னகையில் குடும்பம் உயிர்ப்பித்துக் கொள்கிறது. கண்ணியமான உண்மை நிறைந்த அன்புகூடிய அத்தனையும் குடும்பத்தின் அழகுக்கான அம்சங்களாகி விடுகின்றன. அம்மா திட்டியது அப்பா அடித்தது அண்ணன் தம்பிகள் சண்டைப் போட்டது அக்கா தங்கை போராட்டம்கூட நினைக்கையில் இனிக்கச்செய்யுமெனில் அது குடும்பத்துள்தான் சாத்தியம். நட்பாகவும், கடமைக்காகவும், கட்டாயம் என்பதெல்லாமும் ஒருபக்கமிருந்தாலும், பிறப்பால் உறவென்னும் சங்கிலிக்குள் கட்டுப்பட்டு அன்பூறிய வார்த்தைகளாலும்கூட மனிதர்கள் நிறைவோடு வாழஇயலுமெனில்’ அது குடும்பத்துள் மட்டுமே யதார்த்தமாய் நிகழ்கிற ஒன்றாகவே இருக்கிறது..

எங்கே சண்டையில்லை? யாருக்கு சொற்கள் வலிக்கவில்லை? கசக்காத பொழுதின்றி யாருக்கிங்கே நாட்கள் வருவதும் போவதும் நிகழ்கிறது? அது வேறு. கருத்துக்குள் ஒத்துப்போவாது செய்கையால் முட்டிக்கொள்வது வேறு. அதற்கிடையேயும் மனதால் ஒட்டிக்கொள்ளமுடியுமெனில் அன்பினால் பார்வையுள் பூத்துக்கொள்ளமுடியுமெனில், ‘போ போகட்டும் போ எனக்கு நீ முக்கியமென்று’ எல்லாமுமாய் ஒருவரை ஏற்றுக்கொள்ள இயலுமெனில் அது உறவினால்’ ஒற்றைக் குடும்பத்துள்தான் மிகஇலகுவாய் நடந்துவிடுகிறது.

உறவேனில் எந்த உறவானாலென்ன; அது நடபுறவானாலென்ன, பிறப்பினால் வந்த உறவானாலென்ன அன்பினால் கட்டிக்கொள்ளும் அத்தனை மனதும் குடும்பத்துள் அழகுதான். நேர்மையோடு சந்தித்தல் நேர்த்தி தான். பார்க்கும்போது கண் அசையாமல், மனசு சலிக்காமல் பார்க்கமுடிகிற உறவினோடு வாழ்தல் நட்பாயினும் சரி’ உறவாயினும் சரி’ பரமசுகமில்லையா அது..(?)

நமக்கெல்லாம் உண்மைக்கு அப்பாற்ப்பட்ட நிறைய கதைகள்வழியே தர்மமும் வாழ்க்கையும் போதிக்கப்பட்டுவிட்டது. அதனால்தான் சிலநேரம் நல்ல மனிதர்களையும், உண்மையின் ஆழம்மிகு அழகையும், அறிவின் வழி சிந்திப்பதன் நேர்த்தியையும் விட்டுவிட்டு, கைக்கெட்டா கற்பனையின் தூரத்தில் நிற்கும் எல்லாவற்றோடும் நெருங்கி நெருங்கியிருக்க முனைவதில் வாழ்வதை அப்பட்டமாய் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.

வேறொன்றுமில்லை, பொய்யில்லா உறவு, பொசுக்கென கோபம் வந்தாலும் மன்னிக்கும்’ மறக்கும்’ மன்னிக்கக்கேட்கும் மனசு, இதுபோதும் என்றுணரும் இரு இதயங்களின் ஆத்மார்த்த அன்பு, அருகருகில் உயிராக ஒட்டியிருக்கும்’ தொட்டுக்கொள்ளும் இருவேறு பிறப்பின் ஸ்பரிசத்தின் சிநேகம், வா வாவென வாஞ்சையோடு உயிர்களைக் கட்டியணைத்துக்கொள்ளும் வாழ்க்கை எத்தனை வரம் தெரியுமில்லையா..?

