கத்தரிக்காய்

கலாநிதி பால. சிவகடாட்சம் Ph.D (London)



ற்றைக்கு  இரநூறு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருபாலை என்னும் இடத்தில் வாழ்ந்த ஆயுள்வேத மருத்துவ அறிஞர் ஒருவர் இருபாலைச் செட்டியார் என்று அறியப்பட்டார். இவர் ஆக்கிய தமிழ் மருத்துவ நூல்களுள் ஒன்றான ‘பதார்த்த சூடாமணி’ நாம் உணவாக உட்கொள்ளும் காய்கறிகள், கீரைகள் மற்றும் இறைச்சி வகைகளின் குணங்கள் பற்றிக் கூறுவதாகும். மேற்படி நூல் கத்தரிக்காயைப்பற்றி என்ன சொல்கிறது.......

கத்தரிப் பிஞ்சு ரோசி கண்ணினோய் மலமும் போக்கும்
மந்தமார் மூன்று தோட மருவிடா வுண்டி தன்னை
மெத்தவே விரும்புந் தேக மிகுசவுக் கியம தாகும்
தித்தமார் காய்கி ரந்தி தினவொடு பித்தஞ் சேர்க்கும்


                                                                            - பதார்த்த சூடாமணி

இதன் பொருள்: கத்தரிப்பிஞ்சு கண்ணோய்க்கு மருந்தாகும். மலத்தை வெளியேற்றும். வாதம் பித்தம் கபம் என்றுசொல்லப்பட்ட மூன்று தோஷங்களையும் நெறிப்படுத்தும். உணவை விரும்பிச் சாப்பிடவைக்கும் கறியாகும். உடம்புக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும். முற்றிய கத்தரிக்காய் சொறி சிரங்கு என்பவற்றோடு பித்தத்தையும் கொடுக்கும்.

மேலதிகவிபரம்: சங்ககாலத்தமிழருள் அந்தணர் அல்லாதோருள் பெரும்பான்மையான மக்கள் அரிசி வரகு தினை என்னும் தானியங்களில் ஆக்கிய சோற்றுடன் ஆடு கோழி பன்றி உடும்பு நண்டு மீன் என்று மாமிச உணவுகளையே பிரதான கறியாக விரும்பி உண்டுவந்தார்கள். அவர்கள் சமைத்த காய்கறிகள் பற்றிய விபரங்களை சங்க இலக்கியங்கள் வாயிலாகப் பெரிதும் அறியமுடியவில்லை. இன்று எமக்குக் கிடைக்கக் கூடியதாயிருக்கும் உருளைக்கிழங்கு மரவள்ளிக்கிழங்கு கோவா கரட் பீற்ரூட் மிளகாய் வெண்டிக்காய் தக்காளி எதனையுமே அவர்கள் கண்டிருக்கமாட்டார்கள். பாகல் புடோல் பீர்க்கு அவரை கீரை கத்தரிக்காய் என்பவைதான் அவர்களது காய்கறிகள். இவற்றுள் அன்றுதொடக்கம் இன்றுவரை நம்மவர் சமையலில் தவறாமல் இடம்பிடித்துக்கொள்வது கத்தரிக்காய் மட்டுமே. கத்தரிக்காய்க்கு வழுதுணங்காய் என்பதே பழந்தமிழ்ப்பெயர்.

வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரெனவே புளித்த மோரும் – திறமுடனே
புல்வேளூர்ப் பூதன் புகழ்ந்து பரிந்திட்டசோ(று)
எல்லா உலகும் பெறும்.


வரகரிசிச்சோறும் தணலில் வாட்டிய கத்தரிக்காயில் ஆக்கிய கறியும் புளித்தமோரும் என்று புல்வேளூர்ப்பூதன் திறமையுடன் சமைத்து எனக்கு அளித்த விருந்துக்கு இந்த உலகத்தையே கொடுக்கலாம் என்று புகழ்ந்து பாடுகிறார் ஔவை.

நார்ச்சத்து நிறைந்த கத்தரிக்காய் பெருங்குடல் புற்று வராமல் சமிபாட்டுத்தொகுதிக்குப் பாதுகாப்பு அளிக்கக்கூடியது. உணவுக்குழாயினூடே செல்லும்பொழுது நஞ்சுப்பொருள்களை உறிஞ்சிக் குடலைப்பாதுகாக்கின்றது. குறைந்த கலோறி உடைய கத்தரிக்காய் வயிற்றை நிரப்புவதால் நீங்கள் சாப்பிடும் சோறு முதலியவற்றின் அளவைக்குறைக்க உதவுகின்றது.

கத்தரிக்காய் உடம்பில் உள்ள இரும்புச்சத்தைச் சமநிலைப்படுத்தும் குணம் உடையது. இதன் தோலில் உள்ள நேசுனின்
(nasunin) என்னும் இரசாயனம் காரணமாக கத்தரிக்காய் உடம்பில் கூடுதலாக இருக்கக்கூடிய இரும்புச்சத்தை அகத்துறிஞ்சி வெளியே அனுப்பிவிடுகிறது. இரும்புச்சத்து குறைவாக உள்ளவர்கள் அந்தச்சத்து உடலில் சமநிலை அடையும்வரை கத்தரிக்காயைத் தவிர்ப்பது நல்லது.

சர்க்கரை வியாதிக்காரர்கள் தயக்கம் இன்றிச் சாப்பிடக்கூடிய காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று.

கொலெஸ்றெரோலை குறைக்கும் குணம் உடைய கத்தரிக்காயில்
Folic acid, potassium ஆகிய இரசாயனங்களும் கூடுதலாக உள்ளன.

கத்தரிக்காய் சிலருக்கு ஒத்துக்கொள்வதிலை. மூட்டுவாதம் போன்ற வாதக்குணங்களால் அவதிப்படுவோர் சிலருக்கு கத்தரிக்காய் சாப்பிட்டவுடன் வாதக்குறிகுணங்கள் அதிகரித்துக் காணப்படலாம்.

Eggplant, Brinjal, Aubergine என்பன கத்தரிக்காயின் ஆங்கிலப் பெயர்கள்.
Solanum melongena L. என்பது இதன் தாவரவியற்பெயர்.
 


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்