மஞ்சப்பை
 

திரைவிமர்சனம்: கவிஞர் இரா.இரவி

இயக்கம்: திரு. N.இராகவன்
தயாரிப்பு: திரு. N.லிங்குசாமி
நடிப்பு:
விமல், ராஜ்கிரண், லட்சுமிமேனன்


குடும்பத்துடன் பார்க்க வேண்டிய மிக நல்ல படம். மஞ்சப்பை கொண்டு செல்வது வழக்கொழிந்து நெகிழிப்பையில் வாங்கி வரும் காலம் இது. அது போல அரிய பொக்கிசங்களான தாத்தாக்களை மதிக்காத காலம் இது. இந்தப்படம் பார்த்தால் தாத்தாக்களின் மீதான மதிப்பு கூடும் என்று அறுதியிட்டு கூறலாம்.

இந்தப்படத்தின் மையக்கருஇ முதியோரை மதிக்க வேண்டும் என்பதே. கிராமத்து மனிதர்கள் வெள்ளந்தியாக இருக்கிறார்கள். ஆனால் நகரத்து மனிதர்கள் இயந்திரமாகி விட்டார்கள். குறிப்பாக அடுக்காக வீடுகளில் வீடுகள் அருகே அருகே இருந்தாலும் மனிதர்களின் மனது தூரமாகி விட்டது. யாரும் யாருடனும் பேசுவது இல்லை . தாத்தாவாக வரும் (இராஜ்கிரண்) இந்த படத்தில் நடிக்கவே இல்லை. தாத்தாவாகவே வாழ்ந்து உள்ளார். இந்த படத்தின் வெற்றிக்கு பல காரணம். அதில் ஒரு முதற்காரணம் திரு. ராஜ்கிரண்.

வேறு பிரபல நடிகர் நடித்து இருந்தால் அதிக நடிப்பு காட்டி சொதப்பி இருப்பார்கள். ஆனால் ராஜ்கிரண் மிக இயல்பாக அதிகம் பேசாமல் நடித்து உள்ளார். இந்தப் படத்திற்கு தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகள் கிடைக்கும் என்பது உறுதி.

படத்தின் இயக்குனர் திரு. இராகவன் அவர்களும்இ படத்தின் தொகுப்பாளர் திரு. தேவா அவர்களும் மதுரையில் உள்ள மதுரை கோட்ஸ் தொழிலாளர் நல பள்ளியில் பயின்ற மாணவர்கள். இவர்களுக்கு பாராட்டு விழாவை இவர்களது ஆசிரியர் பொன். சந்திரசேகரன் அவர்கள் முன்னின்று நடத்தினார். விழாவிற்கு சென்று இருந்தேன். இயக்குனர் திரு. இராகவன் அவர்கள் ஏற்புரையில் பேசும் போது என் வெற்றி தனிமனித வெற்றி அல்ல. கூட்டு வெற்றி. மானசீக குரு இயக்குனர் சற்குணம் மற்றும் தயாரித்த இயக்குனர் திரு. லிங்கசாமிஇ திரு. ராஜ்கிரண் என அனைவருக்கும் நன்றி சொல்லி விட்டுஇ என்னை உருவாக்கிய ஆசிரியர்கள்இ நண்பர்கள் குறிப்பாக என் தம்பி என் அண்ணன் போல வழிநடத்தியவர் என்றார். கடைசியாக எட்டு வருடங்கள் எனக்கு பொறுமையாக சோறு போட்ட மனைவிக்கு நன்றி என்ற போது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.பாராட்டு விழாவில் பொன்னாடைப் போர்த்தி பாராட்டி வந்தேன்

தாத்தா பேரன் உறவு பற்றி இவ்வளவு விரிவாக விளக்கிய படம் மஞ்சப்பை மட்டும் தான். இந்தப்படம் பார்த்த ஒவ்வொருவருக்கும் அவரவர் தாத்தா நினைவு வரும் என்று உறுதி கூறலாம். எனக்கு என்னை உருவாக்கிய செதுக்கிய என்னுடைய தாய்வழி தாத்தா திரு. செல்லையா நினைவிற்கு வந்தார்கள். அவர் ஒரு விடுதலை போராட்ட வீரர். எனக்கு இன்றுவரை எந்தவித கெட்டப்பழக்கமும் இல்லை. நான் ஒழுக்கமாக வாழக் காரணம் அவர் வளர்த்த வளர்ப்பு .என்னுடைய தாத்தா என்னை நெறிப்படுத்தி வளர்த்தவர். அவரைப்பற்றிய மலரும் நினைவுகளை மலர்வித்தது இந்தப்படம். இது தான் இயக்குனரின் வெற்றி. திரு. ராஜ்கிரணின் வெற்றி.

கதாநாயகன் விமல் நன்றாக நடித்து உள்ளார். காதலி தாத்தாவை ஊருக்கு அனுப்பி விடு என்று சொன்னால் இன்றைய இளைஞர்கள் உடன் ஊருக்கு அனுப்பி விடுவார்கள். ஆனால் இவரோ காதலி சொன்ன போதும் தாத்தாவை ஊருக்கு அனுப்ப மறுக்கிறார். காதலை விட பாசத்தை பெரிதாக மதிக்கிறார். தாத்தா மனிதநேயத்தோடு வாழ்கிறார். கடற்கரையில் அயல்நாட்டு பெண்ணிடம் வம்பு செய்யும் ரவுடிகளை தாக்குகிறார். அந்தப்பெண்ணின் கணவர் தான் அமெரிக்காவிற்கு சென்று வர உரிமை வழங்கும் அதிகாரி. அவர் பின்பு தாத்தாவின் பேரனுக்கு உதவுகிறார். உதவி செய்து வாழ் வேண்டும் என்று உணர்த்துகிறார்.

காதலித்து திருமணம் செய்ததால் இருதரப்பு பெற்றோர்களாலும் புறக்கணிக்கப்பட்ட, தனிமையில் அடுக்ககத்தில் வாழும் இணையர் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படுத்துகிறார் தாத்தா. கர்ப்பிணியாகிவிட்ட பெண்ணிற்கு வளைகாப்பு நடத்துகிறார். ஆதரவற்றோர் விடுதி மாணவ மாணவியரை வரவழைத்து கோலாகலமாக வளைகாப்பு நடத்தும் போது அந்த இணையர் மட்டுமன்றி படம் பார்க்கும் நம் கண்களிலும் கண்ணீர் வருவதை தவிர்க்க முடியவில்லை. இது தான் இயக்குனரின் வெற்றி.

பெண்கள் ஆபாசமாக உடை அணிய வேண்டாம். நமது தமிழ்ப்பண்பாடு காக்கப்பட வேண்டும் என்பதையும் படத்தில் வலியுறுத்துகிறார். மதுரையிலிருந்து திரைஉலகம் சென்று வெற்றிக்கொடி நாட்டிய பிரபலங்களின் வரிசையில் மதுரை மண்ணின் மைந்தர்கள் இயக்குனர் இராகவன் அவர்களும், தொகுப்பாளர் திரு. தேவா அவர்களும் இடம்பிடித்து விட்டார்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.