பட்டாம்பூச்சி பார்க்கிறோம்.. பச்சை பசேலென வயல்வெளி பார்க்கிறோம்.. கிளிகள் குயில்கள் காகம் கரைவதை மற உச்சியில் நிற்பதைப் பார்க்கிறோம், மேகங்கள் அசைந்து நகர்வது, கடல் அகன்று விரிந்து கண்முன் இரகசியம் பூப்பிப்பது, ஆழ்கடல் மௌனத்தை வானமும் உணர்வினோடு முணுமுணுப்பதைக் காண்கிறோம்; இதோடெல்லாம் இணைந்த அழகாய் பிரம்மிப்பாய் நாமும் நமை கண்கள் பணிக்கப் பணிக்கத் தாங்கும் இதயங்களாய் நமை நாமே ஏந்திக்கொள்ள வேண்டாமா ?

மலை கடல் காற்றாக அனைத்தின் பிம்பமாகப் பிறந்த நமை நாம் அறிய வேறென்ன வேண்டும்? பொய்யின்றி இருப்போம் போதும். நடுநிலை தொலைக்காமல், பிறப்பின், வாழ்தலின் அனுபவ மிச்சமாய் இருப்போம் போதும். யாருடைய சிந்தனையினாலும் தள்ளிக்கொண்டுப்போயிடாத அறிவோடு, எல்லோரின் பாடத்தாலும்’ நேர்வழியில்’ யாருக்கும் வலிக்காமல் நடப்பதோடு நின்றுக்கொள்வோம். இந்த யுகமெல்லாம் வாழ்வெல்லாம் நமக்கு வரமாய் அன்பாய் பனிச்சாரல் வீசும் மனதின் குளிர்மையாய், சிலிர்ப்போடு வீசும் காற்றுப்போல மனதுள் அன்பினோடு வீசி உணர்வுகளுள் உறவுகளாய் உயிராய் பச்சை பசேலென நனைந்திருக்கட்டும்.

ஒரு தனிமனித வாழ்க்கை என்பது ஒரு விதையிலிருந்து முளைக்கும்; மரம், கிளை, இலை, பூ, காய், கனி, கணிக்குப்பின் மீண்டும் விதையென, பிறப்பிலிருந்து இறப்பிற்குள் அடங்கியுள்ள முடிவேயில்லா ஆரம்பத்தின், நிலைத்த வாழ்தலின், நித்தியப் பிரம்மாண்டமாய், இப்பேரண்டம் அழியாதிருப்பதன் ஒரேயொரு சாட்சியாக விளங்குவதை குற்றத்துள் புதைந்துப் போகும் மனிதர்களால் அறிய முடிவதில்லை.
எனவே நல்லவை என்பதன், அறம் என்பதன், நேர்மை என்பதன், உண்மை என்பதன் பாத்திரத்தை குற்றமற்ற ஒருவரால் பார்க்க எத்தனித்த மனிதப் பிறப்பு தனது சாயல்களை வைத்து’ மாதிரிகளை வைத்து’ கற்பனையினாலும், வாழ்பனுபவத்தாலும், உள்ளிருக்கும் வெளிப்படாத அதீதத் திறனாலும் வேறொரு உலகை பிறப்பை வாழ்தலை ஒத்திகைப்பார்த்துக்கொள்ள, அசைப்போட்டுக்கொள்ள, அடங்கா ஏக்கத்தை அகற்றிவிட, நிறைவேறாத பல ஆசையினைத் தீர்த்துக்கொள்ள, நடப்பதை நடந்ததை நிகழ்காலப் பதிவாய்ப் பதிந்துவைக்க செதுக்கி செதுக்கி செய்த சிற்பத்திற்கீடுதான் இன்று நம்மிடையே இருக்கும் பொக்கிஷமான இந்த திரைக்கலை வடிவம் எனலாம்.

அந்தத் திரைக்கலையின் பார்வையினுள் அவர்கள் பார்ப்பது வேறு உலகம் நமக்குக் காண்பிப்பது வேறு உலகம் என்றில்லாமல், அவர்கள் எண்ணியதை நம்மைப் பார்க்கவைக்கும் புள்ளியில்தான் வெற்றியடைந்துவிடுகிறது சில உச்சத்தில் நிற்கத்தக்கத் திரைப்படங்கள் எனில்; அதில் காக்காமுட்டைப் போன்றத் திரைப்படங்களோடுச் சேர்த்து இந்த பாபநாசத்தையும் இருமுதலாய்க் குறித்துக் கொள்ளலாம்.

படம் முழுக்க முழுக்க அழகு. ஒவ்வொரு சட்டமும் அழகு. ஒவ்வொரு காட்சியும் உள்ளே உயிரோடு நினைவாகப் பூத்துகிடக்கிறது. அங்கே படம் முடிந்ததும் விட்டுவந்த அத்தனைப் பாத்திரமும் நம்மோடு வீடுவரை வந்து, இரவினுள் உறங்கி, மறுநாள் எழுந்தப்போதும் மறதியை விலக்கிக்கொண்டு, நினைவின் மிக அருகாமையில் அமர்ந்துக்கொள்கிறது, இந்த பாபநாசம் திரைப்படம்.

கமலை மறப்பதா, கெளதமியை மறப்பதா, அந்தப் பிள்ளைகளை மறப்பதா, அந்த டீக்கடைக்கார பாய், பெருமாள், ஊர், வசனம், கேமரா, பாபநாசத்து மலைகள் மரங்கள்.... யாரை மறப்பது?

ஒரு திரைப்படம் இத்தனை மனதுள் ஒட்டிக்கொள்கிறது எனில், அது நம்மை அதனுள்ளே பிரதிபலித்துள்ளது என்று அர்த்தமில்லையா? ஒரு மகள் “அப்பா நான் இன்னைக்கு ஆய் போயிட்டேன்னு மழலை மாறாது சந்தோசமா சொல்றா, அதற்கு அப்பாடான்னு ஒரு பெருமூச்சு விடுகிறார் அப்பா எனில்; அந்த மகள்களின் அவஸ்தைகளுக்கு அப்பாலிருக்கும் சிரிப்பைத் தேடும் அப்பாக்களுக்கு இந்தத் திரைப்படம் நிச்சயம் பசுமையாய் மனதுள் ஒட்டிக்கொள்ளும்..

ஓரிடத்தில், மகளின் உடலை அனுபவிக்கத் துடிக்கும் ஒரு கயவனுக்குமுன் மேலாடை கீழே விழுந்ததைக் கூட அறியாமல் பிச்சைக் கேட்பதுபோல் கெளதமி தனது மகளை விட்டுவிடுப்பா, உன் அம்மா மாதிரி கேட்கிறேன்பா என்பார். கண்ணீர் மல்கும் உள்ளே, அந்நேரம் பார்த்து சரி; உன் மகளை விட்டுவிடுகிறேன், நீ வேண்டும்னா வாயேன்.. என்றுக் கண்ணைக் காட்டுவான் அந்த வெறியன். இதென்னவோ முன்பு நாம் அறிந்த பல சினிமாக்களின் அதே பழையக் காட்சிதான் என்றாலும் அதற்கு கெளதமி தனது நடிப்பால் காட்டிய பதில், திரையுலகின் அகராதியில் ஒரு துண்டுச்சீட்டாக சேர்த்துக்கொள்ளத்தக்க நடிப்பென்றால் அது மிகையாகிடாது.

அதுபோல்; கடைசியில் கமலை அடித்துத் துன்புறுத்தும் காட்சிகளிலெல்லாம் நடிப்பிருந்தாலும் இயக்குனரின் உத்தியும் தெரியும், ஆனால் எனது மகன் இருக்கானா இறந்துட்டானா என்பதை மட்டும் சொல்லிவிடுங்களேன் என்று மௌனத்தோடு கதறும் தாயின்முன் நின்று, கைதவறி போட்டுவிட்டோம் என்பதுபோல், இடம் தவறி அடித்துவிட்டோம் அவன் இறந்துவிட்டான் மன்னித்துவிடுங்கள் என்று தனது நடிப்பினால் திரு. கமலஹாசன் மன்றாடும் காட்சி திரையரங்கை கண்ணீரால் நனைக்கிறது. உண்மையிலேயே யாரும் இறப்பதில்லை. மாறாக இன்னொன்றாக வாழ்கிறார்கள். நம் கமலும் அப்படித்தான் நம் கண்ணெதிரே விட்டுப்பிரிந்த நடிக சக்ரவர்த்திகள் பலரின் முகமாக இன்றும் கண்முன் வாழ்கிறார். அவர் பேசும் வசனம், அவர் பார்க்கும் பார்வை, அவர் அசையும் அசைவிற்கெல்லாம் மனசு ஒரு அப்பாவாக கணவனாக மருமகனாக நல்ல நண்பனாக மிக நல்ல மனிதராக அவரோடு அசைந்துக்கொண்டே இருக்கிறது.

இன்றைய வாழ்க்கையில் நாம் தொலைத்தவை ஏராளம். ஆயினும் தொலைத்ததை நினைப்பதற்கு அவகாசமேயின்றி இருப்பதால்; மிச்சமிருப்பதையும் இல்லாததையும் எண்ணி எண்ணி பயந்துவாழும் கொடுமைபோல் வேறில்லை. முன்பெல்லாம் நிறையப் படங்களை அப்படி நாம் பார்த்துள்ளோம்; நாம் தயாரிக்கும் ரோபோ நம்மையே அழிக்கவரும், நாளைய மனிதன் படத்தில் அந்த மருத்துவர் உருவாக்கிய மனிதன் முதலில் அந்த மருத்துவரைத் தான் அழிப்பான். அதுபோல்தான் இன்று நாம் கண்டுபிடித்த அத்தனையும் சேர்ந்து நம்மைக் கொஞ்சக்கொஞ்சமாய் அழித்துக் கொண்டுள்ளது. அதில் ஒன்று நமது தலையணையின் கீழ்வரை வந்திருந்துக்கொள்ளும் கைப்பேசி. அதன் கொடூரக் கை நீளும் தூரம் நமது உயிரின் கொலைவரை போவதைத்தான் இந்த பாபநாசம் மிகத் துல்லியமாகக் காட்டுகிறது.

பொதுவாக நமது கண்டுபிடிப்புகள் அனைத்துமே நெருப்பைக் கண்டுபிடித்ததைப் போலத்தான், அதை வைத்து வீட்டிற்கு வெளிச்சத்தையும் தரலாம், வீட்டையும் எரிக்கலாம். இதில், ஒரு வீட்டை, குடும்பத்தை ஒரு முறையற்று வளர்க்கப்பட்ட இளைஞன் காமத்தீ கொண்டு எரிக்க முயல்வதையே இந்த பாபநாசம் பரபரப்போடு காட்ட முயன்றிருக்கிறது.

பிள்ளைகளின் வளர்ப்பு என்பது அத்தனைப் பெரியக் கலையில்லை, அவர்கள் முன் வாழும் நாம் சரியெனில். நம் கண்முன் தும்பிப்போல சிறகடிக்கும் சிரித்துப் பூரிக்கும் குழந்தைகளின் சந்தோசத்தை வளர்ச்சியை சமுதாய பொதுநலங்கொண்டு திருத்திக்கொண்டே வந்தால் அவர்களும் வளர்ந்துநிற்கையில் பெரிய கற்பனையோ பாசாங்கோ பீதியோ இன்றி உயிர்களை சமமாய் மதிப்பவர்களாக வளர்வார்கள் என்பது எனது நம்பிக்கை. அதை விட்டொதுங்கும் பெற்றோர்களால் வீணே அழிந்துபோகும் இன்னொரு குடும்பத்து அழுகையோடுச் சேர்த்தே இப்படத்தை செதுக்கியுள்ளார் இயக்குனர். அதற்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள் அத்தனை நடிகர்களும்.

உண்மையில், நம் தமிழ்த்திரு நாட்டை அதன் பசுமையழகோடுக் காட்டிய நன்றிமிக்க படமிது. பார்க்கப் பார்க்க பார்த்துக்கொண்டே இருக்கலாம். அந்தக் காட்சிகளாலே கூட இந்தப்படம் நினைவில் நீங்கா இடத்தைப் பெறுவதும் சாத்தியமே. அதுபோல், இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பு எம் எஸ் பாஸ்கர் அவர்கள். எத்தனை விதமான ரசிக்கத்தக்க கலைமுகங்கள் அவருக்கு. பெரியப்பெரிய நடிகர்களை எல்லாம் நாம் மிகையாய் சிலாகித்துப் பேசிக்கொள்வதுண்டு, எண்ணிப் பார்த்தால் கதாநாயக கௌரவமோ கர்வமோ இன்றி எப்படிப்பட்ட வேடங்களைக் கொடுத்தாலும், அதுவாகவே மாறி நமது கண்முன் வாழ்ந்துக்கொள்ளும் மதிக்கத்தக்கக் கலைஞனாகத் திகழ்கிறார் திரு. எம். எஸ். பாஸ்கர் அவர்களும், அவருக்கு முன் திரு. டெல்லி கணேஷ் ஐயாவும். ஓரிரு காட்சிகளில் மட்டுமே வந்தாலும், அந்தக் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்துவிடுகிறார் ஐயா திரு. டெல்லி கணேஷ் அவர்கள்.

உற்று கவனித்தால், இங்கே ஹீரோ வில்லன் எல்லாம் இல்லை, மனிதர்கள் தனைத்தானே தனது வாழ்க்கையில் தன்னை கதாநாயகனாகவும் வில்லனாகவும் பாவித்துக்கொண்டு நகரும் யதார்த்த வாழ்தலைத்தான் இந்தக் கதையின் நாயக நாயகிகளும் செய்துள்ளனர். இன்னொரு விஷயம், பாபநாசம் பிற திரைப்படங்களை முன்னெடுத்துக் கொள்ளவில்லை, தனை மட்டும் கம்பீர உணர்வோடு வெளிப்படுத்தி இருக்கிறது என்பதும் மனதுள் இப்படம் தனித்து நிற்பதை அறிவதன்மூலம் உணரமுடியும். மிக முக்கிய அம்சம், மீண்டும் மீண்டும் நினைக்கத்தக்க மிக ரம்யமான காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். பேச்சு கேட்க கேட்க மனதுள் ஈரமாக தேங்கிக் கொள்வதாக யதார்த்த வசனங்களும் சிந்தனையுமாய், இப்படம், பார்ப்போர் மனதில் முதல்தர இடத்தைப் பிடித்துக்கொள்வது நிச்சயம். கடைசி சில இடத்தில் சற்று நாடகப்போக்கில் இழுப்பதுபோல் இருந்தாலும் கதையோடு ஓட்டிவரும் உறவுகளின் ஈரத்தில் தவிப்பில் அதைப்பற்றியச் சிந்தனையும் தானே விலகிவிடுகிறது.

மொத்தத்தில்; காக்கமுட்டை எனும் திரைப்படம் நமது தமிழ்த் திரைப்படத்திற்கு ஒரு நல்ல உதாரணம் போல, இந்தத் திரைப்படமும் ஒரு சிறந்தப் புத்திசாலியை, சிக்கனம் மிக்க குடும்ப மனிதனை, பிள்ளை வளர்ப்பை, இடம் மாறும் இளைஞர்களின் காமத்தின் கொடூரத்தை, கைப்பேசி உபயோகத்தின் கபடதனத்தை, கடைசியாய் இங்குமங்குமாய் இன்றைய வாழ்க்கையில் நிறைய இடங்களில் பயிரைத் தின்னும் வேலியைப் போல அமைந்துள்ள காவலாளிகளின் அகந்தையையும் காழ்ப்புணர்வையும் எடுத்துக் காட்டி, அதேவேளை சரியான காவலாளிகளையும் காட்டி மனிதரின் இருவேறு முகத்தைப் பற்றிப் பேசும் அருமையானத் திரைப்படமாகத்தான் இந்த பாபநாசம் நிறைவடைகிறது.

அம்மா பிள்ளை, அப்பா மகள் உறவென்பது காதலன் காதலி உணர்வுபோல் மனசும் மனசும் சேர்ந்த உணர்வுமட்டுமல்ல சாகும் வரை நினைத்திருக்க; அது எல்லாம் கடந்தது. உயிரும் உயிரும் பிணைந்து வந்தது. வாழும்போதே சாகடிக்கவும் சாவிற்குப்பின்னும் நமை வாழவைக்கவுமான உணர்வது. அதை நாம் எவ்வளவு புரிந்துக்கொண்டு, எத்தனை அதை நன்னடத்தையினால் அணுகுகிறோம் என்பதைவைத்தே நல்ல மனிதர்களை உருவாக்கவும், நல்ல மனிதர்களை மதிக்கச் செய்யவும், நல்ல மனிதர்களோடு அன்பு காட்டி பண்பு குலையாது வாழ்ந்துக்கொள்ளவும் முடிகிறதென்பதற்கு, 'இந்த பாபநாசம் திரைப்படமும், இயக்குனரும், நடிகர்களும் பிற அனைத்துக் கலைஞர்களும் உழைப்பாளிகளும் கூட மிக நன்றிக்குரிய சாட்சி..